Skip to main content

ஞானக்கூத்தனில் பூச்சியாகும் வண்ணத்துப் பூச்சி






விழுவதும் எழுவதும் துரத்திக் கொண்டிருக்கிறது; மரணமும் பிறப்பும் தான். பிரமிளின் வண்ணத்துப் பூச்சியும் கடலும் கவிதையைத் தனியான புராணிகம் என்று எண்ணியிருந்த வேளையில்தான் மாணிக்கவாசகரிடம் திருக்கூத்தும்பியிலும் சுந்தர ராமசாமியிலும் அதன் தூரத்துச் சாயல்கள் இருப்பதை மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பார்த்தேன். அதை https://www.shankarwritings.com/2015/08/blog-post_30.htmlல் எழுதியுமிருக்கிறேன்.

சமீபத்தில் பிரம்மராஜன் பதிப்பித்த ‘ஆத்மாநாம் கவிதைகள்’ தொகுதியைப் புரட்டிக் கொண்டிருந்த போது, ‘இழுப்பறைகள் கொண்ட மேஜை’ கவிதையைப் படித்த போது, கடலும் வண்ணத்துப் பூச்சியும் எப்படியாக நவீன பொருட்களுக்குள் இடம் மாறியிருக்கிறது என்பதைப் பார்த்தேன். இந்தக் கவிதையில் வண்ணத்துப் பூச்சி யார்? எங்கே? 



இழுப்பறைகள் கொண்ட மேஜை

அது உறுதியாகத் தரையில் இருப்பது போல்தான் படுகிறது
நான் பறந்துகொண்டும் தத்திக்கொண்டும் இருக்கிறேன்
எங்கிருந்தோ கிடைத்த புத்தகங்களையும் பொருட்களையும்
மேஜைமேல் அடுக்கிக்கொண்டே போகிறேன்
நானும் களைந்துகொண்டேயிருக்கிறேன்
குதித்துவிடுவான் ஒன்றுமேயில்லை என்ற ஆவலான
குரல் கேட்கிறது
புத்தகங்களையும் பொருட்களையும் கொஞ்சம்
கொஞ்சமாய் வீழ்த்துகிறேன்
சிரித்துக்கொண்டே தப்பித்துவிட்ட சிரிப்பொலி கேட்கிறது
உருவம் புலப்படுவது போல் இருக்கிறது
அடுத்து நான் விழவேண்டும்
துணிகள்
ஏராளமாய்க் கொண்ட இழுப்பறை ஒரு பக்கம்
ஆவலான சிரிப்பொலி மறுபக்கம்
நான் வீழ்ந்தேன் நடுக்கடலுக்குள்
எழுந்தேன்.

உருவம் கொள்வதற்கான, உருவத்திலிருந்து தப்பிப்பதற்கான தவிப்பு இரண்டும் இருக்கிறது. இறந்திறந்து பிறக்கும் துணிவும் விளையாட்டும் அதில் இருக்கிறது. ‘வண்ணத்துப் பூச்சியும் கடலும்’ கவிதையைப் போலவே ஆத்மாநாமிலும் ஒரு லட்சியம் இருக்கிறது நிச்சயமாக.

லட்சியமற்ற ஒரு புள்ளியிலிருந்து கடலற்ற ஆனால் வண்ணத்துப்பூச்சியைப் போன்ற ஒரு சாயல் கொண்ட ஞானக்கூத்தனின் கவிதையில் வரும் ஒரு பூச்சியை சமீபத்தில் பார்த்தேன். அவரது கடைசிக் கவிதைகளில் ஒன்று இது. பூச்சிக்கும் நகர்வும் பயணமும் உண்டு. அதற்கு மஞ்சள் சிறகுண்டு. மாசுபடாதது.

வண்ணத்துப் பூச்சியின் சிறகென்பது ஒரு மெழுகுத் தகட்டைப் போல அத்தனை மெலிதானது; அவ்வளவு சீக்கிரம் உடைந்துவிடக் கூடியது. ஆனால் எந்தக் கருவிக்குள்ளும் பதிவு படாத சிறிய புயலைத் தான் செல்லும் வழியில் எழுப்பிப் பறக்கக் கூடிய வல்லமை கொண்டதுதானே. ஒரு பெரிய கனவை அதன் தனித்துவ வண்ணங்களும் கோலங்களும் எழுப்பக்கூடியதுதானே.

ஞானக்கூத்தன் அதை பட்டாம்பூச்சி என்றோ வண்ணத்துப் பூச்சி என்றோ சொல்லவேயில்லை. அதன் சிறகை அவர் மறைத்துள்ளார். ஆனால் கவிதை படபடக்கிறது.  

பாண்டி ஆடிய பூச்சி

மாசுபடாத மஞ்சள் சிறகைப்
படபடத்துத்
தோட்டத்தில் பறந்தது பூச்சி

செடிகளைக் கட்டங்களாகக் கொண்டு
பாண்டி ஆட்டம் ஆடிப்
பறந்தது பூச்சி.
எந்தக் கருவிக்குள்ளும் பதிவு படாத
சிறிய புயலைத் தான் செல்லும் வழியில்
எழுப்பிப் பறந்தது பூச்சி.
பார்வையால் பின்தொடர்ந்த போதே
மறைந்துவிட்டது பூச்சி. கனவில்
மூழ்கிக் கரைந்த ஒரு நிகழ்வு போல.

ஆத்மாநாமின் ‘இழுப்பறைகள் கொண்ட மேஜை’-யில் துணிகள் என்று அவர் குறிப்பிடுவதில் அவரது தனிவாழ்க்கையின் சாயலும் படிந்திருப்பதாக நான் ஊகிக்கிறேன். குழந்தைகளுக்கான ஆடைகளை உற்பத்தி செய்யும் ‘டாப் டென்’ என்ற நிறுவனத்தைத் தொடங்கி தொடர்ந்து நடத்த முடியாமல் விடுகிறார். அதற்குப் பிறகுதான் அவரது சிக்கலான வருடங்கள் தொடங்குவதாக பிரம்மராஜன் குறிப்பிடுகிறார்.      


Comments