உலகம் கொண்டாடிய ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவல் வழியாகவோ, நோபல் பரிசின் வழியாக அறியப்படுவதை விடவோ பத்திரிகையாளனாக அறியப்படுவதையே கூடுதல் பெருமையாகக் கருதிய காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸ் எழுதிய இதழியல் கட்டுரைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுப்பு ‘தி ஸ்காண்டல் ஆஃப் தி செஞ்சுரி அண்டு அதர் ரைடிங்க்ஸ்’. 1982-ல் ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலுக்காக நோபல் பரிசை வாங்கி மாய யதார்த்தம் என்பதை உலகம் முழுக்கப் பிரபலமாக்கிய மார்க்வெஸ், அற்புதமான விஷயங்களையும் சாதாரண தொனியில் சொல்லக்கூடிய புனைகதைத் திறனை அவரது பாட்டியிடமிருந்து எடுத்துக்கொண்டதாகச் சொல்பவர். இந்தக் கட்டுரைகளைப் படிக்கும்போது அந்தத் திறனை அவருடைய பத்திரிகைப் பணியும் சேர்ந்தே அவரிடம் மேம்படுத்தியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஒரு செய்திக் கட்டுரையும் ஒரு சிறுகதையும் எந்த இடத்தில் பிரிகின்றன என்பதையும் பத்திரிகையாளராக மறுவரையறை செய்திருக்கிறார் மார்க்வெஸ். எண்கள், துல்லியமான அவதானிப்பு, விவரங்கள், அன்றாட எதார்த்தத்தினூடான இயல்பான ஊடாட்டம், நகைச்சுவை, மனத்தடையின்மையோடு தன் பத்திரிகை கட்டுரைகளைச் சிறந்த இலக்கிய அனுபவமாக...