தமிழில் நவீனத்துவம் கேள்விக்கும் மறுபரிசீலனைக்கும் கடும் விமர்சனத்துக்கும் உள்ளான 90களின் காலகட்டத்தில் தலித்தியம், பின்நவீனத்துவம் தொடர்பான எழுத்துகளை தொடர்ந்து புத்தகங்களாக வெளியிட்டது விடியல் பதிப்பகம். அ.மார்க்ஸ் மற்றும் ரவிக்குமாரின் முக்கியமான நூல்கள் விடியல் மூலமாகவே வாசகர்களுக்கு அறிமுகமானது. அ.மார்க்ஸின் நமது மருத்துவ பிரச்னைகள், உடைபடும் புனிதங்கள் போன்றவையும் ரவிக்குமாரின் உரையாடல் தொடர்கிறது, கண்காணிப்பின் அரசியல் போன்ற நூல்களும் தமிழின் நவீனத்துவ சிறுபத்திரிகை அழகியல், அறம் மற்றும் மௌனங்களை கேள்விக்குள்ளாக்கின. எஸ்.வி. ராஜதுரையின் பெரியார் தொகுப்பும் பரந்த அளவில் தாக்கங்களை ஏற்படுத்திய தொகுப்பாகும். ஒடுக்கப்பட்டோர் அரசியல் மற்றும் படைப்புகளை ஒற்றை படையாக அணுகாமல் அதன் சிக்கலான ஊடுபாவுகளை பல்வேறு மூன்றாம் உலக நாடுகளின் கலாச்சார வாழ்வு பின்னணியில் தேர்ந்தெடுத்து வெளியிடுவதற்கு கூர்மையான நுண்ணுணர்வு விடியல் பதிப்பாளர் சிவாவுக்கு தொழிற்பட்டிருக்க வேண்டும். தீவிர மார்க்சியவாதியான விடியில் சிவாவின் ஒருங்கிணைப்பில் வந்துள்ள நூல்களை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, அந்த நூல்கள...