ஷங்கர்ராமசுப்ரமணியன் பொருள் மதிப்பில் பார்த்தால் சீக்கிரத்திலேயே வாடிவிடக்கூடியதும் அதேவேளையில் பேரழகும் நுட்பமும் கொண்ட வடிவங்கள் மலர்கள் . எத்தனை கலைஞர்களை , மெய்ஞானிகளை , கவிஞர்களை அவை ஈர்த்திருக்கின்றன ? “ உடைகளுக்காக நீங்கள் கவலைப்படுவானேன் ? வயல்வெளி யிலுள்ள லீலி புஷ்பங்கள் எப்படி வளரு கின்றன எனப் பாருங்கள் ” என்று மலர்களைப் பார்த்து வியந்திருக்கிறார் கிறிஸ்து . புத்தர் ஒன்றுமே பேசாமல் புன்னகைத்தபடி சீடன் மஹாகாஷ்யபனுக்கு ஞானத்தைக் கடத்தியது தாமரையை உயர்த்திக் காட்டியபடிதான் . மலர் வழியாகக் கடத்தப்பட்ட அந்த ஞானம்தான் 28 குருக்களுக்குக் கைமாறி ஜென் ஆனதாகச் சொல்லப்படுகிறது . எல்லாக் காலத்திலும் அனைத்து மொழிகளிலும் இலக்கியத்தின் நிலையான உருவகங்களை லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் ஜோர்ஜ் லூயி போர்ஹே வகுக்கிறார் . காலம் – நதி , வாழ்வு - கனவு , மரணம் – உறக்கம் , நட்சத்திரங்கள் – கண்கள் , மலர்கள் - பெண்கள் . கவிஞர் தேவேந்திர பூபதியின் சமீபத்திய கவிதைத் தொகுதியான ‘ வாரணாசி ’ யில் உள்ள ‘ கண்மலர் கண்டவன் ’...