ஜன்னல்கள் உட்பட முழுக்க அடைக்கப்பட்டு உள்ளே தாழிடப்பட்ட விடுதி அறையில், சில்லிடும் மழைபோல இறங்கும் டெல்லி குளிர் எனக்குப் புதியது. மாலை ஆகிவிட்டால் குளிரில் அசைவுகள் குறைந்துவிடுவதோடு தலையும் உறைந்துவிடுகிறது. குளிர், குளிராக மட்டும் இல்லை; குளிருடன் இனம்புரியாத பயமும் சேர்ந்து இந்த அறையில் இருக்கிறது. இந்தக் குளிரில் தாகம் தீராமல், தண்ணீரைத் தித்திப்புடன் அருந்துகிறேன். கட்டிலின் கீழே இறங்கினால் காலுக்கு எட்டும்படி செருப்பைப் போட்டிருக்கிறேன். அடிக்கடி சிறுநீர் கழித்துவிட்டு, கனத்த கம்பளியைக் கல் சுவர் போல மூடிப் படுத்திருக்கிறேன். வழக்கமாக விளக்கை அணைத்துவிட்டு இருளிலேயே தூங்கமுடியும் எனக்கு விளக்கை அணைக்க முடியாதிருந்தது. அறையில் இருக்கும் பயம் என்னைக் கவ்வாமல் இருக்க இந்த வெளிச்சத்தைத் துணைக்கு வைத்திருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டேன். அப்படியும் பாதி உறக்கம் தான் அதிகாலை வரை. என் அறை ஜன்னலுக்கு வெளியே கைநீட்டும் தூரத்தில் புழுதி படிந்து பகலிலும் இருண்டு தெரியும் சந்தின் மூலையில் இருக்கும் மின்கம்பத்தில் புறாவொன்று தலையை கழுத்துக்குள் செருகிக் கொண்டு உறங்க முயல்கிறது. ஜன்னலி...