கவிதையில் கற்பனாவாதத்தின் யுகம் முடிந்துவிட்டதென்று சொல்லும்போது அது மீண்டும் தலையைச் சிலுப்பி ஒரு சிறகுள்ள குதிரையாக எழுந்து படபடக்கிறது. பழைய கற்பனாவாதக் கவிதையின் அத்தனை கருவிகளையும் கொண்டு வில்லின் நாணை விரைப்பாக ஏற்றி குறிக்கோளைச் சரியாகவே நிறைவேற்றியுள்ளார் பிரான்சிஸ் கிருபா. மொழி என்னும் குதிரையை நவீனக் கவிதையில் சமத்காரத்தால் சொடுக்கி கவிதைக்கும் தமிழுக்கும் உத்வேகத்தை அளித்த பிரமிள், யூமா வாசுகியின் மரபில் வரும் பிரான்சிஸ் கிருபா சிதைந்த கற்பனை உருவங்கள், பின்னங்கள், நோய்மைகள் வாழும் ஒரு இரவுக் குடியரசின் வழியாக ஒரு புதிய வேகத்தை ஊட்டியுள்ளார். தொடர்ந்த விழிப்பின் கனத்த களைப்புணர்வையும், உடல்-மனத்தில் ஏற்படுத்தும் அதீதத்தின் கனவுநிலைக் கோலங்களையும் பிரான்சிஸ் கிருபாவின் ‘சக்தியின் கூத்தில் ஒளியொரு தாளம்’ கவிதைத் தொகுப்பில் காண முடிகிறது. இனம், மொழி, விடுதலை, தேசம், காதல் என்ற பெரிய லட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் கற்பனாவாதப் படைப்பாளிகள் தங்கள் படைப்புகள் வழியாக வாசகர்களிடம் தொற்றவைப்பது - அந்த லட்சியங்கள் காலாவதியான பின்னும் - உத்வேகமே என்று தோன்றுகிறது. அப்