ஷங்கர் எழுத்தாளர் அசோகமித்திரனின் படைப்புகள் குறித்த கருத்தரங்க அறிவிப்பின் பின்னணியில் முகநூலில் அசோகமித்திரன் ‘இனவாதி’ என்று விமர்சிக்கப்பட்டார். அதையொட்டி வெவ்வேறு கருத்துகள் சராமாரியாகவும், அவசரமாகவும் பரிமாறப்பட்டன. வார்த்தை அம்புகள் குவிந்த குருட்சேத்திரத்தில் வழக்கம்போல் அசோகமித்திரனின் படைப்புகள், அவரது பெரும்பாலான கதாபாத்திரங்களைப் போலவே ஓரத்தில் ஒதுங்கி நின்று தேமேயென்று பார்த்துக்கொண்டிருந்தன. அசோகமித்திரன் ‘இனவாதி’ என்பதற்கு அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு அவுட்லுக் ஆங்கிலப் பத்திரிக்கையில் தமிழகத்தில் பிராமணர்களின் நிலைகுறித்து அவர் சொல்லியிருந்த அபிப்ராயங்கள் சாட்சியமாகக் காட்டப்பட்டன. இத்தனை வாதப் பிரதிவாதங்களுக்கு நடுவில் 16, ஜூன் தேதியிட்ட குங்குமம் வார இதழில் அவர் எழுதிவரும் தொடர்பத்தி கண்ணில் பட்டது. 70 ஆண்டுகளுக்கு முன்பு வந்த சிட்டிசன் கேன் படத்தைப் பற்றியும் அப்படம் பேசிய விஷயங்கள் இன்றைய இந்தியச் சூழலுக்குப் பொருத்தமாக இருப்பதையும் பற்றி எழுதியிருந்தார். ஜனநாயகம், தேர்தல்கள், ஊடகங்களுக்கு இடையிலான உறவுகள் பற்றியும் சமீபத்தில் நடந்து ம...