திருநெல்வேலியில் நான் அதுவரை போயும் குளித்துமிராத சிந்துபூந்துறை படித்துறைக்கு அருகே என் அம்மாவின் சாம்பலை தாமிரபரணியில் கரைத்து முங்கி எழுந்தபோதுதான் உணர்ந்தேன்; எனக்குத் தெரிந்த வடிவத்தில் இருந்த அம்மா, இந்த உலகத்தில் இனி இல்லை என்பது. மழிக்கப்பட்ட தலையில் கக்கத்தில் தண்ணீர் நனைத்து உணர்ந்த குளிர் அதைச் சொல்லியது. என் தங்கை தெய்வானையிடம் இப்படித்தான் சொன்னேன். ஆறுதலுக்காக அவளுக்கோ எனக்கோ சொல்லிக் கொள்ளவில்லை. இந்த உலகத்துக்குள் வந்தவர்கள் யாரும் முற்றிலுமாக இல்லாமல் ஆகிவிடமுடியாதென்று. ஆமாம் என் அம்மாவின் உடன்பிறந்த அக்காளும் பெரியம்மாவும் இறந்தபிறகு, அவியலை எப்போதெல்லாம் சமைக்கிறேனோ உண்கிறேனோ அப்போதெல்லாம் அந்த அவியலில் அவள் இருக்கிறாள் என்பதை உணர்வேன். எங்கள் வீட்டிலேயே நாகர்கோயில் அவியலை அதன் முழுமையான ருசியில் சமைப்பவள் அவள்தான். அந்த அவியல் தொடர்பான நினைவு என்னில் இல்லாமல் ஆகும்வரை என் பெரியம்மா உண்மையில் இருக்கிறாள். என் அம்மாவும் அப்படித்தான்; அவள் எனக்குச் சிறுவயதிலிருந்து அறிமுகப்படுத்திய உணவுகள், அழைத்துச் சென்ற சினிமாக்கள், இடங்கள் இருக்கும்வரை அவள் வேறு வடிவங்களில் இருந்த