கறுப்புமைக் கோட்டுச்சித்திரங்களின் வழியாக இசைமையையும் புலன் ஈர்ப்பையும் ஏற்படுத்த வல்ல தமிழ் நவீன ஓவியர்கள் சிலர்தான். ஆதிமூலம், சந்ரு, மருது, மனோகரின் பட்டியலில் ஓவியரும் நிர்மாணக் கலை முன்னோடியுமான மு.நடேஷுக்கும் பிரதான இடம் உண்டு. அரசு அலுவலகத்தில் வேலை பார்த்த அம்மா, வீட்டுக்குக் கொண்டுவரும் துண்டுக் காகிதங்களில் சிறுவயதிலேயே கிறுக்கி வரையத் தொடங்கிய நடேஷுக்குக் கோட்டோவியம் என்பது உயிர்த்திருப்பதன் தவிர்க்க முடியாத அம்சமாகவே இருக்கிறது. இந்நிலையில்தான், ஓவியருக்கு அத்தியாவசியமான கண்கள் பழுதுபட்டுக்கொண்டிருக்கும் நிலையில், அதை உணர்த்தும் அர்த்தத்திலேயே ‘பிஃபோர் பிகமிங் பிளைண்டு’ (Before Becoming Blind) என்ற அதிர்ச்சி தரக்கூடிய தலைப்புடன் தனது சித்திர நூலொன்றை வெளியிட்டுள்ளார் நடேஷ். தனது கோடுகளுக்கு விடுதலை அளித்த முதல் ஆசிரியர் என்று ஆர்.பி.பாஸ்கரனை சென்னை நுண்கலைக் கல்லூரியில் பயின்றவரான நடேஷ் குறிப்பிடுகிறார். இரண்டாம் ஆசிரியராக ஓவியர் சந்ருவை மதிப்பிடுகிறார். தென்னிந்தியக் கோயில்களுக்கு அவர் அழைத்துச்சென்ற சுற்றுலாவில் பார்த்த சிற்பங்கள் தனது கோட்டைத் தமிழ்க் கோடாக மாற்றின என்கி...