எதிர்க்கரைப் புதர்களும் வாழை மரங்களும் தெரியாமல் செந்நீர்க் காடாகும் கருப்பந்துறை தாண்டி மேலப்பாளையம் போகும் பாலம் மூழ்கி மண்டபங்களும் படித்துறைகளும் மறையும் எலும்பு துருத்திய வயோதிக நடை தொலைத்து பேரோலம் ஹோவென்று தூரத்தலிருந்தே ரீங்கரிக்கத் தொடங்கும் காலை பூஜை நீங்கலாக இரவு வரை நடுப்பகலில் தனிமையில் இலக்கற்றுக் காத்திருக்கும் குறுக்குத்துறை முருகனையும் வெள்ளம் மூழ்கடிக்கும் வட்டப்பாறை லிங்கங்களும் ஆலமரத்தடி இசக்கியும் சுடலை மாடனும் உடன் மூழ்கிப்போவார்கள் கம்பி போட்ட அழிக்கதவுகள் திறந்த கண்களைப் போல எதையும் மூடுவதற்கில்லையென்று மௌனித்து நீருக்குள் ஆடிக்கொண்டிருக்கும் காண்டாமணியின் நாக்கு ஒலிக்காமல் அசையும் தைப்பூச மண்டபத்தின் மேல் ஒற்றையாக குட்டிகளுடனோ வெள்ளாடு சிக்கிக்கொள்ளும். அடைக்கலத்திற்காக அவை ஏறிநிற்கும் புராதனக் காரைக்கூரையின் மையம் நீரில் மூழ்கியதை இதுவரை நான் பார்த்ததில்லை .