மலையாளத்தின் தலைசிறந்த கவிஞரும் தமிழிலும் ஜெயமோகனின் மொழிபெயர்ப்பு காரணமாக நவீன கவிதை வாசகர்களிடமும் நன்கு அறிமுகமான கல்பட்டா நாராயணனின் நாவல் 'சுமித்ரா'. கே. வி. ஷைலஜா மொழிபெயர்த்திருக்கும் இப்புத்தகத்தின் பின் அட்டைக் குறிப்பில் ஜெயமோகன் சொல்லியிருப்பது துல்லியமான வழிக்குறிப்பு; இது ஒரு கவிஞன் எழுதிய நாவல் என்பதுதான் இதன் தனித்துவம்; கவிஞனின் நாவல் எப்படி இருக்கலாம் என்பதற்கான சமிக்ஞைகளைக் கொண்ட நாவல் இது. அரிய தகவல்கள், வரலாற்று விவரங்களிலிருந்து பக்கம் பக்கமாக நாவலாசிரியர்கள் விரித்து எழுதுவதற்கு சபலப்படும் முனைகளில் பொருள் சார் பண்பாடு, அரசியல் சார்ந்த குறிப்புகளையும் அத்தனை சுருக்கமாக நுட்பமாகத் தெரிவிக்கிறேன் என்று சொல்லாமல் சொல்லிக் கடக்கிறார் கல்பட்டா நாராயணன். நாவலின் மையம் சுமித்ரா என்ற பெண். நமக்கு தமிழ் நாவல்கள் வழியாக அறிமுகமான யமுனா, அலங்காரம், அம்மணி, இந்து, அபிதா போன்று ஏக்கமாகவும் ப்ரேமையாகவும் அடைய முடியாத லட்சியமாகவும் ஆறாத நினைவாகவும் வாசகனுக்கு ஆகிவிடும் பிரகிருதி. கேரளத்தில் உள்ள பெரிய வீடுகளின் புழக்கடை இருட்டு நிழலுக்குள்ளேயே வரும் ஊருணி நீரின்...