வாழுமிடம், மூலாதாரம், சொர்க்கம், தாயின் கருப்பை, பூர்வ அடைக்கலம், விடுதலை என ‘வீடு’ என்ற அந்தச் சின்னச் சொல் குறிக்கும் அர்த்தம் பெருகிக்கொண்டே போவது. கருவிலிருந்து வெளிவருவதற்கு முன்பே வீட்டைத் தேடத் தொடங்கியவர் கிறிஸ்து. கடவுளின் மைந்தனாயினும் பல்வேறு இடையூறுகளுக்கிடையே பாலைவெளியில் மாட்டுத்தொழுவத்தில் பிறந்து அந்த இடத்தையும் அங்குள்ள எளிய வாழ்க்கையையும் ஒரு மகத்துவமான குறியீடாக்கிக்கொண்டவர். மாட்டுத்தொழுவத்தில் பிறந்து, சிலுவைப்பாட்டை எதிர்கொண்டு மரித்திருக்காவிடில் உலகில் அத்தனை ஏழைகள், அத்தனை ஒடுக்கப்பட்டவர்கள், அத்தனை குடிசைப்புறங்களில், அவர் நட்சத்திர விளக்குகளுடன் இன்றும் நினைவுகூரப்பட முடியுமா? கிறிஸ்துவைப் மையமாகக்கொண்டு தன் வாழ்நாள் முழுவதும் வீடென்ற ஒன்றை அதன் எல்லா பரிமாணங்களிலும் தேடி அலைந்த தமிழ்க்கவிஞன் பிரமிள் எழுதிய கவிதை இது. ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி சொன்னதுபோல மனத்தின் வாழ்க்கையை வாழத் தொடங்கிவிட்ட தலைமுறையினரான நம்மை மனத்தின் இருண்ட அனுஷ்டானங்கள் வீடு திரும்பவிடாமல் தடுத்துத்தான் கொண்டிருக்கின்றன. இருண்ட கானகக் குரல்களின் ஊர்வலம் ஒரு காலத்தில்