சங்கக் கவிதைகளை மிகச் சமீபத்தில்தான் ஈடுபாட்டுடன் வாசிக்கத் தொடங்கியுள்ளேன். ஒரு தமிழ்க் கவிஞனாக, தமிழனாக அந்தக் கவிதைகளின் உள்ளடக்கமும் உயிரும் சாரமும் என் வழியாகவும் கடந்துகொண்டிருப்பதை உணர்கிறேன். அந்நிலையிலிருந்து, சங்க காலக் கவிதைகளில் வரும் நிலத்தை வாழ்வை பிராணிகளை பறவைகளை ஒரு அன்றாட எதார்த்தமாக கிடைமட்டத்தில் ஒரு பாயைப் போல உரைநடை கதையில் விரிக்க முடியாது என்பதே எனது இதுவரையிலான எண்ணமாக இருந்து வந்துள்ளது. மலையாளக் கவிஞர், எழுத்தாளர் மனோஜ் குரூர் எழுதி, கே. வி. ஜெயஸ்ரீ மொழிபெயர்த்த ‘நிலம் பூத்து மலர்ந்த நாள்’ நாவலை வாசித்த போது அது ஒரு கற்பிதம் என்று புரிந்தது. வள்ளல் வேள்பாரி, மூவேந்தர்கள் சதியால் கொல்லப்படும் சம்பவத்தை மையமாகக் கொண்டு ஒரு சுவாரசியமான திரில்லர் நாவல் வடிவத்தை மனோஜ் குரூர் தேர்ந்துள்ளார் எனினும் அது நாவலின் மேல் ஓடு மட்டுமே. ஆயிரம் ஆண்டுகளாக மாறியும் மாறாமலும் இருக்கும் தமிழ் மனநிலப் பரப்பின் வரைகோடுகளை நோக்கி மனோஜ் குரூர் நெருங்கியிருப்பது தான் நாவலின் ஆச்சரியம். பாணர் சிறுமியான சீரை, தங்கியிருக்கும் இடத்திலிருந்து காணாமல் போய் வெள்ளை ஆம்பல்கள் பூத்தி...