Skip to main content

Posts

Showing posts from 2024

மதாரின் குழந்தை

  சஜ்தாவில் குழந்தை - மதார்   தொழத் தெரியாத குழந்தை தொழுகையாளிகளின் வரிசையில் நிற்கிறது   தக்பீர் கட்டுகிறது சூரா ஓதுகிறது கேட்பதைச் சொல்லி செய்வதைப் பார்த்து   தொழுகை முடிந்து உருகி அழும் ஈமான் தாரியின் கண்ணீரை அதற்கு நடிக்கத் தெரியவில்லை . -             அகழ் இணைய இதழில் வெளியான மதார் கவிதைகளில்  ( https://akazhonline.com/?p=8605 )  ‘சஜ்தாவில் குழந்தை’ எனக்குத் திரும்ப வாசிக்கும்போதும் அதிர்வுகளைத் தந்து கொண்டிருக்கிறது.      சமீபத்தில் நான் வாசித்த கவிதைகளில் தனித்துவமான அனுபவத்தைத் தந்த படைப்பு இது. மதாரின் முதல் கவிதை தொகுதியான ‘வெயில் பறந்தது’ தொகுதி பரவலாக கவனிக்கப் பெற்றது.  சின்ன ஆச்சரியம், விந்தையவிழ்ப்பு, ஆரஞ்சு மிட்டாய், பஞ்சு மிட்டாயின் வடிவம், தித்திப்பு கொடுக்கும் சிறிய திளைப்பிலேயே ஆழ்ந்து திருப்தியடைபவராக மதார் எனக்குத் தோன்றினார். தமிழில் ஏற்கெனவே நிகழ்ந்துவிட்ட சாதனைகள் தெரியாதவர்களுக்கு, மறந்தவர்களுக்கு மதார் புதுமையாக இருக்கக்கூடும் என்றே நண்பர்களிடம...

முதல் ரோஜா

கண்களில் ரத்தமேறி குணத்துக்கு எட்டாத தொலைவில் எரியும் ரணம் உறங்காமல் விழித்திருப்பது ஏன்? 000 நான்குமுனைச் சாலையின் நெரிசலில் பிதுங்கும் வாகனங்களின் சக்கரங்கள் ஏறாமல் ஓரப்பாதசாரிகளால் நெரிக்கப்படாமல் இரும்பு வடிகால் துளையின் மேல் துளிக்காயமின்றி கிழிசலோ வாடலோ இன்றி தூசுகூடப் படாமல் துடித்துக் கிடக்கிறது ரத்தச் சிவப்பில் முன்போ பின்போ இல்லாத முதல் ரோஜா. 000 இங்கே சமீபமாக கொலையோ சித்திரவதையோ புணர்ச்சியோ எதுவும் நடக்கவில்லை நேற்று மாற்றிய வெள்ளை படுக்கையில் குங்குமச் சிவப்பு மிளகாய் பழத்தின் பளபளப்புடன் விபரீதப் பூவாய் பூத்திருக்கிறது ஒரு துளி. (நன்றி: அகழ் இணைய இதழ்)

நண்பர் அரவிந்தன்

எதிர்  பிளாட்பாரத்தில் இறந்து இருண்டு கிடக்கும் எலியின் வாலருகே  மினுங்கிக்கொண்டிருக்கிறது அன்பைவிடச் சிறந்த உணர்ச்சி ஒன்று க்ளிங் ளிங் என்ற ஓசையோடு சாலையில் கால் வைக்க முடியவில்லை முன்னும் பின்னும் முரட்டு வாகனங்கள் இடைவேளை இன்றி ஒரு நாள் ஒரு நூற்றாண்டு பல நூற்றாண்டுகள் திடீர் இடைவெளியில் குறுக்காக ஓடி, ஏறினேன். எதிர் பிளாட்பாரத்தில் தவறிக் கிடக்கும் நீர்த் தாவரத்தின் கசிவில் மினுங்கிக் கொண்டிருக்கிறது, அன்பை விட சிறந்த உணர்ச்சி ஒன்று க்ளிங் ளிங் என்ற ஓசையோடு.  - தேவதச்சன் தேவதச்சன் எழுதிய இந்தக் கவிதையில் திரும்பத் திரும்ப ‘அன்பை விடச் சிறந்த உணர்ச்சி’ என்றொரு உணர்ச்சி குறிப்பிடப்படுகிறது. கவிதைக்குள் அது என்னவென்பதை தேவதச்சன் சொல்லவில்லை.அவருடனான ஒரு தொலைபேசி உரையாடலில் அன்பைவிச் சிறந்த உணர்ச்சின்னா அது மரியாதை தான் ஷங்கர் என்று போகிற போக்கில் சொன்னார்.  அரவிந்தனுடனான 30 வருடத்துக்கும் மேலான தொடர்பைப் பற்றிப் பேசுவதற்காக எங்கள் உறவைத் தொகுத்துப் பார்க்கும்போது, மரியாதை தான் அன்பைவிடச் சிறந்த உணர்ச்சி என்று கவிஞர் தேவதச்சன் உரைத்தது ஞாபகத்துக்கு வருகிறது. அன்புக்...

குயில்

நம் தாமச இருட்டுறக்கத்தின் போர்வையைத் துளைத்துக் கிழிக்க முயல்கிறது மீண்டும் மீண்டும் அந்தக் குயிலின் குரல். கதியற்றவர்கள் நாம் என்று அறியுமா அது. எங்கெல்லாம் வந்திறங்கித் தரிக்கிறோமோ அந்த இடமெல்லாம் கதியற்றது என்பதை  அறியுமா அது. மேலான ஒரு கிளையிலிருந்து எங்களைக் குரைத்தெழுப்புவதால் அதுவே ஒரு கதியற்ற பறவை என்றதற்குத் தெரியாமல் போகுமா?

வேண்டாம் எரியட்டும்

நாதியற்றவர் நாம் என்று ஓர்மை மெலிதாய் தொடங்கும்போது உறக்கம், தன் நெசவை ஆரம்பித்துவிடுகிறது கர்மமோ சாவோ சில விளக்குகள் எரியாது. அதை எரியவைக்க முயற்சிக்கவும் வேண்டாம். சில விளக்குகள் அணையாது. அவற்றை அணைக்க முயற்சிக்கவும் வேண்டாம்.

உன் பூ

வெளியே நிசப்தத்தில் தன் மகத்துவத்தின் இருட்டில் யார் பார்வையும் படாத இந்நடுச்சாமத்தில் கொத்துக் கொத்தாய் பூத்து உதிர்ந்துகொண்டிருக்கும் சரக்கொன்றை மரமே எந்தப் பயங்கரத்திலிருந்து விடாமல் சொரிகிறது உன் பூ?

பேரிக்காய்

மூடிய ஒற்றை நிலைக்கதவுக்குப் பின்னால் அம்மா விசும்பிக் கொண்டிருக்க அப்பாவின் உறுமல் உயர்ந்தபடியிருந்த மத்தியான வேளை. வழக்கம்தானே இது என்று ஆறுதல் சொல்வதைப் போல அசந்தர்ப்பத்தில் வந்து சிமெண்ட் முற்றத்தில் என் முகத்தைப் பார்த்தபடி இறுக்கமாய் அமர்ந்திருந்தாள் அத்தை. வீட்டுக்கு காய்கறி வாங்கிப்போகும் உரச்சாக்குப் பையிலிருந்து துழாவி பேரிக்காயை எடுத்துக் கொடுத்தாள். அன்று எனக்கு முதல்முதலாக அறிமுகமான பேரிக்காயைக் கடித்தபோது மிகக் கசப்பாகவும் அந்த மத்தியானத்தின் கனத்தை அதிகரிப்பதாகவும் இருந்தது. நானும் அத்தையும் அந்த வீட்டின் திண்ணையில் ஒன்றாகத்தான் அமர்ந்திருந்தோம். அத்தை எப்போது கிளம்பிச் சென்றாள்? எனக்கு ஞாபகத்தில் இல்லை. அன்றிலிருந்து பேரிக்காயை பார்க்கும்போதெல்லாம் எனக்கு உடம்பெங்கும் பரவுகிறது  அந்தக் கசப்பு.

திருப்பதி

மூன்றாம் சாமத்தின் முடிவு எதுவுமே தெரியாத எதுவுமே பிறக்காத இருட்டினுள் திருப்பதிக்கு அழைத்துச் சென்றாள் அம்மா பெருமாளைப் பார்ப்பதற்கு முன்னால் மலையில் சுற்றும் புலிகளைக் கடக்க வேண்டுமென்றாள். புலி வாயில் சிக்கினாலும் பெருமாளின் திருவடியைப் பார்த்தமாதிரிதான் அவள் உண்டாக்கிய இன்னொரு இருட்டில் கேலியா? சரணாகதியா? எனக்குத் தெரியவில்லை. தென்மூலையில் பிறந்த அம்மாவுக்கு திருப்பதி என்பது சிறுவயதில் கனவாகவும் கதையாகவுமே இருந்திருக்கும். பெருமாளே மகாலட்சுமியைத் தேடி இங்கே வந்தவன்தானே. காலம்காலமாக கூட்டம் கூட்டமாக ஜனங்களும் அந்த லட்சுமியைத்தான் தேடி வந்துகொண்டே இருப்பதாய் திருப்பதியின் திசையைக் காட்டிச் சொன்னாள் அம்மா. ஆட்டோவின் மங்கலான முன்விளக்கொளியில் வாழைத் தோப்புகள் கடப்பதைப் பார்த்தோம் சில்லிடும் ஐப்பசிக் குளிரில் அம்மாவின் உடலோடு நெடுங்காலத்துக்குப் பிறகு கதகதப்புக்காக கட்டிக்கொண்டேன் ‘மணி, இந்த இருட்டுதான் அம்மா’ அசரீரியா என் மனக்கோலமா தெரியவில்லை அவள் முகத்தையே பார்க்க முடியவில்லை. நடுவில் ஆட்டோ திடுக்கிட்டு நின்றது முன் பைதாவுக்கு சற்று முன்னர் வெள்ளை வேட்டி கட்டிய தடித்த சிவப்பு தேகம் வ...

ஓவியர் நடேஷ் மறைந்தார்

(நடேஷின்கோட்டுச்சித்திரங்கள் குறித்த கட்டுரைக்கான இணைப்பு https://www.shankarwritings.com/2021/10/eggu.html ) 1990களில் பிற்பகுதியில் படிப்பை முடித்து சென்னையில் வேலைகளில் சேருவதும் விடுபடுவதுமாக இருந்த காலகட்டத்தில் நவீன ஓவியனாய், தன் கலை ரீதியான சிந்தனையின் நீட்சியாகவே பார்ப்பவர்களிடமும் உடனடியாக மோதி உரையாடல் நிகழ்த்தும்  கலைஞனாக, நண்பராக கொந்தளிப்பும் உற்சாகமுமாய் அறிமுகமானவர் நடேஷ். நண்பர் சி. மோகனுக்கு பிரியத்துக்குரிய வட்டத்தில் நானும் இருந்த நிலையில் அவருக்கு ஏற்கெனவே செல்லமாக இருந்தவர் நடேஷ். 1999 காலகட்டத்தில் என் கோடம்பாக்கம் அறைக்கு வருமளவுக்கு நடேஷ் நெருக்கமாகிவிட்டார்.  புலி, பூனை, நாய் எல்லாமே நேச்சுரலான யோகா மாஸ்டர்ஸ் மாமு, மனுஷனோட பரிணாமத்தில் சீக்கிரம் மூக்கில் ஸ்ட்ரா வளர்ந்துவிடும், நிலத்தடி நீர் எல்லாம் கீழ போய்க்கிட்டிருக்கு என்பது போன்ற கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியபடியேதான் அறைக்குள் நுழைவார்.  அலியான்ஸ் பிரான்சேஸ் கலாசார மையத்தின் நுழைவுக் கூரையில் நடேஷ் பிரமாண்டமாக வரைந்த யானை ஓவியம் பல ஆண்டுகளாக அங்கே பாதுகாக்கப்பட்டு வந்தது. சைக்கிள் ஓட்டும் யானை...

யார்க் கடற்கரையில் - சார்லஸ் சிமிக்

  டிசம்பரின் குளிர்ந்த சாயங்காலத்தில் மகிழ்ச்சியற்றுப் போன ஒரு காதல் ஜோடியை மூழ்கடித்ததைப் பற்றி பொருட்டே இல்லாதது போல இந்த முரட்டு அலைகள் கடுமை காட்டுகின்றன.

குட்டி ஆந்தையே, அலறு - சார்லஸ் சிமிக்

நீ அங்கேதான் இருக்கிறாயா? அங்கு என்ற ஒன்று நிஜமாகவே அங்குள்ளதா என்ன? உன் விருப்பப்படி அலறு அல்லது அமைதியாய் இரு. இருள்சூழ்ந்துள்ளது  இரவு இங்கே நாம் இருப்பதைப் பார்த்து பெரும் ஆச்சரியம் கொள்ள தாமதமாக நட்சத்திரங்கள் வரலாம் அங்கே.

பனி – சார்லஸ் சிமிக்

  யாரொருவரையும் எழுப்பிவிடக்கூடாதென்ற நிச்சயத்துடன் ஒவ்வொரு செதில் மீதும் மென்மையாக  அழுந்தி விழும் பனியைவிட வேறெதுவும் இத்தனை அமைதியாக இருக்க இயலாது.

காலையில் முதல் வேலையாய் - சார்லஸ் சிமிக்

காலையின் முதல் வேலையாய் உனது புழக்கடையில் கிசுகிசுத்துக் கொண்டிருக்கும் பறவைகளை நீ ஒட்டுக்கேட்கிறாய். உன்னைப் பற்றி அவை என்ன சொல்கின்றனவென்று தெரிந்துகொள்ளும் ஆசையுடன்.

ஒரு பகல், ஒரு இரவு அல்ல. நித்தியம் காத்திருக்கிறது யவனிகா

  யவனிகா ஸ்ரீ ராமின் கவிதைகளைப் பற்றித் தொடர்ந்து பேசி , எழுதி வருபவன் என்ற வகையில் , அவனது கவிதைகள் பற்றி சிந்திக்க எண்ணும்போதெல்லாம் இதன் மரபு என்ன ? இதன் வார்படம் என்ன என்ற கேள்வி வருவது பிரதானமானது . 1990- களின் துவக்கத்தில் ‘ இரவு என்பது உறங்க அல்ல ’ தொகுதியின் வழியாக அறிமுகமான யவனிகா ஸ்ரீ ராமின் கவிதைகளை , போர்ஹேயின் சிறுகதைகளைப் பற்றிச் சொல்வதைப் போன்றே ஹைப்ரிட் கவிதைகள் என்று கூறலாம் . கட்டுரையின் த்வனியிலேயே வெளிப்படும் தனித்துவமான கலப்பினக் கவிதைகள் தான் யவனிகா ஸ்ரீ ராமின் தனித்துவம் . யவனிகாவுக்கு முன்னால் தமிழ் புதுக்கவிதையின் முன்னோடியான க . நா . சு . இந்தக் கட்டுரைத் தன்மை கொண்ட கவிதைகளை முயற்சி செய்து பார்த்திருக்கிறார் . அது சோதனை வடிவங்களே தவிர , கலையும் சிந்தனையும் சேர்ந்து வாசகனிடம் திகைப்பை ஏற்படுத்தும் அனுபவத்தைத் தரவல்லவை அல்ல . யவனிகா ஸ்ரீ ராமின் தனித்துவமான நவீன கவிதை வெளிப்பாட்டுக்கு புதுக்கவிதையில் மரபு இருக்கிறதா என்று கேள்விக்குப் பதில் க . நா . சுவின் சோதனைகளில் ...