ஆனந்தின் ‘நான் காணாமல் போகும் கதை’- யை மீண்டும் மீண்டும் படிக்கும்போதும் அனுபவம், புரிதலை வேறு வேறு பக்கங்களிலிருந்து திறக்கும் படைப்பாகும். இந்தக் கதையில் வரும் சொல்லிக்கு பிரதேச ரீதியான மொழி ரீதியான பண்பாட்டு ரீதியான பால் ரீதியான சில அடையாளங்களைச் சொல்ல முடியும். என்றாலும், இதுவரை நான் படித்த புனைவுகளில் பார்த்த பாத்திரங்கள் கொள்ளும் ரூபத்தை ஆளுமையை ஒப்பிடும்போது இந்தக் கதையில் வரும் சொல்லிக்கு நபர்த்தன்மைகள் மிகவும் குறைவு. புலப்படும் அந்தச் சொல்லியின் உடல், ஆளுமை அம்சங்களைக் கொஞ்சமாகக் குறைத்தால் போதும்; அந்த நபர் நானாகவும் நீங்களாகவும் பிரதிபலித்துவிடுவார். பகலும் இரவும் சதா; ஒளியும் இருளும் சதா; கனவும் நனவும் சதாவென பேதமில்லாத வாழ்வு அவனுடையது. நனவிலிருந்து கனவுக்கு; மெய்யிலிருந்து மெய்சாராத இடத்துக்கு; வெளித்தெரிவதிலிருந்து தெரியாத இடத்துக்குஅறியப்பட்ட சம்பவங்களிலிருந்து அறியப்படாததின் சம்பவமின்மையை நோக்கி அவனது போக்கும் வரத்தும் நிகழ்கிறது. கிடைமட்ட, தரைத்தளப் புழக்கத்திலிருந்து செங்குத்து அனுபவங்களைத் தரும் மலைகளுக்குத் தொடர்ந்து பயணித்தபடி அவன் இருக்கிறான். ...