ஷங்கர்ராமசுப்ரமணியன் மிகச் சமீபத்தில்தான் என் இடத்துக்குள் பூனைகள் வரத் தொடங்கியுள்ளன. ஒருவரின் தனியிடத்துக்குள் வரும்போதுதான் பொருட்கள், உயிர்கள், நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவமும் உண்டாகிறது. பூனைகள் என்று பன்மையில் சொன்னேன். ஆனால் உள்ளடக்கம் ஒரு பூனைதான். ஒரு பூனை வழியாகப் பல பூனைகள் அங்கிங்கெனாதபடி பரவிவிட்டன. அந்த ஒரு பூனை முதலில் என் மகளின் வழியாகத்தான் என்னிடம் வந்தது. நான் வழக்கமாக எல்லாவற்றையும் உள்ளே அனுமதிப்பதற்கு எதிர்ப்பதைப் போலவே அதையும் வேண்டாம் என்றேன். அவள் அதற்கு உணவிட்டாள். சீராட்டினாள். ஒருகட்டத்தில் நானும் அது வரும் வேளைகளில் கவனிக்கத் தொடங்கினேன். அது தெருப்பூனைதான். அதிகாலை நடைப்பயிற்சிக்குக் கதவைத் திறக்கும்போது அது வாலை உயர்த்தியபடி கால்களைத் தேய்த்துக்கொண்டு உள்ளே வருவதையும் வாசல் திரைச்சீலையின் அடிப்பாகத்துடன் சண்டை போடுவதையும் ரசிக்கவும் ஆரம்பித்தேன். அதற்குப் பால், பிஸ்கெட்டுடன் பால்கோவாவும் சுவைக்கத் தந்தேன். அதன் முகம் என்னில் கனியத் தொடங்கியபோது என் கருப்பை கசிய ஆரம்பித்திருக்க வேண்டும். நான் பேணிவரும் பாதுகாப்புக் கவசங்களை எல்லாம் விரை