Skip to main content

Posts

Showing posts from November, 2020

ட்சை க்வா சாங் உருவாக்கும் ஆகாய ஏணி

வெடிப்பது, மருந்துமானது என்ற முரண்பாட்டை தனது உள்ளடக்கத்திலும் பெயரிலும் ‘வெடி மருந்து’ கொண்டிருக்கிறது. வெடி மருந்தின் பூர்விகமான சீனாவிலும் இது 'ஃபயர் மெடிசின்' என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. ஆக்கம், அழிவு என்ற இரண்டு பண்புகளையும் தன்னகத்தே கொண்டிருக்கும் வெடிமருந்தையே தனது கலைக்கான உள்ளடக்கமாக்கிய ‘ட்சை க்வா சாங்க்’ - ஐ ஓவியர் என்று ஒற்றையாக வகைப்படுத்த முடியாது. நிர்மாணக் கலைஞர், பட்டாசுகளில் மாயத் தோற்றங்களை ஏற்படுத்தும் விற்பன்னர், தொழில்நுட்பத்தோடு தனது கலையை இணைத்துப் பிரமாண்டத் தோற்றங்களை நிகழ்த்தும் நிபுணர் என்று இவரைப் பற்றிச் சொல்லிப் பார்க்கலாமே தவிர இவரது படைப்புகளையும் வாழ்க்கையையும் பார்க்கும்போதுதான் உண்மையிலேயே இவர் அடைந்திருக்கும் அகண்டம் என்னவென்று தெரியும். இளம் வயதில் நவீன ஓவியனாக இருந்த ட்சை க்வா சாங், ஒரு கட்டத்தில் தனது கலை வாழ்க்கையில் அலுப்பை உணர்ந்தபோது, நவீன கலையில் பிகாசோவைக் கடந்து ஒருவன் சாதிக்க முடியுமா என்று கேட்கப்பட்டது. பிகாசுவுக்கான கீழைத்தேய பதில் தான் ‘ட்சை க்வா சாங்க்’ என்பதை அவரைப் பற்றி எடுக்கப்பட்ட Sky Ladder: The Art of Cai Guo-Qiang

இரண்டு முத்துக்கருப்பன்கள் சந்திக்கிறார்கள்

அன்றாடப் புழக்கத்தில் உள்ள பேச்சு மொழியை, ஆழ்ந்த த்வனி கொண்ட தனி இலக்கிய அனுபவமாக மா. அரங்கநாதன் சகஜமாக தனது கதைகளில் மாற்றிவிடுகிறார். ‘அவனது பக்கத்திருக்கையில் இருந்த கிழவர் பேசுவதற்கு நாயாய் அலைந்தார்’ என்ற வரியைக் கடக்கும்போது நிற்கும் அனுபவம் நிகழ்ந்தது. கிழவர் பேசுவதற்கு நாயாய் அலைந்தார் என்று எழுதியது பறந்து ரீங்கரிக்கத் தொடங்கியது. பேசுவதற்கு நாயாய் அலைந்தார் எனும்போது உணரும் அர்த்தத்தைச் சுற்றி ஒரு அமைதி. நல்ல சாப்பாடு சாப்பிட நாயாய் அலைந்திருக்கிறோம், தண்ணிக்கு நாயாய் ஒரு காலத்தில் அலைந்திருக்கிறோம் என ஊர்ப்பக்கம் சாதாரணமாகப் பேசுவதிலிருந்து  உருவான வாக்கியம் தான். 'உவரி' கதையில் பேருந்து, கன்னியாகுமரியைத் தாண்டி ஒரு சிறு ஊரைக் கடந்தவுடனேயே எல்லாம் இரண்டிரண்டாக மாறிச் சந்திக்கத் தொடங்குகிறது. உப்பளங்களின் காட்சியுடன் உப்புவண்டி பற்றிய குறிப்பு வருகிறது. ஆதிகாலத்தில் நாகரிகத்தை விரைவுபடுத்துவதற்கு உதவியாக இருந்த சக்கரங்களும் இன்றைய சக்கரங்களும் சந்திக்கின்றன. சக்கரங்களைப் பொறுத்தவரை பெரிய வேறுபாடு அவற்றின் வடிவத்தில் ஏற்படவேயில்லை என்ற குறிப்பு வருகிறது.  தன் முகத்தின்

இயற்கைத் துறைமுகம்

பாடப்புத்தகத்துக்கு முன்னர்  எப்போதும் சென்று கொண்டிருந்த  என் அம்மா  பணியிட மாறுதல் ஆகி தூத்துக்குடிக்குப் போனாள் இயற்கைத் துறைமுகத்துக்கும் செயற்கைத் துறைமுகத்துக்கும் வித்தியாசம் அப்போதுதான் தெரிந்தது கப்பல்கள் நின்று செல்வதற்கான அமைப்பு இயற்கையாகவே அமைந்திருக்கும் இடம்தான் இயற்கைத் துறைமுகம் என்று தூத்துக்குடிக்கு நாங்கள் குடியேறிய போதே சொல்லிவிட்டாள் ஏற்கெனவே தூத்துக்குடி துறைமுகம்  என்னிடம் ஆழப்பட்ட பிறகுதான்  தூத்துக்குடி துறைமுகத்தை நேராகப் பார்த்தேன் அம்மா பிறந்து வளர்ந்த ஊர் தூத்துக்குடி தற்போது அங்குமிங்கும் பன்றிகள் மேயும் ஊராக எனக்குத் தெரியப்போகும் உவர் நிலத்தை மகிமைப்படுத்த துறைமுகத்தை அடையாளமாகச் சொல்லியிருக்கலாம் அவள் பிறந்ததால். அது இயற்கைத் துறைமுகமாகவும்  முன்பு இருந்தது ஒரு தற்செயல். உதவிப் பொறியாளராக வேலைபார்த்த அப்பாவின் தாய்மாமனான  தாத்தாவுடன் துறைமுகத்துக்குள் உள்ளே நுழைந்தபோது கடலோடு கலன்கள் ஆட என் காலடியில் தார் பூசப்பட்ட தரைத்தளமும் ஆட எனக்கும் படகுகளுக்கும் எனக்கும் தூரத் தெரிந்த கப்பலுக்கும் இடையில் எண்ணெயும் அழுக்கும் மிதந்த கடலின் ஆழத்தில் அம்மா சொன்ன  இ

உறுமும் டினோசார்

நடுஇரவின் அமைதிக்குள் தெருவில் இரைந்து உறுமுகிறது கார் எரிபொருள் தொட்டியில் டினோசாரின் எலும்புகள் சிலிர்த்து  சடசடத்து இணைந்து தனது பழைய காம்பீர்யத்தை எட்டின இது அறியாது வெளியே தெரியும் எஃகு உடலைத் துரத்தி பதறிக் குரைத்துத் துரத்தும் நாய்களின் சந்தடி நாய்களுக்கும் உறுமும் டினோசாருக்கும்  நடுவில்.

நான் எனது நாய்க்குட்டி மரங்கள் சூழ்ந்த நிழற்சாலை

நான்  எனது நாய்க்குட்டி மரங்கள் சூழ்ந்த நிழற்சாலை ஒரு காலிமனை எங்களைக் கடக்கும் காரிலிருந்து ஒரு ஜோடிக் கண்கள்  எம்மைக் குத்திப் பதித்துக் கடக்கும்போது அங்கே வனத்தின் மர்மம் ஒன்று முளைத்துவிடுகிறது நான்  எனது நாய்க்குட்டி மரங்கள் சூழ்ந்த நிழற்சாலை ஒரு காலிமனை எங்களைக் கடக்கும் காரிலிருந்து ஒரு ஜோடிக் கண்கள் எம்மைக் குத்திப் பதித்துக் கடக்கும்போது குற்றத்தின் கைப்பிடித்து குற்றத்தை இழுக்கும் கதாபாத்திரங்கள் ஆகிறோம் நான் எனது நாய்க்குட்டி மரங்கள் சூழ்ந்த நிழற்சாலை எங்களைக் கடக்கும் காரிலிருந்து ஒரு ஜோடிக் கண்கள் எம்மைக் குத்திப் பதித்துக் கடக்கும்போது அதற்கும் அடியில் ஓர் அமைதியில் எட்டெடுத்து வைக்கிறோம். நான் எனது நாய்க்குட்டி மரங்கள் சூழ்ந்த நிழற்சாலை எங்களைக் கடக்கும் காரிலிருந்து ஒரு ஜோடிக் கண்கள் எம்மைக் குத்திப் பதித்துக் கடக்கும்போது ஒரு கொலைக்கு முன்னோ பின்னோ நாங்கள் தெரியாமல்  காற்றில் தாவுகிறோம் நான்  எனது நாய்க்குட்டி மரங்கள் சூழ்ந்த நிழற்சாலை ஒரு காலிமனை எங்களைக் கடக்கும் காரிலிருந்து ஒரு ஜோடிக் கண்கள்  எம்மைக் குத்திப் பதித்துக் கடக்கும்போது பரிபாலிக்க ஆரம்பிக்கிறது பயத்தின்

க்ரியா ராமகிருஷ்ணன் உருவாக்கிய புத்தக உணர்வு

தமிழில் மொழி, கலை, பண்பாடு சார்ந்த அறிவுத்துறைகளில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தின் மக்கள் தொகையை ஒப்பிடும்போது குறைவாகவே தொடர்ந்து இருந்துவருகிறது. அந்தச் சிறுபான்மை வட்டத்துக்குள் இருந்தவர்கள், இருப்பவர்கள் எல்லார் மீதும் தான் வெளியிட்ட புத்தகங்கள் மூலம் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தாக்கம் செலுத்துபவராக க்ரியா ராமகிருஷ்ணன் இருந்திருக்கிறார். நவீன இலக்கியம் தொடங்கி மொழியியல், தத்துவம், நாட்டார் வழக்காற்றியல், சினிமா, தொல்லியல், சூழியல், கானுயிரியல், மருத்துவம், ஆன்மிகம் என்று பல்வேறு அறிவுத்துறைகள் சார்ந்து தீவிரமான தேடல் உடைய தமிழர்கள் ஒவ்வொருவரும் க்ரியா வெளியிட்ட நூல்கள் சிலவற்றால் உந்துதலைப் பெற்றிருப்பார்கள். க்ரியா வெளியிட்ட அந்நியன், விசாரணை, அபாயம் போன்ற இலக்கிய நூல்களால் தாக்கம் பெற்றிருந்த லக்ஷ்மி மணிவண்ணன் வீட்டில் அவர் தொலைக்காத புத்தகங்களில் ஒன்றாக டேவிட் வெர்னர் எழுதிய ‘டாக்டர் இல்லாத இடத்தில்’ புத்தகத்தை அவரது மூத்த மகன் பிறக்கும்வரை பாதுகாத்தும் கையேடாகப் பயன்படுத்தியும் வந்தார். மூன்றாம் உலக நாட்டில் மருத்துவர் இல்லாத சூழலில், பேதி, காய்ச்சல், பிரசவம் ப

ஆடும் மனத்தின் கோலங்கள்

எனக்கு அறிமுகமான போதிருந்த லக்ஷ்மி மணிவண்ணனுக்கு, படித்த, பார்த்த கதையைத் திரும்பச் சொல்ல முடியாது. ஒரு கதையின் ஒரு நிகழ்ச்சி அவருக்கு ஏற்படுத்திய மனப்பதிவுகளையே அதையொட்டி உருவான எண்ணத்தையே அவரால் பேச முடியும். ஆல்பெர் காம்யூவின் ‘அந்நியன்’, காஃப்காவின் ‘விசாரணை’ மற்றும் சுந்தர ராமசாமி, கோபி கிருஷ்ணன் ஆகிய ஆளுமைகளின் தாக்கம் ஏறியவராக இருந்தார். நம்மை சௌகரியப்படுத்தி நீவிக்கொடுப்பது புத்தகங்களின் வேலை அல்ல. ஒரு துருப்பிடித்த ஆணி, கபாலத்தில் இறங்குவது போலப் புத்தகங்கள் இறங்கவேண்டுமென்று காஃப்கா சொல்லியிருப்பதாக அவர் எங்களிடம் சொன்னார். நம்மில் உறைந்திருக்கும் கடலைப் பிளக்கும் கோடரியாக ஒரு நூல் இருக்க வேண்டும் என்று காஃப்கா சொன்னதைத் தான் அவர் எங்களிடம் இப்படி மாற்றிச் சொல்லியிருக்க வேண்டும். 1999-ம் ஆண்டு நான் வேலை பார்த்த குமுதம் அலுவலகத்துக்கு என்னைப் பார்க்க மணிவண்ணன் வந்தபோது, மூன்று மணிநேரத்தைக் கழிப்பதற்காக அவரைப் பக்கத்திலிருக்கும் அபிராமி திரையரங்க வளாகத்தில் ‘ரிதம்’ படம் பார்க்கச் சொன்னேன். அலுவலகம் விட்டபின்னர், அவருடன் கோடம்பாக்கத்துக்குத் திரும்பியபோது படம் பற்றிக் கேட்டேன்.

நிர்வாணப் பூச்சி

ஆயிரத்து நூறு ஆண்டுகளுக்கு முன்னர் சீனக்கவிஞர் ஹான்ஷான் எழுதி சசிகலா பாபு மொழிபெயர்த்திருக்கும் 'குளிர்மலை' தொகுப்பிலுள்ள 79-வது கவிதையில் வரும் நிர்வாணப் பூச்சி என்னைத் தூண்டிக் கொண்டிருக்கிறது. அதன் கையிலோ இரண்டு புத்தகங்கள் வேறு உள்ளன. வெள்ளை உடல், கருப்புத் தலையுள்ள பூச்சி. நெடிய தூரம் நடைபயிலும் போது கோணல் மாணலான உடைகளை அணியும் பூச்சி அது. நிர்வாணமாய் இருந்தாலும் அந்தப் பூச்சியின் இடுப்பில் மெய்யறிவின் வாள் உள்ளதாம்.  எதற்கு? அர்த்தமற்ற ஏக்கத்தை வெட்டியெறிவதற்கு.  எல்லாப் பூச்சியும் நிர்வாணமாகவே இருக்கிறது. அப்படியென்றால், குளிர்மலையில் வாழும் இந்தப் பூச்சியின் நிர்வாணம் எதைக் குறிக்கிறது?  தாவோவின் தாக்கத்தைக் கொண்ட சீனக்கவிஞர் ஹான்ஷானின் கவிதைகளில், பூரண அறிவின் வெளிச்சமும் நிறைவும் மட்டும் அல்ல, ஒரு ஏழையின் அல்லல், கவிஞனின் விந்தை, நிறைவின்மையிலிருந்து எழும் பிதற்றல் எல்லாம் உண்டு.  ஹான்ஷானின் வாழ்க்கை பற்றித் திரட்டப்பட்ட விவரங்களைப் படிக்கும்போது, அந்த நிர்வாணப் பூச்சி யார் என்று சில குறிப்புகள் கிடைக்கின்றன. வெளியே ஏழை போலவும் பைத்தியம் போலவும் கோமாளி போலவும் தென்பட்

இந்த முட்டை

இதற்கு முன் எந்த முட்டையையும் பார்த்ததில்லை அதனால் இந்த முட்டையை எளிதாக உடைக்க  முடியப் போவதில்லை இந்த முட்டையைச் சூழ ஓர் அமைதி அரண் இட்டிருக்கிறது அதன் ஓட்டை விடத் திண்மையாக வெளியே ஆயுதங்கள் இடும் பெருங்கூச்சல்களையெல்லாம் உறிஞ்சிக் கொண்டிருக்கிறது இந்த முட்டை மௌனமாக தன்னை இட்ட உடலுக்கும் தரைக்கும் நடுவில் ஓர் அந்தரத்தில் சமைக்கப்பட்டது அதன் வடிவம் முட்டை.

அந்த நிலவறை மனிதன் யார்?

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிரிட்டிஷ் எழுத்தாளர் ஆர்தர் கானன் டாய்ல் படைத்த புனைவுக் கதாபாத்திரமான ஷெர்லாக் ஹோம்ஸ் தான், தடயவியல் என்ற புதிய அறிவுத்துறை உருவாவதற்கே வழிவகுத்தார். குற்றம் நடந்த தலம், குற்றம் நடந்த உடலைப் பரிசீலிப்பதன் வழியாக குற்றத்துக்கான சூழலையும் குற்றவாளியையும் நெருங்க முடியலாமென்ற சாத்தியத்தைச் சுட்டிக்காட்டியவர் ஷெர்லாக் ஹோம்ஸ். ஆர்தர் கானன் டாய்ல், ஷெர்லாக் ஹோம்சைப் படைத்த ஒரு தசாப்தத்துக்கு முன்னர், பியோதர் தஸ்தயெவ்ஸ்கி, தனது மிகச்சிறந்த படைப்பான கரமாசவ் சகோதரர்களைப் படைத்துவிட்டார். ஷெர்லாக் ஹோம்சின் குற்ற ஸ்தலம் உடல் என்றால், தஸ்தயெவ்ஸ்கியின் ஆர்வம் உடலுக்குள் சற்றே ஆழத்தில் உள்ள மனம். அந்த ஆழ்மனத்தில் நனவிலி என்று சொல்லப்படும் பகுதியில் என்னவெல்லாம் நடக்கின்றன என்பதை தஸ்தயெவ்ஸ்கியிடமிருந்து கற்றுக் கொண்டதாக நவீன உளவியலின் தந்தை சிக்மண்ட் ப்ராய்ட் அதனாலேயே குறிப்பிடுகிறார். குற்றமும் குற்றவுணர்வும் பழியும் வெறுப்பும் வேதனையும் காதலும் சாகசமும் நேசமும்  ஒருசேரக் கொந்தளிக்கும் ஒரு பாதாள நீரூற்றுதான் தஸ்தயெவ்ஸ்கி படைத்த 'நிலவறைக் குறிப்புகள்'.  க

சிகப்பு பலூன்

மகள் என் வயிற்றின் மீது விளையாடிக்கொண்டிருக்கிறாள் இடுப்பின் கீழே என் குறிமிதித்து அவள் வானேறுகிறாள் நான் அவளைத் தொடவேயில்லை என் பால்யத்தில் அந்தச் சிவப்புநிறப் பலூனை தொட்டுத்தொட்டு கைவிடுத்து காற்றில் அலையவிட்டேன் நான் அந்தப் பலூனை ரத்தச்சிவப்பைத் தொடவேயில்லை காதலியை ஸ்பரிசித்தேன் தொட்டுத்தொட்டு உச்சத்தில் நான் இல்லாமல் ஆகும் உன்மத்தத்தில் அவளுக்குள் நுழைந்தேன் நான் தொடவேயில்லை இப்பூமியில் சற்றுமுன் முளைத்திருக்கும் புற்கள் அருவி சாயங்காலம் அலாதியாகச் சிவந்திருக்கும் வீடுகள் கடல் ஆசை அலைகள் அழகு இவற்றையெல்லாம் குதிரைகள் கடக்கின்றன தொட இயலாத துக்கம் எனக்கு.

பொருளின் புதுப்பொருள் கவிதை

பிரமிள், ஆத்மாநாம், அபி, தேவதேவன், பிரம்மராஜன் ஆகியோர் தமது கவிதைகளிலும் உரைநடைகளிலும் கவிதை நிகழும் கணத்தைப் பற்றி அரிதான அவதானங்களை வைத்துள்ளனர். கவிதையின் கண்களை நேருக்கு நேராகப் பார்த்தவர்கள் என்று அவர்களைச் சொல்வேன். அவர்களோடு கவிதையைத் தனது பிரதான வெளிப்பாடாகக் கொள்ளாமல் கவிதையின் கண்களை நேருக்கு நேராகச் சந்தித்து, அதுபற்றி அடிப்படையான சிந்தனைகளை ஒரு குழந்தைக்கும் புரியும்படி உரையாடும் தொனியில் பகிர்ந்துகொண்டவர் மா.அரங்கநாதன் என்பேன். அறிவு அல்ல, தகவல் அல்ல, அறிவியல் அல்ல, தத்துவம் அல்ல, மொழியும் அல்ல என்று சொல்லி, இதுவரை மொழியில் அறிந்த பொருளும் அல்ல என்று கவிதையை ‘பொருளின் பொருள் கவிதை’ நூல் மூலம் அணுகியவர் அவர். தமிழ் மட்டுமல்ல, ஆதிமொழிகள் புழங்கும் எல்லாச் சமூகங்களிலும் கவிதை பற்றிய உணர்வு இருக்கிறது; ஆனால், அதைப் பற்றிச் சொல்லத் தொடங்கும்போது அதன் வரையறை பிடிபடாத ஒன்றாகிவிடுவதை உணர்ந்திருக்கும் அவர், வார்த்தைகள் அற்ற மொழி, வண்ணங்கொண்டு தீட்ட முடியாத ஓவியம், ஒலி உருவம் அற்ற இசை, வடிவம் காணா ஒரு படிமம் என்ற இடத்துக்கு வருகிறார். கவிதை என்னவென்று கேட்கும் கேள்வியிலேயே தவறு இருக