ஷங்கர்ராமசுப்ரமணியன் நாம் எங்கு சென்றாலும் எதைச் செய்தாலும் நம்மை மேலிருந்து கேமராக்கள் கண்காணிக்கத் தொடங்கிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. வேலை பார்க்கும் அலுவலகங்கள், வங்கிகள், மருத்துவமனைகள், உணவு விடுதிகள், நெடுஞ்சாலைகள் முதல் தெருமூலை பிள்ளையார் கோயில்கள் வரை மேலிருந்து பார்க்கின்றன. ஏதாவதொரு கேமராவின் கண்கள். சிறுசிலிருந்து பெரிசுவரை எலெக்ட்ரானிக், கணிப்பொறி சார்ந்த அனைத்துப் பொருட்களும் கிடைக்கும் சென்னையின் முக்கியக் கடைவீதியான ரிச்சி ஸ்ட்ரீட்டில், முதலாளி பணியாட்களைக் கண்காணிப்பதற்கும், கணவர்கள் மனைவிகளை வேவு பார்ப்பதற்கும், பெற்றோர் குழந்தைகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்குமான கேமரா ஒற்றுக் கருவிகளுக்குத்தான் தற்போது மிகவும் மவுசு. பேனா, பொம்மைகள், கதவில் ஒட்டும் ஸ்டிக்கர் பொட்டு என சந்தேகமே பட முடியாத எல்லா வடிவங்களிலும் ஒற்று கேமராக்கள் நம்மைச் சுற்றி இயங்கிக்கொண்டிருக்கின்றன. அன்றாடம் நாம் படிக்கும் தினசரிகளில் இந்த கேமராக்கள் பற்றிய வரிவிளம்பரங்களும் வருகின்றன. எல்லாருக்கும் சாத்தியமான சல்லிசான விலையில்! சென்னையின் முக்கிய வீதிகளெங்கும் சிசிடிவி கேமராக்கள் விற...