இலக்கியம் உள்ளிட்ட அனைத்து கலைவெளிப்பாடுகள் மட்டுமல்ல; எல்லா செயல்பாடுகளுக்கும் உடம்புக்கும் இடையிலான தொடர்பை, இன்றியமையாத இணைப்பை, அது குறித்த ஓர்மையை என்னிடம் உருவாக்கியவர் சந்திரலேகா. எந்தக் காரணத்துக்காக அவருடன் அறிமுகமானேன் என்று எனக்கு இப்போது ஞாபகத்தில் இல்லை. 2004-ம் ஆண்டு மத்தியில் ஆரம்பித்து அவரது மரணம் வரை, பெசண்ட் நகரில் அவரது வீட்டில் நடந்த சில சந்திப்புகளும் குறைந்த அவகாசத்தில் நடந்த உரையாடல்களும் அதை எனக்கு உணர்த்தின. அவர் வீடும் தோட்டமும் அதில் அவர் அமைத்திருந்த அரங்கும் இன்றும் என்னை ஈர்ப்பவையாக உள்ளன. அப்போது எனக்கு வயது 30. 2006-ம் ஆண்டு இறுதியில் அவர் காலமானார். உடம்பு தொடர்பான கவனம், உடம்பின் ஆற்றல், ஆரோக்கியத்துக்கும் மனத்தின் ஆரோக்கியம், ஆற்றலுக்கும் உள்ள உறவு அப்போதுதான் எனக்குத் தெரியத் தொடங்கியது. உடம்பு தான் வெளியாக இயற்கையாக பிரபஞ்சமாக விரிந்திருக்கிறது என்பதை அறியும் கல்வியை என்னிடம் தொடங்கி வைத்தவர் சந்திரலேகா. கால்பந்தாட்டத்தைப் பார்ப்பதில் மிகவும் ஈடுபாடுடையவர் சந்திரலேகா. சுந்தர ராமசாமியின் ஜே. ஜே. சில குறிப்புகள் நூலுக்கு அவர் வடிவ...