Skip to main content

Posts

Showing posts with the label ஆஹா சாகித் அலி

தப்பித்திருப்பவன் - ஆஹா சாகித் அலி

  யாரோ ஒருவன் என் வீட்டில் வசிக்கிறான் இரவில் அவன் குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து கோடையின் கொத்துமல்லியை முகர்கிறான் நங்கா பர்பாத் மலைமீது கடந்த வருடம் ஏறியவர்களைத் தேடும் பணி கைவிடப்பட்டதை ரேடியோ காஷ்மீர் அறிவிப்பதைக் கேட்டுக்கொண்டிருக்கிறான்   அண்டைவீட்டார் துக்கம் கேட்டுவர என் வீடு நொறுங்குகிறது   இது அவனது தருணம் எனது அறையில் மேஜையில் எனது கையெழுத்தைப் பயின்று எனக்கான கடிதங்களுக்கு பதில் எழுதுகிறான் எனது திரும்புதலுக்காக அம்மா பின்னிவைத்திருந்த ஸ்வெட்டரை அவன் அணிந்திருக்கிறான்   வீட்டின் கண்ணாடியோ எனது முகத்தை அவனுக்குக் கொடுத்திருக்கிறது அவன் என் அம்மாவை எனது குரலில் அழைக்கிறான்   அவள் திரும்பிப் பார்க்கிறாள் நான் இல்லவே இல்லாத அவள் கதைகளைச் சொல்வதற்கு திகைத்து நிற்கிறான்.

அஞ்சல் அலுவலகம் இல்லாத நாடு - ஆஹா சாகித் அலி

  1. மினாரெட் புதைக்கப்பட்ட   ஒரு நாட்டுக்கு நான் திரும்பியிருக்கிறேன் களிமண் விளக்குகளின் திரிகளை கடுகெண்ணெய் கொண்டு நனைத்து கோள்களில் கீறப்பட்டுள்ள செய்திகளை வாசிக்க ஒவ்வொரு இரவும் யாரோ ஒருவன் மினாரெட்டின் படிகளில் ஏறிச்செல்கிறான். தொலைந்து போன முகவரிகளைக் கொண்ட கடிதங்களின் சேகரத்திலிருந்து தபால் வில்லை ஒட்டப்படாத கடிதங்களை அவனது விரல் ரேகைகள் ரத்து செய்கின்றன ஒவ்வொரு வீடும் புதைக்கப்பட்டு விட்டது அல்லது காலியாக இருக்கிறது காலியாக? ஏனெனில் நிறைய பேர் தப்பினார்கள், ஓடினார்கள் சமவெளிகளில் அகதிகளானார்கள் இப்போது அவர்களுக்கு ஒரு பெரும் பனிப்பொழிவு மலைகளைக் கண்ணாடியாக மாற்றவேண்டும் அவர்களுக்கு. நம்மை அவர்கள் அதனூடாகப் பார்ப்பார்கள் சுவர் போலச் சூழும் நெருப்பிலிருந்து காக்க வீடுகளைத் தரையில் புதைப்பதை. ராணுவ வீரர்கள் பற்ற வைக்கிறார்கள் தணல்களை ஊதிப் பெருக்குகிறார்கள் எம் உலகத்தை சட்டென்று பற்றும் காகிதக்கூழ் பொம்மையாக்குகிறார்கள் தங்கம் பதிக்கப்பட்ட காகிதக்கூழ் பொம்மைகளாக ஆக்குகிறார்கள் பின்னர் சாம்பலாக்குகிறார்கள். தொழுகைக்கு அழைப்பவர் இறந்தபிறகு எல்லா...

மினாரெட் புதைக்கப்பட்ட நாடு

  இடைவெளி காஷ்மீர் சிறப்பிதழ் இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு டில்லியில் பிறந்து காஷ்மீரில் இளம்பருவத்தைச் செலவழித்து, பின்னர் அமெரிக்காவில் குடியேறிய இந்திய – அமெரிக்கக் கவிஞரான ஆஹா சாகித் அலி, உணர்வுநிலை அடிப்படையில் தன்னை நாடுகடத்தப்பட்டவன்(exile) என்று அடையாளப்படுத்திக் கொள்பவர். மேற்கத்திய இலக்கியம், தாராளவாத கலாசாரத்தின் தாக்கத்துடன் அனைத்துப் பண்பாடுகளையும் தன்னுள் பிரதிபலிக்க அனுமதித்த ஆஹா சாகித் அலி, காஷ்மீரை, எப்போதைக்குமான அகமாகவும், கருப்பையாகவும் மூலாதாரமாகவும் மூலப்படிமமாகவும் ஆக்கிக் கொண்டவர். கல்வியாளர்களும் புகழ்பெற்ற மருத்துவர்களும் புழங்கும் உயர்வர்க்கக் குடும்பத்தில் பிறந்தவர். இந்தியாவில் காலம் காலமாக நீடித்த இந்து – இஸ்லாமியப் பண்பாட்டு உறவுகளின் சாரம் தான் ஆஹா சாகித் அலியின் உள்ளடக்கம். சிறுகுழந்தையாக இருந்தபோது கிருஷ்ணன் வேடத்தில் அவர் பெற்றோர் இவரைப் புகைப்படம் எடுத்திருக்கிறார்கள். கிருஷ்ணனுக்கு தனது வீட்டின் வளாகத்தில் ஒரு ஆலயம் கட்டவேண்டுமென்று சிறுபிள்ளையாக இருந்தபோது அவர் தனது அப்பா, அம்மாவிடம் அனுமதி கேட்க அவர்கள் அதற்கு சம்மதமும் தெரிவித்தார்கள் என...

கஸல் - ஆஹா சாகித் அலி

இழப்பின் மொழியாக எஞ்சியிருக்கும் ஒரே மொழி அரபிதான் இந்த வார்த்தைகள் சொல்லப்பட்டது வேறுமொழியில் அரபியில் அல்ல. மூதாதைகளே எனக்காக ஒரு காலி மனையை விட்டுச் சென்றிருக்கிறீர்கள் குடும்பத்து மையவாடியில் நான் ஏன் உங்கள் கண்களைப் பார்த்து பிரார்த்தனை செய்யவேண்டும் அரபியில் மஜ்னு கிழிந்துபோன உடைகளுடன் இன்னமும் தேம்புகிறான் அவனுடைய லைலாவுக்காக ஐயோ இது பாலையின் பைத்தியம் கிறுக்கான அவனது அரபியில் யார் இஸ்மயிலை செவிமடுக்கிறார்கள்? இப்போதும் அவன் உரத்து வேண்டுகிறான் ஆபிரகாமே, வாள்களை கீழே எறி ஒரு துதி படி அரபியில் நாடுகடத்தப்பட்டிருந்த நிலையில் முகமது தார்விஷ் உலகத்துக்கு எழுதுகிறார் நீங்கள் எல்லோரும் நடுவே நழுவிவிடுவீர்கள் ஓடி மறையும் சொற்கள் கொண்ட அரபியில் நெருப்பு மனிதர்களும் நெருப்பு கற்களும் தோன்றுமென்று குரான் தீர்க்கதரிசனம் உரைத்தது. ஆம் இது இப்போது நடந்துவிட்டது இதுவும் சொல்லப்பட்டுவிட்டது அரபியில். லோர்க்கா இறந்தபோது பால்கனிகளை அவர்கள் திறந்தபடி விட்டார்கள் லோர்க்காவின் கஸீடா பாடல்களை அடிவானத்தில் முடிச்சுகளாகப் பின்னினர் அரபியில். டியிர்யாசினில் இருந்த வீடுகள் இன்று அடர்ந்த காடுக...

நட்சத்திரங்கள் - ஆஹா ஷாகித் அலி

இரவின் முகத்திரையின் வழியாக அவை தொடர்ந்து கசிகின்றன இப்போது தான் பிறந்த விண்வெளிக்கூட்ட சிசுக்களிலிருந்து நட்சத்திரங்கள் அழத் தொடங்குகின்றன. கிரணம் நிகழ்ந்த பிறகு உதிரி நட்சத்திரங்கள் எதுவும் இருப்பதில்லை நட்சத்திரங்களே, நீங்கள் எப்படி நொய்மையாக இருக்க முடியும்? வைகறை வரை என்னுடன் விழித்திருக்கும் உங்களுக்கு நான் மிகவும் நன்றிக்கடன்பட்டவன் உங்களுடன் நானும் உறங்கத் தயாராக இருக்கிறேன் நட்சத்திரங்களே! கடவுள் உன்னில் சூரியனின் தீக்கதிர்களை விதைக்கிறாரெனில் உன் காரணமாகத்தான் முழு இரவும் இந்த உலகம் நட்சத்திரங்களை அறுவடை செய்யப் போகிறது ஷாகித்.  

பனிமனிதர்கள் - ஆஹா சாகித் அலி

எனது மூதாதை, இமாலயப் பனியின் மனிதன் திமிங்கில எலும்புகள் உள்ள பையைச் சுமந்தபடி சாமர்கண்டிலிருந்து காஷ்மீருக்கு வந்தவன் : கடலில் நடந்த ஈமச்சடங்குகளிலிருந்து பெற்ற குலசம்பத்துகள். பனிப்பாறைகளிலிருந்து செதுக்கப்பட்டது அவனது எலும்புக்கூடு அவனது சுவாசமோ ஆர்க்டிக் தனது அணைப்பில் பெண்களை உறையவைத்தான், அவனது மனைவி தண்ணீராக உருகினாள், அவளது முதுமை துல்லியமான ஆவியாதல். அவனது எலும்புகூடு அவன் மகனிடமிருந்து பேரனுக்குத் தரப்பட்டது இந்தக் குலசம்பத்து எனது சருமத்துக்கு அடியில். தலைமுறை தலைமுறையாக வரும் பனிமனிதர்கள் எனது தண்டுவடத்தில் எனது சாளரத்தை ஒவ்வோர் ஆண்டும் தட்டுகின்றனர், அவர்களது குரல்கள் பனிக்குள் கிசுகிசுக்கின்றன.   அவர்கள் குளிருக்கு வெளியே என்னை அனுமதிக்கவே மாட்டார்கள் அத்துடன் எனக்கு நானே உத்தரவாதம் அளித்துக்கொள்கிறேன் கடைசிப் பனிமனிதனாகக் கூட நான் இருக்கலாம்  அவர்களது உருகும் தோள்களில் அமர்ந்து வசந்தத்துக்குள் சவாரி செய்வேன்.

பேஹம் அக்தரின் நினைவில் - ஆஹா சாகித் அலி

1 ஒவ்வொரு செய்தித்தாளிலும் உனது மரணம்  சட்டகமிட்ட கருப்பு - வெள்ளைப் புகைப்படங்களாக  அஞ்சலிக் குறிப்புகளாக    வெதுவெதுப்பான , நீலமான , சாதா வானம்   உற்பாதம் நடந்த சுவடே இல்லாமல்   வரிகளுக்கிடையியே கூட தேம்புதல்களுக்கு   இடம் இல்லை . நான் உலகின் முடிவு குறித்து கதைக்க விரும்புகிறேன் . 2. இன்னும் உனது விரல்கள் பசிகொண்ட  பைரவியை அளக்கிறதா  அல்லது மண்போர்த்திய போர்வையை வெறுமனே  தொட்டுக்கொண்டிருக்கிறதா ? அந்த மரணம் தாங்கிய விதவை , கஜல்  இருண்ட அறைகளில் உன்னிலிருந்து மீளமுடியாமல்  அழுதுகொண்டிருக்கிறாள் வானத்தை அவநம்பிக்கை கொண்டு சூழும்  நிலவு நனைத்த வெண்ணிறத்தை  அவள் துயர் உடையாக அணிந்திருக்கிறாள்   காலிப் , மிர் , பெய்ஸ் ஆகியோரிடமிருந்து  தசாப்தங்களாகப் பக்குவம் பெற்ற ஸ்வரத்தைக் கொண்டு  பேரழிவுக்கு இறுதியாக பொலிவைக் கொடுத்துவிட்டாய் . ஸ்வரமற்ற ஒரு ராகத்தைக் கண்டுபிடிக்கிறேன் . 3 உன்னை குளிர்ந்த சேற்றுக்குள் நாடுகடத்தும்  மூடத்தனமும் வெள்ளைநிறமும் கொண்ட இந்தச் சவப்பேழை  தனது அறியாமையால் என்...

கோஸின்ட்சேவின் கிங் லியர் நாடகத்தை டெல்லியில் பார்த்துவிட்டு வரும்போது - ஆஹா சாகித் அலி

கொடீலியா உடைந்த மதில் சுவரில் தூக்கில் தொங்கும்போது லியர் ஓலமிடுகிறான் "நீங்கள் கல் மனிதர்கள்" பேரரசியும் அரசகுடிப் பெண்களும் சூடும் மல்லிகைப் பூக்கள் குவிந்திருந்த சாலையாக முன்பிருந்த சாந்தினி சௌக்குக்குள் நுழைகிறேன் வாசனைத் திரவியங்களை அவர்கள் இஸ்பஹானிலிருந்து வரவழைத்தார்கள் டாக்காவிலிருந்து துணிமணிகளும் காபூலிலிருந்து தைலங்களும் ஆக்ராவிலிருந்து கண்ணாடி வளையல்களும் வந்தன. இங்கே யாரும் அறியாமல் ஆகிவிட்ட பிரபுக்கள் மறக்கப்பட்ட துறவிகளின் சமாதிகளில் யாசகர்கள் தற்போது வசிக்கின்றனர் தெருவோர வியாபாரிகள் சீப்புகள் முகம் பார்க்கும் கண்ணாடிகளை சீக்கிய கோயிலுக்கு வெளியே விற்கின்றனர்.  தெருவுக்கு அப்பால் ஒரு கொட்டகையில் இந்திப்படம் ஓடிக்கொண்டிருக்கிறது. பிரிட்டிஷ் படைவீரர்களால் கால்களில் சங்கிலி இடப்பட்டு  மகன்கள் தூக்கிலிடப்படுவதைப் பார்க்க இந்தச் சாலைவழியாக அழைத்துச் செல்லப்படும் கவிஞனும் பேரரசனுமான ஸஃபாரை நினைத்துப் பார்க்கிறேன். நாடுகடத்தப்பட்ட நிலையில் அவன் எழுதினான்:  "துரதிர்ஷ்டம் பிடித்த ஸஃபார் தனது வாழ்க்கையின் பாதியை நம்பிக்கையிலும் அடுத்த பாதியைக் காத்திருப்பிலும் கழித...

ஒரு அஞ்சல் அலுவலகமும் இல்லாத நாடு - மூன்றாம் பகுதி - ஆஹா சாகித் அலி

"தொலைந்தவற்றின் முழுமையான வரைபடமும் தீவைக்கப்படும். தொழுகைக்கு அழைப்பவர் இறந்ததிலிருந்து மினாரெட்டின் பாதுகாவலன் நான். நான் உயிர்பிரிவதற்குள் வா. சூரிய ஒளிக்கு நேரே உள்ள, சில சமயங்களில் வெள்ளை, பின்னர் கருப்பாக, ஒரு பைஸ்லி மலராகத் தான் இருக்க வேண்டும்.  அதன் புறத்திலோ பசைகொண்ட தூய்மை, ஈரமாக இலையுதிர் காலத்தின் கடைசி நாட்டை நோக்கி மலர்கிறது -  அதை விலைக்கு வாங்கு, நான் ஒரேயொரு முறை வெளியிட்டு விடுகிறேன், இரவில். நான் கொல்லப்படுவதற்குள், எனது குரல் ரத்து செய்யப்படுவதற்குள் வா.” இந்த கருத்த மழையில், விசுவாசமாய் இரு, மாய இதயமே, இது உன்னுடைய வலி. அதை உணர். அதை நீ உணரவே வேண்டும்.  “எதுவும் மிஞ்சப் போவதில்லை. எல்லாமும் முடிந்துவிட்டது,” அவனது குரலை நான் திரும்பக் கேட்கிறேன் : “இது வார்த்தைகளின் சன்னிதி. எனக்கெழுதிய கடிதங்களை நீ இங்கே கண்டடையலாம். அத்துடன் என்னுடைய கடிதங்களையும். சீக்கிரம் வா, வந்து இந்த காணாமலாக்கப்பட்ட கடித உறைகளைத் திற.”  நான் மினாரெட்டை அடைகிறேன் : நான் நெருப்பு வட்டத்துள் இருக்கிறேன். நான் இருட்டைக் கண்டடைந்துவிட்டேன்.  இது உன்னுடைய வலி. அதை நீ உணர...

சாந்த்னி சவுக், டெல்லி - ஆஹா சாகித் அலி

இந்தக் கோடைக்கால வீதியை விழுங்கு ,  அப்புறம் மழைக்காலத்துக்குக் காத்திரு .  மழை ஊசிகள்  நாக்கில் உருகுகின்றன .  இன்னும் தூரத்துக்குப் போவாயா ? வறட்சியின் ஓர் நினைவு உன்னைப் பிடித்திருக்கிறது  பசிகொண்ட வார்த்தைகளின் ருசி  உனக்குத் தெரியும் உப்பின் எழுத்துக்களை நீ அசைபோடுகிறாய்  உன்னால் இந்த நகரத்தை அலசிக் கழுவ முடியுமா ?  கடிபட்ட நாக்கிலிருந்து மறையும் ரத்தத்தைப் போலே .

டெல்லி ரயில் நிலையத்துக்கு வெளியே உட்கார்ந்திருக்கும் ஜோதிடரின் தலைவிதி - ஆஹா சாகித் அலி

“ பாருங்கள் , கோள்கள் சொல்வதற்கு கவனம் கொடுங்கள்” கடந்து செல்பவர்களிடம் உரக்கக் கத்துகிறார் . கடந்து செல்லும் ட்ரக் வண்டிகள் கிளப்பும் புழுதி கோள்களை மண்டுகின்றன . 

அன்பே சாஹித் - ஆஹா சாகித் அலி

அன்பே சாஹித், எந்தக் கருத்தும், பெரும்பாலான ரஷ்யர்களுக்கு இருப்பதைப் போன்ற பிரிக்க முடியாத ரஷ்யா குறித்த கருத்தும் கூட, ஒரு முழு ஜனத்திரளுக்கு எதிரான போரை நியாயப்படுத்த முடியாது. - எலினா போனர், செசன்யா குறித்து யெல்ட்ஸினுக்கு எழுதப்பட்ட கடிதத்திலிருந்து... எந்த மனித உயிரோ ஒரு மனிதக் கூட்டமோ, ஒரு நகரத்துக்கு மரண தண்டனை தீர்ப்பை அளிக்கும் உரிமையை வைத்திருக்கவில்லை. - சார்லஸ் சிமிக் தொலைதூரத்து நாட்டொன்றிலிருந்து நான் உனக்கு எழுதுகிறேன். எங்கே நாம் வாழ்கிறோமோ அதிலிருந்தும் தொலைவில். நீயும் இருக்க முடியாத அந்த இடத்திலிருந்து. ஒவ்வொருவரும் அவனது முகவரியை தங்கள் சட்டைப் பையில் வைத்திருந்தால் தான் அவனது சடலமாவது வீட்டை வந்தடையும். நகரத்தில் வதந்திகள் எங்களை வந்தடைவதற்குள் வழிதப்பி விடுகின்றன. ஆனால் செய்தி இன்னமும் எல்லைப் பகுதி நகரங்களிலிருந்து எங்களை வந்தடைகின்றன. ஆண்கள் சில்லிடும் நீரில் வெறுங்காலுடன் நிற்கக் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். பெண்களோ உள்ளே தனியாக இருக்கின்றனர். ராணுவ வீரர்கள் வானொலிகளையும் தொலைக்காட்சிகளையும் உடைத்து நொறுக்குகின்றனர். வெறும் கைகளால் அவர்கள் நமது வீடுகளை சுக்குநூ...

அதிகாலை நான்கு மணி, வேங்கை - ஆஹா சாகித் அலி

இந்தப் பாழில் பதிக்க  எதுவோ ஒன்று காத்திருக்கிறது  ரோமம் மூடிய  எதுவோ ஒன்று  வெளியே  ஜனவரிப் பனியில்  இன்னமும் உறங்காமல் விழித்திருக்கிறது . நான் ஜன்னலைத் திறக்கிறேன் :  பத்தாயிரம் மைல்களுக்கப்பால்  குமாவுனின் மலைச்சரிவுகளில் ,  ஆட்கொல்லிக்கு அஞ்சி  குடியானவர்கள் வீட்டுக்குள் பூட்டியிருக்க ,  அவர்களின் குடிசைகளோ  உறைபனிச் சாந்தால் சுற்றிப் போர்த்தப்பட்டுள்ளது . எனக்கு முன்னால் மேஜையில்  காற்று பக்கங்களைப் படபடக்க வைக்கிறது . எதுவோ ஒன்று அசையத் தொடங்குகிறது :  கிராமத்தினர் மறுபடியும்  உயிர்ப்புக்குத் திரும்புகின்றனர் ,  சூரியனோ அவர்களது குடிசைகளுக்கு  திரும்பவும் ஆடை அணிகளைப் பூட்டுகிறது . கழுவத்தக்க வைகறையின் ஊதாக்களை  அது கழுவுகிறது . புத்தகப் பக்கத்துக்கூடாக  எதுவோ ஒன்று அலைந்துலவுகிறது .

கண்ணாடி வளையல்களின் கனவு - ஆஹா சாகித் அலி

கண்ணாடித் துண்டுகள் பதித்த கம்பளியில்  எனது பெற்றோர் இதமாய்  உறங்கிய அந்த இலையுதிர்காலங்கள் எனது அம்மாவின் கரங்களில் வளையல்கள்  இரவில்  உறைந்த நதிகளின் அலைகளைப் போல  தொழுகைகளுக்குப் பிறகு  அவள் தனது அறைக்குள் போகும்போது  படிகளில் உடைபடும்  ஆண்டுகள் கழிந்தபின்னர்  உடைபடும் குளிருக்குள்  பனியின் மெல்லிய ஒலியைக் கேட்டேன் தீவட்டிகளுக்காக கூரைகளிலிருந்து  கூர்பனிக் கழிகளை இழுக்கும்  ஆட்களால் எங்கள் வீடு சூழப்பட்டது நீர்முனைகளை  தீப்பிடிக்க வைக்கும்வரை  சிமெண் டு கருஞ்சிவப்பு சுவர்களில்  அவற்றை த் தேய்க்கின்றனர் . காற்று புதையும் ஈர மணல்பனி  என் தந்தையும்  தாயும்  வீட்டை விட்டு வெளியே  கால் வைக்கும்போது  எரியும் வீட்டுக்குள்  ஒரு விதவை  நதிகளை த் த னது  புஜங்களால் உடைத்து நொறுக்கிக் கொண்டிருக்கிறாள் .

அஞ்சல் அலுவலகம் இல்லாத காஷ்மீர்

காஷ்மீரில் சமீபத்தில் பொதுமக்களும் அரசியல் தலைவர்களும் அனுபவிக்கும் சிறை நிலைமைளோடு, அதுகுறித்து பிராந்திய ஊடகங்களில் நிலவும் மௌனம் கூடுதலாகப் பயங்கரமானது. தொலைபேசி, அலைபேசிச் செய்தித் தொடர்புகள் முதல் விரைவு இணையச் சேவை வரை துண்டிக்கப்பட்டு, கிட்டத்தட்ட அனைவரது மறதிக்குள்ளும் செலுத்த வற்புறுத்தப்படும் பிரதேசமாக காஷ்மீர் மாறியிருக்கிறது. ஜம்மு- காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து துண்டிக்கப்பட்டு, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஓராண்டு நெருங்குவதை முன்னிட்டு, தொடர்ந்து படித்துவரும் செய்திகளின் வழியாக ஏற்பட்ட படபடப்பின் வழியாகத் தான் ஆஹா சாகித் அலியின் ‘தி கன்ட்ரி வித்அவுட் போஸ்ட் ஆபிஸ்’ கவிதைகளை நெருங்கினேன். கவிஞர் ந. ஜயபாஸ்கரன் வழியாக எனக்கு அறிமுகமானவர் காஷ்மீரக் கவிஞர் ஆஹா சாகித் அலி. சென்ற ஆண்டில் கவிஞரும் திரைப்பட இயக்குனரும் நண்பருமான லீனா மணிமேகலை, அரிய பரிசாக அனுப்பி வைத்த  ‘தி கன்ட்ரி வித்அவுட் அ போஸ்ட் ஆபிஸ்’ புத்தகம்  எனது அலமாரியில் பத்திரமாக இருந்தது.  ‘தி கன்ட்ரி வித்அவுட் அ போஸ்ட் ஆபிஸ்’ கவிதைத் தொடர் முதலில் ‘காஷ்மீர் வித்அவுட் அ போஸ்ட் ஆபிஸ்’ என்ற பெயரில் ...

ஓர் அழைப்பு - ஆஹா சாகித் அலி

நான் கண்களை மூடுகிறேன். அது என்னை நீங்கவில்லை காஷ்மீரின் குளிர் நிலவு என் வீட்டை உடைத்து நுழைந்து என் பெற்றோரின் காதலைத் திருடுகிறது. நான் எனது கைகளைத் திறந்து பார்க்கிறேன்: வெறுங்கை, வெறுங்கை. இந்த அழுகையோ அந்நியமானது. “நீ எப்போது வீட்டுக்கு வருவாய்?” அப்பா கேட்கிறார், திரும்பவும் கேட்கிறார். சமுத்திரம் தொலைபேசி வடங்களுக்குள் இடம்பெயர்கிறது. “நீங்கள் எல்லாரும் நிம்மதியாக இருக்கிறீர்களா?” நான் கத்துகிறேன் தொடர்பு மரித்துவிட்டது. தண்ணீர் தொலைபேசி வடங்களிலிருந்து நீங்கிச் செல்கிறது. கடல் அமைதியாக உள்ளது அதன் மேலோ குளிர்ந்த காஷ்மீரின் குளிர் நிலவு.