Saturday, 25 February 2012

தமிழக முதலமைச்சருக்கு சுப.உதயகுமாரின் பகிரங்க கடிதம்அன்புள்ள அம்மா,

வணக்கம்.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும் மதிப்பளித்து தாங்கள் நடத்திவரும் நல்லாட்சிக்கும் எனது மனமார்ந்த நன்றியினை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன். கூடங்குளம் அணுமின்நிலையப் பிரச்னையில் 2001,செப்டம்பர் மாதம் எங்களை அழைத்து, நேரில் சந்தித்து, எங்கள் கருத்துகளை கரிசனத்தோடு கேட்டு, எங்கள் மக்களின் அச்சங்கள்,பயங்களை அகற்றும்வரை, அணு மின்நிலைய வேலைகளை நிறுத்திவைக்கச் சொல்லி அமைச்சரவையைக் கூட்டி ஒரு தீர்மானமும் நிறைவேற்றி, உங்களில் ஒருத்தியாக இருப்பேன் என்றும் உள்ளூர் மக்களின் திருப்தி எனக்கும் எனது அரசுக்கும் முக்கியம் என்றும் உறுதியளித்தீர்கள். எங்கள் மக்கள் தங்கள் கருத்துகளை சனநாயக முறையில் அறவழியில் பதிவுசெய்ய அனுமதித்தீர்கள்.இவற்றுக்கெல்லாம் நாங்கள் எங்கள் ஆழமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

கூடங்குளம் அணுமின் திட்டம் மத்திய அரசின் திட்டமென்பதும், எங்கள் போராட்டம் மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் என்பதும் அனைவருக்கும் தெரியும். அணுசக்தி பிரச்சனையில் தங்களின் தெளிவான நிலைப்பாட்டை நாடறியும். 2007 சூன் 26 அன்று அமெரிக்க அணுசக்தி கப்பல் யுஎஸ்எஸ் நிமிட்ஸ், சென்னை துறைமுகத்துக்கு வந்தபோது, இதை கடுமையாக எதிர்த்தீர்கள். அதேபோன்று இந்தியா-அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தத்தையும் அது ஏற்புடையதல்ல என்று அறிவித்து தீர்க்கதரிசனத்தோடு அதை எதிர்த்தீர்கள்.


 அணுசக்தியின் தீமைகள்,கடுமையான விளைவுகள் பற்றி நன்கு உணர்ந்தவர்கள் நீங்கள். இந்தப் பின்னணியில் தான் தங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.
எங்கள் போராட்டம் தொடங்கி, தங்களை நேரில் சந்தித்த பிறகு பல எதிர்வினைகள், நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. அவை பற்றிய தன்னிலை விளக்கங்களை அளித்திட தயவுசெய்து என்னை என்னை அனுமதியுங்கள்.

1.1980 களிலிருந்து கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டங்களை பலர் தலைமையிலே நடத்திக் கொண்டு வருகிறோம். 1988 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி அடிக்கல் நாட்ட வரவிருந்த போது, மக்கள் போராட்டங்களால் அது கைவிடப்பட்டது. 1988 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் நாள் கன்னியாகுமரியில் நடந்த மாபெரும் பேரணியில் போலீஸ் துப்பாக்கிச்சூடு நடந்து, ஆறு பேர் குண்டடிபட்டனர். தொடக்கத்திலிருந்து இன்றுவரை பல நூறு தெருமுனைப் பிரச்சாரங்கள், பொதுக்கூட்டங்கள், உண்ணாவிரதங்கள், ஆர்ப்பாட்டங்கள், மாநாடுகள், போராட்டங்கள் நடத்தி வருகிறோம். இவையனைத்தும் ஊடகங்களிலேயே பதிவுசெய்யப்பட்டுள்ளன.
தங்களிடம் நான் நேரில் விளக்கியது போன்று, எங்கள் போராட்டத்திற்கும் திமுகவுக்கோ வேறு எந்தக் கட்சிக்குமோ எந்த தொடர்பும் கிடையாது. எனது தந்தையார் அறிஞர் அண்ணா காலத்திலிருந்து கொள்கைக்காக திமுகவில் இருந்தவர். அந்தக் கட்சி ஒரு குடும்பத்துக்காக இயங்க ஆரம்பித்த பிறகு முற்றிலுமாக ஒதுங்கிக் கொண்டவர். திமுக எம்பி கனிமொழி தனது பாராளுமன்றக் கன்னிப் பேச்சில் அணுசக்தியை ஆதரித்துப் பேசியபோது,. எங்கள் இயக்கம் அதைக் கண்டித்து அதை விமர்சித்து 'காலச்சுவடு' இதழிலே நான் கட்டுரை எழுதினேன். எனக்கோ, எங்கள் போராட்டக் குழு உறுப்பினர்களுக்கோ அரசியல் ஆசைகளோ, எம்எல்ஏ, எம்பி போன்ற பதவிகள் மீது மோகமோ கடுகளவும் கிடையாது என்பதை தங்களுக்குத் தெளிவாக தெரிவிக்க விரும்புகிறேன்.

2.எங்கள் போராட்டத்திற்கு எந்த வெளிநாட்டிலிருந்தோ, பன்னாட்டு, இந்திய தொண்டு நிறுவனங்களிலிருந்தோ, தனியார், கட்சிகளிடமிருந்தோ எந்தப் பணமோ வேறு உதவிகளோ வந்ததுமில்லை. இப்போது வரவுமில்லை. எந்த சாதி, மத நிறுவனங்களிடமிருந்தும் நாங்கள் எந்த உதவியையும் பெறவில்லை. எங்கள் மீனவ மக்களும், விவசாயிகளும், வர்த்தகர்களும், தொழிலாளர்களும், பீடி சுற்றும் பெண்களும் தருகின்ற சிறிய நன்கொடைகளை வைத்து மிகச் சிக்கனமாக செலவு செய்து காந்திய வழியில் எளிமையாகப் போராடி வருகிறோம். பிற ஊர்களில் இருந்து வருபவர்கள் போக்குவரத்து செலவுகளை அவர்களே கவனித்துக் கொள்கிறார்கள். போராட்டங்களுக்கு வருபவர்களுக்கு வெறும் தண்ணீர் மட்டுமே நாங்கள் கொடுக்கிறோம். இது முழு உண்மை.

  1. நான் 1989 ஆகஸ்ட் முதல் 2001 வரை அமெரிக்காவில் எம்.ஏ மற்றும் பிஎச்டி பட்டப்படிப்புகள் படித்துவந்தேன். பின்னர் மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் ஆய்வாளராக, ஆசிரியராகப் பணியாற்றினேன். எனது மனைவியும் நானும் அன்றும் இன்றும் என்றும் இந்தியக் குடிமக்களாகவே இருந்து வருகிறோம். எங்கள் குழந்தைகள் அமெரிக்காவில் பிறந்ததால் அந்நாட்டு குடியுரிமையை இயற்கையாகவே பெற்றாலும் அவர்கள் தமிழ்மண்ணில் தமிழர்களாக இந்தியர்களாக வாழவேண்டுமென விரும்பியதால் எங்கள் 2 வயது, மூன்று மாதக் குழந்தைகளை எடுத்துக்கொண்டு இந்தியாவுக்கு வந்தோம். அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தியிருக்கின்ற எனக்கு அமெரிக்க அரசுடனோ அதன் நிறுவனங்களோடா எந்தவிதமான தொடர்போ கிடையாது. அந்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் சிலவற்றுக்கு வருகைதரு பேராசிரியாராக மட்டுமே போய் வருகிறேன்.
  1. போராடுகின்ற எங்கள் மக்களில் இந்துக்களும், கிறித்தவர்களும், முஸ்லிம்களும் இருக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட மதத்தினரோ, சாதியினரோ நடத்துகின்ற போராட்டமல்ல இது. தமிழ் மக்களாக எங்கள் வாழ்வுரிமைகளுக்காக, வாழ்வாதாரத்திற்காக நடத்துகின்ற போராட்டம். நாங்கள் எங்களைத் தமிழராக இந்தியராக மனிதர்களாக மட்டுமே பார்க்கிறோம்.
  2. கூடங்குளம் அணுமின்நிலையம், எங்கள் பகுதி மக்களின் கருத்துகளைக் கேட்காமல், எந்தவிதமான உண்மைத் தகவல்களையும் தராமல், சனநாயக மரபுகளுக்கு எதிராக எங்கள் மீது திணிக்கப்பட்ட திட்டம். இதன் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை கூட 23 ஆண்டுப் போராட்டங்களுக்குப் பிறகு இரண்டு மாதங்களுக்கு முன்புதான் பெற்றிருக்கிறோம். இந்தியாவிலுள்ள மிகச்சிறிய அணுமின் நிலையங்களைப் போலல்லாமல் கூடங்குளம் அணு உலைகள் 1000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கின்ற பூதாகரமானவை. ஒரு சிறிய அசம்பாவிதம் கூட பலத்த விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் கொண்டவை. கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்திருக்கின்ற பகுதியில் கடினப்பாறைகள் போதுமான தடிமன் உடையவையாக இல்லை. இந்தப் பகுதியில் பல ஊர்களில் எரிமலைக் குழம்பு கற்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. இந்தப்பகுதி பூமிக்குள் கார்ஸ்ட் குழிகள் என்னும் எபறும் வெற்றிடங்கள் இருக்கின்றன. எங்கள் பகுதி கடலுக்குள் பெரும் வண்டல் குவியங்கள் இருக்கின்றன. அவற்றில் நிலச்சரிவு ஏற்பட்டால் சுனாமி எழும் வாய்ப்பு உள்ளது என்றெல்லாம் நீரியல், நிலவியில், கடலியல் வல்லுனர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இம்மாதிரியான எதிர்தரப்பு வாதங்களை சற்றும் பொருட்படுத்தாது, எங்கள் பகுதிக்கு வந்த டாக்டர் அப்துல் கலாம், மத்திய அரசு நியமித்த டாக்டர் முத்து நாயகம் குழு போன்றோர் கூடங்குளத்தில் நிலநடுக்கம் வராது, சுனாமி வராது, அணுஉலை பாதுகாப்பாக இருக்கிறது என்று வெறுமனே சொல்லிச் செல்கிறார்கள். அணுஉலை பாதுகாப்பு என்பது வெறும் கட்டங்களின் உறுதித்தன்மையைப் பொறுத்தது மட்டுமல்ல. மக்களின் பாதுகாப்பு பற்றி யாரும் சிந்தித்ததாகத் தெரியவில்லை. அணு உலைகளின் பக்கவிளைவுகள், பின் விளைவுகள் பற்றி பேச மறுக்கிறார்கள். அணு உலை சாதாரணமாக இயங்கும்போதே அதிலிருந்து வெளிப்படும் "தினசரி வாடிக்கையான வெளிப்பாடுகள்" காற்றின் மூலமாகவும் நீரின் வழியாகவும் வெளிப்பட்டு மக்களைப் பாதிக்கும்.

ஆண்டுதோறும் 30 டன் அணுக்கழிவுகளை உற்பத்தி செய்து, அவற்றை எங்கள் மண்ணில் சேமித்து வைத்து, 40 முதல் 60 ஆண்டுகள் வரை அணு உலை இயங்கி முடித்தபிறகு, அதனை செயலிழக்கச் செய்து, பல்லாண்டுகள் பாதுகாத்து எங்கள் மண்ணை நீரை காற்றைப் பாதிப்புக்குள்ளாக்கும் அணுசக்தி துறை, கணக்கற்ற அளவு தண்ணீரை மீண்டும் கடலுக்குள் கொட்டும்போது எந்த பின்விளைவும் ஏற்படாது என்று எங்களை நம்பச்சொல்கிறது. மீனவ மக்களின் வாழ்வாதாரமும் உள்நாட்டு மக்களின் உணவுப் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும்.

இத்தகைய பாதுகாப்புக் குறைபாடுகளை நாங்கள் சுட்டிக்காட்டிய பிறகும் முத்துநாயகம் குழு அணு உலை பாதுகாப்பாக இருக்கிறது என்று அறிக்கை அளித்தது. நாங்கள் கேட்ட அடிப்படைத் தகவல்களைத் தரவில்லை. இந்நிலையில் தாங்கள் தலையிட்டு டாக்டர் இனியன் தலைமையில் மாநிலக் குழு ஒன்றை நியமித்தீர்கள். ஆனால் அணுசக்தித் துறையின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான டாக்டர் எம்.ஆர்.சீனிவாசன் அந்தக்குழுவில் இடம்பெற்றது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. தங்கள் மேல் கொண்ட நம்பிக்கையால் அதனையும் ஏற்றுக்கொண்டோம். இனியன் குழு பிப்ரவரி 18 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு மேல் அணு உலைக்குள் போய்விட்டு ஓரிரு மணிநேரங்கள் அங்கே இருந்துவிட்டு வந்தார்கள். பிப்ரவரி 19 ஆம் தேதி மதியம் சுமார் 2 மணி நேரங்கள் எங்கள் போராட்டக் குழுவைச் சார்ந்த ஒன்பது பேரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சந்தித்தார்கள். அவர்களிடம் எங்கள் நிபுணர் குழுவைச் சந்தித்துப் பேசவும், எங்கள் பகுதி கிராமங்களுக்கு அவந்து மக்களைச் சந்தித்து கருத்துகளைக் கேட்கவும் மன்றாடினோம். அவர்கள் உறுதியாக மறுத்துவிட்டனர். சாதாரண, சாமான்ய, அடித்தட்டு மக்களின் அரசு என்று தங்களின் அரசை தாங்கள் கருதிச் சொல்லப்படுகின்ற நிலையில் தாங்கள் நியமித்த குழு எங்கள் மக்களைப் புறந்தள்ளியது வேதனை அளிக்கிறது. இதற்கிடையே இறுதி அறிக்கையை தங்களிடம் தருவதற்கு முன்பே கூடங்குளம் அணு உலைக்கு நற்சான்று வழங்கி தனது நம்பகத்தன்மையை இழந்து விட்டிருக்கிறது இனியன் குழு.

மக்களை அழிக்காது, வாழ்வாதாரங்களை நசுக்காது, எதிர்காலத் தலைமுறையை ஒழிக்காது, மாற்று வழிகளிலே மின்சாரம் தயாரிக்கு தங்களின் திட்டங்களை நாங்கள் வணங்கி வரவேற்கிறோம். ஆனால் அதற்கான உதவிகளைத் தர மறுக்கின்ற மத்திய அரசு, நான்கு தனியார் அனல் மின்நிலையங்களை முடக்கி தமிழகத்தில் மின்வெட்டை அதிகமாக்கி தங்கள் அரசையும், தமிழ் மக்களையும் நெருக்கடிக்குள்ளாக்குவதை நாங்கள் அறிவோம். நாங்கள் மின்சாரத்தை எதிர்க்கவில்லை. நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கவில்லை. ஆனால் மக்கள், குறிப்பாக உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த ஏழை மக்கள் நலமாக வேண்டுமென்று விரும்புகிறோம். அவர்கள் வாழ்வாதாரங்கள் சிதைக்கப்படக்கூடாது என்று விரும்புகிறோம்.
கூடங்குளம் அணுமின்நிலையத்தில் தேவையான மாற்றங்களைச் செய்து இயற்கை எரிவாயு மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிலையங்களாக மாற்ற தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். இதன் மூலம் நாம் செய்த செலவுகள் வீணாகாது. அமெரிக்காவிலுள்ள ஷோர்ஹம் அணுஉலை மக்களுடைய எதிர்ப்பால் இப்படி மாற்றப்பட்டதை தாங்கள் அறிந்திருப்பீர்கள்.

இறுதியாக தமிழகம் புகுஷிமா போன்ற ஓர் அணு உலை விபத்தை தாங்கிக்கொள்ளாது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். 2006 ஆம் ஆஃண்டு மார்ச் மாதம் 19 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு கூடங்குளத்தைச் சுற்றியுள்ள கன்னங்குளம், அஞ்சுகிராமம், அழகப்ப்புரம், மயிலாடி, சுவாமித்தோப்பு போன்ற கிராமங்களில் நில அதிர்வு உண்டானது. கூடங்குளம் அணு உலை இயங்கினால் இப்படி ஒரு நிலநடுக்கம் நடந்தால் 30 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் வாழும் 15 லட்சத்திற்கும் அதிகமான மக்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். 'வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தாறு போலக் கெடும்' என்பது வள்ளுவம்.

அடித்தட்டு மக்களுக்கும் வாழும் உரிமை, வாழ்வாதார உரிமை உண்டெனக் கருதும் செயல்படும் தாங்கள் கூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னையில் நேரடியாகத் தைலயிட்டு எட்டு கோடி தமிழ் மக்களைக் காக்கவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.. இந்தியாவின் அரசியல் கட்சிகள் சிலவும் அரசியல்வாதிகள் பலரும் அமெரிக்காவுக்காக, ரஷியாவுக்காக, பிரான்ஸ் நாட்டுக்காக, பன்னாட்டு நிறுவனங்களுக்காக, இந்திய முதலாளிகளுக்காக, இந்திய முதலாளிகளுக்காக ஏவல் வேலை செய்யும்போது தாங்கள் சாதாரண மக்களுக்காக உழைப்பது ஆறுதலும் நம்பிக்கையும் அளிக்கிறது. தங்கள் தலைமை ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் கிடைக்கட்டும். 120 கோடி மக்களும் வாழ்வின் அடிப்படைத் தேவைகளைப் பெறட்டும். வெள்ளைக்காரர்களின் அடிமை தேசமாக இல்லாமல் உலகுக்கு வழிகாட்டும் ஒப்பற்ற தலைமை தேசமாக மாற்றட்டும் என்று தங்களின் 64 ஆவது பிறந்த நாளில் போராடும் மக்கள் சார்பாக தங்களை வாழ்த்தி விடைபெறுகிறேன். இறையருள் இனிது பயக்கட்டும்!

தங்கள் உண்மையுள்ள

சுப. உதயகுமார்
ஒருங்கிணைப்பாளர்
அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்கம்
இடிந்தகரை- 627104
அலைபேசி: 9865683735

.

Saturday, 18 February 2012

மாக்கல் நந்தி

புகைப்படம்: எம்.கண்ணன்

நெல்லையப்பர் கோவில் மாக்கல் நந்தியை நினைவுதெரிந்த நாளிலிருந்து எனக்குப் பரிச்சயம். அப்படித்தான் இதுவரை எல்லாவற்றையும் பற்றி எனக்கு எண்ணம்
வருஷம் தோறும் மாக்கல் நந்தி வளர்வதாகவும், நந்தியின் வளர்த்தி கூரையைத் தொடும்போது உலகம் அழிந்துவிடும் என்றும் ஒரு பரம்பரைக் கதை உண்டு
வெள்ளைத்துணி பந்தல் சதுரமாய் விரிந்திருக்க மாக்கல் நந்தி, எழுந்து நின்றால் இப்போதே கூரையைத் தொட்டுவிடுவேன் என்பது போல நாக்கை மூக்கிற்குள் துழாவியபடி கம்பீரமாக இப்போதும் - நான் நெல்லையப்பரை விட அழகு என்று சொல்லியபடி- உட்கார்ந்திருக்கிறது
எனது சிறுவயதில் மாக்கல் நந்தி கருப்புவெள்ளையாக இருந்தது,  இப்போது அதன் ஆபரணங்கள் அனைத்தும் பொன்னும் வண்ணமுமாக மினுங்குகின்றன. வண்ணத்தில் கூடுதல் அழகுடன் திருநெல்வேலிக்காரனின் அக்குறும்பையெல்லாம் கண்ணில்காட்டி கருப்பன்துறைக்கு பின்புறம் காட்டி அமர்ந்திருக்கிறது மாக்கல் நந்தி
கூரையின் நிர்வாணம் தெரியும்படி யார் நீக்கினார் அந்த வெள்ளைப்பந்தலை? அது எழுந்து நின்றால் பிரளயம் நிகழும் என்ற பயத்தையும் யார் அகற்றினார்கள்?
 (கருப்பன்துறை- திருநெல்வேலியில் உள்ள பிரதான சுடுகாடு)

Saturday, 11 February 2012

மறதிக்குள் தொலைந்தவள்


ஷங்கர்ராமசுப்ரமணியன்

சமீபத்தில் மீன்களைப் பற்றிப் படித்த ஒரு விநோதச் செய்தி என்னை ஆச்சரியப்படுத்தது. வீடுகளில் கண்ணாடித் தொட்டிகளில் வளர்க்கப்படும் தங்க மீன்கள் பற்றியது அச்செய்தி. தங்க மீன்கள் அதிகபட்ச ஞாபகமறதி கொண்டவை. சுற்றி வரும்போது புதிதாக சந்தித்துக்கொள்ளும் இரண்டு தங்க மீன்கள், அடுத்தமுறை சந்திக்கும் போது பரஸ்பரம் மீண்டும் அறிமுகப்படுத்திக் கொள்ளுமாம். இதைப் படிக்கும்போது அச்செய்தியின் துல்லியம் என்னை மிகவும் நம்பவைத்தது.
தங்க மீனின் மறதியுடன் ஒப்பிடும்போது நாம் பயணிக்கும் சுற்று மிகப்பெரியது. நாம் அலைவது பெரிய வட்டமுடைய மேல்நிலை நீர்தேக்க தொட்டியாய் இருக்கலாம்.
ஒரு நாளில் எத்தனை விஷயங்களை மறதிக்குள் விடுகிறோம். ஞாபகத்தோடு மறதியும் நம்முடன் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த தகவல் யுகத்தில் நாம் நிறைய மறப்பது செய்திகளையும்தான். க்ரைம் செய்தியாளனாக நான் வேலை செய்வதற்கு முன்புவரை குற்றமும், மரணங்களும் வேறொரு உலகத்தில் நடக்கின்றன என்ற எண்ணமே எனக்கு இருந்தது.
நான் க்ரைம் ரிப்போர்டராகவும் இருந்தேன் என்று சொல்லிக்கொள்ளும்படியான குறுகிய காலப்பணியில் சேகரித்த, எல்லாரும் மறந்துபோன, என்னால் மறக்க இயலாத செய்தி இது.
அந்த ஆசையில் போனார் கிழவர் முற்றுப்புள்ளி கிடையாது) குடிபோதையில் கொலையானார்... இந்தஏக தலைப்பில் ஒரு செய்தி படித்த ஞாபகமிருக்கிறதா. உங்களுக்கு ஞாபகம் வைத்துக்கொள்ள ஒரு நியாயமும் இல்லை. ஆனால் இந்த செய்தி இரண்டு நாட்கள் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தலைப்புக்கு பின் உள்ள செய்தியை சேகரித்த க்ரைம் செய்தியாளர்களில் நானும் ஒருவன்.
நகரத்தில் நடக்கும் குற்றங்கள், விபத்துகள், மரணங்கள் குறித்த செய்திக்குறிப்புகள் கமிஷனர் அலுவலகத்தில் தினம் வழங்கப்படும். இந்த செய்திக் குறிப்புகளை சேகரித்து அலுவலகத்திற்கு சென்று கோர்வையாக எழுதிக் கொடுப்பது தான், ஒரு செய்தித்தாள் க்ரைம் ரிப்போர்ட்டரின் வேலை என்று முதலில் நினைத்திருந்தேன்.
கமிஷனர் அலுவலகத்தில் கொடுக்கப்படும் செய்திகள் மிகச்சிறிய பெட்டிச் செய்திகளாகவே இருந்தன. உப்புமா சுவையில்லாமல் இருந்ததால் கணவர் திட்டி மனைவி தற்கொலை... நான் அலுவலகத்திற்கு சென்று கொடுக்கும் இப்படியான செய்திகள் உடனடியாக உதவி ஆசிரியரின் குப்பைத்தொட்டிக்குள் போய்விடும். கமிஷனர் அலுவலகத்தில் புலப்படாத மூலைகளில் செய்திகள் இருக்கின்றன என்ற உண்மை தெரியவருமுன்னே என் இடம் அலுவலகத்தில் நடுங்கத் தொடங்கியிருந்தது.
அப்படியாக தொடர்ந்த நாள் ஒன்றில்தான் குறிப்பிட்ட செய்திக்குறிப்பு எல்லாருக்கும் சூடாக பரிமாறப்பட்டது. பத்துண பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இலங்கையிலிருந்து வந்து காதலனால் ஏமாற்றப்பட்டு, பாலியல் தொழிலாளியாய் மாறிய பெண் ஒருவர் போதையில் செய்த கொலை பற்றியது அச்செய்தி.
இலங்கைப் பெண் செய்யும் தொழில் பற்றி அவரின் வீட்டு உரிமையாளருக்கோ சுற்றியுள்ளவர்களுக்கோ தெரிந்திருக்கவில்லை. இலங்கைப் பெண் தினசரி சாயங்காலம் தன் வாடகை வீட்டிலிருந்து புறப்பட்டு பாரிமுனைக்குச் செல்வார். சென்னை வந்து வேலையை முடித்து விட்டு சொந்த ஊர் திரும்பும் பயணிகள் தான் இவரது வாடிக்கையாளர்கள். சம்பவம் நடந்த அன்று ஐம்பத்தைந்து வயதுடைய முதியவர் வந்து அழைத்திருக்கிறார். பேரம் ஐநூறு ரூபாயில் முடிக்கப்பட்டது. இலங்கைப் பெண் வழக்கமாக செல்லும் விடுதி உட்பட எங்கேயும் இடம் இல்லை. வேறுவழியில்லை . வடபழனியில் அப்பெண் வாடகையில் குடியிருக்கும் வீட்டுக்கே போய்விடலாம் என்று முடிவு செய்தார்கள். ஆட்டோவில் போகும்போதே, வீட்டில் மது அருந்த தீர்மானித்து இருவருக்கும் பியர் வாங்கி வைத்துக்கொண்டார் முதியவர்.
வடபழனி வீட்டில் நள்ளிரவில் சாப்பிட்ட பீர், போதையையும் நெகிழ்ச்சியையும் இருவருக்கும் ஏற்படுத்தியிருந்தது. சந்தோஷத்தின் அடுத்த நிலைக்குச் செல்ல கிழவர் சட்டையைக் கழற்றுகிறார். கிழவரது உடம்பெங்கும் சர்க்கரை புண்கள். இலங்கைப் பெண் அசூயை கொள்கிறாள். இடுப்புக்குக் கீழே செருகப்பட்டுள்ள ரப்பர் குழாயையும் பார்த்ததும் முதியவருடன் ஒத்துழைக்க மறுக்கிறாள். பணத்தையும் போதையையும் வீணாக்க விரும்பாத முதியவர் வற்புறுத்தத் தொடங்குகிறார். ஒரு நிலையில் இலங்கைப் பெண் முதியவரைத் தள்ளி விடுகிறாள். கிழவரின் தலை சுவரில் மோதுகிறது. கிழவர் தரையில் அப்படியே கிடக்கிறார். விபரீதம் புரியாத இலங்கைப் பெண் தூக்கமும், போதையும் ஏற்படுத்திய களைப்பில் உறங்கி விடுகிறார். காலையில் எழுந்து இலங்கைப் பெண் பார்க்கும்போது கிழவர் எழுந்திருக்கவேயில்லை. இரவில் தான் செய்தது ஒரு கொலை என்று அப்போதுதான் அவளுக்கு புரியவருகிறது.

இலங்கைப் பெண் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்த பிறகு கிடைத்த இந்த செய்தி என்னுடைய பணியில் எனக்கு கிடைத்த சூடான செய்தி. இதையாவது சுவாரஸ்யமாக எழுதித்தாருங்கள் என்று எனது உதவி ஆசிரியர் ஆணையிட்டார். எனது மனம் அந்தக் கொலை நடந்த இலங்கைப் பெண்ணின் வீட்டிலேயே சுற்றிக் கொண்டிருந்தது. செய்தியைக் கதையாக சுவையான நிகழ்ச்சிகளின் அடுக்காக மாற்ற முடியாமலேயே உதவி ஆசிரியரின் கணிப்பொறிக்கு அடித்து அனுப்பினேன்.

உதவி ஆசிரியர் என்னைக் கூப்பிட்டுத் தலையில் அடித்துக்கொண்டு, எப்படி இந்த மேட்டரை உப்புச் சப்பில்லாமல் தந்திருக்கீங்க. நீங்க கொடுத்த செய்தியையே எப்படி மாற்றுகிறேன் பாருங்கள் என்று சொல்லி என் கோப்பைத் திறந்தார். என்னுடைய செய்தியை அங்கங்கே தட்டி, அங்கங்கே வளைத்து, உப்பு, மிளகாய் போட்டு நச்சென்று ஒரு தலைப்பையும் வைத்தார். 'அந்த ஆசையில் போனார் கிழவர் (முற்றுப்புள்ளி கிடையாது) குடிபோதையில் கொலையானார்' என்ற தலைப்பில் 5 பத்திகளில் வெளியாகி பரபரப்பையும் ஏற்படுத்தியது.
ஆனால் எனக்கு இந்த செய்தி அந்தரங்கமான சங்கடத்தை ஏற்படுத்தியிருந்தது. ஒரே ஒரு நாளிதழில் மட்டும் அந்தப் பெண்ணின் நேரடி வாக்குமூலம் வெளியாகியிருந்தது. ஸ்டேஷனில் இருக்கும்போது கொடுத்த அந்த வாக்குமூலத்தின் தன்மை இதுதான். "எனக்கு ஏன் இப்படி எல்லாம் நடக்கிறது. இளம்வயசில ஒருத்தன நம்பி இலங்கையிலிருந்து இங்க வந்தேன். அவனும் ஏமாத்திட்டு போயிட்டான். சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டு இந்த தொழிலுக்கு வந்தேன். இங்க நான் படாத சிரமம் கொஞ்சநஞ்சமா. மூணு பேருன்னு சொல்லிட்டு எட்டுபேர் செய்வாங்க. சிலபேரு ப்ளேடால உடம்ப கீறிடுவாங்க. உடம்பு முழுக்க தழும்புதான். இவனும் நேத்து நைட்டு வழக்கம்போல தான் வந்தான். நான் பிடிச்சு தள்ளினதுல மண்டைய போட்டுட்டான். இப்ப போலீஸ் ஸ்டேஷன்ல கொலை செஞ்சவளா நிக்கிறேன். எனக்கு மட்டும் ஏன் இதெல்லாம் நடக்கணும்."

இந்த செய்திக்கும், வாக்குமூலத்திற்கும் பின் உள்ள கேள்விகள், டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு நாவலும், மாஸலோவாவும் எழுப்பும் கேள்விகளுக்கு நிகரானதுதானே. நாம் வசிக்கும் அறைகளில் மூர்க்கம் எப்போதும் ஒரு அசம்பாவிதத்தை நிகழ்த்த காத்திருக்கிறது. நாம் கடக்கும் வீடுகளில் குற்றத்துக்கு முந்திய கணமோ, பிந்தைய கணமோ நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அது நம்மீது கவியும் வரை நமக்கு அது ஒரு செய்தி மட்டும் தான். நான் செய்தியாய் எழுதிய அந்த பெண்ணின் பெயர் எனக்கு ஞாபகத்தில் இல்லை. அவளை கடக்க இயலாத இடர்பாதையில் விட்டுச் சென்றவன் அவள் காதலன் மட்டும்தானா.

Saturday, 4 February 2012

சூழலின் கனி

                                    லக்ஷ்மி மணிவண்ணன்
பாறைகளைக் கண்ணிவெடி வைத்துத்
தகர்ப்பவன்
உளியின் மீது அடிக்கும்
சுத்தியின்
கந்தகச் சிறுதுவாரப் பெரு ஓலம்
பச்சைவெயில் மேகங்களில் எதிரொலிக்கிறது.
திரியிட்டுக் கொளுத்திய
வெடிச் சத்தத்தில்
மனிதர்களை வெளியேறச் சொல்லும் ஊழ்
கற்களை நகரங்களை நோக்கியும்
பள்ளங்களை நோக்கியும்
பாரமேற்றுகிறது.

கட்டிடங்கள் உயர உயர
கடற்கரைகள் உயர உயர
சாலைகள் அகலமாக மாக
உச்சிமலையில் நடக்கிறது
தவ நடனம்

அடுத்த கண்ணி வெடிக்கு
உடும்புப் பாறையில் உடல் பிடித்து
யானைப் பாதக் கரங்களால்
அவன் பற்றியேறுவதை
வினோத விலங்கின் விஸ்ரூபமெனக்
கண்டு நகைக்கும்
பெருநகரத்து மேல்தளத்துக் குழந்தைக்குத்
திரும்பும் அவனது பார்வை
கடுமை நிறைந்த தொரு உளியின் சீற்றம்

ஒவ்வொரு உளிச்சத்தமும்
சிதறிக் கிடக்கும் ஒரு கருங்கற்துண்டு
பசிக்கும் குழந்தைக்கான
சில பருக்கை நாணயம்


வார இறுதி நாளில்
ஏராளமான உளிச் சத்தங்களோடும்
சோற்றுப்பருக்கைகளோடும்
அவன்
சாராயக் கடையில் நுழையும்போது
அஞ்சி
கடை பின் வாங்குகிறது
போதை தயக்கம் காட்டுகிறது
தின் பண்டங்கள் தங்களை
ஒளிக்க முற்படுகின்றன
இறைச்சித் துண்டை பலாத்காரமாய்
வெட்டியிழுப்பவனைப் போல
அனைத்தையும் உயிர்ப்பிக்கிறான்

உளிச்சத்தங்கள் நிரம்பிய
நாணயங்களோடு வண்டியேறியவன்
கொடுத்த பையில் குழந்தைகள்
கை துளாவித் தளர
மனைவியை கற்பாறையெனத் தகர்த்துத்
துயில்கிறான்.

கனவில்
வழிநெடுகச் சிந்திய
நாணயங்களைப் பொறுக்கி
தின் பண்டங்களாலும்
வண்ண பலூன்களாலும்
திளைக்கிறார்கள்
வந்த வழி பாதையெல்லாம்
நிற்கும் குழந்தைகள்

***

சமீபத்தில் என்னால் எழுதப்பட்ட சில கவிதைகளில் ‘பெரு ஓலம்’ என்கிற தலைப்பிடப்பட்ட இக்கவிதையும் ஒன்று. சில கவிதைகள் எனில் எழுதியவை உண்மையிலேயே சில கவிதைகள் தான். கை விரல் எண்ணிக்கைக்குள் வந்து சேரக்கூடியவை அவை. இரண்டு வருடங்களில் கதைகள் எதையுமே எழுதவில்லை. பெரும்பாலும் சுயசரிதைத் தன்மை வாய்ந்த கட்டுரைகளையே எழுதுகிறேன். எழுதப்பட்ட சில கவிதைகளை பாலை நிலவன் கொண்டு வந்துள்ள நீட்சி இதழுக்குத் தந்தேன். கட்டுரைகளுக்கான எதிர்வினைகளை எப்படியிருப்பினும் உடனடியாகத் தெரிந்து கொள்ள முடிகிறது. கதைகள், கவிதைகள் பற்றி அறிய பத்து வருடங்களேனும் சுமந்திருக்கவேண்டும். பின்பு ஒரு நியாயமான ஒரு குரல் வந்து செவியில் மோதும். எனது படைப்புகளின் விதியிது. சில படைப்பாளிகளுக்கோ பத்தாண்டுகளுக்குப் பின்னரும் விதி கைகூடுவதில்லை. சிறுபத்திரிக்கைகளில் மந்திரச் சிமிழ், நீட்சி  ஆகிய இரண்டும் எனது கைவசம் உள்ளன. நீட்சியில் சிற்றிதழின் மனோநிலையும், அதற்கான முகாந்திரமும் அமைய பெற்றிருக்கிறது.  ஸோஸா, போர்ஹெஸ் கத்தாரி என வாசிப்பிற்கான  பக்கங்களை உள்ளடக்கியிருக்கிறது மந்திர சிமிழ் இதழ்.  சிலேட் இதழை  கொண்டு வரும் முனைப்பில் இருக்கிறேன். பொங்கலுக்கு பின்பு வேலையைச் சூடுபிடிக்க வேண்டும். அதில் பூர்வீக வைத்தியர்கள், சாமியாடிகள் ஆகியோரோடு அல்தூஸரையும் அமரச் செய்யவேண்டும்.

என்னுடைய வசிப்பிடத்தின் அருகில் ஒரு படிப்பகம் உண்டு. வழக்கமாக வந்து சேரும் இதழ்களை படித்தபின் அங்கு கொண்டு போடுவது வழக்கம். அம்ருதா, உயிர் எழுத்து, குமுதம்-தீராநதி போன்ற இதழ்கள்  இவற்றில் அடக்கம். எனது இச்செயல்பாட்டிற்காக குடியிருப்போர் நலச்சங்கத்தை சேர்ந்தவர்கள் பலமுறை கூட்டங்களில் நன்றி பாராட்டியிருக்கிறார்கள்.அக்கூட்டங்களுக்கு செல்லும் பழக்கம் எனக்கில்லை. எவரேனும் வந்து இவ்வாறு நன்றி பாராட்டினார்கள் என்று ஏதோ பெருமை செய்துவிட்டது போன்ற பெருமிதத்துடன்  கூறுவார்கள். அவர்கள் இவ்விதழ்களைப் பற்றிக் குறிப்பிடும்போது இதழ்கள் என்று சுட்டமாட்டார்கள். கதைப்புத்தகங்கள் என அழைப்பார்கள். குடியிருப்பில் வசிப்பவர்கள் பெரும்பான்மையினர் அரசு அதிகாரிகள். ஓய்வுபெற்றவர்கள். மெத்தப்படித்தவர்கள். அவர்களுடைய தவ வாழ்க்கையில் முதன் முறையாக இப்போதுதான் இத்தகைய இழ்களைக் கண்ணுறுகிறார்கள். நாளிதழ்கள், வாரயிதழ்களைத் தவிர்த்து பிற எல்லாமே அவர்களைப் பொறுத்த வரையில் கதைப்புத்தகங்கள்தான். ஒரு மாத காலத்திற்கு முன்பு அதன் தலைவர் என்னை அழைத்து நீங்கள் படிப்பகத்தில் போடும் இதழ்கள் எல்லாம் தீவிரவாத இதழ்கள் என்று சொல்கிறார்கள். நள்ளிரவில் உங்கள் வீட்டில் விளக்கு எரிகிறது. அறிமுகமற்றவர்கள் உங்கள் வீட்டுக்கு வந்து செல்கிறார்கள் உங்களையும் தீவிரவாதி என்கிறார்கள். எனவே புத்தகங்களை நீங்கள் படிப்பகத்தில் போடக்கூடாது என்று சொன்னார். அய்யா மேற்படி இதழ்களை படிப்பகத்தில் போட்டே தீரவேண்டும் என்று உடும்புப் பிடி ஏதும் எனக்கு இல்லை. வீட்டில் இடத்தை அடைத்துக் கொண்டு குப்பையாகக் கிடப்பதால்தான் இங்கே கொண்டு போடுகிறேன்.  மற்றபடியும் இவை அரசாங்கத்தில் பதிவு பெற்ற இதழ்கள்தான். மாவட்ட மைய நூலகத்தில் அரசாங்கமே வரவழைக்கும் இதழ்கள்தான் இவை என்றேன். தீராநதி, குமுதம் குழுமத்தின் இதழ். அதனை நீங்கள் தீவிரவாத இதழ் என்று கூறினால் அதனைக்காட்டிலும் பெருமை குமுதம் குழுமத்திற்கு இருக்க இயலாது. அம்ருதா இதழின் சிறப்பாசிரியர்களுள் ஒருவர் ஓய்வுபெற்ற  காவல்துறை அதிகாரி திலகவதி என பதில் கூறினேன். உங்களிடம் பேச விரும்பவில்லை. உங்களுக்கு இங்கே ஒரு அதிகாரமும் கிடையாது என்று நான் நலசங்கத்தின் ஆயுட் கால உறுப்பினர் என்பதைக்கூட நினைவில் தவறி பதற்றமானார். இதுவரையில் கிறுக்கன், குடிகாரன் என்கிற சமூக அந்தஸ்து மட்டுமே எனக்கிருந்தவை. மேலும் சிறப்பு சேர்க்கும் விதத்தில் தீவிரவாதி என்கிற பதக்கமும் இணைந்திருப்பது பெருமை. சில மாதங்களாக இவ்விதழ்களில் வெளியான கூடங்குளம் அணு உலைகள் எதிர்ப்புப் பிரசுரங்கள்தான் இவர்களின்  திடீர் முடிவுக்கு காரணமாக இருக்குமோ என்று எனக்கொரு எண்ணம். எவ்வாறும் இருக்கட்டும். துப்பாக்கி கையில் கிடைத்தால் மிக அழகாகவும் லாவகமாகவும் எனக்கு அதனை கையாளத் தெரியும் என்பது சத்தியம்தான். முறைப்படி அதற்கு அரசாங்கத்திலேயே பயிற்சி பெற்ற அனுபவமும் எனக்குண்டு.

இத்தகைய ஒரு சந்தர்ப்பத்தில்தான் பா.வெங்கடேசனிடமிருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ஆச்சரியமாகவும் இருந்தது. எனது தொலைபேசி சரியாகத்தான் வேலை செய்கிறதா என்கிற சந்தேகமும் எழுந்தது. அவ்வப்போது எனக்கு விசித்திரமான அழைப்புகள் வருவதுண்டு. ஒருமுறை வெளிநாட்டு அழைப்பு ஒன்று என்னுடைய புகைப்படத்தைப் பார்த்ததாகவும் அது வயதான சிவாஜிகணேசனை நினைவுபடுத்துவதாகவும் கூறியது. விதியே விதியே என் செய்வேன் விதியே எனக் கேட்டுக்கொண்டேன். தொடர்ந்து அதற்குப் பணிஓய்வு கிடைக்கும்போதெல்லாம் ஒரு மணிநேரம் ஒன்றரை மணி நேரம் எடுத்துக்கொண்டு சிவாஜிகணேசனுடன் பேசுவதை வழக்கமாகக் கொண்டது. பின்பு ஒருநாள் போதையிலிருக்கும் போது மறுமுனையில் நான் பேசுவதைக் கேட்டதும் நிறுத்திக் கொண்டது. இதுவொரு மாதிரி. இப்படிப் பல அனுபவங்கள் உண்டு.


பா.வெங்கடேசனின் சில கதைகளைப் படித்திருக்கிறேன். ஒரு இதழில் ஊழியம் செய்தபோது அவருடைய ஒருகதையை சிலாகித்து ஒரு கடிதம் எழுதியிருப்பதாக நினைவுபடுத்திப் பேசினார். பொதுவாகவே என்னுடைய தனிப்பட்ட கடிதங்களை சக படைப்பாளிகளோ நண்பர்களோ அவ்வாறே நம்புவதும், எடுத்துக், கொள்வதும் நல்லதல்ல. அபூர்வமாக சில கடிதங்கள்தான் தப்பிப்பவை. ஒரு முறை கவிஞர் ஒருவருக்கு நீங்கள் மஹாகவி எனக்கூறி கடிதம் எழுதினேன். அதனை அவ்வாறே முழுச்சுரணையோடு ஏற்றுக்கொண்டார். தகுதியை பிறர்சுட்டும்போது அடக்கம் காட்டுவது அடக்கமுடைமை அல்ல என்பது அவர் கொண்ட கருத்து. தொடர்ந்து அதன் காரணமாகவே அல்லல்பட்டு படாதப்பாடுபட்டு கூடுமிடங்களில் தேம்பித் தேம்பி அழுது வருகிறார் என்பது வேறுவிஷயம். பா.வெங்கடேசன் ‘மழை குரல் தனிமை’ எனும் அவருடைய சிறந்த கதை ஒன்று நூலாக வருவதாகக் கூறி அதற்கு என்னுடைய எண்ணத்தை முன்னுரையாக எழுதக் கேட்டார். அவருடைய கதைக்கு எஸ்.சண்முகமோ  பூரண சந்திரனோ, நாகர்ஜூனனோ, பிரம்மராஜனோ அல்லது இந்த வகையாறாக்களின் துதிக்கைகளோ எழுதுவது தான் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. அவர் தனது  லக்ஷ்ய பிடிவாதங்களை தளர்த்திக் கொள்வார் எனில் சி.மோகன் எழுதலாம். எழுதியனுப்பிவிட்டேன். அதிர்ஷடவசமாக அதனை அவரால் தொகுப்பில் பிரசுரிக்க இயலவில்லை. பின்னர் கேள்விப்பட்ட போது தமிழ் சூழலிலிருந்து ஒவ்வொருவர் ஒரு கதைக்கென முன்னுரை எழுதி தொகுப்பு நூல் வெளிவரயிருப்பதாக அறிந்தேன். அந்நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டால் புக்கர் போன்ற குறிக்கோள் விருதுகள் கிடைக்காமல் போனாலும்கூட கின்னஸ் சாதனையில் இடம்பெறக்கூடும். ஏனெனில் கதைக்கு ஒருவரென முன்னுரை எழுதி வெளிவரும் முதல் தொகுப்பு நூல் உலகிலேயே இதுவாகத்தானிருக்கவேண்டும். ‘சூழலின் கனி’ என்கிற தலைப்பில் மழையின் குரல் தனிமை கதைக்கான எனது முன்னுரை இது.


மழையின் குரல் தனிமை

பா.வெங்கடேசனின் படைப்புலகம் குறித்து எழுதும் அருகதையும் ஒழுக்கமும் எனது உரைநடைக்கு உண்டு என்று தோன்றவில்லை. அவரது படைப்புலகம் குறித்த பார்வையை உருவாக்க கடினமான புத்தி ஸ்வாதீனமும், அறிவுலகங்களுடன் ஓரளவேனும் முழுமேன்மையான தொடர்பும் சக்தியும் அவசியம். நவீனத்திற்கு முந்தைய வங்க இலக்கியங்களுடனான பழக்கமும் அதற்கு வேண்டும். தமிழ் படைப்புலகத்தின் முழுமையான அக மதிப்பீடு கொண்ட உரைநடை அதற்குத் தேவை. எனது உரைநடைக்கு நிச்சயமாக அந்தத் துணிவும் தெம்பும் கிடையாது என்பதை நன்கறிவேன். அறிவுலகத்துடனும், படைப்புலகத்துடனுமான எனது தொடர்பு கள்ள தொடர்புக்கு நிகரானது. படைப்புகளை வாசிக்கும் எனது பழக்கம் கண் தெரியாதவர்கள் தடவி வாசிக்கும் முறைக்கு நிகரானது. சில சமயங்களில் இப்பழக்கம் வழக்கமான வாசிப்பில் உணர இயலாதவற்றை வாசிக்க இடம் தருவதும் உண்டு. எனினும் சங்கருக்கு கதவற்ற வீடு கவிதைத் தொகுப்பிற்குப் பின் வந்த வீரலெட்சுமி, எதிர்ப்புகள் மறைந்து தோன்றும் இடம், அப்பாவை புனிதப்படுத்துதல். ஆகிய எனது மூன்று கவிதைத் தொகுதிகளுக்கும் பிடித்தமான அவருடைய மழையின் குரல் தனிமை கதை அணுகத் தெம்பைத்தருகிறது. மழையின் குரல் தனிமை கதை  பிரசுரம் கண்ட சந்தர்ப்பத்தில் படைப்புத் திட்டங்கள் ஏதும் தமிழில் பிரபலமடையவில்லை. படைப்பியக்கமும் படைப்புத்திட்டங்களும் வேறுவேறானவை என்பதைக் கூறவேண்டிய அவசியம் அப்போது இல்லை.

மௌனி, லா.ச.ரா.ஜானகிராமன், நகுலன், பிரமிள் ஆகியோர் குறித்தோ வண்ணநிலவன் வண்ணதாசன் குறித்தோ ஒன்றிரண்டு வாக்கியங்களையேனும் உருவாக்க தகுந்த அகமதிப்பீடு எனக்கு உண்டு. இவர்கள் தனித்தனியாக அவரவர்களுக்கே  உரித்தான வகையில் ஏதோ ஒரு விதத்தில் எனது படைப்புகளுக்குப் பிடித்தமானவர்கள். தெருத்தெருவாக அலைவுற்ற புதுமைப்பித்தனை பின்வந்த தமிழ்ச்சமூகம் மீண்டும் தெருவில் இறக்கி வாங்கு வாங்கென்று தகர்த்துவிட்டது. இதுவொரு சோகம். புதுமைப்பித்தனே ஒட்டுமொத்தமாக பெருத்த சோகம் தான். மௌனி குறித்து அக்கறை கொள்ளாத புதுமைப்பித்தனைப் பற்றிய பார்வைகள் நிச்சயமாக புதுமைப்பித்தனை அறியும் தகுதி படைத்தவை அல்ல. புதுமைப் பித்தன் கட்சி கோஷத்தைப் போல பிரபலமடைந்தார். பிறருடைய படைப்புத்திட்டங்களுக்காக புதுமைப்பித்தன் மீண்டும் தமிழில் காவு கொடுக்கப்பட்டார். நவீன விமர்சனப் பார்வையின் கொடுங்கோன்மையின் செயல்பாட்டுப் பிரதிபலன்களில் ஒன்று இது. ஒரு காலத்தின் விமர்சனப் பார்வை அல்லது அதன் உள்கருத்துகள் எப்போதுமே போதாமைகள் நிறைந்தவை. கருத்தும் படைப்பும் வெவ்வேறு தளங்களில் இயங்குபவை என்பதை அறியாதவை அவை. லா.ச.ரா, ஜானகிராமன் ஆகியோர் ஒடுக்கப்படுவதற்கும் விமர்சனப் பார்வைகளின் போதாமைகளே காரணமாக அமைந்தன. ஒரு படைப்பை அணுகும் விமர்சனப் பார்வை படைப்பு நிலையை எய்தாத வரையில் அது ஒரு விமர்சனப் பார்வையாக நிலைகொள்ள தகுதியற்றது. அசோகமித்திரனின் விமர்சனப் பார்வை இதிலிருந்து தப்பிப்பதற்கு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டது அதுபோல பிரமிளுடையதும். வெங்கட் சாமிநாதனுடையதையும் ஓரளவுக்குச் சுட்டலாம். விமர்சனப் பார்வையில் ஆகத் தகுதி குறைந்த அவருடைய பாஷையிலேயே சொல்வதாயின் ஆகத் தரக்குறைவான உரைநடையைக் கையாண்டவர் சுந்தர ராமசாமி. ஒரு விமர்சனப் பார்வை படைப்பு வாசிக்கப்படுவதற்குரிய பெரிய காலதாமத்தை நிச்சயமாக படைப்புக்குத் தரக்கூடாது. படைப்பை காலத்தின் முன் மூழ்கடிக்கக்கூடாது. சுந்தர ராமசாமியின் உரைநடை வண்ண தாசனுக்கு இத்தகைய ஒரு நீதியின்மையை ஏற்படுத்தியது. வண்ணதாசனின் படைப்புகள் விமர்சனங்களின் ஒடுக்குதலுக்கு இலக்கானவை. எனினும் வாசகபலம் அவரை தப்பிக்கச் செய்தது. லா.ச.ராவின் படைப்புகள் நிச்சயமாக மீள் பரிசீலனை செய்யப்படவேண்டியவை. கருத்துக்களுக்கு படைப்பை மூழ்கடிக்கச் செய்யும் நீதியின்மை ஒருபோதும் கிடையாது. வண்ணநிலவன் போன்ற ஒரு படைப்பாளி உருவான மொழியில் யுவான் ருல்போவெல்லாம் கொண்டாடப்படவேண்டியவரே அல்ல. அதே சமயத்தில் வண்ணநிலவன் துக்ளக் இதழில் எழுதுகிற பொதுப்புத்தியை படிக்கும் சந்தர்ப்பம் அவரது வாசகர்களுக்கு அமையாதிருக்க வேண்டும். தமிழ் விமர்சன மொழியின் துர்பாக்கியம் கிறிஸ்தவ ஜெபக்கூட்டத் தன்மையை தொடர்ந்து கைக்கொண்டிருந்தது என்பது தான். பாதிரியின் அங்கியைக் கழற்றி எறியாத தமிழ் விமர்சகர்கள் தான் பெரும்பாலோர். பிரமிள் மட்டுமே மாறுபட்டிருந்தார். நாகார்ஜூனன் அச்சு அசல் வெள்ளை அங்கி கிறிஸ்தவ ஆங்கிலோ தமிழ் பாதிரி. தமிழ் சிறு பத்திரிக்கைச் சூழலில் மிகப்பெரிய துர்பாக்கியமான இதழ் என்று அவர் நடத்திய வித்தியாசம் இதழைச் சுட்டலாம். கிறிஸ்துவ ஜெபக்கூட்டங்களில் வெள்ளைக்காரிகள் உட்கார்ந்திருப்பதை போல மேற்கோள்களையும் பிற ஆசிரியர்களின் பெயர்களையும் தோள்களில் தூக்கிச் சுமக்கும் உரைநடைகளின் தர்மகர்த்தா அவர். ஒரு வரியைக் கூட சுயமாக அவரது உரைநடை உருவாக்கியதில்லை. எல்லாம் அவர் சொன்னார் அவர் சொன்னார் அவர் சொன்னார். அவர் யார்? தெரியாது. தமிழவன் பங்ககேற்கும் சிற்றிதழ் இயக்கங்கள் அனைத்தும் பாதாளச் சாக்கடைத் திட்டங்களாகி விடுகின்றன. இது எவ்வாறு குணாதிசயம் கொண்டு நிகழ்கிறது என்பதை விளங்கிக் கொள்ள முடியவில்லை.

சுவாமி விவேகானந்தர் ஒரு சிறந்த கிறிஸ்துவர் என்று சொன்னால் எவரேனும் நம்புவார்களா? பிறப்பால் அவர் அப்படியல்ல என்று கூறிய வண்ணம் இங்கு கூடி திரள ஒரு கூட்டு மனமே காத்திருக்கிறது. ஸ்தூலமான பிறப்பின் அடிப்படையை பற்றியல்ல பேசவிரும்புவது. வடிவமற்ற அகத்தின் பிறப்பைப்பற்றி பேசியாகவேண்டும். சுவாமி விவேகானந்தரை விடுவோம். தமிழில் இந்துத்வா என பலரால் அடையாளப்படுத்தப்படும் ஜெயமோகன் ஒரு கிறிஸ்தவர்தான். தமிழ் மார்க்ஸிய பிரதிகளுக்கு பதில் சொல்லிக் கொண்டேயிருக்கும் மாற்று கிறிஸ்தவப் பிரதியை அல்லது சிறந்த கிறிஸ்தவப் பிரதியை உருவாக்கப் பாடுபடுகிறார். இவர்களுக்கு பூக்கோ சாக்கோ என்றால் எதிர் நிலையில் அவருக்கு யதியோ குதியோ கைத்தடி போல் வேண்டும். இல்லையெனில் உயிர் பிழைக்க இயலாது என்கிற சாவெண்ணம். இங்குள்ள பூர்வீகத்தின் தன்மைகளிலிருந்து படைப்புகளும், விமர்சன படைப்புகளும் உருவாகவேண்டுமெனில் இத்தடையிலிருந்து முதலில் விடுபடவேண்டும். பூர்வீக தன்மை என்பதை வட்டாரத் தன்மை என்கிற பொருளில் சுட்டவில்லை. நிச்சயமாக ராம கிருஷ்ண பரமஹம்ஸர் ஒரு கிறிஸ்தவரே அல்ல என்று கூறமுடியும். அதுபோல் மாயம்மா. இங்கு இன்று பிரபலமாகி விற்பனையாகிக் கொண்டிருக்கும் யோக குருமார்கள் ஒருவர் பாக்கியின்றி அனைவரும் கிறிஸ்தவர்கள். படைப்பு பற்றி பேசுவதற்கும் இவற்றிற்கெல்லாம் ஏதேனும் சம்பந்தம் உண்டா?. இந்து, கிறிஸ்து, இஸ்லாம் என்று உருவாக்கப்பட்டிருக்கும் பேரர்த்தங்களைப் பற்றித்தான் இவ்வுரை நடைபேசுகிறது என்று சிப்பாய்கள் எண்ணம் கொண்டால் அந்த ஜென்ம சாபத்திற்கு எனது உரைநடையிடம் பதிலில்லை

கோணங்கி, பா.வெங்கடேசன், எஸ்.ராமகிருஷ்ணன் போன்றோரின் படைப்புகள் பற்றிப்பேச மேற்கண்ட பீடிகைகளை முதலில் புரிந்து கொள்வது அவசியம் என்றே கருதுகிறேன். யோசித்துப் பார்த்தால் எனது கவிதைகள் பூர்வீகத்தின் தெய்வங்களை அழைப்பதிலும் பின்னேறுவதிலும் கதைகள் கிறிஸ்தவத்தை நோக்கி முன்னேறுவதிலும் தோற்றுக் கொண்டிருப்பவை. கோணங்கி, பா.வெங்கடேசன், ஆகியோரின் படைப்புகள் பூர்வீகத்தைத் பின்னேறுகின்றன. கோணங்கி பின்னேற்றத்தின் கடின ஆழத்திலிருப்பதால் வெளிப்படையாகப் புலப்பட மறுக்கிறார். வெங்கடேசன் புலப்படுபவர். அதற்கு மழையின் குரல் தனிமை ‘கதை’ உதாரணம்.

தமிழில் மாறும் காலத்தின் முன்பாக படைப்பும் உரைநடையும் நிலைக்கொண்டபோது புதிய படைப்பு நெருக்கடிகளை நோக்கி தமிழ் படைப்புலகம் திரண்டபோது எண்பதுகளுக்கு பிறகு உத்வேகம் புதிய படைப்பாளிகளுக்குத் தேவைப்பட்டது. இந்நெருக்கடியிலிருந்து சில மனவோட்ட வகைகள் உருவாயின. வண்ண நிலவன் உட்பட இதுகாறும் உருவான அனைத்து படைப்புகளையும் ஒன்றுமில்லை எனும் ஒற்றைக்குரலால் சில காரணங்களைக்கூறி புறக்கணித்துவிட்டு அகத்தால் முன்னேறிவிட்டதான மயக்கத்தைக் கொண்டிருந்தது முதல்வகை. இவ்வகை எல்லாவற்றையும் சிந்தனைப் பள்ளிகளின் துணைகொண்டு தாண்டி வந்துவிட்டோம் என்றும் அப்பள்ளிகளின் உதவியுடனேயே புதிய படைப்புகளை எழுதிக் கொண்டிருக்கிறோம் என்கிற நம்பிக்கையையும் கொண்டிருந்தது. கலாச்சாரத் தணிக்கை செய்யப்பட்டவற்றை எழுதுவதற்கும் பாடதிட்டங்களை படைப்புகளில் அப்படியே அமல் படுத்துவதற்கும் மயக்கம் உதவிற்று. தமிழவன், சாரு நிவேதிதா, தொடங்கி எம்.ஜி.சுரேஷ் வரையில் இப்போக்கு நிலவுகிறது. இவர்கள் ஆதார சுருதிகள் எனில் இழைகள் ஏராளம். ஒருமுறை தமிழவன் உங்கள் ஊர்காரர் தானே என்று ஒருவர் கேட்டபோது நிச்சயமாகவா என்று தெரியாது எம்.ஜி.சுரேஷின் தகப்பனார்தானே அவர் எனத்திருப்பிக் கேட்டேன். வாசிப்பின் வழியே கண்தெரியாத என்னைப்போன்ற ஒருவருக்கு முழுமையற்ற இத்தகைய அவதானிப்புகள்தான் சாத்தியம்? இவ்வகையினருக்கு தலைமைச் செயலகம் பாரிஸ், பிரான்ஸ்நாடு. உச்ச பட்சம் என்பது ‘நோபல் விருது’ நோபல் விருது நம்மூர் சாஹித்திய அகாதமி போல பெரும்பாலான சமயங்களில் குப்பைகளுக்குத் தரப்படுபவை என்பதை உணரும் சக்தியை மயக்கம் தடுத்துவிடுகிறது. இவ்வகையினர் தமிழ்ச்சூழலில் மட்டும் உருவானவர்கள் அல்ல.உலகம் முழுவதிலுமே இவ்வகையினர் உருவானார்கள். இரண்டாம் உலகப்போருக்கு பின் பிரான்ஸில் நடந்த கலாச்சார எழுச்சி இதற்கு காரணமாக அமைந்தது. தஸ்தேயேவெஸ்கி வாழ்ந்த காலத்தில் ரஷ்யாவிலும் இவ்வகையினர் பிரபலமாயிருந்தனர். பாரதியை ஓத்த ரஷ்ய கவிஞன் ஒருவனைப் பற்றிப் பேசும்போது தஸ்தேயேவெஸ்கி இவ்வகையினரைக் கேலியும் கவலையும் செய்கிறார். எல்லாம் எங்கோ மேலிடத்திலிருந்து வருபவை எனும் மனப்பாங்கு கொண்ட இவர்களை கடுமையாகத் தாக்கிய தஸ்தேயேவெஸ்கி பிரஞ்சு மொழியிலிருந்து ஒரு நூலையும் ரஷ்யமொழிக்குப் பெயர்த்தவர். பிரஞ்சு மொழியை நன்கறிந்தவர். எனினும் இத்தகையோரின் மனப்பாங்கு அவருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திற்று.

பிரேம் ரமேஷ் வேறுவகையில் முயன்றனர். மேலை தத்துவங்களின் அடிப்படையில் தமிழ் காவிய மரபை அடைய முயன்றனர். இது ஒரு முஸ்தீபு. இதன் தாக்கம் பின்வந்த படைப்பாளிகள் பலருக்கும் இருந்தது. இந்த முஸ்தீபு தமிழ் தத்துவவாதிகள் இவர்கள் என்கிற இடம் வரையில் இவர்களைக் கொண்டு சென்றது. இவர்களுக்கு பண்டை இலக்கியங்களில் பால் மயக்கமும் தமிழ் நவீன காலத்தின் சத்தான பகுதிகள் மீது பாரா முகமும் ஏளனமும் இருந்தது. ஒருவேளை பின்னதில் பாராமுகத்தை இவர்கள் அஞ்சியிருப்பார்களின் புதிய தமிழ் உரைநடை ஒன்று இவர்களால் சாத்திய பட்டிருக்கும். ஒவ்வொரு காலக்கட்டத்திலும் குறிப்பிட்ட ஒரு போக்கு பிரதானப்பட்டு பின் நிதானம் கொள்வதும் தொடர்ந்து மற்றொரு போக்கு பிரதானமடைய ஆசைப்படுவதும் தமிழிலும் ஒரு இயக்கம். ஆனால் தமிழ் படைப்பாளியும், கவிஞனும் இவ்விஷயங்களிலிருந்து விலகி ஒளித்து ஒளித்து படைத்துக் கொள்வது அசாதாரண காரியங்கள். லத்தீன் அமெரிக்கப் படைப்புகளும் தமிழில் இத்தகைய மனத் தொந்தரவுக்கு இலக்காயின. கல்குதிரை இதழ் மார்க்வெஸூக்கு தமிழ்க் கல்லறை ஒன்றைக் கட்டித் தந்தது. கல்லறையில் மார்பிள் பதிக்கும் பணிசெய்தவர் தர்மகர்த்தா நாகார்ஜூனன். மழையின் குரல் தனிமை கதையை மீண்டும் வாசிக்கும் வாய்ப்பு இப்போது உருவான போது மேற்கொண்ட நினைவுகளைத் தவிர்க்க இயலவில்லை. தமிழ் வாசகன் மிக்க கூர்மையானவன். அவன் குறைவான எண்ணிக்கையில் இருப்பவன் எனினும் அவனுக்கு ஓர்மைமிக்க வலுவான வாசிப்பின் வரலாறு இருக்கிறது. அவனுக்குக் காட்டு உள்ளிக்கும் புதிய பொக்கேவுக்கும் இடையிலுள்ள வேறுபாடு தெரியும். படைப்பில் காட்டு உள்ளியின் நறுமணம் காலாணி புற்றை நீக்கக் கூடியது. இவ்வலுவின் உறுதியை நம்பி மட்டும்தான் தமிழ்ப் படைப்பாளி இயங்க முடியும்.

கோணங்கியின் படைப்புகள் சிந்தனைப் பள்ளிகளின் பாடங்களுக்குக் காது கேட்பதுபோல நடித்துவிட்டு கேளாமல் இருப்பவை. அதன் காரணமாக அவர் மதனிமார்கதைகளிலிருந்து கொல்லனின் ஆறு பெண்மக்களுக்கு அதிலிருந்து பொம்மைகள் உடைபடும் நகரம் என நகர்ந்த போது சூழலின் கண்களை கட்டிவிட்டு காத்திரமான மொழிக்கும் உரைநடைக்கும் உறுதியானார். குடைநிலை தமிழ் வாழ்வின் தர்க்கமற்ற மொழியும் பூர்வீக ஆவிகளின் சுயவெளிப்பாடும் அவரிடம் சாத்தியமாகிவிட்டன. தொடர்ந்து அதனை சாத்தியப்படுத்தியவர்கள் எஸ்.ராமகிருஷ்ணனும் பா.வெங்கடேசனும். கோணங்கியை தவிர்த்து மற்ற இருவரும் பின்வந்த காலங்களில் படைப்புத்திட்டங்களில் குறிக்கோளானவர்கள் என்பதும் தவிர்க்க இயலாத எண்ணம். தங்கள் படைப்பின் ஆதாரத்தை கண்டடைந்த பின் அதனை பல்வேறு விதங்களில் வெற்றி இலக்கணமாக முயல்வதையே படைப்புத்திட்டம் என்கிறேன். படைப்பியக்கம் என்பது தாவித்தாவி சென்று கொண்டேயிருப்பது. படைப்பை மட்டுமே குறிக்கோளாக கொண்டது. கோணங்கி அங்கு பாருங்கள் தம்பி என்று சக படைப்பாளி ஒருவரிடம் கூறினால் கேட்பவர் கூருணர்வு கொண்டவராக இருப்பின் அவர் காட்டிய திசையைப் பார்ப்பதைத் தவிர்க்கவேண்டும். அவர் வேறு திசையில் ஓட்டம் பிடிக்கத்தான் உங்களை அங்கே பார்க்கச் சொல்கிறார் என்பதை விளங்கவேண்டும். அவர் காட்டிய திசையை பார்த்துக்கொண்டேயிருப்பவர் பார்த்துக்கொண்டே நிற்க வேண்டியதுதான். அத்திசையில் ஒரு அதிசயம் உண்டு என்பது உண்மைதான். கோணங்கி உரைநடையில் கணத்திற்கு கணம் உருமாறிக்கொண்டேயிருப்பவர். பா.வெங்கடேசன் மனவுலகின் ஆழ்பிரதேசத்தில் சஞ்சரித்து குணங்களின் பூர்வீக பேய்வுருவங்களையும் அவற்றின் தேமல்களையும வெளிக்கொணர்பவர். இவை மரபான தமிழ் நவீனத்துவ வெளிப்பாட்டு முறையிலிருந்தும் பின்னேறி பூர்வீகங்களுக்குள் கிறிஸ்துவ தாக்கமின்றி உள் நுழைபவை. குறிப்பாகச் நவீன கவிதைகளில் கிறிஸ்தவ தாக்கம், தர்க்கம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டுச் சிதறியவை விக்ரமாதித்யனின் கவிதைகள்.  கலா ப்ரியாவின் கவிதைகளும் இத்தகையதொரு விதிவிலக்கு.

பா.வெங்கடேசனின் ‘மழையின் குரல் தனிமை’ கதையைப் படிப்பதற்கு முன்பு அவருடைய கவிதைகளே அறிமுகம். அழகும் கச்சிதமும் கூடித்திகளும் கவிதைகள் அவை என்பது நினைவு. அவரது முதல் தொகுப்பு அப்போது வெளிவந்திருந்தது. அவருடைய கவிதைகள் கவர்ச்சி கொண்டவை. நவீன கவிதையின் செய்நேர்த்தி அவற்றுக்கு உண்டு. மழையின் குரல் தனிமை கதையை படித்தபோது அவர் அதிலிருந்து விடுபட்டு சுயமான ஓரிடத்திற்குள்ளிருப்பது தெரிந்தது. ஒருவகையில் அவருக்கும் தனது படைப்புலகின் ஆதாரத்தைக் கண்டடைந்த திருப்தியை இக்கதை வழங்கியிருக்கலாம். பின்னர் நீட்டித்து இக்கதையே பெரும் புத்தகங்களாயின. இக்கதையை பலமுறை வாசித்திருப்பேன். பெரிய கதையொன்றிற்கான பிரயத்தனத்தோடு எழுச்சிக்கொண்டு பின் படைப்பின் மன அவசரத்திற்கு இலக்காகி பின் மீண்டும் எழுச்சியில் கச்சிதமடைந்திருக்கும் கதை இது. படைப்பு கடுமையான நோயை முதலில் உருவாக்குகிறது. பின் அதிலிருந்து விடுபடவும் வழிச்செய்கிறது. இவ்வாக்கியம் உண்மையாக இருக்குமெனில் இக்கதையை பொருத்தமான உதாரணமாகச் சொல்லலாம். அதுபோல தமிழ் நவீனத்துவத்திற்கு பின்வந்த கதைகளின்  சிறந்த தொகுப்பு உருவாகுமெனில் இக்கதையைத் தவிர்த்துவிட்டு அத்தொகுப்பை உருவாக்குவது சாத்தியமற்றது. நவீன கதைகளுக்குப் பின்னர் தமிழ் கதைகளில் என்ன நடந்திருக்கிறது என வினவும் ஒரு கேள்விக்கு பூபென் கக்கரின் போரன் சோப் கதைக்கு நிகரான இக்கதையை சிபாரிசு செய்யலாம். இக்கேள்வியின் முன்பாக கோணங்கியை நிறுத்துவது பொருந்தாது என்றுதான் நினைக்கிறேன். பா.வெங்கடேசனின் இக்கதை புதிய கதைகளின் தோற்றத்திலும் முதன்மைபெறுவது. எஸ்.ராமகிருஷ்ணனின் சில கதைகள் பா.வெங்கடேசனின் சிலகதைகள், சி.மோகன், கூ.கண்ணன், பாலைநிலவன் ஆகியோரின்  சிலகதைகளையேனும் கற்ற பின்னர் ஒருவர் கோணங்கியை அணுகுவதே தற்காத்துக் கொள்ளும் வழி. அவர் மௌனி, லா.சரா. ந.முத்துசாமி, கி.ராஜநாராயணன், பூமணி, கு.அழகிரிசாமி, எம்.வி.வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு ஆகியோரையும் கற்ற வலுபெற்றிருந்தால் சிறப்பானது. இவை ஏதுமற்ற கோணங்கி வாசிப்பு என்பது வெறும் ஒரு ஏடு வாசிப்பு அவ்வளவு தான். எஸ்.ராமகிருஷ்ணனும், பா.வெங்கடேசனும் இத்தகைய தேவையை அழுத்துபவர்கள் அல்லர்.

தமிழ் நவீனத்துவ காலக்கட்டத்தை நவீனத்துவத்தின் குறைபாடுகளைக் கொண்டு நிராகரிக்கும் நிலையிலும் கூட அதனை ஒரு மேன்மையான காலக்கட்டம் என்று தான் சொல்லவேண்டும். அதற்கு முன்பும், பின்பும் அத்தகைய மேன்மையான காலக்கட்டம் அமையப்பெறவில்லை. நவீனத்துவ காலக்கட்டத்தில் படைப்பாளிகள் படைப்புத் திட்டங்களைப் பற்றி அனேகமாக அறிந்துகொள்ளவில்லை. நகுலன் தனது வாழ்நாள் முழுவதிலும் படைப்பியக்கத்துடன் மட்டுமே தொடர்பு பெற்றிருந்தார். ஜே.ஜே.சில குறிப்புகள் நாவல்தான் முதலில் படைப்புத் திட்டங்களுக்காக தனது நாவை நீட்டியது. அதற்குரிய அனைத்து தகுதிகளையும் அது பெற்றிருந்தது என்பதும் உண்மை. சிறந்த படைப்புகள் எப்போதும் சிறந்த குறைபாடுகளுடன் கலந்தே எழுச்சியடைகின்றன. முழுமையைத் தயாரிக்கும் போது அது திட்டமாகிவிடுகிறது. படைப்புக்கு குறிப்பிட்ட திட்டம் உண்டு என எனது உரைநடை நம்புவது இல்லை. நவீன காலத்திற்கு பிந்தைய படைப்பாளிகள் உருவான தமிழ்ச்சூழலில்; சுற்றிலும் படைப்புத் திட்டங்களுக்கு மத்தியில் அமர்ந்திருந்தார்கள். பதிப்பாளர்கள் படைப்பாளியை நோக்கி படைப்புத் திட்டங்களைக் கோரிக்கை செய்தனர். இன்றைய இளங்கவிஞன் தனது முதல் தொகுப்பிலிருந்தே படைப்புத் திட்டங்களுக்குத் தயாராகி வருகிறான். படைப்பியக்கத்துடன் மட்டும் தொடர்புக்கொண்ட கைலாஷ்சிவன் போன்ற படைப்பாளிகள் பதுங்கு குழிக்குள் வாழ நிர்பந்திக்கப்பட்டனர். அவரது சிறுகதைகள் இதுவரையில் தொகுக்கப்படாதவை. மேடைகள் படைப்புத் திட்டங்களாகவும் படைப்பியக்கம் பதுங்குழியாகவும் தீவிரம் கொண்ட தமிழ்ச்சூழல் இன்றிருப்பது. இச்சூழ்நிலை சாபமடைந்து நலிவுறும்போது தீர்க்கமாக மேலும் சில படைப்புகளைப் பற்றி உரையாட முடியும்.

மழையின் குரல் தனிமை கதையை முன்வைத்து மீண்டும் சூழலைப் படைப்பியக்கம் நோக்கி திருப்ப முடியும். அதற்கு மனம் திறந்த முழுமையான ஒரு உரையாடல் தேவை. படைப்பாளிகள் தங்கள் தங்கள் தகுதியின்மையையும் அறியாமையையும் ஒப்புக்கொள்ளும் துணிச்சலை அதற்காகப் பெறவேண்டும். இக்கதை தனிக்கதையாக மீண்டும் வடிவம் கொள்வது அதற்கு நல்ல ஆரம்பம்.

இக்கதையை சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன்பு படிக்கும் போது இருந்த மனநிலை எனது நினைவில் இல்லை. இப்போது அதனைப் படிக்கும் போது அது தன்னைப்பற்றி மட்டும் அல்ல. இலக்கிய சமக்கால வரலாறு குறித்தும் பேசுகிறது. பெரும் பெரும் நூல்களுக்கு மத்தியில் உன்னைப் போல பிறர் எவரேனும் என்னை அடையாளங் காணமுடியுமா என்றும் கேட்கிறது. ஒருசிறந்த படைப்பின் அவலக்குரல் இது. நிச்சயமாக தமிழ் வாசகன் வலுவானவன் என்கிற பதிலை நோய் அவதியில் படுத்திருக்கும் நண்பனின் காதுகளில் சொல்வதைப் போல கிசுகிசுக்கிறேன். ஏராளமான விஷயங்கள், குழப்பங்கள், தெளிவுகள் நிகழ்ந்தேறிவிட்டன என்பது உண்மைதான். தமிழ் வாசகன் நிச்சயமாக உன்னை அடையாளங்கண்டவன் மீண்டும் அவன் மருத்துவமனை அறைக்கதவைத் தட்டி ஸ்பரிசிப்பான்.

மழையின் குரல் தனிமை கதையை இருவேறு விதங்களில் வாசிக்க முடியும். முதலில்  கதையாக வாசிப்பது. காமத்தின் விஸ்வரூபமும் முடக்கமும் சாபமுமே இக்கதை. க.நா.சு ஒருவேளை இக்கதையை வாசிக்க நேர்ந்திருந்தால் அவர் எந்த விதமான சிந்தனை சட்டங்களும் இன்றி ரசித்து இக்கதையை எளிமையாக வாசித்திருப்பார். மதகுரு நாவலை மொழிபெயர்க்கும் வேலையில் ரசித்து மீண்டும் மீண்டும் வாசித்த அவருக்கு வங்காள இலக்கிய வாசிப்பனுபவம் நிச்சயமாக இதற்கும் உதவியிருக்கும். நீலகண்டப் பறவையைத் தேடி நாவலில் வரும் ஜோட்டன் என்கிற பாத்திரத்ததோடு இக்கதையின் கமலாவையும் அவர் நினைவுப்படுத்தியிருக்கக்கூடும். ஜோட்டனோ கமலாவோ பாத்திரங்கள் மட்டுமல்ல. காமத்தின் மன ஆழ புலன் வடிவங்கள். கமலா எல்லாவருக்குள்ளும் இருக்கிறாள். சாரங்கனைப் போலவே. பிரபஞ்ச தூண்டுதலின் குழைவில் இவர்கள் விசையுறுகிறார்கள். கமலா ஒருவேளை பகவதியாகவோ, மதுரை மீனாக்ஷ்சியாகவோ, ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளாகவோ ஏன் இருக்கக்கூடாது! ஒருவேளை விமர்சன பூர்வமாக அணுகினால் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் இல்லை என்று ஒருவர் தீர்க்கம் கொள்ளலாம். வங்காள இலக்கியவுலகில் யதார்த்தத்திற்கும் முன்பிருந்த காலக்கட்டத்தோடு தொடர்பு கொள்ளத்தக்க கதை இது. சூழலோடு இணைத்து சூழலின் கனி இது என வாசித்தால் ஒரு திசைக்காட்டும் கருவியைப் போல நகரும் உலகில் தனது இருப்பை அசைத்து உறுதிப்படுத்திக் கொண்டேயிருக்கிறது இக்கதை.

பா.வெங்கடேசன் இதை எழுதக் கேட்டபோது இதுபெரும் பொறுப்பு என உணர்ந்து இயலாமையுடன் ஒத்துக்கொண்டேன். பெரும் பொறுப்புகளும் பதவிகளும் எனக்கு லாயக்கற்றவை. மேலும் மேலும் பொறுப்புகளை விதி என் மீது சுமத்தாதிருக்கட்டும்.

23.11.2011                               
நாகர்கோவில்

நன்றி- தீராநதி, பிப்ரவரி 2012

Friday, 3 February 2012

நான் வெளியேற முடியாத கதை

ஷங்கர்ராமசுப்ரமணியன்வீடு திறந்திருந்தது. அம்மா வேலையிலிருந்து வரும் நேரம் அல்ல இது. அதிசயமாக அப்பா வீட்டில் இருந்தார். சைக்கிள் தார்சாவில் நின்றிருந்தது. யூனிபார்மை மாற்றிவிட்டு உடனடியாகக் கிளம்பச் சொன்னார். ஏதோ சரியில்லை என்பது மட்டும் அப்போதைக்கு தெரிந்தது. சைக்கிளில் பார்வதி தியேட்டர் ஆர்ச்சைக் கடக்கும்போதுதான், அம்மாவுக்கு உடம்பு சரியில்லை என்று சொன்னார். வயிற்றுவலியாகத் தான் இருக்கும். எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து அம்மா இந்த வயிற்றுவலியுடன் சிரமப்பட்டாள். ஆசையாக ரவை உப்புமாவை கூடுதலாக ஒரு பங்கு சாப்பிட்டுவிட்டாலும் துடித்துப் போய்விடுவாள். என்.ஜி.ஓ காலனி மாமா வீட்டிலிருந்து ஒரு நாள் இரவு சாப்பிட்டுத் திரும்பும்போது கோவில் வாசலில் வண்டி நிற்கும்போது மயங்கி தெருவிலேயே விழுந்து விட்டாள். அங்குள்ள கடைக்காரர்கள் தான் முதலுதவி செய்து அனுப்பிவைத்தார்கள். அம்மாவுக்கு எப்போது வயிற்றுவலி வரும் என்று எனக்கு எப்போதும் பயமாகவே இருக்கும். இரண்டு மாதத்திற்கு முன்புகூட ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் இரண்டு நாட்கள் இருந்துவிட்டு வந்தாள். ஒரு நாள் இரவு நானும் அப்பாவும் ஆஸ்பத்திரிக்குப் போய் அவளுக்கு டிரசும் பிளாஸ்கும் கொடுத்துவிட்டு வந்தோம். அவ்வளவு பெரிய ஆஸ்பத்திரியில் உள்ள ஒரு அறையில் அம்மாவை தனியே விட்டுவிட்டு வரவே பிடிக்கவில்லை. ஆனால் அப்பாவிடம் பிடிவாதம் பிடிக்கமுடியாது. அழுதால் அடிப்பார்அம்மா நர்சாக வேலை பார்க்கும் டிஸ்பன்சரி காம்பவுண்டுக்குள் அப்பா சைக்கிளில் நுழைந்தார். மரங்கள் அடர்ந்த பாதை. எப்போதும் அமைதியாக இருக்கும். சைக்கிளை நிறுத்தியவுடன் இறங்கி நர்ஸ் ரூமுக்கு சென்றேன். பிலோமினா அத்தை தான் முதலில் வரவேற்றார். அம்மா அந்த அறையின் மூலையில் பச்சை துணியால் பிரிக்கப்பட்ட இடத்தில் கட்டிலில் படுத்திருந்தாள். குளுக்கோஸ் ஏறிக்கொண்டிருந்தது. அம்மா என்னைப் பார்த்து ஏதாவது சாப்பிட்டியா என்றாள். இல்லை ஸ்கூல் விட்டதும் அப்படியே வந்துட்டேன் என்றேன். அம்மா கையில் நிறைய கலரில் கண்ணாடி வளையல்கள் அணிந்திருந்தாள். காலையில் சுப்புலட்சுமி சித்தியின் வளைகாப்புக்குப் போயிருந்தாளாம். நான் இதுவரை அம்மா கண்ணாடி வளையல் அணிந்து பார்த்ததில்லை.நான் வந்து முன்புறம் உட்கார்ந்து கொண்டேன். என் அப்பா அமைதியாக குனிந்தபடி உள்ளே நுழைந்தார். அப்பா பெண்களிடம் நிமிர்ந்து பேசமாட்டார். என்ன சிஸ்டர் மறுபடியுமா என்று கேட்டபடிஎன் அம்மா படுத்திருந்த இடத்துக்குப் போனார். நான் மருந்து மணம் வீசும் அந்த அறையில் வழக்கமான உற்சாகத்தில் இல்லாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தேன். அப்போது உள்ளே அப்பாவும் அம்மாவும் பேசும் சத்தம் கேட்டது. பிலோமினா அத்தை சட்டென்று உள்ளே போனாள். கண்ணாடித்துண்டு உடைக்கும் சத்தம் உள்ளிருந்து கேட்டது. அதைப் பார்த்துக்கொண்டு வெளியே வந்தார் பிலோமினா அத்தை. மிகுந்த சங்கடத்துடன் பக்கத்திலிருந்து ஆயா வசந்தியிடம் அபார்ஷன் ஆயிருக்கு அவளுக்கு. அப்பப்போய் அவளை இப்படி பாடாய் படுத்தறாரே என்றாள்.அப்பா, அம்மாவை அடிப்பது எனக்கு தினசரி வழக்கம்தான். ஆனால் படுக்கையில் இருக்கும் அம்மாவை, ஏன் அடிக்கவேண்டும் என்று தெரியவில்லை. அப்பா வெளியே போய்விட்டார்.நான் மிகவும் தயங்கி அம்மாவின் கட்டிலுக்கு அருகே போனேன். அம்மாவின் கைகளில் சின்ன சின்ன ரத்தத் துளிகள். என்னைப் பார்த்தபடி அழுதுகொண்டேயிருந்தாள்.

நன்றி: நீட்சி, ஆசிரியர் - பாலை நிலவன்

Wednesday, 1 February 2012

புலி உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது
அல்போன்ஸ்ராய்

நேர்காணல் : ஷங்கர்ராமசுப்ரமணியன் 
புகைப்படம் : பேஜர் கிருஷ்ணமூர்த்தி
புகைப்படக்கலையில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி? உங்கள் தந்தை உங்களை ஊக்குவித்தாரா?

எனது அப்பா தென்னக ரயில்வேயின் முதல் புகைப்படக்காரராக பணியாற்றியவர். அவர் புகைப்படம் எடுப்பதைப் பார்த்து எனக்கு ஆர்வம் உருவானது. நான் டாக்டராக வேண்டும் என்ற ஆசை எனது அம்மாவுக்கு இருந்தது. எனக்கு பெங்களூர் செயிண்ட் ஜான்ஸ் மருத்துவக்கல்லூரியில் இடமும் கிடைத்தது. புனே திரைப்படக்கல்லூரியிலும் இடம் கிடைத்தது. ஆனால் நான் சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தேன். அப்பாவுக்கு வனஉயிர்கள், காடுகளை படமெடுப்பதில் இயற்கையான விருப்பம் இருந்தது. அவர் ரயில்வேயில் வேலை பார்த்ததால் அதிகம் செயல்படமுடியவில்லை. ஆனால் விடுமுறைகளில் குடும்பத்தோடு கிளம்பிவிடுவோம். எங்களுக்கு இந்தியா முழுவதும் ரயிலில் பயணம் செய்ய இலவச பாஸ் இருந்ததால் அது சுலபமாகவும் இருந்தது. கல்கத்தா மிருகக்காட்சி சாலையில் ஒரு புலி குட்டிப் போட்டிருக்கும் தகவல் வந்தால் அங்கே போய்விடுவோம். கிண்டி தேசிய வனஉயிர்பூங்காவில் அப்போது வனஉயிர்கள் தொடர்பான திரைப்படங்களைத் திரையிடும் பழக்கம் இருந்தது. அங்கே ஐந்து படங்கள் மட்டுமே சேகரிப்பில் வைக்கப்பட்டிருந்தன. அதை ஒவ்வொரு சனிக்கிழமையும் குழந்தைகளுக்குக் காண்பிப்பார்கள். அந்தப் படங்களை நாங்கள் திரும்பத்திரும்ப பார்த்தோம். எங்கள் வீட்டிலேயே 16 எம்.எம் திரையிடும் ப்ரொஜக்டர் வைத்திருந்தோம். அதை இயக்கவும் எனக்குத் தெரியும். கிண்டி பூங்கா காப்பாளருக்கு படத்தை ப்ரொஜக்ட் செய்வதில் அலுப்பு ஏற்படும்போது நானே திரையிடுவேன். அப்படியாக இந்தப் படங்களை பலதடவை பார்த்து வனஉயிர்களைப் படம்பிடிப்பதில் நாட்டம் வந்துவிட்டது. திரைப்படக்கல்லூரியில் சேர்ந்தபிறகு இதுதான் எனது துறை என்று முடிவும் செய்துவிட்டேன். ப்ராஜக்ட் ஒர்க்காகவும் அதையே செய்தேன். அப்போதுதான் வண்டலூர் மிருகக்காட்சி உருவானது. மிருகங்கள் எல்லாம் ஒரு தற்காலிக முகாமுக்கு கொண்டுவரப்பட்டு எடுத்துச்செல்லப்படும். அந்த நேரத்தில் ஒரு ஆவணப்படத்தை முதலில் உருவாக்கினேன். அதற்குப்பிறகு கிண்டி பூங்கா இருக்கும் காட்டிலும் எனது பயிற்சியை எடுத்தேன். ஏனெனில் சென்னைக்குள் எடுப்பது செலவு குறைந்ததாக இருந்தது
 
தந்தையைத் தவிர யார் உங்களை இத்துறையில் ஊக்கப்படுத்தினார்கள்?

டில்லியில் இருக்கும் நந்தகுமார் எனக்கு மிகுந்த ஊக்குவிப்பை அளித்தார். அவர் நரேஷ் பேடியிடம் பணிபுரிந்தவர். எனது மனைவி ராதாவும் ஆதரவாக இருந்தார். அவர் எனக்கு கல்லூரியில் சீனியர். அவர் சில குறும்படங்களை ஏற்கனவே எடுத்திருந்தார். அவர்தான் எனக்கு முதல் வாய்ப்பை அளித்தார். தேக்கடியில் போய் படமெடுங்கள் என்று ஊக்கப்படுத்தி நிதியுதவியும் செய்தார். அக்காலகட்டத்தில் வனங்களில் படமெடுப்பதற்கான சரியான டெலிலென்ஸ் அறிமுகமாகவில்லை. ஐஐடியில் இருந்த நண்பர் ஒருவரின் உதவியோடு, நாங்களே கணக்கெடுத்து வடிவமைத்து போலெக்ஸ் மூவி கேமராவில், புகைப்பட லென்சை பொருத்தி தேக்கடி காடுகளுக்குப் போனோம். ஏனெனில் வனத்தில் படமெடுப்பதற்கு தொலைதூரக்காட்சிகளைப் பார்ப்பதற்கு தகுந்த லென்ஸ் தேவை. இன்றைக்கும் ஸ்டில் காமிரா லென்சைத்தான் மூவி காமிராவுக்குப் பயன்படுத்துகிறோம். வனஉயிர் சினிமாவுக்கான காமிராக்கள் என்று எதுவும் இன்னும் வரவில்லை. ஏனெனில் உலகத்திலேயே மொத்தம் 300 பேர் தான் இத்துறையில் இருக்கிறார்கள். தேக்கடி காடுகளைச் சுற்றி விலங்குகளுக்காக காத்திருந்தோம். எங்கள் அதிர்ஷ்டம், 30, 40 யானைகள் பெரியார் அணைப்பகுதியில் தண்ணீரைக் கடந்து வருகிறது. படம்பிடிக்கலாம்னு காமிராவை இயக்கினால் படமே தெரியவில்லை. என்னவென்று பார்த்தால் நாங்கள் பொருத்திய லென்சின் மறைகழன்று விழுந்துவிட்டது. எங்கள் கண்முன்னால் யானைகள் வரும்போது அதை படமெடுக்கமுடியாமல் போய்விட்டது. அதற்குப்பிறகு மூவிகேமராவை கையில் பிடித்து கிடைப்பதை படம்பிடிப்போம் என்று முயற்சிசெய்தோம். ஆனால் சரியாக வரவில்லை. இரண்டு ரோல் பிலிம் வீணாகிவிட்டது. ராதா எங்களுக்குக் கொடுத்த பணம் எல்லாம் வீணாகப் போய்விட்டது. அப்புறம்தான் தூர்தர்ஷனில் வாய்ப்பு வந்தது. அக்காலகட்டத்தில் தூர்தர்ஷன் தவிர வேறெந்த தொலைக்காட்சியும் இல்லை. பஞ்சாபில் காலிஸ்தான் பிரச்னை உச்சகட்டமாக இருந்தபோது அதைப் படம்பிடிக்க யாரும் போவதற்கு பயந்தனர். நான் போய் அப்பிரச்னை தொடர்பாக நிறைய படங்களை செய்தேன். அதில் வரும் வருமானத்தில் காடுகளுக்குச் சென்று புகைப்படங்களை எடுக்கத்தொடங்கினேன். இதுதான் தொடக்கம்.

இன்றைக்கு வனஉயிர்களைப் பற்றி படங்களை ஒளிபரப்புவதற்கு தனி தொலைக்காட்சி சேனல்களே இயங்குகின்றன. இந்த வளர்ச்சி எப்படி ஏற்பட்டது?

அப்போதைய காலகட்டத்தில் நேஷனல் ஜியாக்ரபி தயாரித்த வனஉயிர் படங்கள் ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் ஒரு மணிநேரம் தூர்தர்ஷனில் காண்பிக்கப்படும் நிலைமையே இருந்தது. உலகம் முழுவதுமே இதுதான் சூழ்நிலை. இங்கிலாந்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று நேச்சுரல் வேர்ல்ட்னு ஒரு நிகழ்ச்சியை பிபிசி ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. ஒரு கட்டத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கான பார்வையாளர் கணக்குகளைப் பார்க்கும்போது, மிக அதிக எண்ணிக்கையில் பார்வையாளர் இருப்பது தெரியவருகிறது. அதனால் பகல்நேர ஒளிபரப்பாக ஆக்கிவிடலாம் என்று நினைக்கிறார்கள். 4 மணிநேரம், ஆறுமணிநேரம் என்று அதிகரித்து 24 மணிநேர சேனல்களாக டிஸ்கவரி, அனிமல் ப்ளானட் போன்றவை மாற்றம் பெறுகின்றன. ஆனால் 24 மணிநேரத்துக்கும் ஒளிபரப்பும் அளவில் உலக அளவிலேயே படங்களுக்குப் பற்றாக்குறை ஏற்படும். ஒரு பிராணியின் வாழ்க்கை சுழற்சியை படமெடுப்பதற்கு மிகவும் காலம் எடுக்கும். ஒரு குட்டி வளரும் வரை காத்திருக்கவேண்டும். இதனால்தான் பீப்பிள் அனிமல் பேஸ்டு படங்கள் வருது. ஒரு நிகழ்ச்சிவழங்குனர் இருப்பார். அவருக்கும் குறிப்பிட்ட விலங்குக்குமான உறவுகளை தொடர்ந்து படம்எடுப்பார்கள். அதனால்தான் 24 மணிநேரத்தை அவர்கள் நிரப்ப முடிகிறது. வனஉயிர் சினிமாக்களின் தொடக்க காலத்தில் வெறுமனே ஒரு பிராணி, அதன் நடத்தைகளை அவற்றைத் தொந்தரவு செய்யாமல் இதுவரை மனிதன் பார்க்காத நிகழ்வுகளை காண்பிப்பதுதான் முக்கியமாக இருந்தது. ஏனெனில் ஒரு பிராணிக்கு காமிரா இருப்பது தெரியவே கூடாது. அப்படி ஒரு பிராணி தொந்தரவுக்குள்ளானால் அதன் நடத்தை இயற்கையானதல்ல.
இந்தியக் காடுகளில் புலிகளைப் படமெடுத்த அனுபவம் பற்றி கூறுங்கள்?

என்னுடைய அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். நான் இத்துறைக்குள் வரும்போது உலகளாவிய அளவிலேயே அதிகம் புலிகளைப் பற்றிய படங்கள் இல்லை. பாந்தவ்கர் என்ற காட்டில்தான் நான் முதலில் புலிகளைப் படம் எடுக்கத் தொடங்கினேன். அங்கே 60 புலிகள் இருக்கும். மத்தியப் பிரதேசத்தில் இருக்கும் காடு அது. அந்த இடம் முன்பு ரீவா மகாராஜாவின் பிரத்யேக வேட்டைப்பகுதியாக முன்பு இருந்துள்ளது. ஒருகட்டத்தில் அதைப் பராமரிக்க இயலாமல் அரசாங்கத்துக்கு அந்த இடத்தை அளித்துவிட்டார். வயல்களும், சாலைகளும் இருக்கும் காடு அது. வயல்களுக்கு நடுவே சாலை இருப்பதால் வயல்கள் வழியாக கடக்கும் புலிகளை படமெடுப்பது அப்பகுதியில் சுலபமாக இருந்தது. நீண்டதூரத்துக்கு ஒரு வண்டியிலோ யானையில் சவாரி செய்தோ புலியின் நடமாட்டத்தைப் பின்தொடர முடியும். இது எங்களுக்கு அனுகூலமாக இருந்தது. நான் முதலில் படமெடுத்த புலியின் பெயர் சீதா. அது ஒரு பெண்புலி. சீதா மண்டபம் என்ற இடத்தில் முதலில் காணப்பட்ட புலி என்பதால் அதற்கு அந்த பெயர் வந்துள்ளது. காட்டில் உள்ள யானைப்பாகன்கள் வைத்த பெயர் அது. நாங்கள் கிட்டத்தட்ட ஒரு ஆண்டு அந்த சீதாவை பின்தொடர்ந்தோம். எங்கள் யானையிடமும் எங்களிடமும் அது இயல்பாக இருப்பதற்கும் பழகுவதற்கும் அந்த காலம் தேவைப்பட்டது. பிறகு யானை வரும்போது அதன்போக்கில் உட்கார்ந்திருக்கும். நாங்கள் படம்பிடிக்கத் தொடங்கினோம். இன்னொரு பிரெஞ்சு சேனல் ஒன்றுக்காக படம்பிடிக்கத் தொடங்கும்போது சீதாவுக்கு குட்டி பிறந்துவிட்டது. அடுத்து ஒரு ஜப்பானிய சேனல் ஒன்றுக்காக படமெடுக்க அதே காட்டுக்குப் போனபோது சீதாவின் குட்டி வளர்ந்துவருகிறது.. இப்படியே தொடர்ந்து அங்கே படமெடுத்ததில் 12,13 ஆண்டுகளில் சீதாவின் ஆறேழு தலைமுறையை நான் படமெடுத்துவிட்டேன். இந்தக்காட்டில்தான் புலிகளின் வெவ்வேறு வாழ்க்கை நிலைகள், நடத்தைகளை படம்பிடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. புலிகள் என்றாலே அல்போன்சா ராய் என்ற பெயரும் இப்படித்தான் வந்தது. ஆனால் நான் புலிகள் மட்டுமின்றி மான்கள், பாம்புகள் உள்ளிட்ட பல உயிர்களையும் படம்பிடித்திருக்கிறேன்
 
வனஉயிர் படமெடுப்பவர்களில் உங்கள் முன்னோடிகள் பற்றி கூறுங்கள்?

இந்தியாவில் முக்கியமானவர்கள் என்று எடுத்தோமெனில், அஷீஸ் சந்தோலாவைச் சொல்லலாம். அவருடன் நான் பணிபுரிந்திருக்கிறேன். நரேஷ் பேடியையும் சொல்லவேண்டும். இவர்கள் இரண்டுபேரும் ஒளிப்பதிவாளர்கள். புகைப்படக்காரர்களில் டிஎன்ஏ பெருமாள் முக்கியமானவர். அவரின் படங்கள் பார்த்து தூண்டுதலாகிதான் நாங்கள் வளர்ந்தோம். மற்றொருவர் எம்.ஒய். கோர்ப்படே.. அவர் மகாராஜாவாக இருந்தவர். மற்றொருவர் ஹனுமந்தராவ். நவீனத் தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் இவர்கள் எல்லாரும் கஷ்டப்பட்டு வனஉயிர் படங்களை எடுத்தவர்கள். இவர்களே காமிராக்களை சொந்தமாக வடிவமைத்து, பிலிம் லோடிங் முறையை உருவாக்கியவர்கள். மா. கிருஷ்ணனும் புகைப்படக்காரர்களில் குறிப்பிடத்தக்கவர். அவர் அ.மாதவையாவின் மகன்.நிலப்பரப்புகளைப் கருப்பு வெள்ளையில் படம்பிடித்துப் புகழ்பெற்ற ஆன்சல் ஆடம்சின் புகைப்படங்களை எனது அப்பாவின் சேகரிப்பிலிருந்து தொடர்ந்து ஈடுபாட்டோடு பார்த்துவந்திருக்கிறேன். ஆன்சல் ஆடம்ஸ் உருவாக்கிய ஜோன் சிஸ்டத்தின் மாணவன் நான். ஒளி குறைவாக இருக்கும் காலை மற்றும் மாலைகளில்தான் மிருகங்கள் வெளியே வரும். அந்த குறைந்த ஒளியில் அப்போதுள்ள பிலிம்களைக் கையாண்டு படங்களை எடுக்க அவர்கள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். இந்தியா வந்து ராஜநாகங்களைப் படமெடுத்த ராம்விடேக்கர் எனது ஆதர்சமாக இன்னமும் திகழ்கிறார். அவருடன் சேர்ந்து நான் பணிபுரிந்துள்ளேன். அகும்வே சோமேஸ்வரும் மிக முக்கியமானவர்
 
ஒரு நேர்காணலில் வனவிலங்குகளின் வாழ்க்கை நிலைகளை இந்திய இயற்கைச்சூழலில் படம்பிடிப்பது சவாலானது என்று கூறியுள்ளீர்கள்..அதை விளக்கமுடியுமா?

ஆப்பிரிக்காவையும் இந்தியாவையும் ஒப்பிட்டோமெனில் ஆப்பிரிக்காவின் காடுகள் சாவான்னா புல்வெளிகளால் நிறைந்தவையாகும். இந்தியக் காடுகள் மரங்கள் நிறைந்தவை. ஆப்பிரிக்காவில் உங்களிடம் நல்ல காமிராவும், தொலைதூரக்காட்சிகளை படம்பிடிக்கும் நல்ல லென்சும் இருந்துவிட்டால் ஒரு இடத்தில் பொறுமையாக அமர்ந்து சிறுத்தை ஒன்று மானைத் துரத்தி வேட்டையாடும் காட்சியை கண்ணுக்கெட்டின தூரம் வரை தொடர்ந்து படம்பிடித்துவிடலாம். மொத்த வேட்டைக்காட்சியும் பதிவாகிவிடும். ஆனால் இந்தியாவில் ஒரு புலி தனது வேட்டையை நடத்தும் காட்சியை முழுமையாக படமெடுக்க எனக்கு 16,17 ஆண்டுகள் ஆனது. அதற்கு முன்பு எனக்கு ஆறேழு வாய்ப்புகள் வந்தன. இந்தப் பக்கம் புலி இருக்கும். அந்தப்பக்கம் மான் ஓடிக்கொண்டிருக்கும். சரியாக புலி மானைப் பிடிக்கும் புள்ளியில் நாம் நகரும்போது நடுவில் ஒரு மரம் காமிராவுக்கு குறுக்கே மறைத்துவிடும்.உங்களுக்கு விலங்குகளால் ஆபத்தான சூழ்நிலைகள் வந்ததுண்டா?

ஒன்றுகூட இல்லை. ஒரு மிருகத்துக்கு மனிதனை அடிக்க வேண்டிய அவசியமே இல்லை. மிருகத்துக்கு மனிதன் நல்ல உணவும் கிடையாது. மனிதர்கள் கீரை சாப்பிடுகிறோம். அதனால் சாலையில் நடந்துபோகும் போது போகன்வில்லா மர இலைகள் கிடப்பதைப் பார்த்தால் அதை எடுத்து சாப்பிடுகிறோமா என்ன? நம்மைப் போலவே புலிகளுக்கும் தனக்கான உணவு என்னவென்று தெரியும். ஜிம்கார்பெட் புத்தகத்தில் வரும் சுந்தரவனக்காடுகளில் உள்ள சூழ்நிலைகள் வேறு. குமாவுன் மலைகளில் வேட்டையாடுவதற்கு சக்தி இல்லாத, பற்கள் விழுந்து போய் மனிதர்களை அடித்த புலிகளைத்தான் ஜிம்கார்பட் கொன்றார். அதைத்தவிர மிருகங்கள் மனிதர்களை வேட்டையாடுவதற்கான வாய்ப்புகள் இல்லவே இல்லை.வனஉயிர்களைப் படம்பிடித்த அனுபவத்தில் இன்னும் எடுக்கமுடியாத சூழ்நிலைகள் என்று ஏதாவது உண்டா?

இதுவரை புலிகளின் தாய்மைக்காலத்தை முழுமையாக படம்பிடிக்க முடியவில்லை. புலிகளின் புணர்ச்சியை காட்சியாக எடுத்திருக்கிறேன். வயிறு வீங்கி கர்ப்பமாக இருக்கும்போது பார்த்திருக்கிறேன். ஆனால் குட்டி போடப்போகும்போது அதைப்பார்க்க முடியாது.. விலங்குகள் கண்ணில் தென்படாமல் போவது இயல்புதான் என்று கண்டுகொள்ளாமல் இருப்போம். ஆனால் பத்து, பதினைந்து நாட்களுக்குப் பிறகு வயிறு வற்றி திரும்பவும் வெளிப்படும். பைனாகுலரில் அதன் வயிற்றில் இருக்கும் முலைச்சுரப்பிகளில் முடியெல்லாம் உதிர்ந்து நகர்ந்திருப்பது தெரியும். அப்போது குட்டிபோட்டிருக்கிறது, பால் கொடுக்கிறது என்று யூகித்துக்கொள்ளலாம். ஆனால் அத்தனை பெரிய காட்டில் குட்டிகளைக் கண்டுபிடிப்பது சிரமமானது. புலிக்குட்டி, ஒரு பூனை போல சிறிதாக இருக்கும். கண்திறக்காத குட்டிகளை தாய்ப்புலி வாயில் கவ்வி ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்குப் பாதுகாப்புத் தேவைக்காக மாற்றுவதும் உண்டு. அந்தக் காட்சிகளைக் காட்டுச்சூழலில் உலகளவில் யாருமே எடுக்கவில்லை. தடுக்கப்பட்ட மிருகக்காட்சி போன்ற சூழ்நிலைகளில்தான் படம் எடுக்கப்பட்டிருக்கிறது. அப்புறம் குட்டிபோட்ட தாய்ப்புலி, வேட்டையாடுவதற்காக குட்டி இருக்கும் இடத்திலிருந்து ஒரு இடத்துக்கு வரும். வேட்டையை முடித்து இறந்த பிராணியை சாப்பிட்டுவிட்டுத் திரும்ப போய்விடும். ஏனெனில் எங்கே இருந்தாலும் குட்டிக்குப் பால் கொடுக்கணும்னு அதுக்குத் தெரியும். இந்த தாய்மையை யாரும் அதற்கு பாடமாக சொல்லிக்கொடுக்கவேயில்லை.
குட்டி போடறதுக்கு முன்னால் தாய்புலி ஒரு வேட்டையை நிகழ்த்தும். அதை நான் படம்பிடித்திருக்கிறேன். ஒரு கொம்போடு உள்ள மானை அது பாய்ந்து தாக்கும்போது அதன் கொம்பு திரும்பி புலியின் வயிற்றைக் குத்திக்கிழித்துவிட்டால் அதோகதிதான். ஆனால் புலி கவனமாக அதை வேட்டையாடி முடிக்கும். பிரசவத்தின் கடைசிக்கட்டத்தில் கூட அது வேட்டையாட வேண்டியதுள்ளது. அதற்குப்பிறகு அதன் பிரசவத்தை என்னால் படம்பிடிக்க முடியவில்லை
 
வனஉயிர் ஒளிப்பதிவு என்பது வெறுமனே காட்சியின்பத்துக்கானது என்று கருதுகிறீர்களா? வனவிலங்குகள் மற்றும் இயற்கையைப் பேணுவதற்கு எவ்வகையிலாவது உதவுகிறதா?

நான் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தொலைக்காட்சிகளுக்காக முதலில் படங்கள் எடுக்கும்போது அதை எல்லா மக்களும் பார்க்கப்போகிறார்கள், அதன்மூலம் மக்களுக்கு வனங்கள் அங்குள்ள உயிர்கள் மீது பரிவும் ஆசையும் வரும் என்று நினைத்தேன். ஆனால் இந்தியாவில் தூர்தர்ஷன் மட்டுமே இருந்தபோது கிராமங்களில் உள்ள மக்கள் யாரும் பார்க்கவில்லை என்று பிறகு உணர்ந்தேன். அப்போதுதான் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற பணக்கார நாடுகளில் உள்ள மக்களின் ஞாயிற்றுக்கிழமை பொழுதுபோக்குக்காக படம் எடுத்துக்கொண்டிருக்கிறோம் என்று அலுப்பு தோன்றத் தொடங்கியது. ஆனால் இப்போது தொலைக்காட்சி ஊடகம் இந்தியாவுக்குள் வந்தாச்சு. இங்கேயும் எல்லா மக்களும் பார்க்கிறார்கள். நான் ஆரம்பிச்ச காலகட்டத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானது. இப்போது தமிழிலும் இந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது. நல்ல முன்னேற்றம்தான்.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக மக்களுக்கு ஒரு சதவிகித அளவுக்கு இந்த நிகழ்ச்சிகள் வழியாக அறிதல் வந்திருக்குது. எங்களது சிறுவயதில் விடுமுறைக்கு கோவில்குளம், உறவினர்கள் வீட்டுக்குப் போவார்கள். சொந்த ஊருக்குப் போவார்கள். ஆனால் தற்போது பொருளாதாரம் வளர்ந்துள்ளது. காட்டுக்கு குழந்தைகளை அழைத்துக்கொண்டு பெற்றோர்கள் போகிறார்கள். ஆனால் காடுகள் பற்றி அவர்களுக்கு இன்னும் அதிகம் தெரியவில்லை. காடுகளில் மிருகங்களை யாரும் பார்ப்பதற்கென்று கட்டிப்போட்டிருக்க மாட்டார்கள். ஆனால் இவர்கள் ஒரு நாளுக்குள்ளேயே விலங்குகளைப் பார்க்க வேண்டும் என்று அவசரப்படுகிறார்கள். காட்டில் நடந்துகொள்ள வேண்டிய முறைபற்றிய விழிப்புணர்வும் இல்லை. அதற்கென உடைகள் அணியவேண்டும். கூச்சல் போடாமல் போகவேண்டும். காட்டில் எதுவெல்லாம் கண்ணுக்குத் தெரிகிறதோ அதெல்லாம் காடுதான் என்கிற அறிவு வரணும். நீங்கள் புலிகளைப் பார்க்க வாய்ப்பில்லாமல் இருக்கலாம். ஆனால் புலி நிச்சயமாக உங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும்.
இந்தியப்புலிகளின் தனிஇயல்பு என்று எதைக்கூறுவீர்கள்?
புலிகளில் ஆறு வகைகள் உண்டு. சைபிரியப் புலிகளில் இருந்து வங்கப்புலி வரை சில இயல்புகள் மாறும். இன்று இந்தியாவில் தான் புலிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஒவ்வொரு வாழிடத்துக்கும் ஏற்றமாதிரி புலிகளின் வாழ்வியல்பும், நடத்தையும் மாறும். சதுப்புநிலங்கள் அதிகமாக உள்ள சுந்தரவனக்காடுகளில் புலிகள் மீன்களையும் அடித்து சாப்பிடும் வழக்கம் உள்ளவை. சைபிரியாவில் முழுமையான பனிநிலத்தில் புலிகள் வசிக்கின்றன. அதனால் அவற்றுக்கு அடர்த்தியாக ரோமம் இருக்கும்.

அடுத்த தலைமுறையில் நம்பிக்கையளிக்கும்படி வனஉயிர் ஒளிப்பதிவாளர்கள் உள்ளனரா?

சரவணகுமாரை முக்கியமானவர் என்று சொல்வேன். எம்எஸ்எசி வனவுயிரியல் படித்துவிட்டு பின்னர் புகைப்படக்கலை, ஒளிப்பதிவு படித்து படங்கள் எடுத்துவருகிறார். அவர் மீது நான் நிறைய நம்பிக்கை வைத்துள்ளேன். நிறைய மாணவர்களுக்கு வனஉயிர் படம் எடுப்பதில் விருப்பம் இருக்கிறது. ஆனால் எத்தனை பேருக்கு ஆழமான ஈடுபாடு இருக்கிறது என்று தெரியவில்லை.தி க்ரேட் காட்ஸ் ஆப் இந்தியா தான் உங்களை அதிகம் பிரபலமாக்கியது. இன்று வனஉயிர் படமெடுப்பவர்களுக்கு இருக்கும் மரியாதையும் இடமும் உங்கள் ஆரம்பகட்டத்தில் இல்லைதானே?

பொதுவாக தொழில்நுட்பக்கலைஞர்களுக்கு இப்போதும் எப்போதும் குறைவான புகழே இருந்துவருகிறது. டிஸ்கவரியில் ஒளிபரப்பான தி க்ரேட் கேட்ஸ் ஆப் இந்தியாவைப் பொறுத்தவரை நிகழ்ச்சியை வழங்குபவனாகவும் நான் காமிரா முன்பு வந்தேன். அதில்தான் எனக்கு பிரபலம் உருவானது. நாங்கள் தொடக்க காலத்தில் வனஉயிர் படங்களை மொத்தமாக பார்ப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு காத்திருக்க வேண்டும். இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டலில் வைல்ட் ஸ்க்ரீன் பெஸ்டிவல் ஒன்றுதான் அதற்கான சந்தர்ப்பமாக இருந்தது. இப்போது எந்தப் படத்தை எந்த மூலையில் எடுத்திருந்தாலும் வீட்டுக்குள் வரவழைத்துவிடலாம்
 
காடுகள் மனிதர்களால் சுரண்டப்பட்டு மெதுமெதுவாக சுருங்கிவரும் நிலையில் விலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகும் சம்பவங்கள் நடக்கின்றன. அதைத்தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம்?

இந்தியாவில் தற்போது 3 சதவிகிதமே காடுகள் உள்ளன. வனப்பாதுகாப்புச் சட்டம் 1974 இல் நடைமுறைக்கு வந்தது. நமது நாட்டைப் பொறுத்தவரை எந்த சட்டமென்றாலும் அதை நூறு சதவிகிதம் சிறப்பாக அமல்படுத்த முடியாது. ஆனாலும் இந்தச் சட்டத்திற்குப் பிறகு பகிரங்கமாக வேட்டையாடும் வழக்கம் குறைந்துவிட்டது. இதனால் மிருகங்களின் தொகை பெருகியுள்ளது. ஆனால் காடுகளின் பரப்போ குறைந்துவருகிறது. யானைகள் போற பாதையில் வீடோ, விவசாய நிலமோ இருந்தால் அது என்ன செய்யும். மேற்கு நாடுகளில் ஒரு வனத்திற்கும் இன்னொரு வனத்துக்கும் இடையில் வாழிடம் உருவானால் யானைகள் செல்வதற்கு என்று சில வழிகளை காடாகவே பராமரிக்கிறார்கள். ஆனால் நம்மிடம் அந்த வழக்கம் இல்லை.
கிழக்குக் கடற்கரை சாலையில் எனது வீடு உள்ளது. முதலில் கொஞ்சம் வீடுகள் இருந்தன. இப்போது நிறைய வீடுகள், விருந்தினர் மாளிகைகள், ரிசார்ட்டுகள் வந்துவிட்டன. ஒரு கட்டத்தில் பாம்புகள் வீடுகளுக்குள் வர ஆரம்பித்துவிட்டன. விஷப்பாம்புகளும் வருகின்றன. ஆனால் என்னைப் போன்றவர்கள் அந்தப் பாம்புகளை ஒரு பையில் காயப்படுத்தாமல் பிடித்து கிண்டிப் பூங்காவில் கொடுக்கிறோம். பாம்பைப் பார்த்தால் அடிக்காமல் தகவல் கொடுங்கள் என்றும் கேட்டுக்கொள்கிறோம். அவற்றின் இடத்தில் நாம் வீடு கட்டிவிட்டோம். என்ன செய்வது?இயற்கை ஆர்வலராகவும், சமூக செயல்பாட்டாளராகவும் நீங்கள் செயல்படுகிறீர்கள்...அதுபற்றி கூறமுடியுமா?

சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை எடுத்துக்கொள்ளுங்கள். எனது சிறிய வயதில் எக்கச்சக்கமான பறவைகள் அங்கே வருவதைப் பார்த்திருக்கிறோம். கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளில் முழுமையாக குப்பை மைதானம் ஆகிப்போனது. சேவ் பள்ளிக்கரணை என்கிற இயக்கத்தில் நானும் சேர்ந்து ரொம்ப நாள் போராடி தற்போது வனத்துறையினர் இதை சரணாலயமாக அறிவித்து வேலி போட்டிருக்கிறார்கள். சாதாரண ஆட்கள் கூட்டம் கூடி கோஷம் போட்டால் கண்டுகொள்ள மாட்டார்கள் என்று எண்ணினேன். நான் போய் நின்றால் பேப்பரில் செய்திவரும் என்பதால் அவர்களுடன் நின்றேன். இந்த குப்பை அத்தனையும் மக்கள் போட்ட குப்பைதான். இந்த இடத்தைக் கடக்கும்போது குப்பை நாற்றம் என்று நாம் குறைசொல்கிறோம். ஆனால் இங்குள்ள குப்பைக்கு நாமும் காரணம் என்பதை மறந்துவிடுகிறோம். பிளாஸ்டிக் குப்பையை தரம்பிரித்து மறுசுழற்சிக்கு அனுப்பலாம். மக்கும் குப்பையை வீட்டு செடிகள் மரங்களுக்கு அடியில் போட்டு உரமாக்கலாம். இப்படிச் செய்தாலே போது பிரமாண்டமாக உருவாகும் குப்பைமேடுகளைத் தவிர்த்துவிடலாம். ஆனால் இந்த எளிய அறிவைக்கூட நவீனமானவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாம் பெறவில்லை என்பதுதான் துயரகரமானது
 
துரோகி வழியாக சினிமா ஒளிப்பதிவிலும் இறங்கியுள்ளீர்கள்...இதற்கான தேவை என்ன?


நான் அடிப்படையில் சினிமா மாணவன் தான். இயற்கையான ஒளியில், சூழ்நிலைகளில் படம்பிடித்த அனுபவத்தை சினிமாவிலும் பயன்படுத்த வேண்டும் என்ற ஆசை வெகுநாட்களாக இருந்தது. துரோகி படத்தில் ஒளிப்பதிவாளனாக பணியாற்றியுள்ளேன். உருமி படத்துக்கு கிராபிக்ஸ் ஒளிப்பதிவாளராக சந்தோஷ் சிவனுடன் பணியாற்றியுள்ளேன். வனம், பிராணிகளின் வாழ்க்கை தொடர்பான சினிமா திரைக்கதை அமைந்தால் திரைப்படத்தை இயக்கவும் ஆசையுள்ளது

நன்றி : த சன்டே இந்தியன் அமேசான் கிண்டிலில் மிதக்கும் இருக்கைகளின் நகரம்

மிதக்கும் இருக்கைகளின் நகரம் அமேசானில் கிண்டில் பதிப்பாக வாங்க இது எனது முதல் தொகுப்பு. 2001-ம் ஆண்டு வெளியானது. ஒரு கவிஞனின் முதல...