கவித்துவமான மொழியும், அறிவார்த்தத்தின் சொடுக்குதலும், வாசிப்பு சுவாரஸ்யமும் அபூர்வமாக இணைந்த கதைசொல்லி யுவன் சந்திரசேகர். கடந்த இருபதாண்டுகளில் கணிசமான எண்ணிக்கையிலும் சிறுகதைகள், நாவல்களை எழுதிவருகிறார். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்து, கீழ்நடுத்தர வர்க்கத்தினர் வசிக்கும் ஸ்டோர் வீடுகள் சார்ந்து ‘விகடன்’, ‘கல்கி’ போன்ற பத்திரிகைகளில் எழுதப்பட்ட தமிழ்க் குடும்பங்களின் வாழ்க்கையும் தமிழ்ப் பண்பாட்டின் ஒரு செழுமையான பகுதியும் அதன் சத்தங்களோடும் வாசனைகளோடும் நமக்குக் ‘கடலில் எறிந்தவை’ சிறுகதைத் தொகுப்பின் வழியாகத் திடமாக நினைவுகூரப்படுகின்றன. முடிவற்ற அறிவுகளின் பின்னணியில், இன்னும் முடிவற்றதாக இருக்கும் பிரபஞ்சத்தின் புதிர்களை ஆராயும் போர்ஹேவை, கல்கியும் தேவனும் தி.ஜா.வும் லா.ச.ரா.வும் தற்செயலாக யுவன் சந்திரசேகரின் உலகத்தில் சந்திக்கிறார்கள்; வெற்றிலைச் செல்லத்தைப் பகிர்ந்துகொண்டு சுவாரஸ்யத்தோடு அவர்கள் உரையாடுகிறார்கள். உச்சிவெயில் அடிக்கும் மத்தியான மயக்கத்தில் ஒருவன் காணும் பகற்கனவுபோல்தான் யுவனின் கதைகள் தொடங்குகின்றன. அந்தக் கனவு பெரும்பாலும் மதுரையில் தொடங்கி வரலாறு, அர...