Skip to main content

Posts

Showing posts from July, 2015

ஷோபா சக்தி நேர்காணல்

    என் அரசியலில் இருந்தே எனது கதைகள் பிறக்கின்றன சந்திப்பு: ஷங்கர்ராமசுப்ரமணியன் கடந்த 15 ஆண்டுகளில் தமிழ் இலக்கியப்பரப்பில் நடந்த முக்கியத்துவம் வாய்ந்த படைப்பு நிகழ்வு ஷோபா சக்தி . ஈழத்தமிழர் போராட்டம் பெற்றெடுத்த குழந்தை என்று ஷோபா சக்தியை நிச்சயமாகக் கூறலாம் . இவர் முன்னணிக் கதாபாத்திரம் ஏற்று நடித்த , அகதிகள் படும் துயரத்தைப் பேசும் பிரெஞ்சுத் திரைப்படமான ‘ தீபன் ’, கான் திரைப்படவிழாவில் தங்கப்பனை விருதும் பெற்றுள்ளது … சமீபத்தில் சென்னை வந்த அவரிடம் தி இந்து தமிழ் நாளிதழுக்காக எடுக்கப்பட்ட நேர்காணலின் முழுமையான வடிவம் இதோ…. உங்களது புதிய நாவலான ‘பாக்ஸ் கதைப் புத்தகம்’ குறித்து சொல்லுங்கள்? முள்ளிவாய்க்காலில் நடந்த பேரழிவுக்குப் பிறகு வன்னி பகுதி கிராமம் ஒன்றில் நடக்கும் சம்பவங்கள் மற்றும் யுத்தத்தின் வடுக்கள் குறித்த கதை இது. யுத்தம் எமது மக்களிடையே ஏற்படுத்திய பாதிப்புகள், பேரழிவுகள் எல்லாமும் செய்திகளாகக் கட்டுரைகளாகப் பதிவாகியிருக்கின்றன. அதை இலக்கியமாகப் பதிவுசெய்திருக்கிறேன். இந்த நாவலுக்கென்று தனியாக கள ஆய்வு செ

பழைய புத்தகக் கடை

                  ஷங்கர்ராமசுப்ரமணியன்                                                                                                                ஓவியம் பூபேன் கக்கர் அந்த முச்சந்தியில் பழைய புத்தகக் கடை தாமதமாகத் திறக்கப்படுகிறது திறப்பவன் சத்தமேயின்றி கதவுப்பலகைகளை ஓரத்தில் அடுக்குகிறான்  கடையின் முற்றத்தைப் பெருக்குகிறான்  தரையைப் பார்க்காமல்  சாலையைக் கடப்பவர்களின் முகங்களில்  தேடுகிறான்  ஒரு அமைதி  தலைக்கவசத்துடன் வாகனத்தில் கடக்கிறேன்  என்னைத் தெரிந்தோ தெரியாமலோ இளிக்கிறான்  நான் கடக்கிறேன்  நான் அவன் கடைக்கு ஒருமுறை போயிருக்கிறேன்  புத்தகங்கள் எதையும் என்னிடம் விற்கவில்லை  என்னை புத்தகங்களோடு சேர்த்து  நெருக்கித் தொட்ட இடம்  ஞாபகத்திற்கு வருகிறது.  சப்தத்தின் ஆழத்தில் நிசப்தமாய்  முச்சந்தியில் காத்திருக்கிறது  அவனது பழைய புத்தகக் கடை.    

ஆத்மாநாம் : மொழியின் கனவு கவிதை

ஷங்கர்ராமசுப்ரமணியன் நாளை நமதே கண்களில் நீர் தளும்ப இதைச் சொல்கிறேன் இருபதாம் நூற்றாண்டு செத்துவிட்டது சிந்தனையாளர் சிறு குழுக்களாயினர் கொள்கைகளை கோஷ வெறியேற்றி ஊர்வலம் வந்தனர் தலைவர்கள் மனச் சீரழிவே கலையாகத் துவங்கிற்று மெல்லக் கொல்லும் நஞ்சை உணவாய்ப் புசித்தனர் எளிய மக்கள் புரட்சி போராட்டம் எனும் வார்த்தைகளினின்று அந்நியமாயினர் இருப்பை உணராது இறப்புக்காய்த் தவம் புரிகின்றனர் என் ஸக மனிதர்கள் இந்தத் துக்கத்திலும் என் நம்பிக்கை நாளை நமதே ஆத்மாநாமின் ஆளுமையை முழுமையாகப் பிரதிநிதித்துவம் செய்யும் கவிதை இது. மென்மையும் உரத்த தன்மையும் சேர்ந்தொலிக்கும் கவிதைகள் அவருடையவை. நமது வாழ்க்கையின் வெவ்வேறு சந்தர்ப்பங்கள் மற்றும் அனுபவச் சூழல்களின் பின்னணியில் நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய வரிகளை அவர் எழுதியிருக்கிறார். ‘நாளை நமதே’, பிரத்யேக உரையாடல் தொனியைக் கொண்ட ஆத்மாநாமின் சிறந்த கவிதைகளில் ஒன்று. பாரதி, பாப்லோ நெரூதா போன்ற பெருங்கவிஞர்களைப் போலக் கவிதையை, சமூக நடவடிக்கையாக மாற்ற ஆசைப்பட்ட ஒரு குரல் ஆத்மாநாம். கவிதை என்ற கலைவடிவத்தின் அழகியலையும், பற

புலம்பெயர் பிள்ளையார்

 ஷங்கர்ராமசுப்ரமணியன் முப்பத்தி இரண்டாம் எண் ஐந்து ரத தெரு அண்ணா நகர் மாமல்லபுரத்தைச் சேர்ந்த சிற்பி ஐயப்பன் சென்ற வருடம் வங்கிக்கடனில் வாங்கிய குட்டி யானை டெம்போவில் ஈரமணலை இடுகிறார் ஒரே முகம் ஒரே வடிவம் பல்வேறு சைஸ் கல்பிள்ளையார்கள் வண்டியில் ஏறுகிறார்கள் அம்மன்களும் பெரிய பிள்ளையார் பிரதானமாக நடுவில் வீற்றிருக்கிறார் பெரிய அம்மன்கள் இருபுறம் சென்ட்ரல் ரயில் நிலையம் வரை சேதமுறாமல் பயணிக்க பிள்ளையார் மற்றும் அம்பிகைகளை நெஞ்சோடு சேர்த்து நைலான் கயிற்றில் கட்டுகிறார் ஐயப்பனின் உதவியாளர். சின்ன அம்மன் சிலைகள் ஈரமணலில் படுத்திருக்கின்றன பிள்ளையாரை ஒருபோதும்   சமமாகப் படுக்கவைக்க முடியாது டெம்போ மாமல்லபுரத்தை நீங்குகிறது வெயில் தகிக்கத் தொடங்குகிறது பகீரதப் பிரயத்தன சிற்பங்களில் உள்ள குரங்குகளும் சிற்பமாகாமல் பின்னணியில் நிற்கும் பாறையும் புலம்பெயரும் பிள்ளையாருக்கு விடைகொடுக்கின்றன.