சென்னையில் நான் பார்த்திராத அபூர்வக் காட்சி அது. பொங்கல் பண்டிகைக்குப் பிறகான நாள். ப்ரவுனியை சாயங்கால நடைக்கு அழைத்துச் செல்லும் சீதாபதி நகர் பகுதியில் நான்கு சாலைகள் சந்திக்கும் முனையில், ஊரடங்கு காலத்துக்குப் பிறகு இன்றுவரை இயங்காத இஸ்திரி வண்டிக்குப் பக்கவாட்டில் இருக்கும சிமெண்ட் பலகை இருக்கையில் மூன்று மூதாட்டிகள் ஏகாந்தமாக அமர்ந்திருந்தார்கள். யார் வீட்டுக்கும் சொந்தமில்லாமல், வேப்பமரத்தின் நிழலில் அமைந்திருக்கும் இருக்கை அது. மூன்று பாட்டிகளும் வெற்றிலை போட்டு சாயங்காலத்துக்குள் விரைந்து கொண்டிருக்கும் பொழுதில் சன்னமாக ஆசுவாசமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். வீடுகளில் பணிசெய்யும் மூதாட்டிகள் அவர்கள். இருக்கையின் ஓரத்தில் பையில் கரும்பு இருந்தது. அவர்கள் முகங்களில் இருந்த சுருக்க ரேகைகளும் மூக்குத்தியும் அசைபோடும் வாயும் வேப்பமரமும் சேர்ந்து அங்கு ஏற்படுத்தியிருந்த அமைதியும் அந்த இடத்தை விச்ராந்தியாக ஆக்கியிருந்தது. அந்த மூன்று பெண்களும் வேப்பமரமும் அதிலிருந்து உதிர்ந்த இலைகள் படிந்த தெருவும் படர்ந்து கொண்டிருந்த மாலையும் நகரத்துக்கு வெளியே இருப்பதாக எனக்குத் தோன்றியது...