தமிழில்: ஷங்கர்ராமசுப்ரமணியன் 1960 க்கு முன்பு ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் சைக்கோ வெளிவரும்வரை யாரும் குளியலறை ஷவரில் குளிப்பதற்கு அச்சப்பட்டிருக்கவே மாட்டார்கள். அன்றாட குளியல் சடங்கை, கொலைக்கான, சரியான பின்னணியாக சைக்கோ திரைப்படம் மாற்றியது. அந்த திரைப்படம் வெளியாகி ஐம்பது வருடங்கள் ஆகிவிட்டாலும், அதே பாணியிலான எண்ணற்ற திரைப்படங்களை நாம் பார்த்துவிட்டாலும் ஒவ்வொரு சினிமா ரசிகனின் பிரக்ஞையிலும் சைக்கோவின் தாக்கம் இன்னும் மறையாமல் இருக்கிறது. சைக்கோ திரைப்படம் பற்றிய எனது முதல் நினைவு இதுதான். வீட்டிலும் பள்ளியிலும் நான் செல்லும் அனைத்து இடங்களிலும் சைக்கோ பற்றியே பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் அத்திரைப்படம் பார்த்த கிளர்ச்சியுடன், யாருக்காவது தனியாகப் பார்ப்பதற்கு துணிச்சல் உண்டா என்று ஒருவருக்கொருவர் சவால் விட்டுக்கொண்டிருந்தனர். சைக்கோ வெளிவந்து 22 வருடங்களுக்குப் பிறகு சைக்கோவின் இரண்டாம் பாகத்திற்கான சுவரொட்டியைப் பார்த்தேன். அந்த சுவரோட்டியில் சைக்கோவில் வரும் வீடு ஒளிநிழலில் இருக்குமாறு அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. தலைப்பின் கீழ் துணைத்தலைப்பாக, "...