காலனிய வரலாற்றாய்வாளர்கள் வட்டத்தில் இந்தியாவிலிருந்து மதிக்கப்படும் பெயர்களில் ஒன்று இவருடையது . பாரதியார் , வஉசி , புதுமைப்பித்தன் ஆய்வுகளில் புதிய வெளிச்சங்களை உருவாக்கியவர் . நவீன தமிழ் சமூக உருவாக்கம் குறித்து இவர் எழுதிய அந்தக் காலத்தில் காப்பி இல்லை கட்டுரைகள் ஆய்வுநுட்பத்தையும் தாண்டி புனைவு போல வாசிப்பதற்கும் சுவாரசியமானவை . சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய போது த சன்டே இந்தியனுக்காக எடுத்த நேர்காணல் இது ... 17 வயதிலேயே வ உசியின் கடிதங்களை பதிப்பித்துவிட்டீர்கள் ... பெரிய வாய்ப்புகள் இல்லாததாக கருதப்படும் வரலாற்று ஆய்வில் இத்தனை ஈடுபாடு வருவதற்கான காரணம் என்ன ? ஏதாவது செய்யவேண்டும் என்ற வேகம் சிறுவயதில் இருந்தது . ஆனால் அதை செய்யக்கூடிய எந்தவகை ஆற்றலும் என்னிடம் இல்லை . எதிலும் நான் முதன்மையாக இருந்தது இல்லை . அப்போதுதான் புத்தகவாசிப்பில் ஈடுபாடு வந்தது . ஆங்கிலப்படிப்பில் இருந்து தமிழ்படிப்பின் மேல் காதல் ஏற்பட்டது . நான் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்ததால் பாடப்புத்தகங்களில் தமிழகத்தைப் பற்றி ஒரு செய்தியும் இருக்...