Skip to main content

Posts

Showing posts from June, 2024

கனவா? நனவா? – சார்லஸ் சிமிக்

ஒரு பாக்கெட் கடிகாரத்தை விற்பதற்காக தெருவில் ஒருவன் என்னிடம் ஓடிவருகிறான். பழையகால பாதிரியைப் போல கருப்புடையில் ஒரு ஆவியைப் போல் அவன் வெளிறிப்போயிருக்கிறான். ரயில் நிலையத்துக்கு மேலேயுள்ள மணிக்கூண்டின் கடிகாரம் 10.55 ஆனபோது நின்றுவிட்டிருந்தது. வங்கியின் மேலுள்ள கடிகாரமோ இது 3 மணிதானென்று சத்தியம் செய்தது. முள்களோ எண்களோ இல்லாத அவனது கடிகாரத்தைக் காட்டி அவன் வம்படியாய் என்னை நிறுத்திவைத்திருக்கிறான். விலை சொல்வதற்கு முன்பாகவே அவனுடைய கடிகாரத்தை நான் அவதானித்து பாராட்ட வேண்டுமென்றும் விரும்புகிறான்.

குடும்ப இடுகாடு - சார்லஸ் சிமிக்

  குடும்ப இடுகாடு வெகுகாலத்துக்கு முன்னால் ரௌத்திர ஆண்கள் சீற்றம்கொண்ட பெண்கள் அருகருகே  புதைக்கப்பட்டனர். அவர்கள் விட்ட சாபங்களும் நெரிக்கப்பட்ட கதறல்களும் மரங்களை இன்றும் நடுங்கவைக்கின்றன.   எனது தூக்குமேடை எங்கே?   ஆக்கிரமிக்கப்பட்ட ஒரு நகரத்தில் ஒரு குழந்தையைப் போல ஜன்னலுக்கு வெளியே பார்த்துக்கொண்டிருந்தேன் இடுகாட்டைப் போன்ற நிசப்தம்.     காற்று வீசிய நாள் இரண்டு ஜோடி உள்ளாடைகள் ஒன்று வெள்ளை இன்னொன்று ரோஜா நிறம் துணிக்கொடியில் மேலும் கீழுமாக ஆடிப் பறக்கின்றன தங்கள் உக்கிரக் காதலை ஒட்டுமொத்த உலகத்துக்கும் உரைத்தபடி. இரவு எண்ணங்கள் ஒளி அவற்றை அச்சமூட்டுகிறது இருட்டும்கூட அவை நமது கட்டிலை நோக்கி ஊர்ந்துவருகின்றன பேசுவதற்கு அல்ல, கிசுகிசுக்க. பிணவறையில் ஒருவர் செய்வதைப் போன்று. காற்று ஓய்ந்துவிட்டது எனது குட்டிப்படகே, பத்திரமாய் இரு. பார்வைக்கு எட்டும் தூரத்தில் கரை இல்லை.

நவம்பர், டிசம்பர், ஜனவரி - சார்லஸ் சிமிக்

நவம்பர் இந்த இருட்டான   மழையிரவில்   கூடுதல் துல்லியத்துடன்   தெரிகின்றன   வாழ்வில்   சுமந்தேயாக வேண்டிய   ஆண்கள் மற்றும் பெண்களின்   சிலுவைகள் .     டிசம்பர் வரும்போது குளிரடர்ந்த  வயல் களின் மேல் வேறுவகையான வானம் வேறுவகையான ஒளியின் தப்படிகளைத் தொடரும் இன்னொரு வகையான இருட்டு. கண்ணுக்குத் தெரிய ஒரு நாய்கூட இல்லாத வெளியில் தைரியமாக நின்றுகொண்டிருக்கும் பனி தீண்டிய இந்தச் சிறுவீடுகளில் நம்   துணையைக் கோருகிறது . ஜனவரி சின்னஞ்சிறிய ஆரம்பப் பள்ளியின் பனி உறைந்த ஜன்னலில் குழந்தைகளின் கைவிரல் ரேகைகள் எங்கோ படித்தது : குரூரமான சிறைகளை பராமரிப்பதன் வாயிலாகவே ஒரு பேரரசு  தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறது.

சித்திரங்கள் கொண்ட புத்தகம் – சார்லஸ் சிமிக்

இறையியலை என் அப்பா தபால்வழியில் படித்தார் அப்போது அவருக்கு பரிட்சை நேரம். அம்மா பின்னலில் ஈடுபட்டிருந்தாள் நான் சித்திரங்கள் நிறைந்த ஒரு புத்தகத்துடன்  அமைதியாக அமர்ந்திருந்தேன் இரவு வருகிறது. இறந்த அரசர்கள், ராணிகளின் முகங்களைத் தொட்டுப்பார்த்த என் கரங்கள் சில்லிடத் தொடங்குகின்றன.   மாடி படுக்கையறைக் கூரையில் கருப்பு மழை அங்கி அசைந்துகொண்டிருந்தது. ஆனால் அங்கே அது என்ன செய்துகொண்டிருந்தது?   அம்மாவின் கையிலுள்ள நீள் ஊசிகள் வேகவேகமாகச் சிலுவைகளை உண்டாக்கிக் கொண்டிருந்தன என் தலைக்குள்ளி ருந்ததைப் போன்றே அந்தச் சிலுவைகள் கருப்பாய் இருந்தன.   நான் புத்தகத்தில் திருப்பிய பக்கங்கள் சிறகுகளைப் போல படபடத்தன. “ஆன்மா ஒரு பறவை” அவன் ஒருமுறை சொன்னான். எனது புத்தகம் முழுக்க சித்திரங்கள் ஒரு போர் தீவிரப்பட்டது: எனது இதயம் குத்திக் கிழிக்கப்பட்டு கிளைகளில் ரத்தம் வழிய ஈட்டிகள், வாள்கள் ஒரு குளிர்காலத்து வனத்தை அங்கே உண்டாக்கியிருந்தன.

குடிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட சாக்ரடீஸ் - சார்லஸ் சிமிக்

  தீவிரமான குடி இரவொன்றில் துணையாக இருக்க, ஏதோவொரு நுண்கலைக் கழகத்திலிருந்து அவர்கள் தத்துவவாதி சாக்ரடீஸின் சிலையை எடுத்துவந்திருக்கலாம். சாக்ரடீஸ் சிலை மிகவும் கனமாக இருந்தது. இரண்டு பேரும் சேர்ந்து அதை இழுத்துக்கொண்டு வர வேண்டியிருந்தது. இப்படித்தான் சாக்ரடீஸ் சிலையோடு ஒவ்வொரு விடுதியாகச் செல்லவேண்டியிருந்தது. சாக்ரடீஸை பிரத்யேக இருக்கையில் அமரச்செய்தனர். பரிசாரகர் வரும்போது மூன்று கிளாஸ்கள் ஆர்டர் செய்தனர். சாக்ரடீஸ் மதுக்கோப்பையுடன் ஞானம் சுரக்க அமர்ந்திருந்தார். பின்னர் மலிவுவிலை மதுவிடுதி ஒன்றில் ஜிப்சிகள் இசைக்க, சாக்ரடீஸூடன் இரண்டு குடிகாரிகளும் சேர்ந்து ஆடினார்கள். அவர்களுக்கு புதிய நண்பரை மிகவும்  பிடித்துவிட்டது. அவர்கள் சாக்ரடீஸுக்கு முத்தம் கொடுத்தபடி ஒயினையும் குடிக்கவைத்தனர். சாக்ரடீஸ் வாயெல்லாம் சிவப்பாகிவிட்டது. வாய் உடைந்து வழிவது போன்ற சிவப்பு. விடியல் வந்தவுடன் டிராம் பாதை நிறுத்தமொன்றில் சாக்ரடீஸைக் கைவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர். 2-ம் எண் கொண்ட டிராம் வண்டியின் கதவுகள் திறக்கின்றன. உறக்கம் கவிழ்ந்த முகங்களுடன் இறங்கும் தொழிற்சாலைப் பணியாளர்களை, அந்த கிர

எனக்குக் கிடைத்த ஜெர்மன் தலைக்கவசம் – சார்லஸ் சிமிக்

உலகம் தீப்பிடித்து எரிந்துகொண்டிருக்கும்போது வயலினில் கீரீச்சிடும் சத்தங்களை எழுப்பிக்கொண்டிருந்தான், குழந்தை நீரோ. நான் மார்க்கெட்டுக்குப் போய்க்கொண்டிருந்தபோது, சாக்கடையில் தொண்டை வெட்டுண்டு கிடப்பவர்களை ஒருமுறை பார்த்தேன். பின்னர் ஒருநாள் பேன்கள் மண்டிய ஜெர்மன் தலைக்கவசம்  எனக்குக் கிடைத்தது. என் குடும்பத்தில் பிரபலமான கதையாகவும் அது ஆனது. போருக்குப் பின்னரான அந்தச் சில்லிடும் பசிகொண்ட குளிர்காலங்களில் கரியடுப்பைச் சுற்றி நெருக்கமாக அமர்ந்து நள்ளிரவு வரை எல்லாரும் வருத்தத்தோடு பேசிக்கொண்டிருந்ததை நான் நினைவுகூர்கிறேன். அப்போது யாராவது ஒருவர் இரவின் நடுவிலோ ஆரம்பத்திலோ பேன்கள் மண்டிய எனது ஜெர்மன் தலைக்கவசத்தை நகைச்சுவைக்காக எடுத்துவந்து தருவது வாடிக்கையாக இருந்தது. பேன்கள் மண்டிய ஜெர்மன் ஹெல்மட்டை அணிந்துகொண்டு அலையும் அளவுக்கு நான் முட்டாள் பையனாக இருந்தேன். முதியவர்கள் அந்தக் காட்சியைக் கண்டு கண்களில் நீர்வரச் சிரிப்பார்கள். பேன்கள் தலைக்கவசத்தை நிறைத்து ஊர்ந்துகொண்டிருக்கும். ஒரு குருடனால் கூட அவற்றின் ஓட்டத்தைப் பார்க்க முடியும். நான் எதுவும் பேசாமல் அங்கே உட்கார்ந்திருந்தே

அப்பா பிடித்த பன்றிக்குட்டி – சார்லஸ் சிமிக்

இரவு விருந்துகளுக்கான கருப்பு கோட்(TUXEDO SUIT) அணிந்து  எனது தந்தை கையிடுக்கில் பன்றிக்குட்டியுடன் போஸ் கொடுத்த புகைப்படம் என்னிடம் உண்டு. அவர் ஒரு மேடை மீது நிற்கிறார். கழுத்தில் அதீத இறக்கத்தில் வெட்டப்பட விருந்து கவுன்களுடன், களுக்கென சிரித்துக் கொண்டிருக்கும் இரண்டு இளம்பெண்களோடு, அவர் அப்படத்தில் நிற்கிறார். அவரும் சிரித்துக்கொண்டிருக்கிறார். பன்றியின் வாயோ திறந்துள்ளது. ஆனால், அது சிரிப்பதுபோலத் தெரியவில்லை.  அது ஒரு புத்தாண்டு விருந்து. 1926-ம் ஆண்டு. நைட் கிளப் ஒன்றில் அவர்கள் இருந்திருக்க வேண்டும். நள்ளிரவில் விளக்குகளை அணைத்தபின்னர் அந்தப் பன்றிக்குட்டி அங்கே ஓடிவந்திருக்க வேண்டும். அங்கு ஏற்பட்ட குளறுபடியில்  கதறல் ஒலி எழுப்பும் பன்றியை எனது அப்பா பிடித்திருக்க வேண்டும். தற்போது அந்தக் குட்டி அவருடையது. பரிசாகரிடம் கேட்டு வாங்கி ஒரு கயிறை அவர்கள் குடித்துக்கொண்டிருந்த மேஜையில் கட்டிவிட்டிருக்கிறார். அவரும் அந்த இளம்பெண்களும் கயிற்றில் கட்டப்பட்ட பன்றியும் அந்த இரவு முழுக்க வெவ்வேறு இடங்களுக்குச் சென்று குடித்துள்ளனர். பன்றிக்குட்டிக்கும் அவர்கள் சாம்பெய்ன் வாங்கிக் கொடுத்தன

கசாப்புக் கடை – சார்லஸ் சிமிக்

தாமதமாக இரவுநடை போகும்போது சிலவேளைகளில் மூடப்பட்ட கசாப்புக்கடையின் முன்னால் வந்து நிற்கிறேன் .   கைதி தனது சுரங்கவழியை தோண்டும்போதுள்ள ஒளியைப் போல் கசாப்புக்கடையில் ஒரே ஒரு விளக்கு எரிந்துகொண்டிருக்கிறது .   அங்கியொன்று கொக்கியில் தொங்கிக்கொண்டிருக்கிறது பெருங்கண்டங்கள் , மகாநதிகள் , சமுத்திரங்களின் ரத்தம் அப்பிய வரைபடம் .   முடமுற்றவர்கள் , அசடுகளைக் குணமூட்டுவதற்காகக் கொண்டுவரும் இருள்மண்டிய ஒரு தேவாலயத்துச் சொரூபங்களைப் போல   கத்திகள் அங்கே மின்னிக்கொண்டிருக்கின்றன . எலும்புகள் நொறுக்கப்படும் மரத்தண்டு அங்கே வீற்றிருக்கிறது படுகை வரை உலர்ந்துவிட்ட நதியென சுத்தமாய் சுரண்டப்பட்ட மேல்புறம் அங்குதான் நான் பசியாற்றப்பட்டேன் அங்கே இரவின் ஆழத்திலிருந்து வரும் ஒரு குரல் எனக்கு கேட்கிறது .  

வசந்தம் - பெய்ஸ் அஹ்மது பெய்ஸ்

  சமீபநாட்களாக போதையின் அழுத்தம் குறைவதைப் போல இரவு வடிந்துகொண்டிருக்கிறது . வண்ணமயமாக   நறுமணத்துடன் மலரும் பூக்களைப் போல பகல் புடைத்தெழுகிறது . மதுக்கோப்பைகள் காலியாகிவிட்டன ! கவனம் கொள்ளுங்கள் வசந்தம் வந்துகொண்டிருக்கிறது ; இதயங்களை வேட்கையால் நிரப்புங்கள் உங்கள் கண்களையும் ஏக்கத்தால் .

இன்றிரவு - பெய்ஸ் அஹ்மது பெய்ஸ்

 ஒரு இரவுவழியாக ஒரு இரவை  நித்தியத்தின் நெடுவெளியில் வாழ்ந்து தீர்த்துவிட்டேன் எனது நேசத்துக்குரியவளின் சாரம் நிரம்பிய ஒரு அமிர்தக் கலசம் போன்றது. இன்றிரவு, இந்தக் கரங்கள்தான் அதை எடுத்துப் பருகின.

மெய்யான ஆண்டவரே - பெய்ஸ் அஹ்மது பெய்ஸ்

மெய்யான ஆண்டவரே நீங்கள் எனக்கு உத்தரவிட்டீர்கள்: “எனது நேசத்துக்குரியவனே, இந்த உலகின் அரசன் நீ எனது வளங்கள் எல்லாம் உனது செல்வங்கள் நீதான் எனது உதவி அதிகாரி மற்றும் வைஸ்ராய்.” இந்த பாவனையில் நீங்கள் என்னை அனுப்பினீர்கள் அதற்குப் பின்னர் எப்போதாவது என்னிடம் கேட்டிருக்கிறீர்களா: “வாழ்க்கையை எப்படித் தாக்குப்பிடிக்கிறாய், என் நேசத்துக்குரியவனே?” எப்போதாவது என்னிடம் விசாரித்திருக்கிறீர்களா, என் தேவனே? இந்த உலகம் உங்கள் வைஸ்ராயை எப்படி நடத்துகிறது? ஒருபுறம் காவலர்களின் அச்சுறுத்தல் இன்னொருபுறம் கங்காணிகளின் மிரட்டல் பொறியில் மாட்டிக்கொண்ட குருவி சிறகடிப்பதைப்போல நடுங்கும் இதயத்தைத் தாங்கியிருக்கிறது எனது எலும்புக்கூடு. என்ன மாதிரியான அரசனை நீங்கள் உருவாக்கியுள்ளீர்கள் தேவனே? ஒரு கணம்கூட சமாதானப்பட இயலாத துயரங்களின் சங்கிலி. என்னைப் படைத்தவனே எந்த அரசபதவியையும் நான் விரும்பவில்லை! சிறுதுளி கௌரவம் எனக்குப் போதும். இந்த மாளிகைகளும் மாடகூடங்களும் எனது தேர்வுமல்ல. வாழ்க்கை என்னும் நெசவுத்துணியில் ஒரு மூலையைக் கேட்கிறேன். படைத்தவனே நீ எனக்

மிக நெருக்கமாக - பெய்ஸ் அஹ்மது பெய்ஸ்

    உனது அழகால் நிரம்பிய என் கண்கள், நான் விழித்தேன். உனது ஆடை அணிகளைப் போல காற்று புத்துணர்வை அடைந்துள்ளது. என் வைகறையில் உன் தேகத்தின் சுகந்தம் ஊடுருவியுள்ளது. நீ உறங்கும் படுக்கை அறையில் மேற்குக் காற்று உலவி அலைந்திருக்க வேண்டும்.

நாய்கள் - பெய்ஸ் அஹ்மது பெய்ஸ்

  வீதிகளில் திரியும் இந்தத் தெருநாய்கள்... பிச்சைதான் அவர்களுக்கு ஒரே விருந்து. சாபங்கள்தான் தெருநாய்களின் ஒரே உடைமை. வசைகள்தான் அவை உண்டாக்கும் விளைவு. பகலில் களிப்போ இரவில் ஓய்வோ கிடையாது. அசிங்கம்தான் அவர்களின் இருப்பிடம் சாக்கடையோரத்தில்தான் படுக்கை. வெகுண்டால் பரஸ்பரம் மோதிக்கொள்வர். இந்த அற்புதத்தை நிகழ்த்த ஒரு துண்டு ரொட்டி போதும் அவர்களுக்கு. யாராலும் உதைக்கப்படலாம் அவர்கள். பசி கிறங்க வாடிச் சலிக்கப்பழகியவர்கள். இந்தப் பரிதாப விலங்குகள் தலைகளை எப்போதாவது உயர்த்திவிட்டால் இந்தப் பிரபஞ்சத்தை சொந்தமாக்கிக்கொள்ள தீர்மானித்துவிட்டால் தங்கள் குரூரமான எஜமானர்களின் எலும்புகளை கடித்துக்கூட உமிழ இயலும். தாங்கள் அடைந்துவிட்ட இந்த இழிநிலையைப் பற்றி அவர்களுக்குச் சற்றே அறிவுறுத்துங்கள். அவர்களின் வீழ்ந்த வாலை நிமிர்த்தவாவது செய்யுங்கள்.

அகச்சேரனின் கவிதைகள் – அமைதி, அடக்கம், ஆழ்தொனி

  பெயரிலேயே இல்லை எல்லாம் . ஆமாம் . பெயரில்தான் என்ன இருக்கிறது ? ஆமாம் . எல்லாப் பெயர்களும் காலிக்குறிப்பான்களும் அல்ல . சொ . விருத்தாசலம் என்ற இயற்பெயரைக் கொண்டவனின் மேதமையை ‘ புதுமைப்பித்தன் ’ என்று அவனே புனைந்துகொண்ட துடுக்குத்தனமும் தேய்ந்த உணர்வும் கொண்ட பெயர் தாங்கி அர்த்தம் கொண்டுவிட்டது . பெயரில் எல்லாம் இருக்கிறது என்று சொல்லமுடியாவிட்டாலும் பெயர் , சிலவேளைகளில் உயிர் , உள்ளடக்கம் , அதன் உலகம் , அதிலிருந்து சொல்ல விரும்பும் செய்தியை ஏற்றுவிடுகிறது . நகுலன் என்பது வெறும் பெயரா ? விக்கிரமாதித்யன் என்பது வெறும் பெயரா ? கண்டராதித்தன் வெறும் பெயரா ? ராஜமார்த்தாண்டன் வெறும் பெயரா ? ந . ஜயபாஸ்கரன் வெறும் பெயரா ? அபி வெறும் பெயரா ? தேவதேவன் வெறும் பெயரா ? பிரம்மராஜன் வெறும் பெயரா ? ஞானக்கூத்தன் வெறும் பெயரா ? ஸ்ரீ நேசன் வெறும் பெயர்தானா ? அப்படித்தான் . அகச்சேரனும் எனக்கு வெறும் பெயர் அல்ல . கடந்த 20 ஆண்டுகளில் நவீன தமிழ்க்கவிதை அகப்படுத்திக் கொண்ட விரிவான உள்ளடக்க , வெளிப்பாட்டு வகைமையில் அது இழந்த அபூர்வ