ஷங்கர்ராமசுப்ரமணியன் எச்பிஓ தொலைக்காட்சியில் சமீபத்தில் வெளியான ‘ செர்னோபில் ’, முட்டாள்பெட்டி என்ற அடைமொழியிலிருந்தும் , அதன் எல்லையற்ற விடலைத்தனத்திலிருந்தும் அகன்று , தொலைக்காட்சி முதிர்ச்சியடைந்துள்ளதைத் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறது ; அந்த ஊடகத்தின் வரையறைகள் , எல்லைகளை அநாயாசமாக விஸ்தரிக்க இயலுமென்ற அடையாளமாக மாறியுள்ளது . சினிமாவின் அடுத்த பரிணாமம் என்ன என்ற கேள்விக்கான பதிலை அளித்துள்ளது . மனித குல வரலாற்றிலேயே பெரும் சேதத்தையும் அழிவையும் ஏற்படுத்திய செர்னோபில் அணு உலை விபத்துக்குக் காரணமாக அரசும், அதிகாரிகளும், அதிகாரத்துவமும் உண்மைகள் என்ற பெயரில் ஒவ்வொரு நிலையிலும் தெரிவித்த பொய்களைப் பற்றி செர்னோபில் குறுந்தொடர் பேசுகிறது. மனித குலம் சந்தித்த ஒரு பேரழிவு விபத்தைக் களனாகக் கொண்டு இயக்குநர் ஜோஹன் ரென்க் நிகழ்த்தியிருக்கும் மாபெரும் மனித நாடகம் இது . உண்மையைக் குறைத்துச் சொல்வது , உண்மையை நீர்க்கச் சொல்வது , உண்மையைத் தள்ளிப்போடுவது , உண்மையைக் கிடப்பில் போடுவது , உண்மையை ரகசியங்களென்று பதுக்குவது , வேறு வழ