தி ருப்பாகம் என்ற பெயரை இட்டு இணையத்தில் தேடியபோதுதான், அது அழிந்துவரும் பதார்த்தங்களில் ஒன்று என்ற எண்ணம் ஏற்பட்டது. எனக்கு Sweet tooth ஏற்பட்டுள்ளதால் இருக்கலாம். இந்த மழைநாள் மாலையில், எங்கள் ஊர் திருநெல்வேலியின் ஞாபகங்களில் ஒன்றாக இருக்கும் திருப்பாகம் என்னும் இனிப்பை சாப்பிடவேண்டும் என்ற ஆசை தோன்றிவிட்டது. சில ஆசைகள் நிறைவேறிவிடக் கூடியவை. அடை,அவியல், சொதி போன்றவைகளைக் கூட அம்மாவை தொலைபேசியில் அழைத்து, அவள் கண்டபடி ஏசிக்கொண்டே கூறும் பக்குவத்தைக் கவனித்து, நாக்கின் நினைவிலிருக்கும் ருசியையும் மொழிபெயர்த்து கிட்டத்தட்ட திருநெல்வேலியை சென்னையில் உள்ள எங்கள் சமையலறைக்கு சில சமயங்களில் கொண்டுவந்து விடமுடியும். ஆனால் திருப்பாகம் என்னும் அரிய தெய்வீக இனிப்பைச் செய்வது சுலப சாத்தியமில்லை. தெய்வீக இனிப்பு என்று நான் சொல்வது மிகையாக இருக்கலாம். அதன் பெயரில் ஒரு மயக்கம் இருப்பதாக எண்ணலாம். ஆனால் திருப்பாகம் என்னும் பெயர் அந்த இனிப்புக்கு மிகவும் பொருத்தமானதே. ஆனால் திருப்பாகம் என்று சொல்லும்போது, சமயம், கோவில் தொடர்பான ஒரு உணர்வு எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.