Skip to main content

Posts

Showing posts from February, 2022

சிம்பா என்னும் பெண்

    அவள் யார்?  இந்த ஊருக்கு  இந்த நகரத்துக்கு அல்ல  பூமிக்குப் புதியவள் போல்  அவள் தோன்றுகிறாள்  தினசரி காலை நடையில்  தன் வளர்ப்பு நாயை  கழுத்துப்பட்டி இல்லாமல்  சங்கிலி இல்லாமல்  தெருவில் அழைத்து வருகிறாள் அவளைச் சுற்றி அவளுக்குப் பின்னாலும் முன்னாலும் விளையாடியபடி  அது நடந்து போகும். தளர்வான மேல்சட்டை  அல்லது பனியன்  அரைக்கால் சட்டையுடன் ம ரங்கள் அவளுக்கு உவந்தளித்த பரிசு  நிழல் தெரு என்னும்  போதத்தில்  நிதானமாய்  நெஞ்சை விரித்துப் போகும்  அவள் மேல் பழகியது போல தெரு நாய்கள் பாய்ந்தேறுகின்றன கனிவுடன் தழுவி அவர்களுடன் குழவிமொழி பேசுகிறாள் தனது வளர்ப்பையும்  பதற்றமேதுமின்றி  மட்டிறுத்தி  என்னைக் கடக்கிறாள் அவளைப் பார்த்தபிறகு  ப்ரவுனியை  பிணைத்து அழைத்துச் செல்லும்  சங்கிலி  எனக்கு  கனக்கத் தொடங்கிவிட்டது ஒரு நாள்  அவளுடைய பிராணியும்  என் ப்ரவுனியும் சந்திக்க நேர்ந்தது  அவள் வளர்ப்பை  அச்சமேயின்றி அவள்  தெருவில் அழைத்துச் செல்லும்  உத்தியைக் கேட்டேன்  நாம் இழுத்துச் செல்ல வேண்டியதில்லை  அவர்களுக்குத் தங்கள் வீடு தெரியும்  திரும்ப வந்துவிடும் என்றாள்  உங்கள் பெயர் என்னவென்று க

பிறப்பின் கதை

பிறக்கும் கதையைத் தான் நான் துவக்கத்திலிருந்து பாடிக் கொண்டிருக்கிறேன்  மிகச் சிறியதாகப் பிறந்த பலவற்றின் கதைகள் அவை அன்பின் முலையிலிருந்து  அன்பற்ற முலை சந்தோஷத்தின் முலையிலிருந்து  துக்கத்தின் முலை கூடலின் முலையிலிருந்து  விடைதரும் பிரிவின் முலை அத்தனையும் பிறக்கிறது இங்கே ஒன்றைத் தொட்டால் இரண்டாகப் பிறக்காத எதையுமே நான் இதுவரை கேட்டதேயில்லை பேத அபேத!

அனாதை

  பெரும் மோதல்கள் யுத்த பிரகடனங்கள்  குரைப்புகளுக்கிடையே ஒரு நாய் தன் குட்டியை தரையில் இட்டுவிடுகிறது நேற்றோ முந்தைய தினமோ பிறந்த அது தன் குட்டி குண்டு பாதங்களால் நடைபயிலத் தொடங்குகிறது புலியாக பன்றியாக பூனையாக குதிரையாக அது பயிலத் தொடங்கி எல்லாரையும் உள்ளே சேர்த்துக் கொண்டு அந்தக் குட்டி ஒரு நாயாக வேண்டும் அதை நானும் நீங்களும் அனுமதிக்க வேண்டும் அதுவரையில் நிர்க்கதியின் குருட்டுச் சந்தில் நின்றுகொண்டு அந்த அம்மா தரையில் விழுந்த விட்ட தன் குட்டியின்  வால் தொடங்கும் கணுவில் நாக்கால் நக்கிக் கொடுக்கும் போது அம்மா அந்தக் குழந்தையுடன் சேர்ந்து நானும் அனாதை ஆகிவிடுகிறேன். (முஸ்கானுக்கு)

நீ நான் சூரியன்

 காலை எட்டரை மணி அகாலத்தில் பேக்கரிக்கு வந்து பிரட் ஆம்லெட் சாப்பிடும் யுவதிக்கு கடையில் ஒதுங்குவதற்கு கீற்றளவு நிழல் இல்லை அந்தப் பொன் சுடரும் முகத்தின் சிறுபருக்களில் செவ்வரி ஏறியிருக்கும் அவளுக்கு கூரை தர வக்கில்லை அம்மண வெயிலால் அவசரமாய் வந்து அடிக்கிறது விவஸ்தை கெட்ட சூரியன் அவளை நிதானமாய் நான் எங்கிருந்து பார்க்க இயலும்   அதற்கு இந்த உலகத்தில் இப்போது ஓர் இடம் இல்லை ஒரு நிழல் இல்லை ஒரு மலை இல்லை ஒரு மரம் இல்லை.

கஸல் - ஆஹா சாகித் அலி

இழப்பின் மொழியாக எஞ்சியிருக்கும் ஒரே மொழி அரபிதான் இந்த வார்த்தைகள் சொல்லப்பட்டது வேறுமொழியில் அரபியில் அல்ல. மூதாதைகளே எனக்காக ஒரு காலி மனையை விட்டுச் சென்றிருக்கிறீர்கள் குடும்பத்து மையவாடியில் நான் ஏன் உங்கள் கண்களைப் பார்த்து பிரார்த்தனை செய்யவேண்டும் அரபியில் மஜ்னு கிழிந்துபோன உடைகளுடன் இன்னமும் தேம்புகிறான் அவனுடைய லைலாவுக்காக ஐயோ இது பாலையின் பைத்தியம் கிறுக்கான அவனது அரபியில் யார் இஸ்மயிலை செவிமடுக்கிறார்கள்? இப்போதும் அவன் உரத்து வேண்டுகிறான் ஆபிரகாமே, வாள்களை கீழே எறி ஒரு துதி படி அரபியில் நாடுகடத்தப்பட்டிருந்த நிலையில் முகமது தார்விஷ் உலகத்துக்கு எழுதுகிறார் நீங்கள் எல்லோரும் நடுவே நழுவிவிடுவீர்கள் ஓடி மறையும் சொற்கள் கொண்ட அரபியில் நெருப்பு மனிதர்களும் நெருப்பு கற்களும் தோன்றுமென்று குரான் தீர்க்கதரிசனம் உரைத்தது. ஆம் இது இப்போது நடந்துவிட்டது இதுவும் சொல்லப்பட்டுவிட்டது அரபியில். லோர்க்கா இறந்தபோது பால்கனிகளை அவர்கள் திறந்தபடி விட்டார்கள் லோர்க்காவின் கஸீடா பாடல்களை அடிவானத்தில் முடிச்சுகளாகப் பின்னினர் அரபியில். டியிர்யாசினில் இருந்த வீடுகள் இன்று அடர்ந்த காடுக

நட்சத்திரங்கள் - ஆஹா ஷாகித் அலி

இரவின் முகத்திரையின் வழியாக அவை தொடர்ந்து கசிகின்றன இப்போது தான் பிறந்த விண்வெளிக்கூட்ட சிசுக்களிலிருந்து நட்சத்திரங்கள் அழத் தொடங்குகின்றன. கிரணம் நிகழ்ந்த பிறகு உதிரி நட்சத்திரங்கள் எதுவும் இருப்பதில்லை நட்சத்திரங்களே, நீங்கள் எப்படி நொய்மையாக இருக்க முடியும்? வைகறை வரை என்னுடன் விழித்திருக்கும் உங்களுக்கு நான் மிகவும் நன்றிக்கடன்பட்டவன் உங்களுடன் நானும் உறங்கத் தயாராக இருக்கிறேன் நட்சத்திரங்களே! கடவுள் உன்னில் சூரியனின் தீக்கதிர்களை விதைக்கிறாரெனில் உன் காரணமாகத்தான் முழு இரவும் இந்த உலகம் நட்சத்திரங்களை அறுவடை செய்யப் போகிறது ஷாகித்.  

பனிமனிதர்கள் - ஆஹா சாகித் அலி

எனது மூதாதை, இமாலயப் பனியின் மனிதன் திமிங்கில எலும்புகள் உள்ள பையைச் சுமந்தபடி சாமர்கண்டிலிருந்து காஷ்மீருக்கு வந்தவன் : கடலில் நடந்த ஈமச்சடங்குகளிலிருந்து பெற்ற குலசம்பத்துகள். பனிப்பாறைகளிலிருந்து செதுக்கப்பட்டது அவனது எலும்புக்கூடு அவனது சுவாசமோ ஆர்க்டிக் தனது அணைப்பில் பெண்களை உறையவைத்தான், அவனது மனைவி தண்ணீராக உருகினாள், அவளது முதுமை துல்லியமான ஆவியாதல். அவனது எலும்புகூடு அவன் மகனிடமிருந்து பேரனுக்குத் தரப்பட்டது இந்தக் குலசம்பத்து எனது சருமத்துக்கு அடியில். தலைமுறை தலைமுறையாக வரும் பனிமனிதர்கள் எனது தண்டுவடத்தில் எனது சாளரத்தை ஒவ்வோர் ஆண்டும் தட்டுகின்றனர், அவர்களது குரல்கள் பனிக்குள் கிசுகிசுக்கின்றன.   அவர்கள் குளிருக்கு வெளியே என்னை அனுமதிக்கவே மாட்டார்கள் அத்துடன் எனக்கு நானே உத்தரவாதம் அளித்துக்கொள்கிறேன் கடைசிப் பனிமனிதனாகக் கூட நான் இருக்கலாம்  அவர்களது உருகும் தோள்களில் அமர்ந்து வசந்தத்துக்குள் சவாரி செய்வேன்.

கவிதை என்பது

கவிதை என்பது செத்த குரங்கின் வால் ஆடுவது அல்லது ஆட்டுவது. கவிதை என்பது தட்டில் உள்ள மீனின் கண்கள் ஒளிர்வது அல்லது அதன் கண்களை ஒளிர வைப்பது.