பள்ளிப்பருவத்திலிருந்து எனது முதல் தொகுதி வருவதற்கு முந்தைய காலம் வரையில் என்னைப் பாதித்த கவிதைகளை, அது பாதித்திருந்த போது இருந்த உணர்வுகளைச் சென்று பார்ப்பதுதான் 'நான் பிறந்த க-வி-தை' தொடரின் நோக்கம். அத்துடன் குறிப்பிட்ட கவிதை, கவிஞர் சார்ந்து இப்போதிருக்கும் எனது எண்ணங்களையும் ஒவ்வொரு கட்டுரையிலும் பகிர்ந்துகொள்வதாகவும் திட்டமிருந்தது. குறுந்தொகை கவிதை பற்றி முதல் கட்டுரையை எழுதி முடித்திருந்த நிலையில், நண்பர் சி. மோகன், பாதித்த கவிதையைப் பற்றி எழுதுவதை விட, பாதித்த கவிதைகளை வாசித்தபோது இருந்த மனநிலையையும் மூட்டத்தையும் சூழலையும் சென்று பார்த்து, மொழிக்குள் இழுத்துவர முடிந்தால் வித்தியாசமானதாக அமையும் என்று குறிப்பிடத்தக்க அளவிலான ஒரு தலையீட்டை நிகழ்த்தினார். தலைப்பில் ‘நான் பிறந்த கவிதை’யை ‘நான் பிறந்த க-வி-தை’ என்று மாற்றியவர் கவிஞர் தேவதச்சன். சி. மோகன் சொன்ன அடிப்படையை மனத்தில் கொண்டு அடுத்தடுத்த கட்டுரைகள் எழுதப்பட்டன. குறுந்தொகையிலிருந்து இத்தொடரை அம்ருதா மாத இதழில் பெருந்தொற்றுக்குச் சற்று முன்னர் தொடங்கினேன். இரண்டாவது அலைக்குப் பிறகு முடித்தேன். நவீன கவிதைகளை வாசிக