ஷங்கர்ராமசுப்ரமணியன் அம்மா புகட்டிய காலத்திலிருந்து எனக்கு நீதிக்கதைகள் இன்றுவரை தேவையாகவே இருக்கின்றன. எளிய நீதிக்கதைகள் முதல் சிக்கலான நீதிக்கதைகள் வரைத் தேடித்தேடி அவை சொல்லும் நெறிமுறைகள் வழியாக, எனது அன்றாடத்துக்குள் ளும் , என்னைச் சுற்றி நடக்கும் துயரமும் ரணமும் சிறு இளைப்பாறுதல்களும் கூடிய நிகழ்ச்சிகள், அபத்தங்கள், புதிர்களுக்கு ள்ளும் ஒரு ஒழுங்கை நான் கற்பிக்கவோ புனரமைக்கவோ செய்கிறேன். என்னைச் சுற்றி நடக்கும் ஒரு நிகழ்வுக்கு கால, வெளிப் பரப்பளவில் மிக அருகிலிருக்கும், கைக்குத் தென்படும் காரண காரியங்களைத் தேடாமல், என் வாழ்வுக்கு அப்பாலும் முன்பும் காரணம் இருக்கலாம்; மனிதத்துவத்துக்கு அப்பாற்பட்ட காரணமும் இருக்கலாம்; அதனால் சஞ்சலமில்லாமல் புகார்கள் இல்லாமல் அமைதியாக இரு என்பதை என் தலையில் குட்டிக் குட்டி உணர்த்தும் நீதிக்கதைகள் அடிக்கடி தேவையெனக்கு. கட்டற்ற நுகர்வு ஒன்றே வாழ்வென்றாகிவிட்ட இக்காலகட்டத்தில் அடங்கவேயடங்காத புலன்கள் வழிநடத்தும், குறுக்கும்நெடுக்குமான சபலத்தின் பாதைகளில் திரியும் நவீன மனிதனுக்கு, மேலதிகமாக தற்காலத்தின் பாடுகளையு...