‘சூப்பர் ப்ராக் சேவ்ஸ் டோக்கியோ' கதையின் முதல்வரியிலேயே ஆறடி உயரத்தில் இருக்கும் பிரமாண்ட தவளை, நாயகன் கடாகிரியைச் சந்தித்துவிடுகிறது. அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிய கடாகிரியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து விட்டதைத் தவிர அந்தத் தவளைக்கு கடாகிரியைச் சங்கடப்படுத்தும் வேறெந்த நோக்கமும் இல்லை. முராகமியின் கதை விலங்குகளைப் போலவே தவளையும் மிக மனிதாபிமானமும் நாகரிகமும் கொண்டது. அத்துடன் அதுவந்ததன் காரணம், ஒரு பெரிய லட்சியத்துக்காக கடாகிரியின் உதவியைக் கேட்டு. டோக்கியோவை நிலநடுக்கத்துக்கு உள்ளாக்க இருக்கும் மண்புழு ஒன்றின் திட்டத்தை நொறுக்கி டோக்கியோவையும் ஆயிரக்கணக்கான மக்களையும் காப்பாற்றுவதுதான் அதன் லட்சியம். திரு. தவளை என்று தன்னைக் கூப்பிட வேண்டியதில்லை, தவளை என்றே அழைக்கலாம் என்று அடிக்கடி நினைவூட்டும் அந்த ஆறடித் தவளை, நீட்சே, டால்ஸ்டாய் போன்ற தத்துவ அறிஞர்கள், படைப்பாளிகளின் மொழிகளையும் சந்தர்ப்பத்துக்கேற்ப கடாகிரியிடமும் நம்மிடமும் பகிர்ந்துகொள்கிறது. டோக்கியோவை அழிவுக்குள்ளாக்க இருக்கும் ராட்சச மண்புழுவை ஒழிப்பதால் கடாகிரிக்கோ, தவளைக்கோ எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை ...