தனியே சாலையில் போய்க் கொண்டிருக்கிறேன்
பனியில் மினுங்கிக் கொண்டிருக்கிறது கரடுமுரடான பாதை
இரவின் ஆழ்ந்த நிசப்தம்.
பாலைவனம் கடவுளருக்குச் செவிகொடுக்கிறது
நட்சத்திரமோ இன்னொரு நட்சத்திரத்திடம் உரையாடிக் கொண்டிருக்கிறது.
தூய விந்தையின் திகைப்பால்
தளும்பிக் கொண்டிருக்கிறது பாதாள நிலவறை.
பூமியோ மென்வெள்ளி நீலத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறது…
நான் ஏன் வலியோடும் தொந்தரவுற்றவனாகவும் உணர்கிறேன்?
எதற்காக இந்தச் சார்பு?
ஏன் இந்த நம்பிக்கைகள், சங்கடங்கள் எல்லாம்?
வரும் ஆண்டுகளில் எந்த வாய்ப்பையும் நான் பார்க்கவில்லை
சென்று போனவற்றுக்காக வருத்தங்கள்
ஏதும் இல்லை.
நான் தேடுவதெல்லாம் நிம்மதியும் சுதந்திரமும் மட்டுமே!
என்னைத் தொலைக்கும் உறக்கத்துக்காக மட்டுமே!
சமாதியில் உறைந்திருக்கும் நித்திரை அல்ல.
நான் போக விரும்புவது நித்தியமான உறக்கத்துக்கு.
எனது வாழ்க்கையின் உயிர்த்துவம்
எனது மூச்சு மென்மையாக உயர்ந்து தாழ
என் நெஞ்சில் சிறுதுயில் கொள்கிறது.
இரவிலும் பகலிலும்
நேசத்துடன் பாடும் இனிமையான குரல்களால்
எனது செவிகள் குணமடையலாம்.
எனக்கு மேல் எப்போதைக்கும் பசுமையாகவுள்ள
இருண்ட
ஒரு ஓக் மரம்
வளைந்து
சரசரக்கலாம்.
Comments