ஷங்கர்ராமசுப்ரமணியன் படைப்பு ரீதியாகவும் தனிப்பட்ட வகையிலும் மனம் சோர்ந்திருக்கும் போதும் சுயவிழிப்பை இழந்திருக்கும் வேளைகளிலும் சுந்தர ராமசாமியின் கட்டுரைகள், செய்யவேண்டிய வேலைகள் என்னவென்பதைத் தெளிவூட்டுவதாக எனக்கு எப்போதும் இருந்துள்ளன. எழுத்தாளன் தன்னைப் பற்றியும் தன் படைப்பு குறித்தும் கொண்டிருக்கும் கற்பனைக்கும் உண்மைக்கும் இடையிலான பல பாவனைகளை அவரது எழுத்துகள் எப்போதும் நிர்தாட்சண்யமாக உடைக்க முயல்பவை. நட்பு வேறு, நன்றியறிதல் வேறு, நேசம் வேறு, விமர்சன உணர்வு வேறு என்பதைத் தொடர்ந்து நினைவூட்டுபவையாக அவரது முன்னுரைகளும் கட்டுரைகளும் திகழ்கின்றன. எப்படியான உறவிலும் விமர்சன உணர்வையும், எதார்த்த உணர்வையும் தக்கவைத்துக் கொள்வதற்கு படைப்புசார்ந்து மட்டுமின்றி வாழ்க்கை சார்ந்தும் நமக்குத் தொடர்ந்து போதமூட்டி வருபவை சுந்தர ராமசாமியின் எழுத்துகள். அவரது இளம்வயதில் எழுதிய முதல் நாவலான ‘ஒரு புளிய மரத்தின் கதை’க்கு அவர் எழுதிய முன்னுரை, அதற்கு மிகச்சிறந்த உதாரணம். திராவிட இயக்கத்தின் அரசியல், கலை, கலாசார வெளிப்பாடுகள் மிகவும் படாடோபமாகவும், மிகைக்கூச்சல்களுட...