சென்னையின் பெருமிதங்களில் ஒருவர் ரோமுலஸ் விட்டேகர். பிறப்பால் அமெரிக்கர்; மனதால் தமிழர். தனது நான்கு வயதிலேயே பாம்புகள் மீது ஈடுபாடு கொண்ட ரோமுலஸ், சென்னை கிண்டியில் உள்ள பாம்புப் பண்ணை, கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள முதலைப் பண்ணை, ராஜநாகங்களை ஆராயும் ஆகும்பே மழைக்காடுகள் ஆராய்ச்சி மையம், இருளர் கூட்டுறவு அமைப்பு போன்ற முக்கியமான அமைப்புகளை உருவாக்கியவர். 77 வயதில் சென்னைக்கு வெளியே செங்கல்பட்டில் ஒரு சிறிய வனம் சூழ்ந்த வீட்டில் இருளர் குடியிருப்பு மக்களுக்கு நெருக்கமாக வாழ்ந்துவருகிறார். இவரது மனைவி ஜானகி லெனின், கானுயிர்கள் பற்றி சுவாரஸ்யமான கட்டுரைகளையும் புத்தகங்களையும் எழுதியவர். மனிதர்கள் ஆதிகாலம் தொட்டு அச்சத்துடனேயே பார்க்கும் பாம்புகளுடனான நட்பு உங்களுக்குக் குழந்தைப் பருவத்திலேயே தொடங்கிவிட்டது. அதற்கான பின்னணி என்ன? அதிர்ஷ்டவசமாக எனக்குக் கிடைத்த அம்மா டோரிஸ் நோர்டன் சட்டோபாத்யாய, எனது ஆர்வத்தை ஊக்குவித்தார். பெரும்பாலான அம்மாக்கள் அப்படிக் கிடையாது. நியூயார்க்கில் நாங்கள் வசித்தபோது, விஷமில்லா அமெரிக்க கார்டன் வகை பாம்பை வீட்டுக்குக் கொண்டுவந்தேன். ‘வாவ், எவ்வளவு அழகு’ ...