ஷங்கர்ராமசுப்ரமணியன் மக்சிம் கார்க்கியின் ‘தாய்’ நாவலில், ‘தாய்மார்கள் இரக்கத்துக்கு உள்ளானதேயில்லை’என்று ஒரு வரி வரும். ‘லட்சுமி என்னும் பயணி’ சுயசரிதையை எழுதியிருக்கும் லட்சுமி அம்மாவின் வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கிறது. தாய், தந்தையரின் அரவணைப்பிலான, சரியான குழந்தைப் பருவத்தைக்கூட அனுபவிக்காத ஏழைச் சிறுமி லட்சுமி. அடிப்படைத் தேவைகளுக்காகச் சிறு வயதிலேயே வேலைக்குச் செல்ல நேர்ந்தவர். அங்கே தொழிற்சங்கத்தில் சேர்ந்தவர். தொழிற்சங்கம் வழியாக முழு நேர அரசியலுக்குத் திருமணம் வழியாகவும் பிணைக்கப்பட்டவர். லட்சுமி அம்மாவின் வாழ்க்கையைப் பொறுத்தவரை அவரது வாழ்க்கை, அரசியல், சூழ்நிலைகள் அனைத்தும் அவரது தேர்வு அல்ல. ஆனால், துரும்பளவுகூட மீட்சிக்கு வாய்ப்பில்லாத சூழலில் தனக்கும் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்துக்காகவும் சகமனிதர்களின் தன்னிறைவுக்காகவும் போராடும் நித்தியப் போராளியாக லட்சுமி அம்மா இந்த சுயசரிதை வழியாக வெளிப்படுகிறார். மேல்நிலைக் கல்வி, மார்க்சியம், பெண்ணியம் சார்ந்த கோட்பாடுகளின் அடிப்படை எதுவுமின்றி, சமூகத்தின் அடித்தளத்திலிருந்து வந