ஒளி ஏறவேண்டும் வார்த்தைகள் எனது கவிதைகளில் சுபாவமாகப் புழங்கும் விலங்குகள் குறித்து நான் அதிகம் யோசித்துப் பார்த்ததில்லை. அது எனது உலகில் உள்ள எதார்த்தம் என்பதாக மட்டுமே நான் எண்ணியிருந்திருக்கலாம். கவிஞர் ச.முத்துவேல் தனது முகநூல் குறிப்பு ஒன்றில் என் கவிதைகளில் வரும் மிருகங்கள் குறித்துக் கவனப்படுத்தி எழுதியிருந்தார். எனக்கு அவரது குறிப்பு, விசேஷமான உற்சாகத்தைச் சில நாட்கள் தொடர்ந்து கொடுத்து வந்தது. எனது பிரஜைகளுக்குக் கவனம் கிடைக்கிறதென்ற சந்தோஷம் அது. எனது கவிதைகளில் இத்தனை பிராணிகளுக்கு ஏன் இடம் கொடுத்திருக்கிறேன் என்ற கேள்வியும் எழுந்தது. இதற்கான பதிலை நான் நகுலனின் ‘வீடணன் தனிமொழி’ கவிதையிலிருந்து தான் யோசிக்கத் தொடங்கியிருக்க வேண்டும். ராவணன் தன் தம்பி வீடணனைப் பார்த்து, ‘ ஒரு எறும்பைக் கூட இத்தனை சிரத்தையாக வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்பாயோ? ’ என்று கேட்பான். தன்னைத் தவிர பிற உயிர்களை வேடிக்கை பார்ப்பதில் பிறிதின் விஷயங்களுடன் ஈடுபடுவதில் தோல்வியுற்ற துரியோதனனின் அகந்தை களையும் என்று எனது மகாபாரதக் கவிதை ஒன்றில் எழுதியும் இருக்கிறேன். ( சுயபோதை தெளி