சமீபத்தில் அகச்சேரனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பான ‘அந்த விளக்கின் ஒளி’யில் ‘அம்மா விழுந்தாள்’ கவிதை, என்னை யோசிக்க வைத்தது. அம்மா ஒரு கருத்துருவமாக, படிமமாக மட்டும் இல்லாமல் தனி அம்சம் கொண்டவளாக, பொது அன்னையிலிருந்து வேறுபட்ட அன்னைகளின் சித்திரங்கள் தமிழ் புதுக்கவிதையிலும் நவீன கவிதையிலும் குறைவுதான் என்று தோன்றியது. அகச்சேரனின் ‘அம்மா விழுந்தாள்’ கவிதையில் அம்மா என்பவள் தொல்படிவத்தன்மையின் தொடர்ச்சியாகவும் அதேவேளையில் தனி அன்னையின் சாயல்களுடனும் தென்படுகிறாள். அம்மா விழுந்தாள் அம்மா விழுந்தாள் நன்றாகவே பின்கட்டிலிருந்து தேநீர்த் தட்டோடு நடந்து வந்தவள் வீட்டின் சகல ஜடங்களும் உயிர்களும் பார்க்க இடறி தூக்க எத்தனிக்காத என் கற்கைகளை நண்பனிடம் குறைபட்டேன் வீட்டில் மறைந்திருந்த பாழுங் கிணற்றை அறிந்த பீதியில் இன்றைய தேநீரோடு அம்மா நடந்து வருகிறாள் நான் என் கைகளை கைகளை... 000 வீட்டின் நடுவே ஜடங்களும் உயிர்களும் பார்க்க, உயிர்களும் ஜடங்களாய் பார்க்க எல்லார் கண்முன்னரும் விழுந்த அம்மாவை ஏன் மகனால் தூக்க எத்தனிக்க முடிவதில்லை? அவனது கைகள் கல்லாலான கைகளாக ஆனது ஏன்?