Sunday, 24 February 2013

ரிசர்வ் லைன்
என் அறைக்கும் அலுவலகத்துக்கும் இடையில் காவலர் குடியிருப்பு. ஆயுத அறை, காவலர் மைதானம், மாரியம்மன் கோவில், திருமண மண்டபம், காவல் நாய்களின் பயிற்சிப்புலம் என்று விஸ்தீரணமாய் விரிந்துள்ள மரங்கள் அடர்ந்த நிழல்பகுதி அது. மரங்கள் அடர்ந்த, தனிப்பாதை என்பதால் அது என் அன்றாட வழியானது. நுழைந்ததும் வரும் மாரியம்மன் கோவிலில் நின்று வழிபட்டு, திருநீறு இடுவேன். நான் திருடன் அல்ல என்பதை விபூதி சொல்லும். சில நாட்களில் அணிவகுப்புகின் பூட்ஸ் கால்களைக் கேட்டபடி காவலர் குடியிருப்பின் வேறுபாடுகள் கொண்ட வீட்டுத் தொகுதிகளின் அமைப்பை வேடிக்கை பார்த்தபடி நடப்பேன். சில நாட்களில் முன்னிரவுக் குடியால் முகம் சோர்வுற்று, குற்றக்களையுடன் மாரியம்மன் கோவில் வழிவிடுத்து, காவல்நாய்ப் பயிற்சிப் புலம் வழியாக அதிகாலைகளில் அறை மீள்வதும் உண்டு.
உயர் அதிகாரிகளின் வீட்டுத் தொகுதிகள் முன் குழந்தைகள் பெரும்பாலும் விளையாடுவதில்லை. அவர்கள் வீட்டின் செல்ல நாய்களையோ, கோலமிடும் பெண்களையோ உற்றுப்பார்க்காமலேயே நடப்பேன். நெருக்கமாக வெட்டப்பட்ட காவலர், மேலதிகாரியின் வாகனத்தை கழுவிக்கொண்டே என்னை நோட்டமிடுவார். இன்று நன்மை போர்த்தி வருகிறேன் காவலரே!
தலையைத் தொடும் வேம்பின் தளிர் இலைகள் 52ஐப் பறித்து உட்கொள்வேன். ஒரு மண்டலம். பயிற்சிக் காவலரின் அரைக்கால் சட்டையில், கத்தி உறை ஆட வாகனத்தில் கடப்பார்கள். பயிற்சிக் காவலர்களின் விரைப்பான, நரம்புகள் புடைத்த இறுக்க முகங்கள்தான் இங்கே அபாயப் பிரதேசம்.
வலதுபுறமுள்ள கீழ்நிலைக் காவலர்களின் பழைய வீட்டுத்தொகுதிகள் பழுதுற்று வருகின்றன. அதன் அடிப்புறங்கள் அரிக்கப்பட்ட செங்கல்களும் கரையத்தொடங்கியுள்ளன. இங்கே குழந்தைகள் திரிவார்கள். இடியாப்பம்...இடியாப்பம்...என்று கூவியபடி செல்லும் தூக்குச்சட்டி நபரும் நானும் இங்குதான் சந்தித்தபடி கடப்போம். மீன்கூடையுடன் காகங்கள் துரத்த மிதிவண்டி வரும். மீன்கள் இறக்கப்பட்டதும் காகங்களும் கீழிறங்கும். மீன் வாங்கிய பெண்கள் சாவகாசமாய் மரநிழலில் குத்தவைத்து அமர்ந்து ஒளி அதிகம் தீண்டாத இடங்கள் வெண்மையாய் துலங்க, கல்லில் உரசி உரசி உரிப்பார்கள். கிள்ளி எறியப்பட்ட மீன்தலைகளைத் தின்னக் காகங்கள் நாய்களாகும். பூனைகள் வால் விரைக்க மர்மமாகப் பறந்திறங்கும். இடைநிலைக் காவலர்களின் வீட்டுத் தொகுதியின் முன் இருக்கும் மழைநீர் பள்ளத்தில் வளர்ப்பு செம்மறியை வெண்மை துலங்க குளிப்பித்து அழைத்துச் செல்கிறான் ஒரு வெளியாள். ரிசர்வ் லைனுக்குள் தடுத்து ஒதுக்கப்பட்ட பிறகு கோவில் மாரியம்மன் சைவமாகி விட்டாள். பலிகள் வெளியில் நடக்கின்றன.
எப்போதாவது நிறுத்தப்பட்டிருக்கும் ஆயுதக் காவலர் வாகனம், அகால வேளையில் காவலர் உறங்க நாதியற்றுக் கிடக்கும் எந்திரத் துப்பாக்கிகள். கழுத்து மணி அதிர நீர்த்தடமிட்டுச் செல்லும் செம்மறி வழிநடத்த நானும் வெளியாளும் காவலர் குடியிருப்பின் சுற்றுச்சுவர் உடைப்பு வழியாக வெளியேறுகிறோம், காவல் மாரியம்மன் ஆசீர்வாதத்துடன். 

(எனது 'அச்சம் என்றும் மரணம் என்றும் இரண்டு நாயக்குட்டிகள்' தொகுப்பிலிருந்து) 

No comments:

அந்த ஆலயத்தில் கடவுள் இல்லை - ரவீந்திரநாத் தாகூர்

அரச சபை ஊழியன் சொன்னான், “ராஜாவே, பணிவான வேண்டுகோள்களை விடுத்தும், மனிதர்களில் சிறந்தவரும் அருந்துறவியுமானவர், பொன்னால் நீங்கள் உருவாக்க...