இறால் , தனது உடலை இழந்து , வெறும் கூடாக எஞ்சும்போதும் புறநிலையில் எப்படி இறாலாகவே தோற்றம் அளிக்கிறது ? அக்கூடு வெறும் அரண் மட்டும் அல்ல. உள்பகுதியை இழந்தபிறகு , இறாலின் தோடு ஒரு நுட்பமான ஆபரணமாகிவிடுகிறது. இறாலின் தன்னிலையும் அதில் வெளிப்படுகிறது. ஆபரணத் தன்னிலை ; ஆனால் சாரம் இறங்கியது. இறாலற்ற ஓர் இறால். எர்னஸ்ட் ஹெமிங்வேயின் “பெரிய இரட்டை இதய நதி” ( Big Two-Hearted River) சிறுகதையில் நாயகன் நிக் , ட்ரவுட் ( TROUT) மீனைப் பிடித்து , அதன் உட்புறம் , நாக்கு , செவுள் எல்லாவற்றையும் அனாயசமாக அகற்றி , கழுவியபிறகும் அவனுக்கு அது உயிருள்ள ட்ரவுட் மீனைப்போலவே தெரிகிறது. இறாலில் தோடோ அல்லது ஹெமிங்க்வேயின் டிரவுட் மீனோ , இரண்டுமே உள்ளடக்கமே இல்லாத நுட்பமான செறிவான தன்னிலைகள். தன் சமீபத்திய கவிதை நூலான “துஆ”வில் , இல்லாமல் இருக்கிற அந்த தன்னிலையினையே , சபரிநாதன் அடைந்துள்ளார். இத்தொகுப்பில் தன்னிலையைத் துறந்த பாவனையில் நாடகங்களை நிகழ்த்தி , தன்னிலையை பல நிலைகளில் வெளிப்படுத்தும் பிரயத்தனத்தில் வெற்றிபெற்றிருக்கிறார். தன்னிலையை வேறுவேறு காலங்களிலும் பருவங்களிலும் நிலங்களிலும் குரல்களி