Skip to main content

Posts

Showing posts from August, 2021

நகுலனும் அபியும் சந்திக்கும் 'மறுபுறம்'

பிரமிள், நகுலன், தேவதச்சன், அபி, ஆனந்த் ஐவரும் மனம் என்ற ஒரு பிரதேசம் சார்ந்த வேறு வேறு இயல்புகளின் குன்றுகள். அபி தன் கவிதையில் பரிசீலிக்கும் இன்மையையும் நகுலன் பரிசீலிக்கும் இன்மையையும் ஒத்துப் பார்க்க தற்செயலாக ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது. உருத்திரளாமல் ஒன்றுகூடாமல் இருக்கும் 'ஒன்றையும்' அபி தன் வழியில் இந்தக் கவிதையில் பரிசீலிக்கிறார். அபி சொல்லும் மறுபுறத்தின் சமிக்ஞைகள் நமக்குப் புரியத் தொடங்குகிறது. அபியின் 'யாரென்று என்னவென்று' கவிதையில், கவிதைசொல்லிக்கு எதிராகச் சதி செய்வது, விட்டுப் போன வலிகள் மட்டும் அல்ல; இதங்களும் தானாம். யார் என்று என்னை நினைத்துக் கொண்டிருக்கிறாய்? இந்தக் கேள்வி பொதுப் பயன்பாட்டில் சுயமும் அகந்தையும் தொனிக்கும் நமக்கு வழக்கமான கேள்வி. இந்தக் கவிதையில் அபி இதற்கு நேர் எதிரான முனையில் நின்று மிகச் சந்தேகோபாஸ்தமாக ஒலிக்கவிடுகிறார் இந்தக் கேள்வியை.  இந்தக் கவிதையில் ஒரு முன்னிலை வந்து உரைப்பது புகார் போல ஒலிக்கிறது.  ‘நீ ஒன்றுகூட வில்லை உன் சொல் ஒன்றுகூடவும் நாளாகலாம் கூடாமலும் போகலாம்' என்கிறாய். அபியின் உலகம் பற்றி அபி எழுதிய குறிப்பைப் ப

பெருந்தொற்றை முகமூடியாக வைத்து நம்மை நோக்கி நெருங்கி வரும் பாசிசத்துக்கு கண்டராதித்தனின் எதிர்வினை

பெருந்தொற்றைத் தோதாக்கி நமது நவதுவாரங்களையும் திறக்க முடியாத  விசித்திர மாஸ்கை மட்டுமே பரிசளித்து விட்டு, சுதந்திரத்தின் வழியாக, ஜனநாயகத்தின் வழியாக, அரசியல் சாசனத்தின் வழியாக, சிறுகச் சிறுகச் சேகரித்த எல்லாவற்றையும் படிப்படியாகப் பறித்துக் கொண்டு வரும் சர்வாதிகாரப் பேயாட்சியை, அது தேசம் முழுவதும் பரப்பி வரும் நஞ்சை கவிஞர் கண்டராதித்தன் கலைத்தன்மையும் அபூர்வ சுரணையும் கூடிய மொழியில் சமீபத்தில் வந்த 'ஓலைச்சுவடி' இணைய இதழில் பதிவு செய்துள்ளார். தேசத்தைக் கிட்டத்தட்ட மயானமாக்கிவிட்டு, அதன் புகைவாசனை அண்ட முடியாத மூடிய மாளிகையில் இருந்துகொண்டு மயில்களைக் கொஞ்சிக் கொண்டிருக்கும் இரக்கமற்ற ஒரு ராஜநாகத்தை நோக்கி எழுப்பப்பட்ட ஓலம் என்று கண்டராதித்தனின் 'உதுமான் நான் உலகளந்தப்பெருமாள் பேசுகிறேன்' கவிதையைச் சொல்லமுடியும்.  கங்கையில் சடலங்கள் மிதக்கத் தொடங்கியதும், தலைநகர் மயானத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த சிறுமி அங்குள்ள புரோகிதர் ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதும் வெறுமனே கோர நிகழ்ச்சிகள் மட்டும் அல்ல; புராணிகங்களையும் படிமங்களையும் கருவிகளாக்கி ஆட்சிக்கு வ

முகமது இப்ராகிம் - நகுலன்

                         தமிழில் : ஷங்கர்ராமசுப்ரமணியன் (தமிழ் நவீன இலக்கியப்பரப்பில், சி.சு.செல்லப்பா நடத்திய எழுத்து இதழில் கவிஞராகவும், சிறுகதை ஆசிரியராக அறிமுகமாகியவர் நகுலன். அவரது காலத்தில் இயங்கிய, அவரது அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் பலரும் கூட, வாசக நினைவிலிருந்து வேகமாக விடைபெற்றுச் செல்லும் நிலையில், நகுலனின் எழுத்துக்கள் நவீனத்துவ காலகட்டத்தையும் தாண்டிய பொருளாம்சம் மற்றும் கலையம்சத்துடன், அபூர்வமான ரகசியத் தன்மையை தக்கவைத்தபடி புதிதாக வரும்   வாசகனையும் ஈர்க்கின்றன. நகுலன் ஆங்கிலத்திலும் சிறுகதைகள் மற்றும் கவிதைகளை எழுதியிருக்கிறார். அவை முறையானபடி தொகுக்கப்பட்டால் நகுலனின் ஆளுமை மேலும் துலங்கும் என்பதற்கு இக்கதை ஒரு சாட்சியாக இருக்கிறது. நகுலன் ஆங்கிலத்தில் எழுதிய படைப்புகள் அப்போதைய இந்திய ஆங்கில இலக்கிய எழுத்து வட்டத்தில் சரியானபடி கவனிக்கப்படவில்லை என்று ஆதங்கப்படுகிறார் கவிஞர் அய்யப்ப் பணிக்கர் . இச்சிறுகதை 1979 ஆம் ஆண்டு டைம்ஸ் ஆப் இந்தியா குழுமம் வெளியிட்ட யூத் டைம்ஸ் மாதமிரு முறை இதழில் (நவம்பர் 16-30) வெளிவந்துள்ளது. யூத் டைம்ஸில் சிறுகதைகளைத் தேர்ந்

ஏழு முகமூடிகளைத் தொலைத்தேன் - கலீல் ஜிப்ரான்

நான் எப்படி பித்து கொண்டவனாக ஆனேன் என்று கேட்கிறாய். இப்படித்தான் அது நடந்தது. ஒரு நாள், கடவுள்களில் நிறைய பேர் பிறப்பதற்கு முன்னால், நான் ஆழ்ந்த உறக்கத்திலிருந்து எழுந்தேன். எனது எல்லா முகமூடிகளும் திருடப்பட்டதைக் கண்டுகொண்டேன். நானே செய்த ஏழு முகமூடிகள் அவை; அந்த ஏழு முகமூடிகளை அணிந்துதான் ஏழு வாழ்க்கைகளை வாழ்ந்தேன். முகமூடிகள் திருடுபோனதால் முகமூடி அணியாமல் கூட்டமான தெருக்களில் அலைந்து தேடினேன். திருடர்கள், திருடர்கள், சாபம் பிடித்த திருடர்கள் என்று கத்தித் திரிந்தேன். ஆண்களும் பெண்களும் என்னைப் பார்த்துச் சிரித்தனர். சிலர் என்னைப் பார்த்துப் பயந்து அவர்கள் வீட்டுக்குள் சென்று பூட்டிக்கொண்டனர். நான் சந்தைப் பகுதியை எட்டியபோது, ஒரு இளைஞன் ஒரு வீட்டின் மீது ஏறி நின்று, இவன் பைத்தியக்காரன் என்று கத்தினான். அவன் முகத்தைப் பார்ப்பதற்காக நான் முகத்தை உயர்த்தினேன். முதல் முறையாக சூரியன் எனது வெறும் முகத்தின் மீது முத்தமிட்டது. சூரியன் மேல் கொண்ட அன்பினால் எனது ஆத்மா பற்றி எரிந்தது. எனக்கு இனி முகமூடிகள் தேவையில்லை. நான் அருள்வாக்கு கிடைத்ததுபோல உரத்துக் கூவினேன். எனது முகமூடிகளைத் திருடிய

நரியின் விருந்து - கலீல் ஜிப்ரான்

காலை புலர்ந்தது. ஒரு நரி தனது நிழலைப் பார்த்துப் பெருமிதமாகச் சொன்னது.  ‘இன்று மதிய விருந்தாக எனக்கு ஒட்டகம் கிடைக்கும்’. அப்போதிருந்து ஒட்டகங்களைத்தேடித்தேடி அலைந்தது. பின்மதியமாகிவிட்டது. நினைத்தமாதிரி விருந்து அமையவில்லை. திரும்பவும் நரி தனது நிழலைப் பார்த்துச் சொன்னது. ‘சரி, இப்போதைக்கு ஒரு எலி கிடைத்தால் போதும்.’

சோளக்கொல்லை பொம்மை - கலீல் ஜிப்ரான்

ஒரு நாள் வெயிலில் நின்றுகொண்டிருக்கும் சோளக்கொல்லை பொம்மையைப் பார்த்து, “யாரும் வராத இந்த இடத்தில் தனியாக நின்றுகொண்டிருப்பது உனக்குச் சிரமமாக இல்லையா" என்றேன். "இன்னொருவரை அச்சுறுத்துவதென்பது ஆழமான மகிழ்ச்சியை அளிப்பது; அது நீடித்திருக்கவும் கூடியது. அதனால் எனக்கு சலிப்பே வரப்போவதில்லை" என்று கூறியது. ஒரு நிமிட யோசனைக்குப் பிறகு, ஆமாம் உண்மைதான். அந்த மகிழ்ச்சியை நானும் அறிவேன் என்றேன். “வைக்கோலால் திணித்த உடலைக்கொண்டவர்களால்தான் அந்த உண்மையான மகிழ்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும்" என்று சோளக்கொல்லை பொம்மை பதில் அளித்தது. சோளக்கொல்லை பொம்மை இந்தப் பதிலால் என்னைப் பெருமைப்படுத்தியதா, சிறுமைப்படுத்தியதா என்று புரியவில்லை. அதைவிட்டு நீங்கிச் சென்றேன். ஒரு ஆண்டு கழிந்தது. சோளக்கொல்லை பொம்மை அதற்குள் தத்துவஞானியாகிவிட்டது. நான் அப்போது அதைக் கடந்து போனபோது சோளக்கொல்லை பொம்மையின் தொப்பிக்குக் கீழே இரண்டு காகங்கள் கூடுகட்டத் தொடங்கியிருந்தன.

மெய் ஞானம் - கலீல் ஜிப்ரான்

பூனைக்கூட்டம் ஒன்று காட்டில் ஞானியான நாய் ஒன்றைக் கடந்தது.  பூனைகள் மிக அருகில் வந்தும் தன்னைக் கவனிக்காமல் தனது அருள்மொழிகள் எதையும் கேட்காமல் தங்கள் வேலையைப் பார்த்துக் கொண்டு செல்கிறார்களே என்று அந்த நாய் ஆச்சரியம் கொண்டது.  அந்தப் பூனைக்கூட்டத்தின் நடுவே பெரிய உடலைக் கொண்ட பழுப்பு நிறப்பூனை முன்னால் வந்து தமது தோழர்களைப் பார்த்து, “பிரார்த்தியுங்கள். திரும்பத் திரும்பப் பிரார்த்தித்தால் சந்தேகமேயில்லை; வானிலிருந்து எலிகள் மழையாகப் பொழியும்.” என்று போதித்தது. இதைக் கேட்ட ஞானி நாய் விழுந்து விழுந்து சிரித்தது.  “ஓ குருட்டுப் பூனைகளே, எங்கள் மூதாதைகள் எழுதி வைத்துப் போனது எனக்குத் தெரியாதா? விசுவாசமும் பணிவும் கொண்டு பிரார்த்தனை செய்தால் எலிகள் அல்ல, எலும்புகள் தான் மழையாகப் பொழியும்.”