Monday, 30 November 2015

மரத்தின் உச்சியில் ஏறிய பாம்பு                      
                                             ஷங்கர்ராமசுப்ரமணியன்எங்கள் வீட்டுத் தென்னை மரத்தின் மேல் ஒரு பாம்பு ஏறியுள்ளது அது சாரைப்பாம்பென்றார்கள் கடந்துபோகிறவர்கள் சிலர் கொம்பேறி மூக்கன் என்றனர் சென்னையின்  மழை ஈர நசநசப்பால் எரிச்சல்பட்டு  சற்று வெயிலேறியவுடன் தென்னையில் ஏறியிருக்கலாம் தலை சற்று சிறுத்து உடல் தடித்த நீளமான பாம்பு அது சற்று நேரம் பன்னாடையில் சுருண்டு இளைப்பாறுகிறது சற்று நேரம் கழித்து தென்னை இலைகளில் நீண்டு நெளிந்து சுற்றிப் தன் பராக்கிரமம் காட்டுகிறது தெருவில் நின்று வேடிக்கை பார்க்கும் என்னை தலையை மடக்கிக் கூர்மையாகப் பார்த்து உன்னை யுகம்தோறும் தொடர்வேன் என்பதாகப் பயமுறுத்துகிறது வழக்கமாகத் தென்னைக்கு வரும் அணில் தனக்குப் பழக்கமான இடத்தில் இன்னொருவர் இருப்பதைப் பார்த்து வாலைத் தூக்கி திரும்பத் திரும்ப நெருங்கி கீச்சிடுகிறது பாம்பு பதுங்கியிருக்கும் போது அணிலின் வாலைப் பாம்பென்று கருதி பாம்பைப் பார்த்த திருப்தியில் செல்கிறாள் ஒரு பாட்டி நான் பாட்டியிடம் அது அணில் என்று சொல்லவில்லை மரத்தின் உச்சியில் ஏறிய பாம்பை எனது காமம் என்று பெயரிடலாமா?  

Friday, 13 November 2015

சிறிய பொருட்களே சின்னஞ்சிறிய பொருட்களே

                                            ஷங்கர்ராமசுப்ரமணியன்
 நேசத்துக்குரியவர்களும்
 அத்தியாவசியமானவைகளும்
 இல்லாமலாகும்
 வயதில்
 இடத்தில்
 சிறிய மதிப்பற்ற
 பொருட்கள்
 மூடநம்பிக்கைகளாய்
 வந்து ஒட்டிக்கொள்கின்றன
 புதிய நகவெட்டி
 ஒரு காதலின் பருவத்தில் சேகரித்த 
பறவையின் இறகுகள்
துங்கபத்ரை நதியின்
பாறை இடுக்குகளில்
பொறுக்கிய
கூழாங்கற்கள்
வளர்ந்த மகளின்
சின்ன உடைகள்
இறந்துபோன வளர்ப்புமீன்களுக்கு
வாங்கிய உணவுப் புட்டி
பழைய அடையாள அட்டையிலிருந்த
புகைப்படம்
நண்பரின் கையெழுத்தைக் கொண்ட
புத்தகம்
அனைத்தும்
தொலைந்தவற்றின்  நினைவைப்  பதுக்கிவைத்திருக்கின்றன
ஒருபோதும் என்னால்
விட்டுச் செல்ல இயலாத
சிறிய பொருட்களே
சின்னஞ்சிறிய பொருட்களே


Saturday, 24 October 2015

கடவுளின் இடத்தில் காமராக்கள்ஷங்கர்ராமசுப்ரமணியன்

நாம் எங்கு சென்றாலும் எதைச் செய்தாலும் நம்மை மேலிருந்து கேமராக்கள் கண்காணிக்கத் தொடங்கிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. வேலை பார்க்கும் அலுவலகங்கள், வங்கிகள், மருத்துவமனைகள், உணவு விடுதிகள், நெடுஞ்சாலைகள் முதல் தெருமூலை பிள்ளையார் கோயில்கள் வரை மேலிருந்து பார்க்கின்றன. ஏதாவதொரு கேமராவின் கண்கள். சிறுசிலிருந்து பெரிசுவரை எலெக்ட்ரானிக், கணிப்பொறி சார்ந்த அனைத்துப் பொருட்களும் கிடைக்கும் சென்னையின் முக்கியக் கடைவீதியான ரிச்சி ஸ்ட்ரீட்டில், முதலாளி பணியாட்களைக் கண்காணிப்பதற்கும், கணவர்கள் மனைவிகளை வேவு பார்ப்பதற்கும், பெற்றோர் குழந்தைகளின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்குமான கேமரா ஒற்றுக் கருவிகளுக்குத்தான் தற்போது மிகவும் மவுசு. பேனா, பொம்மைகள், கதவில் ஒட்டும் ஸ்டிக்கர் பொட்டு என சந்தேகமே பட முடியாத எல்லா வடிவங்களிலும் ஒற்று கேமராக்கள் நம்மைச் சுற்றி இயங்கிக்கொண்டிருக்கின்றன. அன்றாடம் நாம் படிக்கும் தினசரிகளில் இந்த கேமராக்கள் பற்றிய வரிவிளம்பரங்களும் வருகின்றன. எல்லாருக்கும் சாத்தியமான சல்லிசான விலையில்!

சென்னையின் முக்கிய வீதிகளெங்கும் சிசிடிவி கேமராக்கள் விற்கும் நிறுவனம் ‘மேல இருக்கிறவர் எல்லாத்தையும் பார்த்துட்டுதான் இருக்கார்’ என்ற கவர்ச்சிகரமான, தமாஷான விளம்பரங்களை வெளியிட்டுள்ளது. சொல்லப்படும் கருத்துக்கள், எழுதப்படும் எழுத்து, இணையத்தில் தனிப்பட்ட வகையில் பகிரப்படும் அந்தரங்கம், பேச்சுகள், உண்ணும் உணவு, உடுக்கும் உடை என அனைத்தும் கண்காணிக்கப்படும் சூழலில் நாம் வாழ்கிறோம்.
தகவல் தொழில்நுட்பம் அடைந்திருக்கும் பிரமாண்ட வளர்ச்சி, மனிதகுலத்துக்குப் பல சவுகரியங்களைத் தந்திருக்கிறது. அதைப் பயன்படுத்திக்கொள்வது அவசியமும்கூட. அதேவேளையில், தனிமனிதனின் இறையாண்மைக்குள், அந்தரங்கத்துக்குள் அத்துமீறும் தொழில்நுட்பங்களை எச்சரிக்கையுடன் பரிசீலிக்க வேண்டிய சமயம் இது. பாகிஸ்தானுக்குள் ஆளற்ற அமெரிக்க விமானங்கள் நுழைந்து நாடுகளின் இறையாண்மை கேள்விக்குள்ளானதையும் இத்துடன் யோசிக்க வேண்டும்.

‘எனது படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்’ என்ற தலைப்பில் மனுஷ்ய புத்திரன் ஒரு கவிதையை எழுதியிருப்பார். இணையத்தில், குறைந்தபட்சமாக அதன் மின்னஞ்சல் சேவையை ஒருவர் பயன்படுத்தத் தொடங்கிவிட்டாலே போதும்; அவரது பாலினம், வீட்டு முகவரி, அலுவலக முகவரி, அவரது பயண விவரங்கள், அவர் பயன்படுத்தும் மாத்திரைகள், சைவமா அசைவமா, பாலியல் விருப்பங்கள் வரையிலான விவரங்களைச் சேகரித்துவிட முடியும். கூகுள் தேடுபொறி மற்றும் யூடியூபைப் பயன்படுத்துபவராக இருப்பின் அவரது ஆளுமை மற்றும் உளவியலுக்குள்ளேயே ஒருவரால் நுழைந்து சென்று பார்த்துவிட முடியும். நமது படுக்கையறையிலேயே நம்மை ஒற்றறியும் கருவிகளை நாமே வளர்ப்புப் பிராணிகளைப் போலப் பராமரிக்கிறோம்.

நாம் பயன்படுத்தும் கைபேசிகளின் விலையும், அதன் செயலிகளும் அதிகரிக்க அதிகரிக்க நாம் கூடுதலாகக் கண்காணிக்கப்படவும் பின்தொடரவும் படுகிறோம். இன்று இணையத்தில் தொழில்முறையில் எடுக்கப்படும் நீலப் படங்களுக்கு மவுசு இல்லை. சாதாரண மனிதர்களின் அந்தரங்க கேளிக்கைகள்தான் எம்எம்எஸ், ஸ்கேண்டல் வீடியோஸ் என்ற பெயரில் அதிகம் பேரால் பார்க்கப்படுகின்றன. கைபேசிகள், படுக்கையறைகளை நீலப்பட ஒளிப்பதிவுக் கூடங்களாக மாற்றும் அவலம் தொடங்கி 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது.

இதன் தொடர்ச்சிதான் தற்போது அத்தியாவசியப் பொருளாக எல்லாவற்றையும் மேலிருந்து பார்க்க நம் மீது திணிக்கப்படும் சிசிடிவி கேமராக்கள். அரசு, காவல்துறை, நிறுவனங்களின் கண்காணிப்பு ஒருபுறம் எனில், மக்கள் பரஸ்பரம் கண்காணிப்பதற்கான ‘நமக்கு நாமே’கண்காணிக்கும் இதுபோன்ற சிசிடிவி வேவுக் கருவிகள் ஒருபுறம். ஒரு சமூகமாக, ஒரு குடும்பமாக நாம் ஒருவரையொருவர் கண்காணிக்கத் தொடங்கும் நடவடிக்கை இது.
நமக்கு நெருங்கிய ஒருவரைக் கண்காணிக்கும்போது நாமே போலீஸாக மாறுகிறோம். நமக்கு நெருங்கியவரால் நாம் கண்காணிக்கப்படும்போது நாமே குற்றவாளியாக மாறுகிறோம்.
சமூக அமைப்பும் அரசியல் சாசனமும் குற்றம் என்றும் நன்னடத்தை என்றும் ஏற்றுக்கொண்டிருக்கும் பழக்கங்களுக்கிடையே வரையறுக்க முடியாத பல பழக்கங்களும், நடத்தைகளும் நம் அன்றாடத்தில் இருக்கின்றன. வீடு மற்றும் பொது இடங்களில் அதுபோன்ற நடத்தைகள் அதன் பின்னணியைக் கொண்டு ஏற்கவும் மறுக்கவும் கண்டிக்கவும் விலக்கவும் படுகின்றன.

ஒருவர் தனியாக வீட்டில் இருக்கும்போது அபானவாயுவைச் சத்தமாக விடுவது, தன்னிஷ்டப்படி இருப்பது, குரங்கு சேஷ்டை செய்வதெல்லாம் அவரது அந்தரங்கம். ஆனால், அதை ஒரு ஒற்று கேமரா பார்க்கும்போது அவமானத்துக்கு உரிய செயலின் சாயல் அதற்கு எளிதாக வந்துவிடும். அந்தப் பழக்கத்துக்கு ஒரு மனநோயின் பெயரைக்கூட விபரீதமாகக் கொடுத்துவிடலாம். ஒரு கேமராவால் ஒரு செயலை மனிதனைப் போலப் பகுத்தறிந்து விளக்க முடியாது. வசந்த பாலனின் ‘அங்காடி தெரு’ திரைப்படத்தில் பூட்டப்பட்ட ஜவுளிக்கடையில் உள்ளே மாட்டிக்கொள்ளும் காதலர்கள், ஜவுளி நிறுவனத்துக்கு எதிரான எந்தக் குற்றத்தையும் இழைக்கவேயில்லை. ஆனால், அங்கே சிசிடிவி அவர்களைக் குற்றவாளியாக்கிவிடுகிறது. கண்காணிக்கும் அமைப்பின் மூலம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாரையும் ஒரு அமைப்பு, நினைத்துவிட்டால் குற்றவாளியாக்கிவிட முடியும்.

சமூகத்துக்கும், தனிமனிதர்களுக்கும், அரசுக்கும் குடிமக்கள் மீது, பிற சமூகங்கள் மீது, சகமனிதர்கள் மீது நம்பிக்கை குறையும்போதுதான் கண்காணிப்பு என்பது அத்தியாவசியமாகிறது. கேமராக்களை நான்குபுறமும் பொருத்தியிருக்கும் ஒரு பங்களா, தினசரி கள்வர்களை ஈர்த்தபடிதான் இருக்கிறது. கழிவறை வரை கண்காணிக்கும் அமைப்புகளைப் பொருத்தும் ஒரு தேசம், தினசரி குண்டுவெடிப்புகளுக்காகக் காத்திருக்கிறது. கண்காணிப்பு எப்போதும் குற்றங்களைக் குறைப்பதில்லை. குற்றங்களைக் கூடுதலாக ஈர்க்கிறது.
ஒரு திருட்டுச் சம்பவம் என்பது ஒரு குடும்பத்துக்கோ ஒரு வீட்டுக்கோ வாழ்வில் ஒருமுறையோ இருமுறையோ நடப்பதுதான். ஒரு கொலையோ, குண்டுவெடிப்போ அதுபோன்ற துர்சம்பவங்களோ எப்போதும் விதிவிலக்குகள்தான்.

ஆனால், நாம் குடும்பமாக, சமூகமாக அரசாகக் கண்காணிப்பு அமைப்புகளைப் பலப்படுத்திக்கொண்டே போவதன் வழியாகக் குற்றங்களைக் கூடுதலாக ஈர்த்துக்கொண்டிருக்கிறோம்.

கண்காணிப்புக் கேமராக்கள் அத்தியாவசியப் பொருளா வதும், தெருச்சந்தைகளில் சல்லிசாகத் துப்பாக்கிகள் தடையற்றுக் கிடைப்பதற்குச் சமானமானதுதான். தனிப்பட்டவர்களின் அந்தரங்கம் முழுமையாகப் பாதுகாக்கப்படும் மேற்கு நாடுகளைவிட, தனிப்பட்டவர் களின் அந்தரங்கம் எப்போதும் குடும்பத்தால், சமூகத்தால், சாதி அமைப்புகளால், ஊடகங்களால் கேள்விக்குள்ளாக்கப்படும் இந்தியா போன்ற நாடுகளில் இந்த ஒற்றுக் கருவிகள் குடிமக்களுக்கு மேலும் மோசமான பாதிப்புகளையே ஏற்படுத்தும்.

நமக்குத் தாங்க முடியாத துயரம் ஏற்படும்போதோ, பகுத்தறிவுரீதியாகப் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ள முடியாதபோதோ, திடீர் நோய்களால் அவதிப்படும் போதோ, அதிலிருந்து தற்காலிகமாகத் தப்பித்துக் கொள்ள, எல்லாவற்றையும் மேலேயிருக்கிறவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறான் என்று சொல்லி, நாம் சற்று ஆறுதல் கொள்கிறோம். கடவுள் இருக்கிறாரோ இல்லையோ தற்காலிகமாக நமது பாரங்களை வைக்கும் காலி பீடமாக ஓரிடத்தைக் கருதுகிறோம். அது ஒரு நம்பிக்கை.

ஆனால், தற்போது நம்மை நாமே கண்காணிப்பதற்காக நம் வழியெங்கும் நிறுவிக்கொண்டிருக்கும் கேமரா கருவி களோ அவநம்பிக்கையின் ஒட்டுமொத்த அடையாளம்!
(தி இந்து தமிழ் நாளிதழில் பிரசுரமானது)

Monday, 5 October 2015

காலமற்று ஓடிக்கொண்டிருக்கும் நதிஷங்கர்ராமசுப்ரமணியன்


பெரிதாக மாறுவதற்கு வாய்ப்பில்லாதது நம்மில் பெரும்பாலானோரின் அன்றாட யதார்த்தம். அற்புதங்களோ அரிது. காலங்காலமாக இப்படித்தான் வாழ்க்கை இருந்திருக்க வேண்டும். இந்த அலுப்பான யதார்த்தத்திலிருந்து தப்பிப்பதற்குத்தான் நமக்குக் கனவு தேவைப்படுகிறது. இன்னும் மேலான வாழ்வுக்கான லட்சியம் மற்றும் கருத்தியல்கள் தேவைப்படுகின்றன. கலையும் கவிதையும் தேவையாக இருக்கின்றன. கடவுள் தேவைப்படுகிறார். ஆலயங்கள் தேவைப்படுகின்றன. இந்த மண்ணிலேயே அவ்வப்போது தரிசிப்பதற்கும், நினைவில் வைத்துப் போற்றுவதற்கும் கனவைப் போன்ற நிலபரப்புகளும் அனுபவங்களும் தேவையாக உள்ளன.
தமிழின் சிறந்த சிறுகதைக் கலைஞர்களில் ஒருவரான வண்ணநிலவன் எழுதியிருக்கும் 'குளத்துப் புழை ஆறு', அப்படிப்பட்ட கனவு நிலவுப்பரப்பை மொழியில் உருவாக்கிய அற்புதம்.

வண்ணநிலவனின் இந்தக் கவிதையில் வரும் குளத்துப் புழை ஆறு, கொல்லம்-செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் இயற்கையால் ஆசிர்வதிக்கப்பட்ட குளத்துப்புழா என்ற சிறு கிராமத்தில் ஓடும் சிறு நதி. அதன் பெயர் கல்லடை. இந்தக் கிராமத்திலுள்ள ஐயப்பன் கோயில் புகழ்பெற்றது. ஐயப்பன், இங்கே சிறுவனாகக் காட்சி அளிப்பதால் பால சாஸ்தா என்றழைக்கப்படுகிறார். இந்த ஆலயத்தைச் சுற்றி ஓடும் கல்லடையாற்றில்தான், ஐயப்பனின் மீது ஆசைகொண்ட மச்சகன்னி, ஐயப்பனின் வரம்பெற்று அங்கேயெ மீன்களாக வாழ்கிறாள் என்ற நம்பிக்கை நிலவுகிறது. அதனால் இந்த ஆற்றில் மீன் பிடிக்கக் காலம்காலமாக விலக்கு உள்ளது.

மீன்வளம் குன்றாமல் இருப்பதால் குளத்துப் புழை ஆற்றுக்கு வரும் பயணிகள் பொரிகடலையை இடும்போது மொத்த ஆற்றின் பரப்பும் கருத்த மீன்களின் தலைதலையாகத் தோற்றம் கொள்ளும் காட்சி அற்புதமானது.
இந்த ஆற்றைத்தான் வண்ணநிலவன் கனவான நிலப்பரப்பாக மாற்றியுள்ளார். மிகக் கொஞ்சமான வரிகளைக் கொண்ட கவிதைதான் இது. தோணிகள் கூட ஓட்ட முடியாத ஆழம் குறைந்த நதிதான் குளத்துப் புழை ஆறு. ஆனால் இந்த வரிகளை எழுதும் இந்நேரத்தில்கூட ஓடிக்கொண்டிருக்கும் என்று தொடங்குகிறார். குளத்துப்புழா போன்ற கிராமத்தில் கோயிலையும் விவசாயத்தையும் தவிர வேறென்ன வாழ்வாதாரம் இருக்க முடியும். மீன்களுக்குப் போடுவதற்குப் பொரிகடலை வாங்கச் சொல்லி கொஞ்சும் மலையாளத்தில் நச்சரிக்கும் குழந்தைகளின் மீது கவிஞனின் பரிவு சாய்கிறது.

அந்தக் குழந்தைகளின் வீடுகளைக் கற்பனை செய்கிறான் கவிஞன். பால சாஸ்தா கோவில் கொண்டிருக்கும் தென்புறத்திலேயே மணிகண்டனின் ஆராதனை மணியொலி கேட்கும் ஆசிர்வாத தூரத்திலேயே அந்தக் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கட்டும் என்று விரும்புகிறான். இங்குள்ள ஐயப்பனும் பாலகன்தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
நூறாயிரம் கிருஷ்ண சுக்ல பட்சங்கள் கடந்தும் ஓடுகிறது. காலத்தின் நினைவற்றுத் திளையும் மீன்கள் ஆற்றை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. தென்சரிவில் இருக்கும் தேக்கு மரங்கள் பின்னணியாக ஆற்றுக்குப் பேரழகைத் தருகின்றன.

இங்கேதான் இருக்கிறது குளத்துப் புழையில் ஓடும் கல்லடை ஆறு. குளத்துப் புழை ஆற்றைப் பார்த்தவர்களுக்கும், இனி பார்க்கப் போகிறவர்களுக்கும், பார்க்கவே வாய்ப்பில்லாதவர்களுக்கும் படிப்படியாக ஒரு மேலான கனவாக ஒரு லட்சிய நிலப்பரப்பாக அதை மாற்றிவிடுகிறார் வண்ணநிலவன்.
*


குளத்துப் புழை ஆறு

குளத்துப் புழை ஆறு
இந்நேரத்தில்
இவ்வரிகளை எழுதும்
இந்நேரத்தில் கூட
ஓடிக்கொண்டிருக்கும்
தோணிகள் ஓட்ட முடியாத
குளத்துப் புழையாற்றின்
கரைகளில் மீன்களுக்குக்
கடலை வாங்கச் சொல்லி
கொஞ்சும் மலையாளத்தில்
நச்சரிக்கும் சிறுமிகளின்
வீடுகள்
எந்தச் சரிவில் இருக்கும்?
எனக்கு ஏனோ
வடபுறத்தை விடத்
தென்புறமே பிடிக்கிறது
அதனால் அவர்களின் வீடு
தென்சரிவிலேயே உயரமான
தேக்கு மரங்களினூடே
மணிகண்டனின் ஆராதனை
மணியொலி கேட்கும்
தூரத்தில்
இருக்கட்டும்
குளத்துப் புழையாறு
நூறாயிரம்
கிருஷ்ண சுக்ல பட்சங்கள்
கடந்தும் ஓடுகிறது
கால நினைவற்றுத்
திளையும் மீன்களோடும்
தென்சரிவுத்
தேக்கு மரங்களோடும்.

Thursday, 24 September 2015

தாய் அறியாத புரட்சி எது?


                               ஷங்கர்ராமசுப்ரமணியன்

மக்சிம் கார்க்கியின் ‘தாய்’ நாவலில், ‘தாய்மார்கள் இரக்கத்துக்கு உள்ளானதேயில்லை’என்று ஒரு வரி வரும்.

‘லட்சுமி என்னும் பயணி’ சுயசரிதையை எழுதியிருக்கும் லட்சுமி அம்மாவின் வாழ்க்கையும் அப்படித்தான் இருக்கிறது. தாய், தந்தையரின் அரவணைப்பிலான, சரியான குழந்தைப் பருவத்தைக்கூட அனுபவிக்காத ஏழைச் சிறுமி லட்சுமி. அடிப்படைத் தேவைகளுக்காகச் சிறு வயதிலேயே வேலைக்குச் செல்ல நேர்ந்தவர். அங்கே தொழிற்சங்கத்தில் சேர்ந்தவர். தொழிற்சங்கம் வழியாக முழு நேர அரசியலுக்குத் திருமணம் வழியாகவும் பிணைக்கப்பட்டவர்.

லட்சுமி அம்மாவின் வாழ்க்கையைப் பொறுத்தவரை அவரது வாழ்க்கை, அரசியல், சூழ்நிலைகள் அனைத்தும் அவரது தேர்வு அல்ல. ஆனால், துரும்பளவுகூட மீட்சிக்கு வாய்ப்பில்லாத சூழலில் தனக்கும் தன்னைச் சுற்றியுள்ள சமூகத்துக்காகவும் சகமனிதர்களின் தன்னிறைவுக்காகவும் போராடும் நித்தியப் போராளியாக லட்சுமி அம்மா இந்த சுயசரிதை வழியாக வெளிப்படுகிறார்.
மேல்நிலைக் கல்வி, மார்க்சியம், பெண்ணியம் சார்ந்த கோட்பாடுகளின் அடிப்படை எதுவுமின்றி, சமூகத்தின் அடித்தளத்திலிருந்து வந்து, அரசியலை வாழ்க்கையாகக் கொண்டு சமூக விடுதலைப் போராட்டத்தின் அங்கமாக மாறிய லட்சுமி அம்மாவின் சுயசரிதை முன்மாதிரியில்லாதது.

அரசியலைத் தங்கள் வாழ்வின் பிரதானப் பணியாகத் தேர்ந்தெடுக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ள வித்தியாசத்தை லட்சுமி அம்மாள் தன் கதை வழியாகவே கடுமையாக உரைத்துவிடுகிறார். ஆண்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு அது ஒரே ஒரு வேலைதான். பெண்களுக்கோ இரட்டை வேலை மட்டுமல்ல, பெரும் சுமையாகவும் மாறுகிறது.
லட்சுமி அம்மாள் தனது முழு நேரக் கட்சி ஊழியரான கணவரின் குடும்பப் பொறுப்புகள், அரசியல் பொறுப்புகள் இரண்டையும் சுமக்கிறார். குழந்தையைப் பார்த்துக்கொண்டேதான் போராட்டங்களிலும் கலந்துகொள்கிறார். இடுப்பில் குழந்தையுடன் தன் தெருவுக்குத் தண்ணீர் லாரியைக் கொண்டுவருகிறார். ஆண்கள் பெரும்பாலும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். பெண்ணின் உடலோ அரசியல் பணிகளூடாகக் கூடுதலாகச் சிதைகிறது.

போராட்டத்தில் ஈடுபட்டு ஆண்கள் சிறைக்குப் போய்விடுகிறார்கள். ஆனால், போராட்டத்தில் ஈடுபடும் லட்சுமி உள்ளிட்ட பெண்கள் போலீஸால் சிறைப்பிடிக்கப்பட்டுச் சிறைக்குச் செல்ல மாட்டோமா என்று ஏங்குகிறார்கள். சிறைக்குச் சென்றாலாவது அன்றாட வீட்டு வேலைச் சுமை குறையும் என்ற ஏக்கம் அவர்களுக்குச் சிறையை விடுதலைக்கான இடமாய் மாற்றுகிறது. துரதிர்ஷ்டவசமாக லட்சுமியை போலீஸார் சிறையில் ஒருபோதும் அடைக்கவில்லை. அவர் வெளியிலேயே உழல்வதற்குப் போதுமான துன்பங்கள் இருக்கின்றன.

லட்சுமி அம்மாவின் சுயசரிதையில் அவர் சொல்லும் கதைகளுக்குப் பின்னால் சொல்லப்படாத கதைகள் இருக்கின்றன. லட்சுமி அம்மாவின் கணவர் பெ. மணியரசனும், இராஜேந்திர சோழன் போன்ற தோழர்களும் மார்க்சிய இயக்கத்திலிருந்து தமிழ்த் தேசிய அரசியலை நோக்கித் திசைதிரும்புவதற்கான காரணிகளும் வலுவாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளன. உள்ளூர் தலித் மக்களுக்கு ஆதரவாகப் போராட்டத்தைத் தூண்டிவிடும் கட்சித் தலைமை, ஒரு கட்டத்தில் பின்வாங்குவதையும் அதனால் அடிமட்டத்தில் போராடும் கட்சித் தோழர்கள் பாதிக்கப்படுவதையும் இந்த நூல் சொல்கிறது. காவிரி நதி நீர் போன்ற மாநில நலன்களைப் பேசும்போது கட்சி மவுனமாக இருப்பதையும் லட்சுமி அம்மாள் பதிவுசெய்கிறார்.

தன் குடும்ப நலன், தன் பிம்பத்தை உயர்த்திப் பிடித்தல், தன் நலனுக்காக எதையும் சமரசம் செய்யத் தயங்காத ஆளுமைகளை இன்றைய சமூக வாழ்வில் நாம் கண்டுவருகிறோம். இந்தச் சூழ்நிலையில் சமத்துவம், பொதுநலம், மொழிநலனுக்காகப் பல்வேறு கருத்துநிலைகளில் நின்று போராடிய அரிய ஆளுமைகளைப் பற்றிய சித்திரங்கள் இந்த நூலில் உண்டு.
லட்சுமி அம்மா உருவாக்கிய வீட்டில் அவரது கணவர் மணியரசன் வந்து செல்பவராகவே இருக்கிறார். பெரும்பாலும் கட்சி, போராட்டங்களுக்காகத் தலைமறைவாகவும், தெருக்களிலும் சிறையிலும் இருக்கிறார்.

காலம்காலமாகப் பெண்களின் உழைப்பு மனித நாகரிகத்துக்கும் உலகத்தின் வளத்துக்கும் கலாச்சாரப் பெருமைகளுக்கும் காரணமாகியுள்ளது; ஆண்களின் அந்தஸ்துக்கும் பெருமிதத்துக்கும் அடையாளத்துக்கும் உரமாகியுள்ளது; அத்துடன் புரட்சிகளுக்கும் போராட்டங்களுக்கும்கூடப் பெண்களின் உழைப்பும் தியாகமும் வலிகளும்தான் விதைகளாக மாறியுள்ளன என்பதைச் சொல்லும்போது துக்கமும் வந்துசேர்கிறது.

மனித நாகரிகம் முழுவதும் பெண்களுக்குத்தான் கடமைப்பட்டுள்ளது. பெண்தான் இந்த உலகைத் தாங்கிப் பிடிக்கிறாள். இந்தப் பெருமையெல்லாம் சரிதான். ஆனால், குறைந்தபட்சம் எதிர்காலத்திலாவது இதுபோன்ற பெருமைகளிலிருந்தெல்லாம் பெண்களை விடுவிக்க வேண்டிய கட்டாயம் ஆண்களுக்கு இருக்கிறது. இந்தப் புத்தகத்தைப் படிக்கும் ஆண்கள் யாரும் குற்றவுணர்வின்றிப் படிக்க முடியாது. இந்தச் சுயசரிதையில் திருமகள், மௌனேஸ்வரி, அனாரம்மா என எத்தனையோ பெண்களின் சித்திரங்கள் வருகின்றன. குழந்தைகள் வருகிறார்கள். ஆண்கள் லட்சுமி அம்மாவின் கதையில் மிகவும் சிறுத்திருக்கிறார்கள்.

ஜான் ஆபிரகாமின் ‘அம்ம அறியான்’ படத்தில் வசனம் ஒன்று வரும். “எந்தக் குழந்தையும் அம்மாவிடம் சொல்லாமல் புரட்சிக்குப் போகக் கூடாது”. தாய் அறியாத புரட்சி ஏது?

Wednesday, 23 September 2015

எலும்புகள் வாழ்கின்றன


   ஷங்கர்ராமசுப்ரமணியன்இந்தப் பூமியில் ஜனிக்கும் ஒவ்வொரு புதிய உயிரும் ஏற்கெனவே பழகிய அமைப்புக்குள்தான் வந்துவிழுகிறது. ஏற்கெனவே திட்டமிடப்பட்ட சட்டங்களுக்குள், இலக்கணங்களுக்குள் இருப்பதும், இருப்பதற்கு ஒப்புக்கொடுப்பதுமான ஒரு அமைப்பைத்தான் அரசு என்கிறோம். ‘அழகு’என்று ஒன்றைக் கருதும்போது, சமூகத்தில் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு வடிவத்தைத்தான், உருவத்தைத்தான், அமைப்பைத்தான் அழகென்று சொல்கிறோம். அழகுக்குள், வடிவத்துக்குள், அமைப்புக்குள் வராதவையும் இந்த உலகத்தில் உண்டு.

புறக்கணிக்கப்பட்ட உயிர்களாக, மனிதர்களாக, மக்கள் குழுக்களாக அவர்கள் இருக்கின்றனர். மன்னராட்சியிலும் சரி, மக்களாட்சியிலும் சரி எப்போதும் அவர்கள் இருந்து கொண்டேதான் இருக்கிறார்கள்.
மொழி, படைப்பு, சிந்தனை இவற்றுக்கும் இது பொருந்தும். புதிய சிந்தனைகள், புதிய எழுத்துகள், புதிய புரட்சிகள் எல்லாமே ஏற்கெனவே உள்ள அமைப்பிலிருந்துதான் முரண் பட்டும் அனுசரித்தும் எழுகின்றன. மொழிதான் நமக்கு ஒரு உலகத்தைக் கொடுக்கவும் செய்கிறது. அதேவேளையில், மொழி தான் இந்த உலகத்தைத் துரதிர்ஷ்டமாக வரையறுத்தும் விடுகிறது.

கவிதைகளை வார்த்தைக் கூட்டம் என்று சொன்ன கவிஞன் ஆத்மாநாம். ஒரு கவிதையைப் படைக்கத் தொடங்குவதற்கு முன்னாலேயே அதை ஏவல் செய்ய வார்த்தைகள் காத்திருப்பதைப் பற்றி சிந்தித்துப் பார்த்துள்ளார். உணர்வதற்கும் சொல்வதற்கும் இடையிலுள்ள இருட்டில், ஏற்கெனவே உருவாக்கப்பட்ட வார்த்தைகள் என்னும் படை நமது படைப்பைக் கைது செய்யத் துடித்துக்கொண்டிருக்கிறது.
அங்கேயும் ஒரு அமைப்பு அரசாட்சி செய்வதைப் பார்த்த திகைப்பு ஆத்மாநாமுக்கு எழுகிறது. அதுதான் ‘என்றொரு அமைப்பு’ .

இந்தப் பேனா ஒரு ஓவியம் வரையக்கூடும்
                 ஒரு கட்டிட வரைபடத்தையும்
                ஒரு சாலை விவரக் குறிப்பையும்
               ஒரு பெண்ணுக்குக் காதல் கடிதத்தையும்
               ஒரு அலுவலகத்தின் ஆணைகளையும்
              இவை யாவும் இப்போதைக்கு இல்லை
             ஒரே ஒரு கவிதையை மட்டுமே எழுதும்
தலைப்பு தானே உருவாகும்
எலும்புகளைப் பற்றி ஆய்வு செய்தவனுக்கு
ஒன்று துல்லியமாகத் தெரிந்தது
எலும்புகளும் நம்மைப் போலவே வாழுகின்றன
வீடுகளில் பொட்டல் காடுகளில் வயல்வரப்புகளில்
அவைகளுக்கும் அரசர்களும் மந்திரிகளும் போர்வீரர்களும்
என்றொரு அமைப்பு

என்றென்றைக்குமாக இருக்கும் அமைப்புகளைப் பற்றிப் பேசும் ஆத்மாநாம், மரித்துப் போய்விட்ட மனிதர்களின் எலும்பு களும் நம்மைப் போலவே ஒரு அமைப்பில் வாழ்வதாகச் சொல்கிறார்.

என்பு தோல்போர்த்தி இருந்தபோது எப்படியான அமைப்பில் இருந்ததோ அப்படியே அரசர்களும் மந்திரிகளும் போர் வீரர்களுமாய் இருக்கும் அமைப்பில் மக்கிப்போகாத எலும்புகளும் வாழ்வதைக் கண்டுபிடிக்கிறார் ஆத்மாநாம் கவிதையில் வரும் ஆய்வாளர்.

ஆத்மாநாமின் இந்தக் கவிதை, சமீப நாட்களாக எனக்கு வேறொரு அர்த்தத்தைக் கொடுக்கத் தொடங்கியுள்ளது. ஆத்மாநாம், இந்த அர்த்தத்தை இக்கவிதையில் பார்த்திருக்க வாய்ப்பில்லை. மதுரைக்கு அருகே கிரானைட் குவாரிகளில் தோண்டத் தோண்ட மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட செய்தியைப் பார்த்தபோது ‘எலும்புகளும் நம்மைப் போலவே வாழ்கின்றன/வீடுகளில் பொட்டல் காடுகளில் வயல்வரப்புகளில்/ அவைகளுக்கும்/ அரசர்களும் மந்திரிகளும் போர்வீரர்களும் என்றொரு அமைப்பு என்று முடியும் வரிகள் வேறொரு அர்த்தத்தையும் துக்கத்தையும் கொடுக்கின்றன.

Wednesday, 9 September 2015

துருவிப் பார்க்கும் கண்களுக்குச் சற்று ஓய்வுகொடுங்கள் சுகுமாரன்

ஷங்கர்ராமசுப்ரமணியன் நகுலன் மது குடிப்பார். ஆனால் அவரது கவிதைகளில் மது போதை சார்ந்த அனுபவமே இல்லையென்று தமிழின் பெருங்கவிஞர்களான சுகுமாரனும், எம்.யுவனும் நகுலனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைத் தொகுதியின் பின்பகுதியில் வெளியாகியிருக்கும் உரையாடலில் கற்பூரம் கொளுத்திச் சத்தியம் செய்திருக்கின்றனர். 


(குடித்த மனத்திலிருந்து ஒரு வரிகூட எழுதப்படவேயில்லை. அல்லது குடித்த அவஸ்தையைக் கூட அவர் எழுதியதேயில்லை-சுகுமாரன் சொல்கிறார். இப்படிப் புரிந்துகொள்ளலாமா, ஒரு கவிதையில் ஒரு கட்டு வெற்றிலையும் சீவலும் எனக் குறிப்பிடுகிறார். அவரைப் பொறுத்தவரை இதற்கும் பிராந்திக் குப்பிக்கும் ஒரு வித்தியாசமும் இல்லையெனக் கொள்ளலாமா?- யுவன் கேட்கிறார். சுகுமாரன் கடைசியாக ஒரு போடு போடுகிறார்:  ஆமாம்! அப்படித்தான்.நகுலன் தேர்ந்தெடுத்த கவிதைகள்- பக்கம் 90- காலச்சுவடு பதிப்பகம்) 

மதுவையும், நண்பர்களுடனான உரையாடலையும், போதையையும் நான் என்பது கரைந்து,  லேசாக அடிநிலைக்குச் செல்லும் எத்தனமாகவே சித்தரிக்கிறார் நகுலன். அவர் பாஷையில் அது ஒரு சொரூப நிலை.

 தன் போதத்தை, தன் சுமையைக் கழற்றிக் கொள்வதற்கான இடமாக மதுவையும், அதுதரும் தற்காலிக விடுபடுதலையும் தன் கவிதைகளில் அடிநிலைக்குச் சென்று வெளிப்படுத்தியவர் நகுலன். பாதலேரின் ‘நன்றாகக் குடி’ கவிதையையும் அவர் மொழிபெயர்த்துள்ளார். உலக அழுத்தங்கள் என்னும் கனத்தச் சட்டையைக் கழற்றுவது போன்ற உணர்வுநிலையை பிராந்தியும், இலக்கிய நட்புகளும் தருவதை அவர் தொடர்ந்து பதிவுசெய்திருக்கிறார்.

எல்லாம் என்பது பற்றி ஒரு கவிதை

வந்தது zack
எப்பொழுதும் போல்
துயிலிலிருந்து எழுந்தது போன்ற
ஒரு சோர்வு
அவன் முகத்தில்
எப்பொழுதும் அப்படித்தான்
தோல்பையைத் திறந்து
குப்பியை எடுத்ததும்
நான் உள் சென்று
ஐஸ் கொண்டு
வந்ததும்
சரியாகவே இருந்தது
அவன்
ஓவியங்களை நான்
பார்த்திருக்கிறேன்
அவைகளும்
ஒரு குழம்பும் மயக்க நிலையைத்
தான் தெரிவித்தன
வண்ணக் கீறல்கள்
இருட் பிழம்புகள்
தாராளமாகவே
இருவரும் குடித்துவிட்டு
அடிமட்டத்தை
அணுகிக்கொண்டிருந்தோம்
அப்பொழுது
அவன் சொன்னதும் அதை
நான் கேட்டதும்
இன்னும் என் பிரக்ஞையில்
சுழன்றுகொண்டிருக்கிறது
“எல்லாமே
வெகு எளிமையாகத்தான்
இருக்கிறது
ஆனால்
“எல்லாம்” என்பதுதான்
என்ன என்று தெரியவில்லை
இதைச் சொல்லிவிட்டு
அவன் சென்றுவிட்டான்.
0000
சுருதி

ஒரு கட்டு
வெற்றிலை
பாக்கு சுண்ணாம்பு
புகையிலை
வாய் கழுவ நீர்
ஃப்ளாஸ்க்
நிறைய ஐஸ்
ஒரு புட்டிப்
பிராந்தி
வத்திப்பெட்டி/ ஸிகரெட்
சாம்பல் தட்டு
பேசுவதற்கு நீ
நண்பா
இந்தச் சாவிலும்
ஒரு சுகம் உண்டு.
(சுருதி கவிதைத் தொகுப்பு)
  
நகுலனின் படைப்புகள் மீதான இவர்களின் இந்த ஒழுக்கவாத இடையீடு எதைக் காப்பாற்றுவதற்காக? நகுலனின் எழுத்துகளில் சாதாரண வாசகர்கள் கூட உணரக்கூடிய மாயத்தன்மையையும் மயக்கநிலையையும், அர்த்தம் கரையும் அனுபவத்தையும் போதை நிலை தரும் அனுகூலம் என்ற உண்மையையும் இந்தப் பெருங்கவிகள் எதற்கு வலுக்கட்டாயமாக மறுக்கவேண்டும். நகுலனின் ஆதார சௌந்தர்யங்களில் ஒன்றைப் பறிமுதல் செய்து, சுந்தர ராமசாமியின் சிறுவர் சீர்திருத்த சிறைக்கு நகுலனைக் கொண்டு சென்று சிகைதிருத்தம் செய்யவேண்டிய அவசியம் என்ன? நகுலனுக்கு இத்தனை வயதான பிறகு அவரது பௌதீக உடல் மறைந்து போனபின்னரும் அதற்கான அவசியம் என்ன?  

நகுலனின் கற்பனைத் தோழியான சுசீலா கூட அறியாத விஷயத்தை நகுலனின் கூடவே வாழ்ந்தவர் போல சுகுமாரன் எப்படிச் சொல்கிறார். கவிதையில் உள்ள ஆல்கஹாலை அளவுபார்க்கும் அளவுமானி எதையாவது சுகுமாரன் கண்டுபிடித்திருக்கிறாரா? 

''நகுலனைப் பொறுத்தவரை குடிப்பது என்பது தண்ணீர் குடிப்பதைப் போன்றது" என்ற மகா புத்திசாலித்தனமான வாசகத்தையும் சுகு சொல்லியிருக்கிறார். இவர்தான் தமிழின் முக்கியக் கவிஞரும் உலகக் கவிதைகளையெல்லாம் மொழிபெயர்த்தவரும், கவிதை விமர்சகரும்.. செல்வாக்குள்ள மேடையும், பிரசுர சாதனங்களும் இருந்துவிட்டால் எந்தப் பொறுப்புமின்றி, குடிக்காமலேயே உளறு உளறு என்று உளறலாம் என்பதற்கு இதுபோன்ற கூற்றுகள் தான் உதாரணம்.   

 உங்களுடைய ஃபோபியாவையெல்லாம் மூத்த எழுத்தாளர்கள் மேல்  ஏனய்யா ஏற்றுகிறீர்கள்? 

 அப்புறம் பிரமிளுக்கும் நகுலனுக்கும் இங்கே பிம்பங்கள் கட்டப்பட்டிருப்பதாகவும் யுவனும், சுகுமாரனும் பிரலாபித்துள்ளனர். பிம்பம் கட்டுவதற்கு வாய்ப்புள்ள வாழ்க்கையை வாழ்ந்தவர்களுக்கு பிம்பம் உருவாகவே செய்யும். கேரளத்தில் பஷீருக்கு பிம்பம் இருக்கலாம். தமிழில் சுந்தர ராமசாமிக்கு இருக்கலாம். நகுலன் மற்றும் பிரமிளுக்கு  இருக்கக் கூடாதா? 

 குடித்த நிலையிலிருந்தோ, குடித்த அவஸ்தையையோ நான் எழுதியதேயில்லையென்று நகுலன் மட்டுமே சொல்வதற்கு சாத்தியமானதை சுகுமாரன் எப்படிச் சொல்ல முடிகிறது? இப்படியான அதிகாரத்தை இவர்களுக்கெல்லாம் யார் வழங்கியது?  


 திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்நாள் முழுக்க வாழ்ந்த நகுலனின் கவிதைகளில் கலவி சார்ந்த அனுபவ நிலைகளும் குறிப்புகளும் கூட உண்டு. அதற்கும்  புலனாய்வைத் தொடங்கி முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யலாமா சுகுமாரன் அவர்களே. 

இப்பொழுது இங்கு
யாருமில்லை
அவள் கூட
அவள் 
யார் என்று கேட்காதீர்கள்
உங்கள் துருவிப் பார்க்கும்
கண்களுக்குச் சற்று ஓய்வு 
கொடுங்கள்
உங்களுக்கு இதைப் பற்றி
எல்லாம் ஒன்றும் தெரியாது
அக்கறையுமில்லை.
(நகுலனின் கோட்ஸ்டாண்ட் கவிதைகள்-1)

(பின்குறிப்பு: இந்த எதிர்வினையின் நோக்கம் நகுலன் குடித்தார், குடித்த பிறகோ, ஹேங்க்ஓவர் அவஸ்தையிலோ எழுதினார் என்பதை நிரூபிப்பதல்ல..நகுலன் கவிதைகளில் ஒரு போதை நிலை இருக்கிறது. தமிழ் இலக்கியத்தின் மூத்த 'குடிமகனும்' எனது அருமை நண்பருமான விக்ரமாதித்யன் தன் வாழ்நாள் முழுக்க ஒரு டாஸ்மாக் கடை மதுவை காலி செய்தவர். குடித்துவிட்டு நண்பர்களை கவிதைகளை டிக்டேட் செய்பவரும் கூட. ஆனால் அவர் கவிதைகளில் ஒன்றில் கூட நகுலன் படைப்புகளில் காணும் போதை நிலை இல்லையென்பதையும் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். விக்ரமாதித்யன் கவிதைகள், அவரைப் போலவே தடுமாறுகின்றன. அவ்வளவுதான். 

பசுவய்யா என்ற புனைபெயரில் எழுதிய சுந்தர ராமசாமியின் கவிதையையும் நகுலன் கவிதையையும் அருகருகே வைத்துப் பார்த்தால் நகுலனின் கவிதைகளில் இயங்கும் போதைமை தெரியும். நகுலன் குடித்திருக்கலாம். குடிக்காமல் இருந்திருக்கலாம். அதுபோன்ற தனிப்பட்ட தகவல்களை வைத்து கவிதை என்னும் வெளியீட்டை அணுகமுடியாது என்பதற்காகவே இந்த எதிர்வினை) 


Sunday, 30 August 2015

புராதனக் கோவிலின் கல் யாளிகள்

ஷங்கர்ராமசுப்ரமணியன்வண்ணத்துப்பூச்சியும் கடலும்

சமுத்திரக் கரையின்
பூந்தோட்டத்து மலர்களிலே
தேன்குடிக்க அலைந்தது ஒரு
வண்ணத்துப்பூச்சி
வேளை சரிய
சிறகின் திசைமீறி
காற்றும் புரண்டோட
கரையோர மலர்களை நீத்து
கடல் நோக்கிப் பறந்து
நாளிரவு பாராமல்
ஓயாது மலர்கின்ற
எல்லையற்ற பூ ஒன்றில்
ஒய்ந்து அமர்ந்தது
முதல் கணம்
உவர்த்த சமுத்திரம்
தேனாய் இனிக்கிறது

                                         - பிரமிள் 

இந்தக் கவிதையின் வரிகள் என் நினைவில் தொடர்ந்து கொண்டே இருப்பவை. அந்தக் கவிதையின் கடைசி வரிகளான ‘முதல் கணம் உவர்த்த சமுத்திரம் தேனாய் இனிக்கிறது’ என்பதைத் தெரிந்துகொண்டே நண்பர்களிடம் ‘முதற்கணம் உவர்த்த சமுத்திரம் பின்னர் தேனாய் தித்திக்கிறது’ என்று என் கற்பனை சேர்த்துப் பகிர்ந்திருக்கிறேன். ஒரு அனுபவத்துக்கும் இன்னொரு அனுபவத்துக்கும் இடையில் ஒரு கணம் நிற்க ‘பின்னர்’ தேவைப்படுகிறது எனக்கு. இனிக்கிறது என்பதைவிட தித்திக்கிறது என்பதுதான் எனது அனுபவ சொற்களஞ்சியத்தில் சரியாக இருக்கிறது. ஒரு நல்லகவிதையை இப்படியெல்லாம் ஒரு வாசகன் தன்வயப்படுத்திக் கொள்ளலாம்.

கிரேக்கத் தொன்மமான பீனிக்ஸில் இருந்து, சுந்தர ராமசாமியின் ஜே.ஜே. சில குறிப்புகளில் சூரியனுக்கு அருகே சென்று கருக விரும்பும் பறவையாக ஜோசப் ஜேம்ஸை கற்பிதம் செய்வது வரை எத்தனையெத்தனை உருவகங்கள்? உன்னதம் மற்றும் இறவாமையைத் தேடித்தான் எத்தனைவிதமான சஞ்சாரங்களை மனிதமனம் செய்துள்ளது!
லட்சியவாதத்தின் கொடுமுடியில், அதேவேளையில் அது சரியும் பிரக்ஞை நிலையில் பிரமிளுடையதும், சுந்தர ராமசாமியுடையதுமான இந்த உருவகங்கள் நவீனத்துவக் காலகட்டமான 20-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை. ‘ஓய்ந்தேன் என மகிழாதே...உறக்கமல்ல தியானம்...பின்வாங்கல் அல்ல பதுங்கல்’ என்று இன்று, ஓர்மையுள்ள ஒரு நவீன கவிஞன் உரைக்கமுடியாது. நடுவில் சில பத்தாண்டுகள்தான் எனினும் காலம் நம்மை, நமது லட்சியங்களை அறுத்து ஈ மொய்க்கத் தெருவில் போட்டுவிட்டது.

பிரமிள் எல்லையற்ற பூ என்று வர்ணிக்கும் சூரியனின் இடத்தில்-அந்த உன்னதத்தின் இடத்தில்-மாணிக்கவாசகர் கயிலாயத்தில் உள்ள சிவனை வைக்கிறார். கடவுளை பெரிய பூ என்று சொல்கிறார். பூமியில் இருக்கும் சின்னப்பூக்களிலெல்லாம் தேன் குடித்து மகிழாதே! அந்தப் பெரிய பூவின் மேல் நீ அமரவெல்லாம் வேண்டாம். நினைத்தாலே போதும், உனக்குள்ளேயே தேன் சுரக்கும் என்ற உறுதிமொழியையும் கொடுக்கிறார்.

தினைத்திணை உள்ளதோர் பூவினில் தேன் உண்ணாதே,
நினைத்தொறும், காண்தொறும், பேசும்தொறும், எப்போதும்
அனைத்து எலும்பு உள் நெக ஆனந்தத் தேன் சொரியும்
குனிப்பு உடையானுக்கே சென்று ஊதாய், கோத்தும்பீ!

(திருவாசகம்-திருக்கோத்தும்பி)

மரபும் மெய்யியலும்

மரபும் மெய்யியலும் எவ்வளவு காலத்துக்குப் பிறகும் தன் எதிரொலிகளைப் படைப்புகளில் உருவாக்குகின்றன என்பதைப் பார்ப்பதற்கான சிறுகுறிப்பே இது.
இந்த எதிரொலிகளை கவிஞர்கள் நகுலனும், ஞானக்கூத்தனும் தொடர்ந்து தங்கள் கட்டுரைகளில் அவதானித்து வந்திருக்கிறார்கள்.
புதுக்கவிதை என்கிறோம். நவீன கவிதை என்கிறோம். இருபத்தியோராம் நூற்றாண்டும் வந்துவிட்டது. இருபதாம் நூற்றாண்டில் தமிழ் மரபுக்கு சவால் விடும் வண்ணம் எழுதப்பட்ட நவீன கவிதைகளில் எத்தனையை, நமது மரபென்ற புராதனக் கோவிலின் கல்யாளிகள் தன்வயப்படுத்துவதற்காக வாய்திறந்து காத்திருக்கின்றன?
இதுபோன்ற ஒப்பீடுகளைச் செய்துபார்க்கும்போது அழகும் துயரமும்
சேர்ந்த அனுபவம் வாய்க்கிறது.இது
தவிர்க்கமுடியாத செயல்முறையும் கூட.
எல்லாம் எதிரொலிகள்தானோ?

*
என்னதான் வேதனை என்றாலும், என்னதான் துன்பம் என்றாலும் எப்போதும் சில பறவைகள் சூரியனை நோக்கியே பறந்து செல்வதை என்னவென்று சொல்ல. இராப் பகல், ஓய்வு ஒழிவு இல்லாமல் பறக்கின்றன அவை. முன்செல்லும் பறவைகள் கருகி விழுவதைக் கண்ணால் கண்டும், அதிக வேகம் கொண்டு பறக்கின்றன. பறத்தலே கருகலுக்கு இட்டுச் செல்கிறது என்ற பேரானந்தத்தில் சிறகடிக்கின்றன. கருகிய உடல்கள் மண்ணில் வந்து விழும்போது, கூரைக் கோழிகள் சிரிக்கக் கூடும். காகங்கள் சிரிக்கக் கூடும். சற்றுக் குரூரமான, கொடுமையான சிரிப்புதான். அப்போதும் சூரியனை நோக்கிப் பறக்கப் புறப்படும் பறவைகளின் சிறகடிப்பே அச்சிரிப்புக்குப் பதில்.

(ஜே.ஜே சில குறிப்புகள்- சுந்தர ராமசாமி)

Wednesday, 26 August 2015

கவிதை என்னும் இறகு போன்ற வஸ்துஜோர்ஜ் லூயி போர்ஹே

கவிதை என்பது ஒருவகையில் மிகவும் அந்தரங்கமானது, அத்தியாவசியமானது என்று நம்புகிறேன். அதை அதீதமாக எளிமைப்படுத்தாமல் அதை வரையறுக்கவும் முடியாது என்றும் கருதுகிறேன்.  மஞ்சள் நிறம், காதல், இலையுதிர் காலத்தில் உதிரும் இலைகள் ஆகியவற்றை வரையறுக்க முயற்சிப்பதைப் போன்ற காரியம் அது. அத்தியாவசியமான விஷயங்களை எப்படி வரையறுப்பதென்று எனக்குத் தெரியவில்லை. ஒரேயொரு சாத்தியமான வரையறையெனில் அது ப்ளேட்டோவினுடையதாகவே இருக்கும். துல்லியமாகச் சொன்னால் அது வரையறை அல்ல, ஒரு கவித்துவச் செயல்பாடு. கவிதையைப் பற்றி குறிப்பிடும்போது அவர், "இறகுகளைக் கொண்டதும் புனிதமானதுமான லேசான வஸ்து" என்கிறார். ஒரு திட்டமான வார்ப்புக்குள் அடையாதென்பதால், ஒரு தேவதையின் வடிவமாகவோ ஒரு பறவையாகவோ கவிதையை வரையறுக்கலாம் என்று நம்புகிறேன்.

ஆம், கவிதை என்பது அழகியல் செயல்பாடு என்று இன்னும் நம்புகிறேன்; கவிதை என்பது எழுதப்பட்டு கவிதை அல்ல, ஒரு கவிதை வெறுமனே உருவகங்களின் தொடர் வரிசையை மட்டுமே கொண்டதாக இருக்கலாம்.  கவிஞன் எழுதும்போது, வாசகன் வாசிக்கும் போது-அது எப்போதும் சற்று வித்தியாசமான முறையில் நடக்கிறது- நடக்கும் கவித்துவச் செயல்பாடுதான் கவிதை என்று நான் நம்புகிறேன். அந்தக் கவித்துவச் செயல்பாடு நடக்கும்போது, நாம் அதுபற்றிய விழிப்பை அடைவதாகத் தெரிகிறது. கவிதை என்பது  விந்தையான, மர்மமான, விவரிக்க இயலாத, பகுக்கமுடியாத ஒரு நிகழ்வு. அந்தக் கவித்துவ நிகழ்வை ஒருவர் வாசிக்கும்போது உணரவில்லையெனில் கவிஞன் தோற்றுவிடுகிறான். 

Tuesday, 25 August 2015

ஜோர்ஜ் லூயி போர்ஹே பிறந்த நாள் ஆகஸ்ட் 24

ஆழ்ந்த வெகுமதி கலையின் வேலை என்பது, நம்மில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருப்பதை மனிதனின் ஞாபகத்தில் தொலைந்து போக இருப்பதை, குறியீடுகளாக, இசையாக மாற்றம் செய்வது. அது தான் நமது வேலை. அதை நிறைவேற்ற முடியாவிட்டால் நாம் கவலை கொள்கிறோம். ஒரு கலைஞனும் எழுத்தாளனும் எல்லாவற்றையும் குறியீடுகளாக மாற்றுவதை ஒரு சமயத்தில் சந்தோஷமான கடமையாக நினைக்கின்றனர். அந்தக் குறியீடுகள் நிறங்களாக இருக்கலாம். வடிவங்களாக, சப்தங்களாக இருக்கலாம். ஒரு கவிஞனுக்கு, குறியீடுகள் என்பவை வார்த்தைகளும் தான்.  நீதிக்கதை,கதை,கவிதை எல்லாமும் தான். கவிஞனின் வேலை முடிவடைவதே இல்லை. எழுதும் மணித்துளிகளுக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. வெளியுலகிலிருந்து தொடர்ந்து நீங்கள் பெற்றுக்கொண்டே இருக்கிறீர்கள். அவை நிச்சயமாக மாறும். கடைசியில் மாறித்தான் ஆகவேண்டும். இது எந்த சமயத்திலும் வெளிப்படலாம். ஒரு கவிஞன் எப்போதும் ஓய்ந்திருப்பதில்லை. அவன் தொடர்ந்து பணியாற்றியபடியேதான் இருக்கிறான், கனவிலும் கூட. அத்துடன் ஒரு எழுத்தாளனின் வாழ்வென்பது தனிமையான ஒன்று. நீங்கள் தனியானவர் என்று உங்களைக் கருதிக்கொள்கிறீர்கள். வருடங்கள் கடந்தபின், கண்ணுக்குப் புலனாகாத பெரும் நண்பர்கள் கூட்டத்தின் மத்தியில் மத்தியில் இருப்பதை நீங்கள் உணரநேரலாம். அவர்கள், ஒருபோதும் உங்களால் பரிச்சயப்படுத்திக் கொள்ள முடியாதவர்கள். ஆனால் அவர்கள் உங்களை நேசிப்பவர்கள். அதுதான் ஆழ்ந்த வெகுமதி.

Monday, 17 August 2015

நான் வெளியிட விரும்பும் எழுத்தாளர் ஷோபா சக்தி

 க்ரியா ராமகிருஷ்ணன் நேர்காணல்

சந்திப்பு: ஷங்கர்ராமசுப்ரமணியன்
மிழ்ப் பதிப்பக வரலாற்றின் நீண்ட நெடும்பாதையில், சென்ற நூற்றாண்டின் பின்பகுதியில் செயல்படத் தொடங்கிய க்ரியா பதிப்பகம் தற்போது 40 ஆண்டுகளைக் கடந்துள்ளது. பதிப்பு, மொழிபெயர்ப்பு, எடிட்டிங், மொழியியல், அகராதியியலில் இன்று தவிர்க்க முடியாத பெயராக க்ரியா பதிப்பகம் திகழ்கிறது.

நாவல், சிறுகதை, கவிதை என எந்த நூலாக இருப்பினும் உள்ளடக்கத்திற்கும் அட்டை வடிவமைப்பு, அழகியலுக்கும் சம்பந்தமே இல்லாமல் வெறும் சரக்குகளாகப் புத்தகங்கள் வெளிவந்து கொண்டிருந்த காலகட்டம் அது. எழுத்தாளர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் தங்கள் படைப்புகளைப் புத்தகங்களாக வெளியிடும் வாய்ப்புகளும் குறைவாகவே இருந்தன. இச்சூழ்நிலையில் தரமான வெளியீடு என்பதை அவர்கள் நினைத்துப் பார்க்கவும் இயலாத நிலையே இருந்தது. இப்பின்னணியில் 1974-ல் தமிழ்ச் சிற்றிதழ் இயக்கம் சார்ந்த சமகால படைப்புகளை வெளியிடுவதன் மூலம் கால்பதித்தனர் க்ரியா பதிப்பகத்தினர். இதன் பதிப்பாளர் க்ரியா ராமகிருஷ்ணன், தாம் வெளியிடும் புத்தகங்களைக் கலைப்படைப்புகளாக மாற்றினார்.

தமிழில் புதுக்கவிதை இயக்கம் வலுப்பெற்ற பின்னணியில் முக்கியமான கவிக்குரல்களாக உருவான சி.மணி, பசுவய்யா (சுந்தர ராமசாமி), நாரணோ ஜெயராமன் போன்றவர்களது முதல் கவிதைத் தொகுதிகள் இன்றும் க்ரியாவின் ஆத்மார்த்தத்திற்குச் சான்றாக இருப்பவை.

பிரெஞ்சிலிருந்து நேரடியாக மொழி பெயர்க்கப்பட்ட ஆல்பெர் காம்யூவின் ‘அந்நியன்’, எக்சுபெரியின் ‘குட்டி இளவரசன்’ போன்றவை தமிழ் வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நூல்கள். ஜெர்மன் மொழியிலிருந்து நேரடியாக மொழிபெயர்க்கப்பட்ட பிரான்ஸ் காஃப்காவின் ‘விசாரணை’ நாவல் தமிழ் எழுத்தாளர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நூல்.

இந்தியா போன்ற மூன்றாம் உலக நாட்டு மக்களின் எளிய மருத்துவப் பிரச்னைகளுக்கு அவர்களே தீர்வு காணும் விதமாக எழுதப்பட்ட டேவிட் வெர்னரின் ‘டாக்டர் இல்லாத இடத்தில்’ நூலை எளிமையாக மொழிபெயர்த்து பதிப்பித்தது பெரிய சேவை.

உடல்நலம், விவசாயம், சுற்றுச்சூழல், தொழில்நுட்பம் எனப் பல துறைகள் சார்ந்து க்ரியா பதிப்பகம் புத்தகங்களை வெளியிட்டுள்ளது. இந்தப் பணிகளின் பின்னணியில் ஏற்பட்ட மொழி அனுபவம் வழியாகத் தற்காலத் தமிழ் அகராதியின் தேவையை உணர்ந்து க்ரியா- தற்காலத் தமிழ் அகராதியை பல ஆண்டுகள் உழைப்புக்குப் பின்னர் 1992-ல் வெளியிட்டது. தொடர்ந்து அந்த அகராதியை புதிய சொற்களுடன் புதுப்பித்தும் வருகிறார்கள். க்ரியாவின் இணையதளத்தில் சொல்வங்கி ஒன்றையும் உருவாக்கி 35 லட்சம் வரை சொற்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

நாவல், சிறுகதை, கவிதை போன்ற இலக்கியப் படைப்புகளுக்கும் மொழிசார்ந்து மேம்படுத்த ஒரு எடிட்டர் தேவை என்பதைத் தமிழ்ப் பதிப்புத் தொழிலில் உணர்த்தியவர்கள் க்ரியா பதிப்பகத்தினர். ஒரு புத்தகம் என்பது உள்ளும், புறமும் அழகான ஒரு உயிர் என்ற அந்தஸ்தை அளித்த பெருமை க்ரியாவுக்கு உண்டு.

க்ரியா ராமகிருஷ்ணனுடன் தி இந்து தமிழ் நாளிதழின் ‘கலை ஞாயிறு’ 
இணைப்புக்காக எடுக்கப்பட்ட நேர்காணலின் முழுவடிவம் இது...


 உங்கள் பின்னணி பற்றி கூறுங்கள்?


 நான் சென்னையில்தான் பிறந்து வளர்ந்தேன். தமிழ்மீடியம்  பள்ளியில் தான் தான் படித்தேன். தமிழ்வழிக் கல்வி படித்ததில் இப்போது சந்தோஷம் எனக்கு. தாய்மொழிக் கல்வி கற்பதுதான் ஆரோக்கியமானது என்பதை உணர்கிறேன்.  நான் படித்த பள்ளி  பின்தங்கிய பள்ளிக்கூடமாக அது கருதப்பட்டாலும், அங்குள்ள ஆசிரியர்கள் மிகவும் பொறுப்பானவர்கள். குறிப்பாக ஆங்கில, தமிழாசிரியர்கள் நல்லதொரு அடிப்படையை அமைத்துக் கொடுத்தார்கள். அவர்கள் ஏற்படுத்திக் கொடுத்த அடிப்படை மீதுதான் நான் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறேன்.

நவீன இலக்கியவாதிகளோடு எப்போது பரிச்சயம் ஏற்பட்டது?

1963-ல் ம.ராஜாராமைச் சந்தித்தேன். அவர் லயோலாவிலும் நான் ஜெயின் கல்லூரியிலும் படித்தோம். ஒரே தெருவில் வசித்தவர்கள் நாங்கள். ஒன்றாகப் பயணம் செய்வோம். அப்போதே ம.ராஜாராம், கல்கியில் ஒரு கதை எழுதிப் பரிசெல்லாம் வாங்கியிருந்தான். அவன் என்னைவிட ஒரு வயது மூத்தவன். அவர் காலேஜ் முடித்துவிட்டு குரோம்பேட்டை எம்ஐடியில் சேர்ந்து எலக்ட்ரானிக்ஸ் படித்தான். பின்னாளில் எழுத்தாளர் சுஜாதாவுடன் சேர்ந்து, ‘காசளவில் ஒரு உலகம்’ என்று வாசகர் வட்டம் வெளியிட்ட புத்தகத்தையும் எழுதினான். எலக்ட்ரானிக்ஸ் தொடர்பாக தமிழில் வெளிவந்த முதல் புத்தகம் அது. ராஜாராம் எம்ஐடியில் படிக்கும்போதுதான் அங்கே சா.கந்தசாமி ஆய்வகத்தில் உதவியாளராக வேலை செய்துகொண்டிருந்தார். அதனால் சா.கந்தசாமி எனக்கும் பரிச்சயமானார். சா.கந்தசாமியும், பின்னர் கசடதபற ஆசிரியராக இருந்த கிருஷ்ணமூர்த்தியும் தஞ்சாவூர் பக்கம் ஒரே ஊர். அவர்கள் சேர்ந்து படித்தவர்கள். அதனால் நான்கு பேரும் சந்திக்க ஆரம்பித்தோம். நான் இலக்கியத்துறைக்கு வருவதற்கு முக்கியமான காரணம் சா.கந்தசாமியும், ம.ராஜாராம் இருவரும்தான். அதற்கு முன்னாடியும் எனக்குப் புத்தகங்கள் படிப்பது பிடிக்கும். நிறைய படித்துக்கொண்டே இருந்தேன். தான். அகிலன், நா.பார்த்தசாரதி எல்லாரையும் படிப்பேன். கல்லூரி நாட்களில் ஜெயகாந்தன் பெரிய ஆதர்சமாக கல்லூரி நாட்களில் இருந்தார்.
ஆனால் இலக்கியம் என்பது படைப்பு ரீதியான விஷயம், அதற்கென்று பல பரிணாமங்கள் இருக்கிறது என்பதெல்லாம் நாங்கள் நான்குபேர் சேர்ந்தபிறகுதான் எனக்குத் தெரியவந்தது. இந்த விஷயத்தைப் பொருத்தவரை, பள்ளிப்படிப்போ கல்லூரிப் படிப்போ எந்த விதத்திலும் எனக்கு உதவிசெய்யவில்லை.  மொழியின் பயன்பாட்டு நிலை பற்றிய அறிவுதான் பள்ளி, கல்லூரியில் கிடைத்தது. இலக்கியப் பிரக்ஞை,மொழியின் அமைப்பு, நுணுக்கங்கள் பற்றியெல்லாம் வெளியில் படித்துத்தான் தெரிந்துகொண்டேன். சுந்தர ராமசாமியின் எழுத்துகளை அறிமுகப்படுத்தியது ராஜாராம்தான்.

கசடதபற சிற்றிதழுக்கு முன்பே நீங்களும் நண்பர்களும்  இலக்கியக் கூட்டங்களை நடத்தியுள்ளீர்கள். அதற்கான உந்துதலை எப்படி பெற்றீர்கள்?

நாங்கள் அக்காலத்தில் சென்ற இலக்கியக் கூட்டங்கள் நடத்தப்பட்ட விதம் மிகவும் மோசமாக இருந்தது. நேரத்திற்கு ஆரம்பிக்க மாட்டார்கள். பேசுவதில் அர்த்தமே இருக்காது. சம்பிரதாயம், சடங்குகள் தான் அதிகமாக இருக்கும். 1966-ல் இலக்கிய சங்கம் என்ற பெயரில் நாங்கள் நான்கு பேரும் கூட்டங்கள் போடத் தொடங்கினோம். அப்போதுதான்  எல்எல்ஏ பில்டிங்கில்(தேவநேயப் பாவாணர் நூலகம்) ஒரு பெரிய கூட்ட அரங்கம் கட்டி முடித்திருந்தனர்.  இரண்டு ரூபாய்தான் வாடகை வைத்திருந்தனர். மிக வசதியான அரங்கம் அது. அந்த இடத்தை நாங்கள்தான் முதலில் பயன்படுத்தத் தொடங்கினோம். மூன்று ஆண்டுகள் தொடர்ந்து கூட்டங்கள் நடத்தினோம்.  ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையிலும் ஞாயிற்றுக்கிழமையிலும் கூட்டங்கள் நடக்கும். எங்கள் கூட்டங்களுக்கென்று சில விதிமுறைகளைக் கறாராக வைத்துக் கொண்டிருந்தோம். நேரத்தில் தொடங்குவோம். பங்கெடுப்பவர் கட்டுரை தான் வாசிக்க வேண்டும். பார்வையாளர்கள் கேள்விகளுக்கு கட்டுரை வாசித்து முடித்தபின்னர் பதில் சொல்லவேண்டும். ஒவ்வொரு கூட்டத்திலும் பேசப்படும் பொருள் குறித்து அறிமுகக் குறிப்பும் முதலில் தரப்படும். அந்த அறிமுகக் குறிப்பை எழுதுவதற்காகவே நான் பலதுறை நூல்களைப் படித்தேன். கட்டுரை படிக்க வருபவருக்கு ஒரு பைசா கூட செலவு செய்யமாட்டோம். எல்லா விதிமுறைகளையும் கடுமையாகப் பின்தொடரவும் செய்தோம். இதுகுறித்து அசோகமித்திரன் போன்றவர்கள் கேலி செய்துள்ளனர். இது என்ன இரங்கல் கூட்டம் மாதிரி யாரும் சிரிக்கக் கூட முடியாமல் இருக்கிறதென்று சொல்லியிருக்கிறார். இலக்கியம் தவிரவும் உளவியல், காந்தியம், ஓவியம் எல்லாம் குறித்து பல துறைசார்ந்தவர்கள் பேசியுள்ளனர். அங்கேதான் ஓவியர் கிருஷ்ணமூர்த்தியின் அறிமுகம் கிடைக்கிறது. கிருஷ்ணமூர்த்தி வரைந்த ஓவியம்தான் நாங்கள் வெளியிட்ட கோணல்கள் சிறுகதைத் தொகுப்பின் அட்டையாக வந்தது. தமிழ் புத்தக வெளியீட்டுத் துறையில் முதலில் வெளிவந்த  நவீன ஓவியம் அவருடையதுதான். இலக்கிய   
சி.சு.செல்லப்பா, முத்துசாமி போன்றவர்கள் எல்லாம் அந்தக் கூட்டத்திற்கு வருவார்கள். செல்லப்பா கையில் காக்கிப்பை தொங்கிக் கொண்டிருக்கும். அவர் பின்னால் முத்துசாமி, கி.அ.சச்சிதானந்தம், வி.து. ஸ்ரீனிவாசன் எல்லாரும் வருவார்கள். வி.து. ஸ்ரீநிவாசன் நிறைய எழுதியவரில்லை. நல்ல படிப்பாளி. கணக்குலயும் சயன்ஸ்லயும் நல்ல ஈடுபாடு. மிஸ்டிகல் சிஸ்டம்ஸ் என்று சொல்லப்படும் அறிவியலில் அவருக்கும், சி.மணிக்கும் அபாரமான ஈடுபாடு இருந்தது. ஐம்பதுகளின் பின்பகுதியிலும் அறுபதுகளின் ஆரம்பத்திலும் அவர்கள் அத்துறை சார்ந்து, நிறைய புத்தகங்களை வெளிநாடுகளில் இருந்தெலாம் வரவழைத்துப் படித்து பல பரிசோதனைகளிலும் ஈடுபட்டார்கள். வி.து.ஸ்ரீனிவாசன் கனத்த குரலில் பேசுவார். இலக்கிய சங்கம் கூட்டங்களிலும் கேள்விகள் கேட்பார். செல்லப்பாவையும் ஒரு கூட்டத்தில் பேசக் கூப்பிட்டோம். கட்டுரை படிக்கமாட்டேன், பேசத்தான் செய்வேன் என்றார். அப்படியெனில் நீங்கள் வரவேண்டாம் என்று சொல்லிவிட்டோம். கூட்டம் முடிந்தபிறகு யாரும் கலையமாட்டார்கள். அப்படியே பக்கத்தில் உள்ள தேநீர் கடையில் போய் பேசுவோம்.
இடதுசாரி கட்சிகள் சார்ந்த இலக்கியக்குழுக்களும் அப்போதுதான் கூட்டங்கள் போடத்தொடங்கினார்கள். அவர்களும் எங்கள் கூட்டத்துக்கு வருவார்கள். தி.க.சி., தொ.மு.சி.ரகுநாதன் எல்லாம் வருவார்கள். தேவநேயப் பாவாணர் நூலகத்துக்குப் பக்கத்திலேயே அப்போதிருந்த அமெரிக்கத் தூதரக நூலகத்திற்கும் போவோம். அதன் நூலகர் எங்களுக்கு நண்பரானார். அவருக்கு சொந்தமாக ஹிக்கிம்பாதம்ஸ் எதிரே ஒரு சிறிய திரையரங்கு இருந்தது. அதில் அமெரிக்க எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் தொடர்பான ஆவணப்படங்களைத் திரையிட்டு எல்லாரையும் வரவழைத்தோம். மாக்ஸ்முல்லர் பவனுடனும் தொடர்பு உருவானது. அவர்களுடன் சேர்ந்து ஜெர்மன் மொழி இலக்கியங்களை நேரடியாக மொழிபெயர்க்கும் வேலைகளை அப்போதே ஆரம்பித்தோம். ஹைன்ரிச் பியோல், வோல்ப்கேங் ப்ரோச்சர்ட் இரண்டு பேருடைய சிறுகதைகளை மொழிபெயர்த்தோம். அங்கேயும் கூட்டங்கள் நடத்தியிருக்கிறோம்.

1969-ல் டெல்லிக்குப் போனேன். லீகல் சோசியாலஜியில் ஆய்வு உதவியாளராக எனக்கு வேலை கிடைத்தது. 1970 வரை அங்கேதான் இருந்தேன். வெங்கட் சாமிநாதன் தான் எனக்கு அறை பார்த்துத் தந்தார். என் வாழ்வின் மிக வளமான காலகட்டம் அது. அப்போதெல்லாம் டெல்லி, மாலை ஐந்தரை மணிக்கே தூங்கிவிடும். ஆனால் மாக்ஸ்முல்லர் பவன், சங்கீத நாடக அகாதமி, லலித் கலா அகாதமி எல்லாம் மாலையில்தான் உற்சாகம் கொள்ளத் தொடங்கும். தினமும் சாயந்திரம் நானும் வெங்கட் சாமிநாதனும் சேர்ந்து திரைப்படங்கள், கலை நிகழ்ச்சிகளுக்குப் போவோம். எனது அலுவலகத்திற்கு எதிரே ஐஎப்எக்ஸ் ஆடிட்டோரியத்தில் நல்ல நாடகங்களைப் பார்த்திருக்கிறோம். காலையில் ஏழுமணிக்கு எனது அறைக்கு வந்துவிடுவார் சாமிநாதன். அலுவலகம் கிளம்பும்போது அவரும் அலுவலகம் போவார். டெல்லி ஆல் இந்தியா ரேடியோவில் அப்போது தி.ஜானகிராமன் வேலை செய்துகொண்டிருந்தார்.  

கசடதபற இதழை எப்போது தொடங்கினீர்கள்?

டெல்லியிலிருந்து சென்னைக்கு மீண்டும் 1970-ல் வந்தேன். சென்னையில் உள்ள இந்துஸ்தான் தாம்சன் நிறுவனத்தில் சந்தை ஆய்வுப் பிரிவில் இருந்தேன். அந்த வேலை எனக்குப் பல விஷயங்களையும் தெரிந்துகொள்ள பயனுள்ளதாக இருந்தது. அப்போது எங்கள் இலக்கிய சங்கம் குழு விரிவானது. ஞானக்கூத்தன், ஐராவதம் சுவாமிநாதன், ந.முத்துசாமி, பாலகுமாரன், மஹாகணபதி(எம்.என்.பதி என்ற பெயரில் கவிதையெல்லாம் எழுதியிருக்கிறார்) எல்லாரும் சேர்ந்து கசடதபற பத்திரிக்கையைத் தொடங்கினோம். ஞானக்கூத்தன் தான் அதற்குப் பெயர் வைத்தார். கசடதபற தொடர்பான படைப்பாலோசனைகளை எல்லாரும் செய்தாலும் பணத்தை நிர்வகிப்பதிலிருந்து, அச்சகம் செல்வது, விநியோகம் வரை எல்லா பணிகளையும் நானும், கிருஷ்ணமூர்த்தியும் சேர்ந்தே செய்தோம். நா.கிருஷ்ணமூர்த்தி எனக்கு நேரெதிரான பண்புள்ளவர். நான் எல்லாரையும் அதட்டி உருட்டி வேலை வாங்குவேன். அவர் எல்லாவற்றையும் மிக அமைதியாகச் செய்வார். அச்சகத்துக்கு ஒன்பது மணிக்குப் போகலாம் என்றால் 8.55க்கு தயாராக இருப்பார்.

கசடதபற இதழுக்கு அப்போது எல்லாம் சேர்ந்து 150 முதல் 200 ரூபாய் வரை ஆகும். அப்போதுதான் ஞானக்கூத்தனின் திருமணத்தை முன்னிட்டு அவரது முதல் கவிதைத் தொகுதியான ‘அன்று வேறு கிழமை’ புத்தகத்தைக் கொண்டுவந்தோம். நல்ல தரமான அட்டை மற்றும் தாளில் வந்த கவிதைத் தொகுதி அது. அப்போதெல்லாம் படங்கள் அச்சிடுவதற்கு ப்ளாக்குகளை செய்யவேண்டும் வேண்டும். அதற்கு ப்ளாக்மேக்கர்களிடம் போகவேண்டும். க்ரியாவுக்கான அடித்தளம் கசடதபற பணிகளில்தான் உருவானது. ப்ரூப் பார்ப்பது, அச்சகத்துக்குப் போவது, அச்சிடுவதில் என்னென்ன பிரச்சினைகள் வரும் என்பதையெல்லாம் முழுமையாகத் தெரிந்துகொண்டேன்.
 இரண்டு ஆண்டுகள் நான் வேலைபார்த்த விளம்பர நிறுவனத்தில் 120 பேர் பணிபுரிந்தனர். விளம்பரத்துக்கான ஒரு யோசனை உருவாகி அது எப்படி முழுவடிவத்தை எப்படி அடைகிறது என்பதுவரை எல்லா விஷயங்களும் எனக்குத் தெரியும். ஒரு வானொலி விளம்பரம் தொடங்கி திரைப்பட ஸ்லைடு வரை ஒவ்வொரு படிநிலையிலும் எப்படி உருவம் பெறுகிறது என்பதை தனிப்பட்ட ஆர்வத்தின் காரணமாக கற்றுக்கொண்டேன். அப்போதுதான் கசடதபற இதழ்பணிகளிலும் ஈடுபட்டேன். அப்போது திருவல்லிக்கேணியில் 10.40க்கு கடைசிப் பேருந்து. 11.15க்கு தண்டையார்பேட்டை போய்விடும். அதற்குப் பிறகு குளித்து சாப்பிட்டுவிட்டு, இரண்டு மூன்று மணிநேரம் புத்தகங்கள் படிப்பேன்.க்ரியாவை எந்தச் சூழ்நிலையில் தொடங்கினீர்கள்?

விளம்பர நிறுவனத்தில் வெற்றிகரமாக நல்ல சம்பளத்தில் இருந்தாலும் அதன் கலாச்சாரம் எனக்குப் பிடிக்கவில்லை. ஒரு புள்ளியில் அந்த வேலையை விட்டேன். 1972 ஆம் ஆண்டு மே மாதம் வேலையை விட்டேன். என்ன செய்வது என்று தெரியாது. எனது தோழி ஜெயலட்சுமியை 73-ல் சந்தித்தேன். அவர் நல்ல வாசகி. அவர் கொடுத்த உந்துதல் மற்றும் பணத்தில்தான் க்ரியாவைத் தொடங்கினேன். அவரும் நானும் தான் க்ரியாவின் பங்காளிகள். க்ரியாவின் பங்காளியாக இருந்தும் அவர் எனது எந்த முடிவுகளிலும் குறுக்கிட்டதேயில்லை. குறுக்கிடாதது மட்டுமல்ல லட்சக்கணக்கான பணம் வருவதற்கு வாய்ப்புள்ள பணிகளைக் கூட மறுப்பதற்கு எனக்கு சுதந்திரத்தை அளித்தவர் அவர்.

இலக்கியம் சார்ந்துதான் முதலில் க்ரியா நூல்களை வெளியிட்டது இல்லையா?

இலக்கியம் சார்ந்துதான் நான் பதிப்பகப் பணிக்கே வந்தேன். ஆனால் ஒரு ஆண்டிலேயே எனக்குத் தெரிந்துவிட்டது, பதிப்புத்துறை என்பது இலக்கியம் மட்டும் அல்ல, இலக்கியத்துக்கப்பால் உள்ள கருத்துலகங்களோடு தொடர்புடையது என்பதை சீக்கிரத்திலேயே புரிந்துகொண்டேன். அதற்காக நான் என்னை ஆயப்படுத்திக்கொள்ளத் தொடங்கினேன். எங்களது முதல் நூல் ந.முத்துசாமியின் நாடகமான ‘நாற்காலிக்காரர்’. அதிலேயே மொழி ரீதியான எடிட்டிங்கை எங்கள் அளவில் செய்துதான் வெளியிட்டோம். எஸ்.வி.ராஜதுரையிடம் பேசி எக்ஸிஸ்டென்சியலிசம் ஓர் அறிமுகம் நூலை எழுதச் சொன்னோம். முதல்முறையாக விஞ்ஞானப்பூர்வமாக ‘நெல் சாகுபடி’ என்ற நூலை தமிழில் நாங்கள் தான் விவசாயம் சார்ந்து கொண்டுவந்தோம். முத்துசாமி என்ற விவசாய அறிஞர்தான் அதன் ஆசிரியர். 85-ம் ஆண்டுவரை பதிப்பு சார்ந்தும், மொழி சார்ந்தும் பட்டறிவின் அடிப்படையில் தான் செயல்பட்டு வந்தோம். மொழிசார்ந்து பிரச்சினைகள் இருப்பது தெரிந்தது. பிரச்சினைகளை வகைப்படுத்துவதற்கோ, புரிந்துகொள்வதற்கோ மொழிசார்ந்த கோட்பாட்டு ரீதியான அறிவு என்னிடம் இல்லை. ஒவ்வொரு வெளியீடும் எங்களுக்கு அனுபவத்தை மேம்படுத்தின. அதுவரை ஒரு கையெழுத்துப் பிரதியை சரிசெய்யும் போது, வாசகரின் பார்வையில் மொழி தெளிவாக இருக்கிறதா, வாக்கியங்கள் சீராக இருக்கிறதா என்பதில் எனது நோக்கமாக இருந்தது. முழு கையெழுத்துப் பிரதியையும் படித்து வரிவரியாகப் பார்த்தபிறகே புத்தகமாகும்.  

க்ரியாவின் புத்தகங்கள் கலைப்படைப்புகளைப் போன்ற உணர்வைத் தருபவை. அதுசார்ந்த பின்னணியைச் சொல்லுங்கள்?

 தமிழில் ‘வாசகர் வட்டம்’ பதிப்பகம் வெளியிட்ட நூல்கள் தமிழ் பதிப்புத் துறைக்கே முன்மாதிரி என்று சொல்வேன். ஒவ்வொரு புத்தகத்திலும் அவர்கள் ஒரு தர அளவை உருவாக்கினார்கள். ‘நடந்தாய் வாழி காவேரி’, ‘போதையின் பாதையில்’ போன்ற புனைவல்லாத நூல்களின் அச்சும், தரமும் எங்களுக்கு பெரிய உத்வேகமாக இருந்தவை.           எனக்கு விளம்பரத் துறையில் இருந்த அனுபவம் மிக முக்கியமான காரணம். ஆங்கிலத்தில் வரும் ஓவியப் புத்தகங்களை நான் ஆர்வத்தோடு தொடர்ந்திருக்கிறேன். இந்த உந்துதல்கள் எல்லாம் புத்தகத்தை நன்றாக கொண்டுவர வேண்டும் என்ற தூண்டுதலைக் கொடுத்திருக்கலாம்.  காலால் மிதித்து அச்சடிக்கும் டிரெடில் மிஷின் தொடங்கி இன்றைய ஆப்செட் தொழில்நுட்பம் வரை எல்லா மாறுதல்களையும் நான் உடனிருந்து பார்த்திருக்கிறேன். அத்தனை பிரச்சினைகளிலும் இருந்திருக்கிறேன். கையில் கோர்க்கும்போது, ஒரு பாரம் அச்சடித்து முடித்தபின்னர், அந்தந்த எழுத்துருக்களுக்கு இருக்கும் மரவெட்டியில் தேர்ந்த கம்பாசிட்டர்கள் கையாலேயே தடவி எழுத்துருவைக் கண்டுபிடித்து அதற்குரிய பெட்டியில் போடுவார்கள். கம்பாசிட்டர்கள் தப்பாக ஒரு எழுத்துருவை மாற்றிப் போட்டுவிட்டால் தவறு வரும். மெய்ப்பு பார்க்காவிட்டால் அந்தத் தவறு கடைசிவரை தொடரும். அச்சுநேர்த்தியிலும், காகிதத்திலும் கவனம் செலுத்தியதால் அப்போது சக பதிப்பகங்கள் வெளியிட்ட புத்தகங்களை விட எங்கள் புத்தகங்கள் சற்று விலை கூடுதலாக இருந்தன. ஆனால் இப்போது அப்படி சொல்லமுடியாது. ஏனெனில் குறைந்தபட்ச தொழில்நுட்பம் என்பது எல்லாருக்கும் சமமானது. இப்போது எங்கள் புத்தகங்கள் விலை கூடுதல் என்று சொல்லமுடியாது.

‘டாக்டர் இல்லாத இடத்தில்’, க்ரியாவின் புத்தக வெளியீட்டு அனுபவத்தில் முக்கியமான நூல் இல்லையா?

மருத்துவத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதிகள் மற்றும் செயல்முறைகள் கேள்விக்குள்ளாக்கப்பட்ட காலத்தில் வெளிவந்த நூல் ‘டாக்டர் இல்லாத இடத்தில்’. மெக்சிகோவில் உள்ள உயிரியலாளரான டேவிட் வெர்னர் அந்த நாட்டிலுள்ள ஏழைமக்களுக்கான எழுதிய கையேடு அது. இந்தியப் பதிப்பொன்றும் வெளிவந்தது. அதை தமிழ்சூழலுக்கேற்ப மாற்றி நாங்கள் மொழிபெயர்த்து வெளியிட்டோம். 26 மாதங்கள்  குழுவாகப் பணியாற்றினோம். அதற்கென தனியாக லெட்டர்பிரஸ் யூனிட்டை அமைத்தோம். ‘டாக்டர் இல்லாத இடத்தில்’ நூலைப் பொறுத்தவரை படங்கள், அட்டவணைகள், வேறு வேறு எழுத்தளவுகள் ஒவ்வொரு பக்கத்துக்கும் தேவையாக இருந்தன. ஒரு பேஸ்ட்அப் கலைஞரை அதிக சம்பளத்திற்கு நியமித்து படங்களையும் எழுத்துக்களையும் வெட்டியொட்டி பக்கங்களை உருவாக்குவோம்.    
  
இந்தியா போன்ற ஏழை மூன்றாம் நாடுகளில் அதிக விலையில் புத்தகங்கள் விற்பதற்கான தேவை இருக்கிறதா?   

இது அபத்தமான கேள்வி. மூன்றாம் உலக நாட்டுக்கு இரண்டு லட்ச ரூபாய்க்குப் பட்டுப்புடவை வாங்குவது தேவையாய் இருக்கிறது. 38 ரூபாய்க்கு காபி தேவையாக உள்ளது. புஸ்தகம் என்று வந்தால் மட்டும் நமது நாடு ஏழை நாடு என்ற ஞாபகம் வருகிறது. இங்கே புத்தகம் வாங்கமுடியாத அளவு ஏழையாக இருக்கிறார் என்பது மிகவும் அரிதான சூழல். இங்கேயுள்ள பிரச்சினை என்னவெனில், நிறைந்த பொருளாதாரம் உள்ளவர்களும் புத்தகங்கள் வாங்குவதில்லை என்பதே. 2000-ல் சொற்கள் என்ற பிரெஞ்சு கவிதை மொழிபெயர்ப்பு நூலை வெளியிட்டு இலவசமாக கொடுத்தோம். மூன்றே மாதத்தில் தீர்ந்துபோனது. அதே புத்தகத்தை 110 ரூபாய்க்கு திரும்ப வெளியிட்டோம். ஆயிரம் பிரதிகளைக்கூட எங்களால் இன்னும் விற்க முடியவில்லை. புத்தகங்கள் மீதான விருப்பத்திற்கும் அதற்கான விலைக்கும் தொடர்பே இல்லை என்பதுதான் எனது அனுபவம். அவன் ஏழையாக இருந்தாலும் அது அவனுக்குப் பொருட்டேயில்லை.

க்ரியா அகராதி உருவாக்கும் எண்ணம் எப்படி ஏற்பட்டது?

விவசாயம், தத்துவம், மருத்துவம் என பலதுறை நூல்களை வெளியிட்ட அனுபவம் மொழியைப் பற்றிய கூருணர்வை அதிகமாக்கியது. எங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை நானும் நண்பர் கி.நாராயணனும் குறித்துவைத்துக் கொண்டோம். இந்தப் பிரச்சினைகளையெல்லாம் வைத்து இ.அண்ணாமலையைச் சந்தித்தபோதுதான் அவர் நமக்கு இப்போதைய தேவை தற்கால தமிழ் அகராதி என்று சொன்னார். அவர்தான் மொழியைப் பற்றிய முழு உணர்வை ஏற்படுத்தினார். மொழி என்பது எப்படி தொடர்ச்சியான ஓட்டம் என்பதையும்…நாம் வாழும் காலத்தின் மொழிக்கும் நமக்கு முன்பு இருந்த மொழிக்கும் இடையிலான வித்தியாசங்களையும் எடுத்துக்காட்டினார். வார்த்தைகளை எப்படி எழுதவேண்டும் என்பது தொடர்பான உணர்வையும் அவர்தான் உருவாக்கினார். ‘நெல்லில் இருந்து அரிசி’ என்று எழுதுவது மிகவும் சகஜமாகிவிட்டது. ‘நெல்லிலிருந்து அரிசி’ என்பதே சரி. ‘கொள்’ என்ற சொல் ஒரு வினையாகவும் இருக்கிறது,  ஒரு துணைவினையாகவும் இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும்போதுதான் ‘வந்துகொண்டிருந்தேன்’ என்பதை எப்படி எழுதவேண்டும் என்று தெரியும். ஒரு சொல்லின் வகையை இலக்கணரீதியாகத் தெரிந்துகொண்டால்தான் அதைத் திறமையாகக் கையாள முடியும். அகராதி, மொழியைப் பற்றிய உணர்வைக் கூர்மையாக்குகிறது. அதன்மூலம் நாம் எழுதுவதைத் துல்லியமாகவும், குழப்பமில்லாமலும் எழுத முடியும்.

ஒரு சொல்லின் நிலை இலக்கணரீதியாகத் தெரிந்தால்தான் அதைத் திறமையாகக் கையாள முடியும். அகராதி, மொழியைப் பற்றிய கூர்மையுணர்வை உருவாக்குகிறது. அதன்மூலம் நாம் எழுதுவதை துல்லியமாகவும், குழப்பமில்லாமலும் எழுதமுடியும். ஒரு சொல்லின் அமைப்பு, வாக்கியத்தில் இடம்பெற வேண்டிய முறை, சொல்லின் பொருள் இவற்றைத் தெரிந்துகொள்வதற்கு அகராதி பயன்படும். ஒரு சொல்லுக்கு எத்தனையோ பொருள்கள் உண்டு. அதைத் தெரிந்துகொள்ளும் போது அதன் வீச்சு நமக்குப் புலப்படுகிறது. முதலில் அகராதியைத் தொகுத்து முடித்தபோது, எங்கள் சொல்வங்கியில் 18 லட்சம் வார்த்தைகள் இருந்தன. இப்போது எங்கள் தொகுப்பு ஒரு கோடியை எட்டியுள்ளது.

  இப்படியாக அகராதி வேலை என்பது முப்பது ஆண்டுகளாக அன்றாட நடவடிக்கையானது.

தமிழ் அகராதி என்பது தமிழ் மென்பொருள்களுக்கும் உதவிகரமாக இருக்கும் இல்லையா?

ஆமாம். எடுத்துக்காட்டாக, இன்று புத்தகங்களுக்காக அச்சுக்கோக்கக் கணினியைத்தான் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. ஆனால் வரி முடிவில் ஒரு சொல்லுக்கான இடம் போதுமான அளவு இருக்காதபோது, அந்தச் சொல்லை எப்படிப் பிரிக்க வேண்டும் என்பது கணினிக்குத் தெரியாது. கையால் அச்சுக்கோக்கும் முறையில் அச்சுக்கோப்பவருக்குச் சொற்களைப் பிரிக்கும் முறை அவர் தொழில்முறை அறிவின் பகுதியாக இருந்தது. சொற்களைப் பிரிப்பதற்கான மென்பொருள் தமிழில் உருவாக்கப்படவில்லை. ஆங்கிலம் போன்ற மொழிகளில் இந்த வசதி உருவாக்கப்பட்டு ஒரு அகராதி வடிவத்தில் அச்சுக்கோக்கும் மென்பொருளின் ஒரு பகுதியாக இருக்கிறது. ஒரு சொல்லின் வடிவம், அது எந்த இலக்கண வகையைச் சேர்ந்தது, அந்தச் சொல்லை எப்படி எழுத வேண்டும் என்பது போன்ற தகவல்கள் இருந்தால்தான் தமிழுக்கான இந்தக் குறிப்பிட்ட மென்பொருளை உருவாக்க முடியும். எடுத்துக்காட்டாக, வரி முடிவில் ‘நண்பர்களால்’ என்ற சொல் வந்து, ஆனால் அந்த வரியில் ‘நண்ப’ என்ற எழுத்துகளுக்கு மட்டுமே இடம் இருந்தால், அந்த மூன்று எழுத்துகளையும் கணிப்பொறி அடுத்த வரிக்கு தள்ளி, அவற்றுக்கான இடத்தை அந்த வரியிலேயே நிரவிவிடும். இதனால் ஒவ்வொரு வரியிலும் இடைவெளி சீராக இருக்காது; பார்வைக்கும் அழகாக இருக்காது. அதைவிட முக்கியமான விஷயம், இந்தச் சீரற்ற இடைவெளிகளால் 100 பக்கங்களில் முடிய வேண்டிய பிரதி, 120 அல்லது 125 பக்கங்களாக நீண்டுவிடும். இது தேவையில்லாமல் தயாரிப்புச் செலவுகளை——காகிதம், மை, நேரம், உழைப்பு போன்றவற்றை——20% முதல் 25% கூட்டிவிடும். இதை ஒரு துறை முழுவதற்கும் பொருத்திப் பார்த்தால் எவ்வளவு வீண் செலவு ஏற்படுகிறது என்பது தெரியும். முறையாக உருவாக்கப்பட்ட அகராதிதான் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கும் மென்பொருளை உருவாக்க உதவ முடியும்.
இதையெல்லாம் பதிப்புத்துறையில் யாரும் கண்டுகொள்ளவோ எடுத்துச் சொல்லவோ இல்லை. ஆனால் இந்த நஷ்டம் அன்றாட வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்தைப் பாதிக்கக் கூடியது.

புனைவுகளை எடிட்டிங் செயல்முறை எப்படி மேம்படுத்துகிறது?

புனைவில் முக்கியமான பிரச்சினை என்னவெனில், எழுதப்படும் விஷயம் சார்ந்து வாசகனை விட எழுத்தாளனுக்கு அதிகம் தெரிந்திருக்கும். வாசகனின் பார்வை என்னவென்று தெரிவதற்கான வாய்ப்பு அவருக்கு இல்லை. எடிட்டர் என்பவர் முதல் வாசகராகச் செயல்படுபவர். அத்தியாயங்களை ஒழுங்கமைப்பது, மறுஒழுங்கு செய்வது முக்கியமான பணி. கதையில் ஒரு இடம் மிகப் பிரமாதமாக வருவதற்கு வாய்ப்புள்ள இடமாக இருக்கலாம். ஆனால் அதை எழுத்தாளர் மிகவும் குறைவாக எழுதியிருப்பார். எடிட்டரின் யோசனையை ஏற்றுக்கொண்டால் எழுத்தாளர் அந்த இடத்தை விரிவுபடுத்திக் கொடுப்பார். விவரப்பிழை, மொழிப்பிழை என ஒரு பிரதி பலவகைகளில் எடிட்டரின் பரிசீலனைக்கு உள்ளாகிறது. ஒரு அத்தியாயத்தில் ஒன்றைச் சொல்லிவிட்டு அதற்கு முரண்பாடாக இன்னொரு இடம் பின்னால் வரலாம். பிரதியில் உள்ள காலக்குழப்பத்தை ஒரு எடிட்டரால் சரிசெய்யமுடியும். சுந்தர ராமசாமி எழுதிய ஜே.ஜே.சில குறிப்புகளில் காலம் சார்ந்து சில குழப்பங்கள் இருந்தன. அதை சி.மோகன் தேதியெல்லாம் போட்டு சரி செய்தார். எழுத்தாளர்கள் தாங்கள் எழுதும் செயல்பாட்டின் ஒருபகுதியாக எடிட்டர்களை ஏற்றுக்கொண்டாலொழிய எடிட்டர் ஒழுங்காகச் செயல்படமுடியாது. எடிட்டர் எப்போதுமே எழுத்தாளனின் இடத்தை எடுத்துக்கொள்ளவும் கூடாது. முடியவும் முடியாது. ஒரு எழுத்தாளருக்கு உதவிசெய்வதற்குத் தான் எடிட்டர் இருக்கிறார். இதில் ஈகோவுக்கு வேலையே இல்லை. மிகத் தெளிவாக எழுதும் எழுத்தாளர்கள் என்பவர்கள் மிகவும் சொற்பம். ந.முத்துசாமி, பூமணி போன்றவர்களை என் அனுபவத்தில் சொல்வேன். ஒரு மூலநூலோ, மொழிபெயர்ப்போ எடிட்டர் என்பவர் மிகவும் அத்தியாவசியமானவர். அவர் பிரதி முழுவதும் பரவியிருப்பார். ஆனால் வெளியே தெரியமாட்டார். தெரியவும் கூடாது.  

க்ரியாவின் மொழிபெயர்ப்புகளை அடுத்தடுத்த பதிப்பிலும் தொடர்ந்து மேம்படுத்தியபடி இருக்கிறீர்கள்…அது எத்தனை தூரம் அத்தியாவசியமாக உள்ளது?

மொழிபெயர்ப்பைப் பொருத்தவரை மூலத்திற்கு முடிந்தவரைக்கும் நெருக்கமாக இருக்கவேண்டும்-வாக்கிய அமைப்பு உட்பட. உள்ளடக்கத்தை மட்டும் மொழிமாற்றம் செய்வதல்ல மொழிபெயர்ப்பு. மொழி அமைப்புக்கும் உதவி செய்யவேண்டும். தமிழில் அதுவரை இல்லாமல் ஒரு வாக்கிய அமைப்பு இருக்கலாம். ஒரு மொழிபெயர்ப்பு வழியாக அப்படியான வாக்கிய அமைப்பு சாத்தியம் என்று காண்பிக்க முடிந்தால், தமிழுக்கு ஒரு புதிய சாத்தியத்தைத் திறந்துவிடுகிறோம். காஃப்கா, ஆல்பெர் காம்யூ போன்றவர்களின் படைப்புகளை மொழிபெயர்த்ததை உதாரணமாகச் சொல்லலாம். மொழிபெயர்ப்பைப் பொருத்தவரை நூறு சதவீத முழுமை என்று சொல்லவே முடியாது. தொடர்ந்து அடுத்தடுத்த பதிப்புகளில் சரிசெய்துதான் கொண்டுவருகிறோம். தமிழைப் பொருத்தவரை பதிப்பு என்பதற்கும் மறுஅச்சு என்பதற்கும் வித்தியாசம் இல்லாத சூழல் இருக்கிறது. மறுபதிப்பு என்பது முதல் பதிப்பை விட ஏதோ ஒருவகையில் வித்தியாசமாக இருக்கவேண்டும். 

ஒரு மொழிபெயர்ப்பு தமிழுக்கு வரவேண்டும் என்பதை எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள்?

 என்னுடைய படிப்பு ஒரு அளவுகோல். பல நேரங்களில் நண்பர்கள் மற்றும் எழுத்தாளர்கள் பரிந்துரை செய்வார்கள். அந்நியன், குட்டி இளவரசன், விசாரணை எல்லாம் நாங்கள் ஏற்கனவே வாசித்து தமிழுக்கு வரவேண்டும் என்று முடிவுசெய்தது.    

க்ரியாவின் ஆரம்ப ஆண்டுகளில் நீங்கள் வெளியிட்ட தமிழ் படைப்புகள் சூழலில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியவை. 90களுக்குப் பின்னர் க்ரியாவிலிருந்து முக்கியமான தமிழ் படைப்புகள் அதிகம் வரவில்லை என்ற விமர்சனம் உள்ளதே?

நான் இதுவரை சொல்லாத விஷயத்தை இங்கே பகிர்ந்துகொள்கிறேன். நான் பல எழுத்தாளர்களிடம் புத்தகம் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறேன். அவர்கள் பெயரைச் சொல்ல விரும்பவில்லை. அவர்கள் கொடுக்கவேயில்லை. அவர்களுக்குத் தயக்கம் இருக்கிறது. நான் செயல்படும் விதத்தில் ஏதோ நம்பிக்கையின்மையும் மனத்தடையும் அவர்களுக்கு உள்ளது. புகழ் என்ற இளம் எழுத்தாளரின் சிறுகதைகளை நான் தொடர்ந்து படித்துவந்தேன். அவர் ஒரு நாள் திடீரென்று என்னைத் தேடிவந்து புத்தகம் போடமுடியுமா என்று கேட்டார். நான் கொடுங்கள் என்று சொன்னேன். நான் செயல்படும் முறைக்கு ஈடுகொடுத்தால்தான் ஒரு எழுத்தாளரின் புத்தகத்தை நான் போடமுடியும். ஒருவர் கொடுக்கும் படைப்பை அப்படியே போடவேண்டும் என்று சொன்னால் என்னால் முடியாது. இன்னொரு விஷயம், ஒரு பதிப்பாளர் எல்லா புத்தகங்களையும் வெளியிட முடியாது. உதாரணத்திற்கு ஜெயமோகனின் படைப்புகளைச் சொல்லலாம். அவரது கதைகளில் நிறைய பிரச்சினைகள் உள்ளன. ஆனால் என்னுடன் அவர் உட்கார விரும்புவாரா? தமிழ் இலக்கியத்தைப் பொருத்தவரை அவருக்கு முக்கியமான இடம் உண்டு என்று கருதுகிறேன்.  

க்ரியாவைப் பொருத்தவரை அதிகம் தெரியவராத எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிட வேண்டுமென்பதுதான் எங்கள் பிரதான நோக்கமாக இருந்தது. 

க்ரியாவின் வளர்ச்சி என்பது  அதிகமான புத்தகங்களைப் போட்டுக் கொண்டே இருப்பது மட்டுமல்ல. ஒவ்வொரு புத்தகத்திலும் மொழி பற்றியோ, தொழில்நுட்பம் பற்றியோ தொடர்ந்து கற்றுகொண்டே இருக்கிறோம். ஒவ்வொரு புத்தகமும் எனக்கு அறிவுச் செயல்முறைதான். 1989க்குப் பிறகு நாங்கள் கொண்டுவந்த புத்தகங்களின் தரம் கூடியிருப்பதாகக் கருதுகிறேன். ஆனால் நூறு சதவீதம் சரியான புத்தகம் என்று ஒன்றையும் சொல்லமுடியாது. 92-லிருந்து 2000 வரைக்கும் க்ரியா பதிப்பகத்துக்கு என்னால் முழுமையான ஈடுபாட்டைக் கொடுக்கவில்லை. மொழி அறக்கட்டளை மற்றும் ரோஜா முத்தையா நூலகப் பணிகளுக்காக நிறைய நேரத்தை செலவிட வேண்டியதாகிவிட்டதும் ஒரு காரணம். நான், சங்கரலிங்கம், ஜேம்ஸ் நை எல்லாரும் சேர்ந்துதான் ரோஜா முத்தையா நூலகத்தை உருவாக்கினோம். இப்போது சரித்திரம் முழுமையாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. இருக்கட்டும். 2000-ல் தான் க்ரியா பதிப்பக வேலைகள் மறுபடியும் சூடுபிடிக்கத் தொடங்கியது. மொழி அறக்கட்டளை சார்பில் வெளியான மரபுத்தொடர் அகராதி, மொழி நடைக் கையேடு போன்ற புத்தகங்களை வெளியிட்டோம். ஆனால் அந்த வேலைகள் வெளித்தெரியாதவை. எல்லாவற்றையும் விட மிக முக்கியமான பிரச்சினை என்னவெனில் நிதி வசதிதான். நாற்பது வருடங்கள் ஆகியும் பணவிஷயத்தில் எங்கள் நிலை நித்தியகண்டம், பூரண ஆயுசுதான்.

ஆனால் எந்தப் பதிப்பாளர்களை விடவும் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கொண்டு முன்னே செல்லும் பதிப்பகம் க்ரியாதான். க்ரியா அகராதி, ப்ரெய்லி பதிப்பு வந்துள்ளது. குட்டி இளவரசன் ப்ரெய்லி பதிப்பு வந்துள்ளது. இணையத்தில் வலுவாக எங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறோம். க்ரியா அகராதிக்கு app-ஐ உருவாக்கியிருக்கிறோம்.

அரசு சார்ந்த ஆதரவு க்ரியா அகராதி போன்ற பணிகளுக்கு எப்படி இருக்கிறது?

மத்திய அரசில் ஒரு திட்டம் இருக்கிறது. ஒரு தனிநபர் புத்தகம் எழுதி அவரே வெளியிட விரும்பினால் அந்தப் புத்தகச் செலவில் 80 சதவீதம் தொகையைத் தரும் திட்டத்தை வைத்திருக்கிறது. அந்தத் திட்டத்தின் கீழ் நிறைய அரிய புத்தகங்களும் வந்துள்ளன. அந்த திட்டத்தின் அடிப்படையில்தான் க்ரியா அகராதிக்கு முதலில் பணம் கேட்டு விண்ணப்பித்தேன். ஆனால் கையெழுத்துப் பிரதி தயாராக இருந்தால் தான் பணம் கொடுப்பார்கள். அகராதி போன்று கையெழுத்துப் பிரதியை உருவாக்குவதற்குப் பணம் கிடையாது என்று சொல்லிவிட்டார்கள். நான் அவர்களுக்கு கடிதம் எழுதினேன். ஒரு தனிமனிதர் எப்படி அகராதி வேலையைச் செய்யமுடியும்? பல்கலைக்கழகம் செய்யவேண்டிய பணி அல்லவா என்றெல்லாம் கேட்டார்கள். நான் அவர்கள் செய்யவில்லையே என்று சொன்னேன். உ.வே.சா தனிநபரா, பல்கலைக்கழகமா என்று பதில் அனுப்பினேன்.
அரசாங்கத்தில் நல்ல திட்டங்கள் இருக்கின்றன. அதிகாரிகள் நம்மை நம்மை நம்பமாட்டார்கள். க்ரியாவின் அகராதியைப் பொருத்தவரை ஒரு அதிகாரி விருப்புறுதியுடன் முடிவெடுத்தார். அகராதியின் முதல் பதிப்புக்கு அரசு பணம் கொடுத்தார்கள்.

இப்போது நீங்கள் விரும்பி வெளியிட விரும்பும் எழுத்தாளர் யார்?

க்ரியாவில் நான் வெளியிட வேண்டும் என்று ஆசைப்படுகிற ஒரே எழுத்தாளர் ஷோபாசக்திதான். அவர் பெரிய இலக்கிய ஆற்றல் என்று நினைக்கிறேன்.

நாற்பது வருடங்களை முழுக்க முழுக்க மொழி சார்ந்தும், பதிப்பு சார்ந்தும் கழித்திருக்கிறீர்கள். அதுகுறித்து தற்போது எப்படி உணர்கிறீர்கள்?

மீண்டும் வாழ்வதற்கு வாய்ப்பு கிடைத்தால் இதே வாழ்க்கையை வாழவே விரும்புவேன். அதுபற்றி வருத்தமே கிடையாது. மனமகிழ்ச்சிதான் எனக்கு இருக்கிறது. விழுந்து,  எழுந்து கற்றுக்கொண்டது தான் அதிகம். க்ரியாவின் வளர்ச்சியில் முக்கியமான இரண்டு பேரைச் சொல்ல வேண்டும். ஒன்று ஜெயலட்சுமி, இன்னொருவர் இ.அண்ணாமலை.

நினைவின் குற்றவாளி நகுலன்

தமிழ் நாவல் கதைப் பரப்பானது, கட்டுறுதிமிக்க புறநிலை யதார்த்தத்தால் சாத்தியங்கள் மட்டுப்படுத்தப்பட்டு, பகுத்தறிவின் தீவிர விழிப்பால் கட்ட...