‘கணத்தின் மொக்கவிழ்ந்தால் காலாதீதம்’ என்பது பிரமிளின் கவிதை வரி. அந்தக் கண்டுபிடிப்பை கவிதைக் கணங்களாக நிகழ்த்துபவை சஹானாவின் கவிதைகள். இறந்த உலகங்கள், இறந்த அனுபவங்கள் மோதிக் கொண்டேயிருக்கும் சித்தத்தைக் கிழித்து தற்கணத்தில் வேரூன்ற சஹானா சொல்லும் தேவதைக் கதைகளாக அவரது கவிதைகள் இருக்கின்றன. தனக்கும் தன்னைச் சுற்றியுள்ள இயற்கைக்கும் பேதமின்மையை உணரும் புள்ளிகளில் தன் கவிதைகளை எழுதிப் பார்த்துள்ளார் சஹானா. பள்ளி பீரியட் இடைவெளியில் கழிப்பறை சுவரில் தேங்கியிருக்கும் நீரில் கும்மாளமிடும் குருவியை தன் மனதில் பாதியாக சஹானாவுக்குப் பார்க்கத் தெரிகிறது. இயல்பாகவே கற்பனைக்கும் நிஜத்துக்குமான திரைச்சீலை கிழிந்த உலகம் சஹானாவுடையது. “சிறு துளியில் எனது குடம் பொங்கி வழிகிறது’ என்னும் அறிதல் அப்படித்தான் சத்தியமாகிறது. இந்த உலகில் எங்கோ ஓரிடத்தில் சிறுதுளியில் பொங்கும் குடத்தின் சாத்திய இருப்பை அந்தக் கவிதை உறுதி செய்துவிடுகிறது. குழந்தை தாய்க்குப் பாலூட்டுகிறது என்ற வரியும் உண்மையாகும் இடம் அது. சம்பிரதாயப் பள்ளிப் படிப்பிலிருந்து வெளியேறி விட்ட சஹானா குழந்தை, ஞானி...