Skip to main content

Posts

Showing posts from March, 2021

லீலை - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

வில்டன் அவென்யுவுக்குச் சென்றுகொண்டிருந்த போது இரண்டு கைகள் கவ்வியிருப்பது போல இறுக்கமாக நீல ஜீன்ஸ் அணிந்த 15 வயது யுவதி சாலையில் எனது காரின் முன்பு தோன்றினாள் அவள் சாலையைக் கடப்பதற்காக நிறுத்தினேன் எனது கார் கண்ணாடி வழியாக  தனது செவ்வூதாக் கண்களால் நேரடியாகக் கூர்ந்து பார்த்தாள் அத்துடன் நான் இதுவரை பார்த்திராத அளவில்  மிகப்பெரிய ரோஜாநிற குமிழை பப்பிள் கம்மிலிருந்து ஊதி  வாயிலிருந்து வெளியிட்டாள் நான் கார் வானொலியில் பீத்தோவனைக் கேட்டுக் கொண்டிருந்தேன் அத்துடன் போய்விட்டாள் நானும் பீத்தோவனுடன் விடப்பட்டேன். 

நினைவில் நின்ற புன்னகை - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

(சார்லஸ் புக்கோவ்ஸ்கியின் கவிதைகளில் எனது பால்ய நினைவுகளுக்கு மிகவும் நெருக்கமான கவிதை இது. உலகின் இன்னொரு எல்லையில் தன் வாழ்வடையாளத்தைக் கொண்ட இந்தக் கவிதையில் வரும் அம்மாவுக்கும் என் அம்மாவுக்கும் இடையே பெரிய வித்தியாசமில்லை என்பதுதான் இந்தக் கவிதை தரும் அனுபவத்தை உலகளாவியதாக மாற்றுகிறது. நிலவு போல அம்மா என்பவளும் தொன்மை, தேய்வு, புனிதம் எல்லாம் சேர்ந்த படிமம் தானோ. இதே கவிதையை கவிஞர் பெருந்தேவியும் மொழிபெயர்த்திருக்கிறார்.) ஆளுயர ஜன்னலை மூடும் கனத்த திரைமடிப்புகளுக்கு அருகேயுள்ள மேஜையில் இருந்த குடுவைக்குள் சுற்றிச் சுற்றிவரும் தங்கமீன்கள் எங்களிடம் இருந்தன. புன்னகைத்த முகத்துடன் நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியுடனிருக்க வேண்டுமென்று கருதும் என் அம்மா என்னிடம் சொல்வாள் “சந்தோஷமாக இரு, ஹென்றி” அவள் சரியாகவே சொல்லியிருக்கிறாள்: உன்னால் முடிந்தால் சந்தோஷமாக இருப்பதே நல்லது. ஆனால், தனது ஆறடி இரண்டு அங்குல உயர உடம்புக்குள் எதுவோ உக்கிரம் கொள்ளும்போது எனது அப்பா அவளையும் என்னையும் தொடர்ந்து வாரத்தில் பலமுறை அடித்தார் ஏனெனில் அவருக்குள்ளிருந்து எது அவரைத் தாக்குதல் தொடுக்கிறதென்று அவரால் புரிந

கோடையின் பெண்கள் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

கோடையின் பெண்கள் ரோஜாவைப் போலவும் பொய்யைப் போலவும் மரிப்பார்கள் கோடை பெண்களின் நேசம் இப்போதில்லா விட்டால் எப்போதென்பதைப் போல நெடிதாக இருக்கும் கோடையின் பெண்கள்  யாரையும் காதலிக்கக்கூடும் உங்களையும் கோடை எப்போது முடிவடைகிறதோ அதுவரை அவர்களிடமும் குளிர்காலம் வருகிறது வெண்பனி மற்றும் உறைய வைக்கும் காற்று மற்றும்  மரணம் கூட முகத்தைத் திருப்பும் அசிங்க முகங்கள் -அச்சோ -  அவர்களை எடுத்துக் கொள்வதற்கு முன்னால்.

ஷூக்கள் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

நீங்கள் இளமையாக இருக்கும்போது பெண்கள் அணியும் உயரக் குதிகால் ஷூக்களை காலணி அடுக்கில் தனியாகப் பார்ப்பதே உங்கள் எலும்புகளைத் தீப்பற்றவைக்கும். நீங்கள் வயோதிகத்தை அடைகையில் அது வெறுமனே ஒரு ஜோடி ஷூக்கள் அவற்றில் யாரும் இல்லை அத்துடன் அதுவே நல்லதும். 

என்னைத் தொடரும் கீரிப்பூனைகள்

ஓவியம் வி. சூர்யா கூர்முகம், ஆர்வம் மினுமினுக்கும் கண்கள்,நிமிர்ந்து உடலை வளைத்து துறுதுறுவென்று பார்க்கும் ஆளைப் போன்ற தோற்றம் கொண்ட மீர்கேட் என்ற கீரிப்பூனை, சமீபத்தில் லலித் கலா அகாதமியில் நடந்த க்ரூப் ஷோவில் ஓவியர் வி. சூர்யா வரைந்த ஓவியத்தின் வழியாக அறிமுகமானது. கீரிப்பிள்ளைக் குடும்பத்தைச் சேர்ந்த அணிலின் உடல் நீளத்தைக் கொண்ட இந்த மீர்கேட்கள் ஆப்பிரிக்காவின் தென்முனையில் வசிப்பவை. நடக்கும்போதும் ஓடும்போதும் அணில் போல ஊர்ந்து செல்லும் இந்த மீர்கேட்கள் குழு குழுவாக வாழக்கூடியவை. தூரத்தில் சத்தம் ஏதாவது வந்தாலோ, வேட்டையாட வரும் விலங்குகளைக் கண்காணிப்பதற்கோ முன்கால்களை உயர்த்தி நட்டமாக நின்று பார்ப்பவை. உடல் முழுக்க ரோமத்துடன் அகமும் புறமும் மென்மையான நடத்தை கொண்டவை.   மீர்கேட்கள் என்று சொல்லப்படும் கீரிப்பூனைகளின் இயல்பையும் அதன் முகத்தில் இருக்கும் ஆர்வத் துறுதுறுப்பையும் பார்த்தவுடன் இது என்னுடைய விலங்கு என்று தோன்றிவிட்டது. எனது கவிதைக்குள் வரவேண்டியதென்று அகத்தில் சேகரித்துக் கொண்டேன். எனது அடுத்த கவிதைத் தொகுதியின் அட்டையில் இந்த மீர்கேட் 90 சதவீதம் இடம்பெறக் கூடும்.   மிகத் தா

உனது இதயம் நலமா? - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

எனது மோசமான சந்தர்ப்பங்களில் பூங்கா பெஞ்சுகளில் சிறைகளில் அல்லது விலைப்பெண்களுடன் வாழும்போது எப்போதும் குறிப்பிட்ட திருப்தியுடன் இருந்திருக்கிறேன் அதை நான் மகிழ்ச்சி என்று சொல்லமாட்டேன் என்னதான் நடந்தாலும் தரித்திருக்கும் அகச் சமநிலை போன்ற அது தொழிற்சாலைகளில், பெண்களுடன் உறவுகள் சீர்குலையும்போது உதவியிருக்கிறது.  மோதல்களில் முந்தினநாள் மிகு குடியால் ஏற்பட்ட தலைவலிகளில் புழக்கடைச் சந்துகளில் நடக்கும் சண்டைகளில் மருத்துவமனைகளில். மலிவான அறையில் கண்திறக்கும்போது தெரியாத நகரத்தில் எழுந்து ஜன்னல் திரையை விலக்கிப் பார்க்கும்போது இருந்த வினோதமான திருப்தி அது பழைய ஒப்பனை மேஜையை நோக்கி தரையிலிருந்து எழுந்து விரிசலுற்ற கண்ணாடியில் என்னை, அசிங்கமாக, சிரித்தபடி பார்ப்பது  நெருப்பில் நடக்கும்போது  எவ்வளவு சீராய் கடக்கிறீர்கள் என்பதுதான் எல்லாவற்றிலும் முக்கியமானது. 

வெள்ளை நாய் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

ஹாலிவுட் பொலிவர்ட் சாலையில் நடைபயிற்சிக்கு சென்றிருந்தேன் பெரிய வெள்ளைநிற நாயொன்று என்னுடனேயே நடந்துவந்ததைப் பார்த்தேன் அதன் வேகம் என்னுடையதைக் கிட்டத்தட்ட ஒத்திருந்தது நாங்கள் போக்குவரத்து சமிக்ஞைகளில் நின்றோம் நாங்கள் சேர்ந்து பக்கவாட்டுத் தெருக்களைக் கடந்தோம் அப்புறம் நான் ஒரு பலசரக்குக் கடைக்குள் சென்றுவிட்டேன் நான் வெளியே வந்தபோது அவன் போய்விட்டான் அல்லது அவள் போய்விட்டாள். ரோமத்தில் மஞ்சள் தீற்றலைக் கொண்ட அந்த அற்புதமான வெள்ளைநாய் அது. அந்தப் பெரிய நீலக் கண்கள் போய்விட்டன. அந்தச் சிரிக்கும் வாய் போய்விட்டது. தொங்கும் அதன் நாக்கு போய்விட்டது. வஸ்துக்கள் எளிதாகத் தொலைந்துவிடுகின்றன. எப்போதும் உடன்வைத்துக் கொள்ள முடியாத வஸ்துக்கள். எனக்கு மனச்சோர்வு வந்தது. எனக்கு மனச்சோர்வு வந்தது. அந்த நாய் என்னை நேசிக்கவும் நம்பவும் செய்தது அதை நான் என்னிடமிருந்து போகச் செய்துவிட்டேன். 

இருளை அணை - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

கலக்கமே கடவுள் பைத்தியம்தான் தெய்வம் நிரந்தரமாக இருக்கும் அமைதி என்பது நிரந்தரமாக குடியிருக்கும் மரணம். துயர் கொல்லும் அல்லது துயரால் வாழ்வை நிலைநிறுத்த முடியும் ஆனால் அமைதி எப்போதும் அச்சுறுத்துவது அமைதி என்பது பயங்கர வஸ்துவாகத் தெரிகிறது நடப்பது பேசுவது சிரிப்பது அமைதி போன்று காணப்படுவது. ஓரநடைபாதைகளை மறக்காதீர்கள் வேசிகளை துரோகத்தை ஆப்பிளின் புழுவை மதுவிடுதிகள், சிறைகள் காதலர்களின் தற்கொலைகளை. இங்கே அமெரிக்காவில் நாங்கள் ஒரு ஜனாதிபதியையும் அவருடைய சகோதரனையும் படுகொலை செய்தோம் இன்னொரு அதிபர் பதவியிலிருந்து விலகியிருக்கிறார். அரசியலை நம்புபவர்கள் கடவுளை நம்பும் நபர்களைப் போன்றவர்கள்: அவர்கள் ஒடிந்த உறிஞ்சுகுழாய்களைக் கொண்டு காற்றை உறிஞ்சுகின்றனர்.  அங்கே கடவுள் இல்லை அங்கே அரசியல் இல்லை அங்கே அமைதி இல்லை அங்கே நேசம் இல்லை அங்கே கட்டுப்பாடு இல்லை அங்கே திட்டம் இல்லை கடவுளிடமிருந்து ஒதுங்கியிரு தொந்தரவுற்று இரு அப்பாலே இரு. 

உங்கள் கண்கள் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

நான் எனது பிஎம்டபிள்யுவில் ஏறி  எனது அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கோல்ட் கார்டைப் பெற வங்கிக்குச் சென்றேன் சேவையில் இருந்த பெண்ணிடம் எனது தேவையைக் கூறினேன் “நீங்கள் திரு. சினாஸ்கியா" என்று கேட்டாள். “ஆமாம். ஏதாவது அடையாள அட்டை தேவையா?” “வேண்டாம், உங்களைத் தெரியும்.” அட்டையை எடுத்து பணப்பையில் வைத்துக் கொண்டு கார் நிறுத்துமிடத்துக்கு வந்து  பிஎம்டபிள்யுவில் ஏறி (முழு ரொக்கம் கொடுத்து வாங்கியது) நல்ல ஒயின் ஒரு பெட்டி வாங்குவதற்காக மதுக்கடைக்குச் செல்வதற்கு முடிவு செய்தேன். போகும் வழியில், இந்த முழு விஷயங்களையும் கவிதையாக எழுத முடிவுசெய்தேன். பிஎம்டபிள்யு கார் வங்கி வங்கி அட்டை பற்றியெல்லாம் எழுதி  விமர்சகர்கள் எழுத்தாளர்கள் வாசகர்களை எரிச்சல்படுத்த எண்ணினேன் உறையவைக்கும் குளிரில் பூங்கா பெஞ்சுகளில் உறங்குவது மலிவான வைனைக் குடித்து சத்துக்குறைவால்  நான் செத்துக் கொண்டிருப்பது பற்றி எழுதப்பட்ட பழைய கவிதைகளைத்தான் அவர்கள் அதிகம் விரும்பினர். அந்த ஓரத்து விளிம்பில்  தரிக்கும் மனிதன் மட்டுமே படைப்பு மேதையாக இருக்கமுடியும் என்று நினைப்பவர்களுக்கு ஆனாலும் அதை முயற்சித்துப் பார்ப்பதற்கு தைரியமே இல

மனிதன் தன்னிடம் திரும்பும் கதை

வேலை, அலுவலகம், உறவு, அந்தஸ்து என்ற சராசரி சமூக வரையறையில் பொருந்திப்போகும் அனைத்துத் தகுதிகளையும் குணங்களையும் கொண்டவன்தான் ‘கறையான்’ நாவலின் நாயகன் சியாம். மேலதிகாரி தன்னைக் வேசிமகன் என்று திட்டிவிட்டார் என்பதை முன்னிட்டு சௌகரியங்களைத் தந்த வேலையிலிருந்து வெளியேறுகிறான். அன்றிலிருந்து அவனுக்கு அதுவரை தெரிந்த, அறிந்த உலகம் மூடிவிடுகிறது; அவன் வசிக்கும் கொல்கத்தாவுக்குள்ளேயே மாயமும் ஏகாந்தமும் கொண்ட இன்னொரு உலகம் திறக்கிறது. அங்கே அவனுக்கு வர்க்கம், மதம், தேசம், பாலின அடையாளம் எதுவும் இல்லை; மனிதனுக்கும் நாய்க்கும் அங்கே பேதமில்லை; நன்மை, தீமை என்று சமூகம் வரையறுத்திருக்கும் பிரிவினைக் கோடுகளும் இல்லை. வேலையை விட்ட பிறகு, தான் இதுவரை சேர்த்துவைத்த நற்பெயர், தோழிகளிடமும் நண்பர்களிடமும் உருவாக்கியிருந்த கவர்ச்சி, பொது இட நாகரிகம் என எல்லாவற்றையும் பணயம் வைத்து விளையாடும் விளையாட்டுகள் அவை. புத்தியைத் தொலைத்தவன்போல, ஒரு கனவின் விளிம்பில் அவனது அன்றாட வாழ்க்கை இன்னொன்றாகத் துலங்கத் தொடங்குகிறது. சியாமின் தோழி இதூ, அவனை எத்தனையோ உற்சாகப்படுத்தினாலும் உற்சாகம் கொள்ளவில்லை. ஒரு கட்டத்தில், சி

அபியின் அ-புண்ணியர்கள்

அபியின் 'தெருவில் நாம்' கவிதையில் முகம், உடல் இல்லை. முகங்கள், உடல்களின் தொகுதி  சினிமாவாக விரிகிறது. தொகுதியாகும் போது தனியியல்பு அனைத்தும் பிரமாண்டம் கொள்கிறது.  தீர்மானத்தின் வலு கொண்டு வரையப்பட்ட கவிதை இது. வருவோம் போவோமாய்த் தெருவை நிறைப்போம் என்று சொல்லும் ஆட்கள் அல்ல செயல்களாகத் தெரிகிறது.  தெரு கனத்துத் திகைக்க அவர்கள் நிறைகிறார்கள், ஏணியில் ஏறத்தொடங்கும் சித்திரம் நம்முன்னர் வரையப்படுகிறது. வாசல், திண்ணை, படிகளில் வான்வெளி முழுவதும் நெரிந்து பெருகுவோம் என்ற தீர்மானம் அந்தச் செயலில் இருக்கிறது.  பிம்பங்களும் குரல்களும் பார்வைகளும் எண்ணங்களும் பாவனைகளும் சாயைகளுமாய் அடையாளம் குலையாது அடர்ந்து செறிவோம் என்று சொல்லும்போது முரண் ஏற்படுகிறது. இத்தனையும் சேர்ந்தபிறகும் மிஞ்சும் சுயம்தான் எது அய்யா? காலம் ஒற்றியெடுத்துப் பரிமாணங்களுள் அடைத்த நகல்கள் அழித்த பின்னரும் அழியாத அசல்களாகத் தெருவை நிறைக்கும் அந்த ஆசை எந்த சுயத்தின் ஆசை? கேள்விகள் தோள்களில் பற்றித் தொடரத்தான் செய்யும் ஆனாலும் எங்கும் இல்லாதிருந்து எங்கும் வருவதும் போவதுமாய் தெருவை நிறைக்கத்தான் வேண்டும்.  பாற்கடலில் அ

இறந்த விலங்குகளின் ஆன்மாக்கள் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

இறைச்சி வெட்டும் கூடத்திலிருந்து திரும்பும் வழியில் மூலையில் ஒரு மதுக்கூடம் இருந்ததால் அங்கே அமர்ந்து ஜன்னல் வழியாக சூரியன் இறங்குவதை பார்த்துக் கொண்டிருந்தேன் உயரமாய் உலர்ந்துபோன காட்டுச் செடிகள் ஜன்னலை மறைத்து நிற்கின்றன. இறைச்சிக்கூடத்தில் வேலை முடிந்தபிறகு ஷவரில் குளிக்கும் பையன்களுடன் நான் குளிப்பதில்லை அதனால் வியர்வை மற்றும் ரத்தத்தின் வீச்சம் என்னிடம் இருந்தது வியர்வையின் வீச்சம் கொஞ்ச நேரத்தில்  குறையும் ஆனால் ரத்தத்தின் நெடியோ  துளைக்கத் தொடங்கி ஆதிக்கத்தை நிறுவும். என்னுடன் பயணிக்கும் இறந்துபோன அந்த விலங்குகளின்  ஆன்மாக்களோடு சேர்ந்து நான் பேருந்தில் ஏறும் அளவுக்கு இலேசாக உணரும்வரை  சிகரெட்களைப் புகைத்து பீரைக் குடித்தேன் பேருந்தில் ஏறியவுடன்  தலைகள் மெதுவாக என்னை நோக்கித் திரும்பும் பெண்கள் எழுந்து என்னிடத்தை நீங்கி செல்வார்கள். பேருந்திலிருந்து இறங்கியவுடன் ஒரு வீட்டுத்தொகுதி ஒரு மாடியைக் கடந்தால் போதும் என் அறை வந்துவிடும் அங்கே எனது வானொலியை ஒலிக்கவிட்டு ஒரு சிகரெட்டைப் பற்றவைக்கலாம் அத்துடன் அங்கே எவரும் என்னைப் பொருட்படுத்த மாட்டார்கள். 

சவைத்து நசித்து பிய்த்து ஒடித்த பின்னும்

  நான் சிறுவனாக இருந்தபோது எறும்பை சும்மா வேடிக்கை பார்க்கவில்லை ஈயை வேட்டையாடி நசுக்கி இரையாக இட்டு எறும்புகளின் அன்றாடத்தை அவதானிப்பது சுவாரசியமாய் தெரிந்தது. எனது எல்கேஜி சகா சண்முகப் பிரியா ரயில் பூச்சிகளைச் சுருட்டி கையில் எடுத்து வாயில் போட்டு மென்று விழுங்குவாள் இப்போதும் நினைக்கும்போது எனக்கு நெறுநெறுவென்றிருக்கிறது பார்க்கும்போதும் கடக்கும்போதும் பசுமையாய் படர்ந்து நிற்கும் செடியின் கிளையை அதன் மென்பூக்களை பிய்க்கும் பழக்கம் சிறுமியிலிருந்து இந்த நாற்பதிலும் தொடர்வதாகச் சொல்கிறாள் அலுவலக சகா பார்வதி. தவறே செய்யாதபோதிலும் வம்பாய் அடித்து அழவைக்கும்போது அப்பா உயிர்ப்பாக இருந்தாரென்று குட்டிச் சிறுவனாக இருந்த எனக்குத் தெரியும் நானும் அம்மாவும் அழுதுகொண்டிருந்தபோது அப்பா நாற்காலியில் அமர்ந்து நகங்களை ரத்தம்வரக் கடித்தபடி  எங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார் வீடு அப்போது உஷ்ணமாக இருந்தது அன்றைக்கு இரவு என் அம்மாவுக்கு புதிய வெள்ளிக்கொலுசை வாங்கி வந்தார் அப்பா.  சவைத்து நசித்து பிய்த்து ஒடித்து பின்னும்.

எனது பூனைகள் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

எனக்குத் தெரியும். எனக்குத் தெரியும். அவை வரையறைக்குட்பட்டவை அவற்றுக்கு வித்தியாசமான தேவைகள் மற்றும் கவலைகள். ஆனால் நான் வேடிக்கை பார்க்கவும்  அவற்றிடமிருந்து கற்றுக்கொள்ளவும் செய்கிறேன். அவற்றுக்குத் தெரிந்த சொற்பத்தை நான் விரும்புகிறேன் அது மிக அதிகம். அவை புகார் செய்கின்றன ஆனால் கவலைப்படுவதில்லை. ஆச்சரியமான கம்பீரத்துடன் அவை நடக்கின்றன. மனிதர்களால் புரிந்துகொள்ளவே முடியாத வகையில் அவை அப்பட்டமான எளிமையுடன் உறங்குகின்றன. நமது கண்களைவிட அவற்றின் கண்கள் கூடுதல் அழகுடையவை. ஒரு நாளில்  20 மணிநேரங்கள் தயக்கமோ குற்றவுணர்வோ இன்றி அவற்றால் தூங்கமுடியும். நான் மிகவும் சோர்வாக உணர்கையில் நான் செய்வதெல்லாம் எனது பூனைகளைக் கவனிப்பேன் எனது தைரியம் திரும்பிவிடும். நான் இந்தப் பிராணிகளை அவதானிக்கிறேன். அவை என்னுடைய ஆசிரியர்கள். 

ப்ரவுனி கடலைப் பார்க்கவில்லை

ப்ரவுனி பிறந்த இடம் சென்னைதான் ரயிலைப் பார்த்திருக்கும் ப்ரவுனி இதுவரை கடலைப் பார்த்ததில்லை மெரினாவுக்கோ பெசண்ட் நகருக்கோ போய்  கடலைப் பார்க்கவேயில்லை என்ற கவலையும் மூன்று வயதாகும் ப்ரவுனிக்கு இல்லை எனது நண்பர் ஒருவர் மனைவி ஊருக்குப் போயிருந்தால் கடற்கரைக்கு எங்களோடு வருவார் வீட்டில் மனைவி இருந்தால்  கடலைப் பார்ப்பதில்  அவருக்கு ஏனோ ஈடுபாடு இல்லை  ப்ரவுனி தாஜ்மகாலைப் பார்க்கவில்லை ப்ரவுனி தியான்மென் சதுக்கத்துக்குப் போகவில்லை ப்ரவுனி யாத்வஷேமுக்குப் போய் அஞ்சலி செலுத்தியதில்லை ப்ரவுனி நயாகராவை அருகிருந்து ரசிக்கவில்லை ப்ரவுனி என்னைப் போலக் கவிதை எழுதவில்லை அதைப் பற்றியெல்லாம் ப்ரவுனிக்கு புகாரும் ஏக்கமும் இல்லை ப்ரவுனிக்கு நாங்கள் இருக்கும் தெருவைச் சுற்றி இரண்டு தெருக்கள்  பயணிக்கவும் ஒன்றுக்கு இருக்கவும் கழிக்கவும் போதும் ஆர்வ முகர்வுகளுக்கும் சில கார்கள் சில இரண்டு சக்கர வண்டிகள் சில அமைதி மூலைகள் போதும் கால்களை நாக்கால் தொட்டு உறவாட  சில முகம்கொண்ட  மனிதர்களும் போதும் போதும்  தனது உயிர்ப்பைத் தொடர்வதற்கு.

ஒரு காதல் கவிதை - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

அந்தப் பெண்கள்  அவர்களின் முத்தங்கள் அவர்கள் நேசிக்கும் விதவிதமான வழிகள் அத்துடன் அவர்கள் பேச்சும் அவர்களது தேவையும் அவர்களின் காதுமடல்கள் அவர்கள் எல்லோருடைய காதுமடல்கள் மற்றும் தொண்டைகள் மற்றும் ஷூக்கள் மற்றும் வாகனங்கள் மற்றும் முன்னாள் கணவர்கள். பெரும்பாலும் அவர்கள் மிகவும் இதமானவர்கள் வெண்ணெய் இடப்பட்ட ரொட்டியில் வெண்ணை உள்ளே உருகுவது போல. கண்ணில் ஒரு பாவம் இருக்கிறது துச்சமாகக் கருதப்பட்டிருக்கிறார்கள் முட்டாளாக்கப்பட்டிருக்கிறார்கள் அவர்களுக்கு எப்படி உதவவேண்டுமென்று எனக்கு நிச்சயமாகத் தெரியாது. நான் ஓரளவு பரவாயில்லாத சமையல்காரன் பேசுவதை செவிகொடுத்துக் கேட்பவன் ஆனால் நான் நடனமாட பயிற்சி எடுக்கவேயில்லை நான் பெரிய விஷயங்களில் தீவிரமாக முன்னர் ஈடுபட்டிருந்தேன். ஆனால் அவர்களின் விதவிதமான படுக்கைகளை நான் அனுபவித்திருக்கிறேன் சிகரெட்களைப் புகைத்தபடி உட்கூரைமுகட்டை வெறித்தபடி. நான் தீங்கானவனும் அல்ல அநியாயமானவனும் அல்ல வெறும் மாணவன். வெறும்பாதத்துடன் அறையில் அவர்கள் நடக்கும்போது இருட்டில் அவர்களது நாணமுடைய பிருஷ்டங்களை நான் பார்த்துக் கொண்டிருக்கும்போது அவர்களுக்கு என் மீதிருக்கும் நம்ப

நேசிக்கத் தகுந்த ரத்தக்காட்டேரி

‘நேசத்தின் இன்மைதான் இருப்பதிலேயே மோசமான வலி' என்று தனது கதாபாத்திரமான டிராகுலாவைப் பேசவைப்பதன் மூலம் ரத்தக்காட்டேரியின் தனிமையும் உறவுக்கான தவிப்பும் நிறைந்த பாழ் உலகத்துக்குள் 'நாஸ்பெராடூ தி வேம்பயர்' திரைப்படம் வழியாக வெர்னர் ஹெர்சாக்கால் அழைத்துச் செல்லப்படும்போது தீமையின் ஒட்டுமொத்தப் படிமமாக இருக்கும் கவுன்ட் ட்ராகுலா மீது பரிவுகொள்ளத் தொடங்குகிறோம்.  பிரான்சிஸ் போர்ட் கப்போலாவின் டிராகுலாவை விட, ஹெர்சாக்கின் டிராகுலா தனிமையில் அரற்றிக் கொண்டிருக்கும் கவிஞனின் உருவகமாக இருக்கிறது.  “காலம் என்பது ஒரு பள்ளத்தாக்கு. ஓராயிரம் இரவுகளைப் போன்ற ஆழம்...நூற்றாண்டுகள் வந்து போகின்றன...வயோதிகம் அடைய முடியாமல் இருப்பது பயங்கரமானது...மரணம் இதை ஒப்பிடும்போது மோசமல்ல...ஒவ்வொரு நாளும் ஒரே வியர்த்தத்தை அனுபவித்தபடி நூற்றாண்டுகளாக வாழ்வதை கற்பனை செய்ய முடியுமா உன்னால்..” என்று தன்னைத் தேடிவரும் ஜோனாத்தனிடம் சொல்லிப் பெருமூச்சு விடும்போது டிராகுலாவின் அச்சத்தையூட்டும் பறவை முகம் வவ்வால் பற்களைத் தாண்டி அதன் மீது பிரியம் ஏற்படுவதைத் தவிரக்க முடியவில்லை. சலிப்பை, நிராசையை, காண்பிக்க முடிய

தங்க பாக்கெட் கடிகாரம் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

என் தாத்தா வினோத நெடியுடைய சுவாசத்தைக் கொண்ட உயரமான ஜெர்மானியர் அவரது சிறிய வீட்டின் முன்பாக விரைத்து நிமிர்ந்து நின்றார் அவரது மனைவியும் அவரை வெறுத்தார் அவரது குழந்தைகளோ  அவரைத் தனி என்று கருதினர் நாங்கள் சந்தித்துக் கொண்டபோது எனக்கு வயது ஆறு அவர் தன்னுடைய எல்லா போர் பதக்கங்களையும் எனக்கு அளித்தார். இரண்டாவது முறை நான் அவரைச் சந்தித்தபோது அவருடைய தங்க பாக்கெட் கடிகாரத்தைத் தந்தார். அது மிகவும் கனமாக இருந்தது வீட்டுக்கு அதை எடுத்துவந்து இறுக்கத் திருக்கியதால் ஓடுவதை நிறுத்திக்கொண்டது என்னை மிகவும் சங்கடப்படுத்தியது. நான் அவரைத் திரும்பப் பார்க்கவில்லை அதோடு எனது பெற்றோர்கள்  அவரைப் பற்றிப் பேசவேயில்லை எனது பாட்டியும்  வெகுகாலம் முன்பே அவள் அவரிடத்திலிருந்து பிரிந்துவந்து விட்டாள். ஒருமுறை தாத்தா பற்றிக் கேட்டபோது அவர் அதிகம் குடித்ததாகச் சொன்னார்கள் ஆனால் எனக்கு அவரை மிகவும் பிடித்தது அவர் வீட்டுக்கு முன்னால் விரைப்பாக நிமிர்ந்து நின்று என்னிடம் “ஹலோ ஹென்றி, நீயும் நானும் நம்மை பரஸ்பரம் அறிவோம்" என்றார்.

இரங்கற்பா - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

பழைய கார்கள் குறிப்பாகப் பயன்படுத்திய ஒன்றை வாங்கி பல ஆண்டுகள் ஓட்டும்போது அவற்றுடனான காதல் உறவு தவிர்க்க முடியாதது: அந்தக் கார்களின் சின்னச்சின்ன பிறழ்ச்சிகளையும் ஏற்பதற்குக் கற்றுக்கொள்கிறீர்கள்: ஒழுகும் நீர் குழாய் வேலை செய்யாமல் போகும் பிளக்குகள் துருப்பிடித்த நீராவிக் கட்டுப்படுத்தி அசமந்த கார்ப்பரேட்டர் எண்ணெய் ஒழுகும் எஞ்சின் ஓடாத கடிகாரம் உறைந்த ஸ்பீடோமீட்டர் மற்றும் இதர சில்லறைக் குறைபாடுகள். அந்த காதல் உறவை உயிர்ப்புடன் வைத்திருக்க அனைத்து உபாயங்களையும் கற்றுகொள்வீர்கள்: ஹெட்லைட்டுகளின் தலையில் உள்ளங்கையால் தட்டி எரியச் செய்வதற்கு எரிவாயுப் பெடலை எத்தனை முறை இயக்க வேண்டுமென்பதையும் ஸ்டார்ட்டரை அழுத்துவதற்கு முன்னர்  எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டுமென்பதையும் மேலுறைகளில் உள்ள துளைகளையும் துணிவழியாக எட்டிப்பார்க்கும் ஸ்பிரிங்குகளையும் கவனிக்கத் தவறுவதற்குப் பழகுவீர்கள் வரும் போகும் காவலர்கள் சோதனைகளுக்கும் உங்கள் கார் பழகிவிட்டது பல்வேறு பழுதுகளுக்காக அபராதங்களுக்கும் உட்பட்டுவிட்டது திரும்பும் போது சைகை விளக்கு எரியாதது ப்ரேக் விளக்கு இல்லாதது பின்புற விளக்கு உடைந்திருப்பது ப

குணம்கொண்ட குதிரைகள் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

நிலவினடியில் அந்தக் குதிரைகளை நான் நினைவுபடுத்தியபடி இருக்கிறேன் அந்தக் குதிரைகளுக்கு சீனியைத் தீனியாக தந்ததையும் நீள்சதுர வடிவங்களில் சீனி கிட்டத்தட்ட ஐஸ் போலத் தோற்றமளிப்பது மற்றும் குதிரைகளின் தலைகள் கழுகுகளைப் போன்றது கடிக்க முடியக்கூடிய வழுக்கைத் தலைகள்  ஆனால் கடிக்கவில்லை. குதிரைகள் எனது தந்தையைவிட நிஜமானவை குதிரைகள் கடவுளைவிட மிக நிஜமானவை அவை என்னைத் தாக்கியிருக்கலாம் ஆனால் அவை அப்படி நடந்துகொள்ளவில்லை எல்லாவிதமான பயங்கரங்களையும் அவை புரிந்திருக்கலாம் ஆனால் அவை அப்படி நடந்துகொள்ளவில்லை. எனக்குக் கிட்டத்தட்ட ஐந்து வயது ஆகியிருந்தது ஆனால் என்னால் மறக்கவே முடியவில்லை எத்துணை பலமானவை அந்தக் குதிரைகள் எத்துணை குணம்கொண்டவை அந்தக் குதிரைகள் அவற்றின் ஆன்மாக்களிலிருந்து எச்சில் வடியும் அந்தச் சிவப்பு நாக்குகள்.  

நரகம் என்பது தனிமையான இடம் - சார்லஸ் புக்கோவ்ஸ்கி

அவருக்கு 65 வயது அவரது மனைவிக்கு 66, அல்சீமர் நோய் அவருக்கு வாயில் புற்றுநோய் இருந்தது அறுவை சிகிச்சைகள், கதிரியக்க சிகிச்சைகள் அவர் தாடையில் உள்ள எலும்புகளைச் சிதைத்திருந்தன அதனால் அவற்றை இறுக்கிக்கட்ட வேண்டியிருந்தது. ரப்பர் டயபர்களை  தினசரி குழந்தையைப் போல மனைவிக்கு அணிவிப்பார். அவருடைய உடல்நிலை காரணமாக கார் ஓட்ட முடியாததால் மருத்துவ மையத்துக்கு டாக்சி அமர்த்தி செல்ல வேண்டியிருந்தது, பேசுவதற்குச் சிரமம் என்பதால் திசைகளை எழுதிவைத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அவர் சமீபத்திய பரிசோதனைக்குச் சென்றிருந்தபோது இன்னொரு அறுவை சிகிச்சை இருக்கும் என்று அவர்கள் தகவல் தெரிவித்தனர் இடது கன்னத்தில் கொஞ்சம் நாக்கில் கொஞ்சம். அவர் வீட்டுக்குத் திரும்பியவுடன் தனது மனைவியின் டயபர்களை மாற்றினார் தொலைக்காட்சியை ஓடவிட்டு ஆயத்த உணவுகளை அடுப்பில் வைத்து மாலைச் செய்திகளைப் பார்த்தார் பின்னர் படுக்கையறைக்குச் சென்றார் துப்பாக்கியை எடுத்துவந்தார் மனைவியின் நெற்றியில் வைத்துச் சுட்டார். அவள் இடதுபக்கம் சரிந்தாள் அவர் சோபாவில் அமர்ந்தார் வாய்க்குள் துப்பாக்கியை விட்டு  விசையை இழுத்தார். வெடிச்சத்தம் அண்டைவீட்டாரை

மலை ஏறும் கப்பல்

வெர்னர் ஹெர்சாக்கின் ‘அகிரே: தி ராத் ஆப் காட்’- ஐத் தொடர்ந்து அவருடைய ‘பிட்ஸ்கரோல்டா’ திரைப்படத்தைப் பார்க்குமாறு ஆலோசனை சொன்னார் நண்பர் விஜயராகவன். சரிதான். மனிதனின் எத்தனம், அவனது அடைவதற்கான பைத்தியக்காரத்தனமான வேட்கை, அதன் வியர்த்தத்தத்தை வேறு வேறு காலகட்டங்களிலிருந்து காட்டப்படும் இரண்டு பிரதிமைகள் என்று இரண்டு திரைப்படங்களையும் சொல்வேன். அகிரே: தி ராத் ஆப் காட்-ல் நாடுபிடிக்கும் வேட்கை கொண்ட தளபதி அகிரேவின் தோல்வியை மூர்க்கத்தனமாகச் சொல்லும் ஹெர்சாக், ‘பிட்ஸ்கரோல்டா’வின் நாயகனுடைய கனவையும் தோல்வியையும் பரிவோடு அணுகுகிறார். இரண்டிலும் நாயகன் க்ளாஸ் கின்ஸ்கி. இரண்டு திரைப்படங்களுமே அமேசான் நதியில் வனம் சூழ்ந்த பகுதியில் நடப்பது. அருவிகளும் பூர்வகுடி இந்தியர்களும் வானைத் தொடும் பசிய மரங்களும் குரங்குகளும் இந்த திரைப்படத்திலும் உண்டு.  நதியின் ஓட்டத்துக்கு எதிராக, இதுவரை அறியப்படாத வனத்துக்கு கப்பலில் சென்று ரப்பர் தோட்டங்களிலிருந்து ரப்பரை எடுத்து பணம் சம்பாதித்து தான் வசிக்கும் இக்விடாஸ் நகரத்தில் ஒபேரா இசை நாடக அரங்கு ஒன்றை உருவாக்குவதுதான் நாயகன் பிட்ஸ்கரோல்டா-வின் லட்சியம். டிரான

இனவாதத்தின் இறந்த காலம், நிகழ்காலம்

 ஜெர்மனியை மையமாகக் கொண்டு ஹிட்லர் தலைமையில் கொல்லப்பட்ட அறுபது லட்சம் யூதர்களின் நினைவாக ஜெருசலேம் நகரில் கட்டப்பட்ட நினைவகத்தின் பெயர் ‘யாத் வஷேம்’. பெங்களூருவையும் ஜெர்மனியையும் இஸ்ரேலையும் கதைக்களமாகக் கொண்டு, பெங்களூருக்கு 1940-ல் தந்தையோடு அடைக்கலம் புகுந்த யூதப் பெண் ஹ்யானாவை நாயகியாக வைத்து, கன்னட நாவலாசிரியை நேமிசந்த்ரா எழுதியிருக்கும் ‘யாத் வஷேம்’ நாவலானது இனவாதம் சார்ந்த மோதல்கள், வன்முறைகள், குற்றங்களில் மாண்டுபோன லட்சக்கணக்கான அப்பாவிகள் சந்தித்த அவலங்களை விசாரிக்கும் வரலாற்று நாவலாகும். நவீன உலக வரலாற்றில் யூத இனப்படுகொலைகள் அளவுக்கு ஆவணமாகவும் பல்வேறு கலை ஆக்கங்களாகவும் பதிவுபெற்ற நிகழ்வாகும். ஆனால், அமெரிக்காவில் பூர்வகுடி இந்தியர்கள் மீது வெள்ளையர்கள் நடத்திய இனப்படுகொலைகள் தொடங்கி குஜராத்தில் 2002-ல் நடந்த இனப்படுகொலைகள் வரை உலகின் பார்வைக்கு வராததற்கான அரசியல் பின்னணி குறித்தும் கேள்விகளை எழுப்பும் படைப்பு இது.   கடவுளை உருவமாக வழிபடுவதை ஏற்காத யூதப் பின்னணி கொண்ட 12 வயதுச் சிறுமி ஹ்யானா, ஆயிரக்கணக்கான கடவுள்களும் சாதிகளும் சேர்ந்து வாழும் இந்தியாவுக்கு வருவதுதான் மு

கவிதையின் எதிரொலி - ந. ஜயபாஸ்கரன்

  கவிதை எதிரொலிக்க எடுத்துக்கொள்ளும் காலம் என்பது நம்முடைய நிர்ணயத்துக்கு அப்பால்தான் இருக்கிறது எப்போதும். பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவ சரணர்களின் கன்னட வசனங்கள், இருபதாம் நூற்றாண்டில் ஏ. கே. ராமானுஜனின் மனத்தில் எதிரொலித்திருக்கின்றன. 1973-ல் ‘சிவனைப் பேசுதல்’ என்ற தலைப்பில் பசவண்ணர், அல்லமப்பிரபு, அக்கமகாதேவி போன்ற நட்சத்திர வசன கவிகளின் ஒளிவீசும் கவிதைகளை ஆங்கிலத்தில் மனத்துக்கு நெருக்கமான வகையில் மொழிபெயர்த்திருக்கிறார் ராமானுஜன். 1983-ல் அகநெருக்கடியுடன் இருந்த காலகட்டத்தில், ஆத்மாநாம் தொடர்ந்து வாசித்து வந்த நூல் ராமானுஜனின் ‘சிவனைப் பேசுதல்’ என்பதாக ஆத்மாநாமின் சிறு வாழ்க்கைக் குறிப்பிலிருந்து தெரியவருகிறது. இது பற்றியும், ஆத்மாநாமின் கவிதைகள் பற்றியும் சில ஆண்டுகள் கழித்து அறிந்த ராமானுஜன், அவர் இறப்பதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், 1991-ல் ‘எனக்கு அவன் அல்லது அவனுக்கு நான்’ என்ற தலைப்பில் ஆங்கிலக் கவிதையை எழுதியிருக்கிறார். இன்னதென்று வரையறுக்க முடியாத ஒரு பிணைப்பு ஆத்மாநாமுடன் இருப்பதாக ராமானுஜன் உணர்ந்ததை கவிதையின் அடிக்குறிப்பு தெரிவிக்கிறது.  சிறிது உரிமை எடுத்

நீ எல்டொராடோவைத் தேடிக் கொண்டிருந்தாய் என்றால்

உலகின் தலைசிறந்த சினிமாக் கலைஞர்களில் ஒருவரான வெர்னர் ஹெர்சாக்கின் ‘அகிரே: தி ராத் ஆப் காட்’ திரைப்படத்தைப் பற்றி நண்பர் விஜய ராகவன் சில ஆண்டுகளுக்கு முன்னர் பரிந்துரைத்தும், ஆண்டஸ் மலைத்தொடரில் ஸ்பானியப் படையினர் எறும்புகளைப் போல இறங்கிவரும் காட்சியிலேயே அலுப்புற்று பார்க்காமல் விட்டுவிட்டிருந்தேன். ஊரடங்கு காலத்தில் வெர்னர் ஹெர்சாக்கின் ‘இன் டூ தி இன்பெர்னோ’ ஆவணப்படம் ஏற்படுத்திய நீடித்த தாக்கத்தின் அடிப்படையில் மீண்டும்  ‘அகிரே: தி ராத் ஆப் காட்’ திரைப்படத்தை மீண்டும் பார்ப்பதற்குத் தலைப்பட்டேன். உலகமெங்கும் இருக்கும் எரிமலைப் பிரதேசங்களுக்குச் சென்று, இயற்கையின் அழிவு மூர்க்கத்தை அருகிலிருந்து காட்டும் ஆவணப்படம் ‘இன் டூ தி இன்பெர்னோ’.ராட்சதத் தன்மை கொண்ட இயற்கையின் தாடைகளுக்கு ஒரு டினோசர் கூட சவைத்துத் துப்பும் குட்டிச் சுவிங்கம் தான். ஒரு பெரிய மலைப்பாம்பு போல சுழித்து ஓடும் எரிமலைக் குழம்பின் அனலுக்கும் தனலுக்கும் முன்னால் மனித எத்தனம் இன்றும் தோற்று நிற்கிறது.  அதே இயற்கையின் முன்பு நாடுகளை வெல்லப் புறப்பட்டவர்கள் துரும்பாக அழிவதைக் காட்டும் கதைப்படம்   ‘அகிரே: தி ராத் ஆப் காட்’

ஊழிதான்; ஆனால் அது அபியில் இனிமை கொள்கிறது

அபியின் ‘மாலை - காத்திருத்தல்’ கவிதையின் துவக்கமே வன்மையாக உள்ளது. ‘விஷப்புகை மேவிய வானம் மூச்சுக்குத் தவிப்பது தெரிகிறது’ அரண்ட ஓலமாகத் தொனிக்கிறது. அபியின் தாண்டவமும் நாடகமும் உச்சமாகக் கொண்ட கவிதைகளில் ஒன்று இது. அறிந்தவைகளின் மறுபுறங்கள் திரண்டு மின்னி இடித்து வெறியோடு வருகின்றனவாம், அல்ல அல்ல அல்ல என்று. அறிந்தவையின் மறுபுறமோ இன்னும் பயங்கரம் போலும்.  அடர்வனங்களின் குறுக்கும் நெடுக்குமாக ஆவேசக் காட்டாறுகள் பதறி ஓடி வாழ்வைப் பயிலும் எனும்போது குறுக்கும் நெடுக்குமாக பதறி ஓடி ஆவேசக் காட்டாறுகள் பிரமாண்ட ரூபம் கொள்கின்றன. ஆனால், அவை வாழ்வைப் பயில்கின்றன என்று சொல்லும் போது, அந்த ஆவேசக் காட்டாறுகள் குறுக்கும் நெடுக்குமாக ஓடும் இடம் கண்ணுக்குத் தெரியாத ஒரு பரப்பாகவும் இருக்கலாம் என்று மிக நுண்மை காட்டுகின்றன. அகண்டம் ஒரு புதிய விரிவுக்குத் தயாராக உண்டு, இல்லையின் கபாலம் உடைபடத்தான் வேண்டும். தாமதமென்றாலும் சுந்தர ராமசாமி சொல்வது போல சிதறடிக்கப்பட வேண்டிய கபாலங்கள் தான் அவை. இனிமேல்தான் கவிதை, விஷத்திலிருந்து அமிர்தத்துக்கு, ஊழியிலிருந்து துவக்கத்துக்கு புறத்திலிருந்து அகத்துக்கு குணப்பட

ஆஸ்பத்திரியில் - நகுலன்

அந்த டாக்ஸி அந்த ஆஸ்பத்திரி முன் நின்றது.  அது ஒரு மாதிரியான ஆஸ்பத்திரி; உயிருடன் இறந்தவர்கள் இங்கு வருகிறார்கள். டாக்ஸியிலிருந்து மூவர் இறங்கினர்; ஒருவருக்கு வயது 75 ; ஒருவருக்கு 55 ; ஒருவருக்கு 50 . அவர்கள் முகச்சாயலிலிருந்து அவர்கள் தந்தையும் புதல்வரும் என்பது வெளிப்படை. டாக்டர் அறைக்குள் பெரியவர் இரண்டாவது பையனை நிறுத்திவிட்டு மூத்தவனுடன் உட்சென்றார். அவனும் ஒன்றும் சொல்லவில்லை; அவன் முகத்தில் ஒரு பாவமும் இல்லை; அவன் முகம் கருங்கல் மாதிரி இருந்தது; இப்படியும் ஒரு முகமா? ஒரு அரைமணி நேரத்திற்குப் பிறகு, ஆஸ்பத்திரி வேலைக்காரன் அவனையும் உள்ளே போகச் சொன்னான்.  அவன் சென்றான். டாக்டர் : (அவனிடம் பெரியவரைச் சுட்டிக்காட்டி) இவர் யார்? அவன் : தெரியாது. டாக்டர் : (மூத்த சகோதரனைக் காட்டி) அவர் யார்? அவன் : தெரியாது.  டாக்டர் : உனக்கு அப்பா எங்கே இருக்கிறார் தெரியாதா? அவன் : டாக்டர், எனக்கு அப்பா கிடையாது. டாக்டர் : அண்ணா? அவன் : அண்ணாவும் கிடையாது.   டாக்டர் : இவர்கள் யார்? அவன் : எனக்கு இவர்கள் யாருமில்லை. (பெரியவரும் மூத்த பையனும் டாக்டரைப் பார்க்கிறார்கள்) டாக்டர் : உன் மனைவி? அவன் : எனக்கு

காலமும் நீங்கும் தொல்பொருள் அபி

அபியின் ‘மாலை’ வரிசைக் கவிதைகளைப் படிக்கும்போது அந்தக் கவிதைகளையும் அவற்றை எழுதிய அபியையும் காலமும் நீங்கும் தொல்பொருள் என்று உணர்ந்தேன்.  ‘மாலை - மாற்றுருவம்’-ல் காலம் பருவுடல்களாகத் தோற்றம் கொள்கிறது. பெருமூச்சொலி ஒளியுடன் வினைபுரிகிறது.  ஆமாம், மழையில் ஒப்பாரிக் குரல் உட்பட எல்லாம் மூழ்கித்தான் இருக்கின்றன- சித்தார்த்தன், ஆற்றில் எல்லாருடைய எல்லாவற்றின் ஓசையையும் கேட்பது போல. நான் எனது இருபது வயதின் தொடக்கத்தில் கழிப்பறையில் குழாய் நீர் சத்தத்தில் என் அம்மா அப்பாவுடன் கூக்குரலிட்டு அழும் சத்தத்தைத் திடீரென்று கேட்டிருக்கிறேன். பைப்பை மூடியதும் வீட்டின் நிசப்தம் தற்காலிக ஆசுவாசத்தைத் தந்திருக்கிறது. தூறல் தர்க்கிக்கத்தான் செய்கிறது. நினைவு தரும் புழுங்கல் இதம்; பெயர் இல்லாத தவிப்பு ஒரு இதம்; இன்னும் மொழியாகாமல் உயிர்வேதிப் பாகு கொப்பளித்துக் கொண்டிருக்கிறதா?  தவிப்பைத் தவிர என்னால் சுயமாக உருவாக்கிக் கொள்ளக்கூடிய சிறந்த உயிர்ப்பொருள் வேறெதுவும் உண்டா? மாலைக்கும் வந்து படர்வதற்கு மாற்று இடம் இல்லை. எனக்கும் பற்றிக் கொள்ள மாலையைத் தவிர வேறெதுவும் இல்லை.  ஏனெனில் நான் மிக ஏழை. எனக்கு மா