தபால் தந்தி அலுவலர்களுக்கான ஆஸ்பத்திரியில் தாதியாகப் பணியிலிருந்து, டெலிபோன் ஆபரேட்டராக மாறிய என் அம்மாவுக்கு முதல் பணிமாறுதல் திருநெல்வேலியிலிருந்து தூத்துக்குடிக்குக் கிடைத்தது. 1983-ம் ஆண்டு அது. மூன்றாவது வகுப்பு கோடை விடுமுறையில் ரயிலில் நாங்கள் தூத்துக்குடிக்கு இடம்மாறினோம். அப்போது அந்த டிரான்ஸ்பரே மிகப்பெரிய மாறுதலாகப் பார்க்கப்பட்டது. அம்மா, அப்போது என் தங்கையைத் தனது வயிற்றில் சுமந்திருந்தாள். தங்கைதான் பிறக்கப் போகிறது என்று நிச்சயமாகவும் இருந்தாள். என்னை பாசமலர் படம் எல்லாம் பார்க்க வைத்துத் தயார் செய்திருந்தாள். நாங்கள் தூத்துக்குடிக்குக் குடியேறிய பின்னர், காய்கறிக் கடை, பலசரக்குக் கடை, சலூன், பாத்திரக்கடை, பேக்கரி, மின் பொருட்கள் விற்கும் கடை என எல்லா சின்ன, பெரிய கடைகளிலும் கல்லாவில் உட்கார்ந்திருப்பவர் மேல் டி. ஆறுமுகம் பிள்ளை என்ற பெயரில் மாலையிட்ட சதுர கருப்பு வெள்ளைப் புகைப்பட சட்டகத்தில் ஒரு முகத்தை எல்லா இடங்களிலும் பார்த்தேன். இவர் யாரு? எல்லா இடத்திலும் இவர் போட்டோ மாட்டியிருக்காங்களே? என்று அம்மாவிடம் கேட்டேன். அவர் டி. ஏ என்னும் தூத்துக்குடியின் புகழ்பெற