Friday, 28 September 2018

பறக்கும் ரயில் தடங்களும், அதி யதார்த்தத்தின் வேலைத்தொகுதியாகி வரும் என் நகரமும்ஜாக்கிரதை: கண்ணாடியில் தெரியும் பொருட்கள், தோன்றுவதை விட அருகில் இருக்கலாம்.(ழான் போத்ரியாரின் 'அமெரிக்கா' எனும் நூலிலிருந்து தூண்டுதலாகவும் எதிர்வினையாகவும் எழுதப்பட்ட கட்டுரை இது. பின்நவீனத்துவ தத்துவ ஆசிரியரான போத்ரியார் தனது பிரெஞ்ச் பின்னணியிலிருந்து அமெரிக்கா என்னும் நில-மனவெளியில் பயணித்த அனுபவத்தை இந்நூலில் எழுதிச்செல்கிறார். 'அமெரிக்கா' சம்பிரதாயமான பயணநூல் அல்ல.
கனவு முடிவுற்ற நிலமாக. ஒரு பேரரசு மற்றும் அதிகார நிலைமையின் உச்சநிலையில் உணரப்படும் வெறுமைநிலையில் அமெரிக்காவைப் பார்க்கிறார் போத்ரியார். அமெரிக்காவின் நிலவெளி, கட்டடங்கள், பாலைவனச் சாலைகள் வழியாக அமெரிக்க மனவரைபடத்தைத் தொடும் நூல் இது. சாலையில் அதிவேகத்தில் பயணிக்கும் பிரக்ஞைநிலையிலேயே இந்நூல் எழுதப்பட்டுள்ளது. உண்மையில் உலகம் என்ற ஒன்றே இல்லாமல் இன்னொரு உலகத்துக்கு வெறுமனே காண்பித்து நிற்கும் வெறும் விளம்பரப் பிம்பம்தானோ அமெரிக்கா எனவும் சந்தேகம் எழுப்புகிறார். அமெரிக்கா என்னும் மன--நில வரைபடத்தை ஆராய்வதற்கு ஒளிஇயற்பியல் கருத்தாக்கத்தைப் பயன்படுத்துகிறார் - ஒளிஇயற்பியலோடு தொடர்புள்ள சொற்களையும்
அமெரிக்காவின் எந்தப் பிரச்னையும் இன்று உலகின் பிரச்னை ஆகிவிடுகிறது. ஆகவே, சென்னையிலுள்ள டைட்டல் பார்க் சாலை எப்படி அமெரிக்கக் கனவின் அங்கமாய் மாறியுள்ளது என்பதைச் சொல்ல முயற்சிக்கும் கட்டுரை இது.)

இரவு ஏழரை மணிக்கு, இந்நகரின் பறக்கும் ரயில்தடம் வழியாக இந்திரா நகர் நிலையத்தில் இறங்குகிறேன். சென்னை கடற்கரை நிலையத்தில் தொடங்கி கிழக்குக் கடற்கரையின் முகம்பார்த்துச் செல்லும் தடம் இது. நகருக்குச் சற்று மேலே அலுவலகங்களின், வீடுகளின், மனிதர்களின் கூரைகள், தலைகளைப் பார்க்க முடியும். உயரத்தில் செல்வதால் இந்த ரயில் தடத்துக்கும், நிலையங்களுக்கும் பிரத்யேகத் தனிமையும், ஏகாந்தமும் மிச்சமாய் உள்ளது. பெரிய வீடுகளின் கூரைகளும், சிறிய வீடுகளின் கூரைகளும் தோல்வியுற்ற கனவென ஒன்றாகவே நிறம் வெளிறிப்போயுள்ளன. ஈ.வி.கே. சம்பத் தெரு, மதியழகன் சாலை, அஞ்சுகம் தெரு, கருணாநிதி சாலை என அரசியல் மரபு, குடும்ப நினைவு, இடவரைபடமாகச் சந்துகளாகவும், தெருக்களாகவும் கீழே நீண்டிருக்கின்றன. வாழ்விடத்தொகுதிகளின் மேல் கஸ்தூரிபா நகர், இந்திரா நகர் என்ற நிறுத்தங்களினூடாகச் செல்கிறது பறக்கும் ரயில் தடங்கள்.

இந்தப் பறக்கும் ரயில் தடங்கள் இன்னும் அதிகப் பயணிகளின் புழக்கத்தைப் பெறவில்லை. இந்நகரில் ஒரு புதிய புராதனத்தைக் கண்டு வாசம் செய்யத் தொடங்கிவிட்டன புறாக்கள். இந்த அந்தர ரயில் நிலையங்களும் அதைத் தாங்கும் பெரிய தூண்கள் உள்ள பிரம்மாண்ட கீழ்த்தளங்களும் கடவுளின் விடுதிபோல் நிஷ்டையில் உள்ளன. பகலிலும் இரவிலும் இந்த ரயில் நிலையங்களின் இருட்டை நிரப்ப இயலாததுதான் நம் சூரியனும், விளக்குகளும். இதைத் திட்டமிட்ட பொறியாளரின் கண்களில் நூற்றாண்டைக் கடந்த முன்னோக்கிய விசுவாசம் தெரிகின்றது. இப்போது இந்தப் பறக்கும் ரயில் நிலையங்கள் எல்லாப் பொழுதுகளையும் அகாலமாக்கி ஒரு சிறு காலடிச்சத்தத்தைக் கூட அசரீரியாக்கிவிடுகிறது. அடுத்த நூற்றாண்டில் வரப்போகும் பயணிக்காக வெளிச்சமான பயணச்சீட்டு கவுண்டரில் கண்ணாடித்திரைக்கு வெளியிலிருக்கும் இருட்டுக்குப் பயணச்சீட்டை வழங்கப்போகிறவர் யாராக இருக்கக்கூடும்?
கடலை நோக்கிச் செல்லும் ரயில்பாதை,ஒரு நாள், கடலுக்குள்ளும் செல்லும். அப்போதும் அந்த நாள் ஏற்படுத்திய அலுப்பில், மோதி ஓலமிடும் கடல் அலைகள் மேல் கண்கள் வெறிக்க -  கடலையே காணாமல் - ஒருவன் / ஒருத்தி இறங்கிச் செல்வார்.

இப்போது இந்தப் பறக்கும் ரயில் தடத்தை விசுவாசமற்ற தடமென்று சொல்லலாம். இந்த ரயில் நிலையங்களை, ரயில் செல்லப்போகும் கடல்வழித்தடங்களைத் தாங்கும் பெரிய தூண்களும் விசுவாசமற்றவையே.
நான் ரயிலில் கடக்கும் இந்நகரத்தின் வீடுகளிலுள்ள ஜன்னல் வெளிச்சத்தைப் பக்கவாட்டு வழிகளில் பார்த்த சொல்லொண்ணா இருட்டை, என்னுடன் வீட்டுக்கு எடுத்துச்செல்கிறேன். நகரத்தில் வாழும் உதிரிகளைப்போல பாலச்சுவர் வெடிப்புகளில் வளர்த்திருக்கும் தாவரங்களை, கல்லறைத்தோட்டங்களில் தும்பறுந்து பறக்கும் பட்டங்களை, கழிவுகள் நுரைக்கும் கருப்பு நதியோரங்களில் சரிந்திருக்கும் குப்பங்களைக் கடந்து இந்த ரயில் பயணிக்கிறது. அன்றாடப் பயணத்தில் பறக்கும் காகத்தின் தலைமுகடையும் ஒருவனுக்குப் பார்க்க லபிக்கிறது. நான் இன்றிரவு என் குழந்தைக்குச் சொல்லப்போகும் கதையில் காகத்தின் தலைஉச்சியில் நான் பறந்ததன் செய்தியும், இருளும் சேர்ந்திருக்கும். கருப்பு நதியின் சாம்பல், கரும்பச்சை, கருநீலம் எனக் கருப்பின் எல்லா நிறபேதங்களும் எனது கதையில் இருக்கும்.

பறக்கும் ரயில் தடத்தை ஒட்டியுள்ள டைடல் பார்க் சாலை என்னும் இன்றைய நவீனத்தை உருவமைக்க முயலும் பாதையைப் பற்றிப் பேச நான் ஆசைப்படுகிறேன். நடுவில் ஒரு தொன்மமாய்ப் பறக்கும் ரயில் தடம் குறுக்கிட்டுவிட்டது. டைடல் பார்க் சாலையும் டைடல் பார்க் கட்டடமும் இரவற்ற ஓர் இரவில் அனைத்தும் துடைக்கப்பட்டுவிட்ட இடமாக, அதீத வெளிச்சத்தில் நிகழும் வேலைத்தொகுதியாகக் காட்சியளிக்கிறது. பெற்றோரின் அந்தரங்க தருணத்தை முதல்முறை பார்க்கும் ஒரு குழந்தையின் மனதில் எழும் அலறலை இவ்விடம் தோற்றுவிக்கிறது... அமெரிக்காவிலிருந்து வரும் கட்டளைகளைப் புலனாகாத தொடர் பிணைப்புகளின் வழியாய்ப் பெற்றுப் பணிபுரியும் நீள்சங்கிலித் தொடரின் ஒரு கேந்திரமாய் இருக்கிறாள் என் மனைவி. திருமணம் முடிந்த சில நாட்களுக்குப் பின் படுக்கையறையில் என் மனைவி முகம் தெரியாத மருத்துவர் ஒருவரின் நோயாளி அறிக்கையை ஒலிக்கோப்பிலிருந்து கணிப்பொறியில் ஒலிபெயர்த்துக்கொண்டிருந்த நள்ளிரவு வேலை. கணிப்பொறியின் நீலஒளி அவள் முகம் மீதும், எங்கள் கட்டிலின் மீதும் படர்ந்திருந்தபோது என் தலையில் பைத்திய அலறலின் முதல் தாக்குதலை அனுபவித்தேன். அவள் கணிப்பொறியில் நோயாளியின் நோய்கள், உளவியல் பின்னணி, உடல் இயல்பு, மரணத்தின் அருகாமை இவற்றையெல்லாம் ஒலிபெயர்க்க எல்லாமும் எங்கள் வீட்டுக்குள் கடும் வாதைகளாய் நடமாடுகின்றன. சில நேரங்களில் கணிப்பொறியின் சி.பி.யூ.விலிருந்து உடல் பொசுங்கும் வாடையை நான் உணர்ந்திருக்கிறேன்... கணிப்பொறி நாறத்தொடங்கிவிட்டது... படுக்கையறையும் நாறத்தொடங்கிவிட்டது எனச் சொல்வேன். நான் கணிப்பொறியுடன் முரண் கொள்வதைத் தன்னுடனான முரணாய்ப் புரிந்துகொள்கிறாள். நான் விரும்பாத எதுவும் அவளுக்குத் தெரிந்துவிடக் கூடாது. ஏனெனில் நான் விரும்பாததை வேட்டையாடித் தேடி காதல் கொண்டுவிடுபவள் அவள்.

என் மனம் நம்பிக்கையுற்றிருக்கும் சமயங்களில் தரமணி கடந்து டைடல் பார்க் சாலையில் என் இருசக்கர வாகனத்தில் சாத்தியத்திற்கும் அதிகமான வேகத்துடன் பயணம் செய்திருக்கிறேன். மிகத்தரமாக உருவாக்கப்பட்ட பழுதுகளற்ற சீரான ஒரு வழிப்பாதை அது. பக்கவாட்டில் நவீனச் சிற்பங்களும் நெடிதாய் நீளும் சுவரில் புடைப்பு நவீன பாணி ஓவியங்களும் சாலையின் குறுக்கே மினியேச்சர் சோலைகளும்... இலைவடிவ மின்விளக்குகளும் டைடல் பார்க் சாலையை ஒரு வெளிச்சத் தீவாக்கியுள்ளன புதிதாகப் போடப்பட்ட இந்தச் சாலையில் முதல் முறை என் மனைவியுடன் செல்லும்போது அவள் 'அமெரிக்கன் ரோட்! அமெரிக்கன் ரோட்!' எனக் கூவினாள். அவளும், அமெரிக்க லாட்டரிக்காகக் காத்திருக்கும் இந்தப் பூமிக்கோளத்தின் பிரஜைகளில் ஒருத்தி. இந்த டைடல் பார்க் சாலையே அமெரிக்காவுக்குப் பறப்பதற்கு முன்பாக ஓடுதளமாகவே மனவரைபடத்தில் நினைவுநிரலில் பிரதிபலிக்குமாறு எழுதப்பட்டுள்ளது.

டைடல் பார்க் சாலையில் நுழையும் எந்த வாகனமும் தன்னிச்சையாக வேகத்தை முடுக்கிவிடுகின்றன. நினைவின் தடத்தையே இல்லாமல் ஆக்கும் வேகம். இந்தச் சாலையில் பைக்கின் வேகத்தை முடுக்கும் காதலனை இறுக்கி உடனே தீர்ந்துபோகும்படியாய்க் காதலி அவனைக் கட்டிக்கொள்கிறாள். பைக்கின் வேகம் அவள் யோனியின் ஆனந்தப் பரவசச் சுற்றுகளில் முடிவின்மையின், அறியாப்புதிரில் பயணிக்கும்.  இளைப்பாறும் புள்ளி எது? கருந்துளையில் விழுந்து மறைபவர்கள் குறித்த நினைவுகள் துண்டிக்கப்பட்டுவிடுகின்றன.

உங்கள் தோழியின் பெண்ணுறுப்பை சியாலிஸ் மாத்திரை வழியாகத் தகர்த்தெறியுங்கள்... ஒன்றரை டாலர் மட்டுமே...

டைடல் பார்க் வாசலில் ஒரு மெலிந்த பெண் இறங்குகிறாள். அவள் கழுத்தில் நிறுவனப் பணி அடையாள அட்டையைச் சட்டென்று அணிந்துகொள்கிறாள். அவன் இனி மின்னணு நிரல் எழுதப்பட்ட சமுத்திரத் தொடரிணைப்பின் ஓர் உறுப்பு... அவள் திரவமாய் ஒயர்களில் பயணிப்பவள்... இவ்வழியில் அடையாளங்கள் அற்று நீந்தலாம்... அவள் ஒரு நிறமிலி... இனி ஒரு ஆசியனுடன், ஒரு அமெரிக்கனுடன் ஏதாவதொரு அடையாளத்துடன் தரப்படுத்தப்பட்ட ஆங்கிலத்தில் கடன் அட்டையின் கடனைத் திரும்பச் செலுத்தச் சொல்லி வேண்டுகோள் விடுக்கலாம்.

அல்லது

"நான் செனகலில் ஒரு வீட்டுப் பணிப்பெண்ணாக வேலை செய்துவருகிறேன். என் தேசத்தில் நடந்த உள்நாட்டுக் கலவரத்தில் என் தந்தையும், மூத்த சகோதரனும் இறந்துவிட்டார்கள். எனது அந்தரங்கப் புகைப்படங்களை அனுப்பியுள்ளேன். உனது வார்த்தைகள்தான் செனகலின் கடும்வெப்பத்தில் ஒரே ஒரு ஆறுதலைத் தந்துகொண்டிருக்கிறது.
அல்லது
'எனது பெயர் இக்பால். எனது தந்தையாரின் பணம் - ஒரு லட்சம் டாலர் மதிப்பு - அவரது அகால மரணம் காரணமாக முடக்கப்பட்டுவிட்டது. எனது தந்தையின் அந்த சேமிப்புக்கு நான் காப்பாளர் மட்டுமே. ஓர் அறக்கட்டளையின் மூலம் உங்கள் முகவரி கிடைத்தது. என் தந்தையின் ஆவியை ஒருவரில் வரவழைத்துக் கேட்டதில் நான் உங்களை நம்பத்தகுந்த பங்குதாரராகத் தேர்ந்தெடுத்துள்ளேன். தர்ம காரியத்திற்காக என் அப்பாவின் கணக்கில் உள்ள சேமிப்பை உங்களுக்கு மாற்றுவது எளிது என்று எனது ஆடிட்டர் ஆலோசனை கூறினார். உங்களது வங்கிச் சேமிப்புக் கணக்கு எண், விவரங்களை எனக்கு அனுப்பித்தாருங்கள். உங்களுக்கு அந்தப் பணம் வந்து சேரும். என் அப்பாவின் நல்லாசிகள் உங்களுக்குண்டு.
நன்றியுடன்
இக்பால் ஹசன்.

சென்னையில் புதிய யோனியாய்க் கனவுகளின் உச்சஇடமாய் டைடல் பார்க் என்னும் மென்பொருள் பூங்காவும், டைடல் பார்க் சாலையும் உருமாறியிருக்கின்றன. அதன் தொடக்கமாய்ப் பிரார்த்தனைக்கென மத்திய கைலாஷ் ஆலயம் அதிநவீனக் கழிப்பறை போலத் திகழ்கிறது. கவிஞன் பாரதியும் இங்குக் கனவுகள் உதிர்த்த கடவுள்களில் ஒருவராய் உருமாற்றப்பட்டுள்ளான். பாரம்பரிய உணவுக்கடையில் காரைக்குடி பாணி பணியாரத்தையும், இடதுகையில் டயட் கோக்கையும் ருசித்தபடி தங்கள் பணியிடத்துக்குள் அவர்கள் நுழையும்போது பெரிய கைலாசத்தில் பனிலிங்கம் கரையத்தொடங்குகிறது.  உடலுக்கும் இயற்கைக்கும் நடந்த உரையாடலின் சாட்சிகளென அம்மிக்குழவிகளும் திருணைகளும் நாட்டுப்புறவியல் அருக்காட்சியகத்தை அடையும்போது உடலும் மூளையும் மீண்டும் பெரும்முரண்களாய் பேதப்படும் வரலாறு திரும்ப எழுதப்படுகிறது. பசுமைப்புரட்சியில் தற்கொலை செய்த விவசாயிகளின் உயிர் உரத்திலிருந்து இயற்கை விவசாயம், தடுக்கப்பட்ட குளிர்சாதன அரங்கங்களில் அடுத்த திட்ட நிரலாய் எழுதப்படுகிறது. இதற்கிடையில் மருத்துவச்சுவடிகளை, நுண்படங்களாக மாற்றி அமெரிக்காவுக்குக் குருவிகள் எடுத்துச் சென்றுவிட்டன. மென்பொருள் பூங்காவின் மத்தியத் தொகுதியும், துணைக்கட்டடங்களும் ஒன்றை, ஒன்றின் பிம்பங்களாய் மாற்றித் தோற்றம் தருகின்றன. பாம்புகளின் பிணையல்  சிற்பத்தைச் சற்றுப் பார்த்தால் பாம்புகள் தங்கள் உருளை வடிவை, முப்பரிமாணத்தைத் தொலைத்த தட்டையான பாம்புகள் என்பதை அறிய இயலும் ஒருவேளை, கண்ணாடியால் எழுப்பப்பட்டிருக்கும் இந்த பிரம்மாண்ட இருபரிமாணத் தட்டி உரைக்கும் செய்தி நகரமெங்கும் முளைத்திருக்கும் விளம்பரத்தட்டிகளின் செய்திகளின் சாராம்சம் மட்டுமே போலும்.


மெலிந்து வரும் யுவதிகள், கடன்அட்டைகள், காப்பீட்டுப் பிரதிநிதிகள், குறைந்த விலை சொகுசுந்து விளம்பரங்கள், மருத்துவமனை விளம்பரங்கள், கைத்தொலைபேசி விளம்பரங்கள் என எல்லாவற்றின் மீதும் ஒளி படர்ந்துள்ளது. ஒளிக்குக் கீழே இல்லாத பொருள்கள் அனைத்தும் இன்னும் பிறக்காததைப் போல் மௌனத்திலும் தோல்வியிலும் உறைந்துள்ளன.

'எங்கள் சோப்பை எங்கள் மருந்தை (உப ஆரோக்கிய உணவு எனக் குறிப்பிட வேண்டும். ஏனெனில் வேதிப்பொருள் கலக்காதது) எங்கள் பற்பசையை வாங்கிப் பயன்படுத்துவதன் மூலமே நீங்கள் அதன் முகவராகிவிட முடியும். நீங்கள் செய்ய வேண்டியது அதிகம் ஒன்றுமில்லை. எங்கள் தயாரிப்புகளை உபயோகிக்கும்போது உங்கள் உடலில் தெரியும் வெளிப்படையான மாற்றங்கள் பற்றி உங்கள் நண்பர்கள் கேட்கும்போது எங்கள் தயாரிப்புகளின் மேன்மையைப் பற்றி யதார்த்தமாய்ச் சொன்னால் போதும்... ஏனெனில் யாரும் இன்று மிகையானதை விரும்புவதில்லை... நீங்கள் எங்கள் தயாரிப்புகளுக்குச் செய்யும் அறிமுகம் மூலம் உங்கள் நண்பர்களை முகவர் ஆக்குங்கள். உங்கள் குழந்தைகளை நீங்கள் நினைக்குமளவு விஞ்ஞானியாக, ஓய்வுக்குப் பிறகு ஒரு பண்ணை வீட்டில் அமைதியாக வாழ நீங்கள் ஒரு வெற்றியாளராய் மாறவேண்டும். கழிப்பறை, தரைகளைச் சுத்தம் செய்யும் எங்கள் லோஷன் எச்ஐவி கிருமியையே அழிக்கக் கூடியது. நீங்கள் தம்பதியராய் இருப்பது நலம்.'டைடல் பார்க்கைச் சுற்றியுள்ள பிராந்தியங்கள் தன்னை அதியதார்த்த வேலைத்தொகுதியின் நீட்சிகளாய்த் தங்களை அவசர அவசரமாய் ஒப்பனை செய்வதன் மூலம் நகரம் முழுக்கப் புழுதிக்காற்று சுழன்று வீசத் தொடங்கியுள்ளது. மென்பொருள் பூங்கா என்னும் வேலைத்தொகுதி உற்பத்தி செய்யும் கழிவுகளை அப்புறப்படுத்தவும் மேலாண்மை செய்யவும் இக்கட்டடத் தொகுதியின் ஆசனவாய் அருகே நவீனச்சேரியாக ஒரு கீழ்நிலை வேலைத்தொகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த இடத்தில் புழுதி அதிகம். இந்த வழிகளின் வழியாகப் புதிய வேகத்துடன் உலவும் மென்பொருள் நிறுவன வாகனங்கள் கருப்புக் குழந்தைகளின் மீது வாடிக்கையாய் விபத்துகளை நடத்துகின்றன. வாகனத்தில் இரவுப்பணி விட்டு உறங்கும் உடல்தொகுதிகள் விடுதியெனச் சுருங்கிய வீடுகளை நோக்கிப் பயணிக்கின்றன.

கருப்புக் குழந்தைகள் முகத்தில் மகிழ்ச்சியைக் காணமுடிகிறது. காலம் காலமாய்க் கருப்பாகி வரும் கூவத்தின் நித்யப் பார்வையாளர்கள் அவர்கள். கடல்சிப்பிகளைப் போலக் கழிக்கப்பட்ட மின்னணு உதிரிப்பாகங்களை அவர்கள் பொறுக்குகிறார்கள். அவர்களுக்கு ரக்பி பந்து புதிதாய் அறிமுகமாகியுள்ளது. அவர்களைக் கைவிட்ட கடவுளர்களைக் குறுந்தகட்டில் ஒட்டி வீட்டு வாசல்படிகளையும் ஆட்டோக்களின் முகப்பையும் அலங்கரித்துள்ளனர்.

டைடல் பார்க் சாலையில் செல்லும்போது ஏற்படும் மனவெழுச்சி நகரத்தின் புதிய மேம்பாலங்களைக் கடக்கும்போது - குறிப்பாக மேம்பாலத்தின் உச்சிமுகட்டைக் கடக்கும்போது - சுற்றியுள்ள கட்டடத் தொகுதிகளின் கண்ணாடிச் சுவர்கள் எல்லாம் என்னை பிரம்மாண்டமாகப் பிரதிபலிக்கிறது...

அந்தக் கணத்தில் நான் சாதனையாளன், ஒரு புகழாளனாய்த் தெரிகிறேன்... அதைத் தவிர எனது எந்த அம்சங்களும் அர்த்தமற்றது... நான் ஒரு visiting card..

தெரிவிப்பு, வெளிப்படுத்தல் என்பது, சொல்வதன் 'தேவை' என்னும் மையத்திலிருந்து விலகித் 'தோன்றும்' அதீதச் செயலில் 'சாராம்சம்' கொலையுண்டுவிட்டது. விளம்பரங்கள், பொதுத்தொடர்பு, சுயஅறிமுகங்கள், உண்மைக் காட்சிகள்...

நான் சுற்றுபுறச்சூழல் ஆர்வலன், நான் இடதுசாரி, நான் நாட்டுப்புறவியலாளன், நான் பெண்ணியவாதி, நான் இயற்கை விவசாய ஆர்வலன், நான் இயற்கை ஆற்றல் சேமிப்பு பிச்சாரகன், நான் மனிதஉரிமை ஆர்வலன், நான் கலை விமர்சகன், நான் குறும்பட இயக்குநன், நான் சிறுகதையாளன், நான் நவீன நாடகக்காரன், நான் தலித்களுக்காகப் போரிடுபவன், நான் இலக்கிய ஆர்வலன், நான் இலக்கியக் கொடையாளன், நான் தன்னார்வத் தொண்டன், நான் தொண்டு நிறுவனம் நடத்துபவன், நான் கவிஞன், நான் விளிம்புநிலை, நான் ரசிகன், நான் மானுடவியலாளன், நான் நடுநிலைமையாளன், நான் இயற்கை உணவில் ஈடுபாடுள்ளவன், நான் பயணி...

உபயம்: அமெரிக்கா, உபயம் அமெரிக்கா, நான் அமெரிக்கா உபயம். நான் உபயம் அமெரிக்கா.

நீங்கள்  ஓர் உணவகத்தின் பெயர்ப்பலகையைப் பார்த்து உங்கள் பசியும் நாவின் ருசி மொட்டுகளும் தூண்டப்படுகின்றன. நீங்கள் உணவகத்துக்குள் நுழைய முயல்கிறீர்கள். நீங்கள் ஒரு காதலை வெளிப்படுத்த விரும்புகிறீர்கள்... நீங்கள் பேச விரும்புகிறீர்கள். நீங்கள் அழ விரும்புகிறீர்கள். கண்ணாடிப் பெண் வரையப்பட்ட நீண்ட முடிவில்லாத் திரையிலேயே மோதுகிறீர்கள். இதுதான் நம் காலத்தின் சிறப்பு விளைவு.

ஐன்ஸ்டீன் சிறுவயது முதலே தனது இடுப்புக்குக் கீழ் வளர்ந்த வாலொன்றைப் பராமரித்தார். பெண்களுடன் அவர் பேணிய காதல் சரசங்களில் அந்த வால் பல அனுகூலங்களையும், சோகங்களையும் நிகழ்த்தியுள்ளது. ஆனால் ஐன்ஸ்டீனின் வாலை வரலாறு உதிர்த்துவிட்டது.
(மணல் புத்தகம், 2008)

Tuesday, 25 September 2018

காஃப்காவின் எண்ணற்ற ஜன்னல்கள்பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்த ஃப்ரன்ஸ் காஃப்கா, நவீனமாகி வரும் உலகில் வாழ நேரந்த மனிதனின் துயரங்களை இலக்கியம் வழியாக மிக நுட்பமாக பரிசீலனை செய்தவர். மாறிவரும் மனித உறவுகள், அவனின் தனிமை, தனிமனிதனுக்கும் அமைப்புகளுக்கும் இடையிலான மோதல்கள், அமைப்புகள் முன் மனிதன் சின்னஞ்சிறிய பரிதாபகரமான உயிராக மாறிநிற்பது ஆகியவற்றை காஃப்கா துல்லியமாக விசாரணை செய்துள்ளார்.

மனிதனை ‘ஆரோக்கியமாகவும்’ ‘அகிம்சை’ முறையிலும் சிறைப்படுத்திய, அவர்களை வளர்ப்பு மிருகங்களாகச் சுருக்கிய அலுவலகம் என்னும் தீங்கைப்  பற்றி தனது உருவகக் கதைகள் வழியாக பல்வேறு சித்திரங்களை காஃப்கா உருவாக்கியுள்ளார். 

விசாரணை நாவலில் கண்ணுக்குப் புலப்படாத காவல் அமைப்பின் கீழ்நிலை ஊழியர்களால் யோசப் க. ஒரு நாள் காலை, எந்தக் காரணமும் இல்லாமல் அவன் அறையில் படுக்கையிலிருந்து எழும்முன்பாகவே கைது செய்யப்படுகிறான். அதைத் தொடர்ந்து தன்னை எப்படியாவது குற்றத்தின் பிடியிலிருந்து விடுவிக்க தொடர்ந்து போராடுகிறான். நீதி அமைப்பின் குளறுபடிகளை தன் மீது தவறாக போடப்பட்ட வழக்கின் வழியாக சரிசெய்யவும், எதிர்த்துப் போராடவும் துணிபவன். ஆனால் படிப்படியாக யோசப் க. நம்பிக்கை இழக்கிறான். நீதி விசாரணைகளில் ஏற்கனவே காத்திருக்கும் எண்ணற்ற நபர்களைப் போல கிட்டத்தட்ட மூடநம்பிக்கைகளுக்குத் தள்ளப்படுகிறான். யோசப் க, கைது செய்யப்பட்டவனே தவிர அவனுக்கு எதுவுமே மறுக்கப்படவில்லை. காதலிப்பதற்கோ, உணவுண்பதற்கோ, வெளியே நடமாடுவதற்கோ எதுவும் மறுக்கப்படவில்லை. தாம் கண்ணுக்குப் புலனாகாத ஒரு அமைப்பால் கண்காணிக்கப்படுகிறோம் மற்றும் விரட்டப்படுகிறோம் என்ற பிரக்ஞை தரும் தீராத வலியுணர்வைத் தவிர அந்தக் கைது எதையுமே யோசப் க.விடமிருந்து பறிக்கவில்லை. இறுதியில் தான் செய்த குற்றம் எதுவென்று தெரியாமலேயே 31-வது பிறந்த நாள் அன்று இருட்டில் அகௌரவமான முறையில் இரண்டு காவலர்களால் தண்டிக்கப்பட்டு உயிர்துறக்கிறான்.

21 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இருக்கும் நமக்கு காஃப்காவின் படைப்புகள் பொருத்தப்பாட்டுடன் இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பிக்கொள்ள வேண்டியது அவசியம். காஃப்கா அவர் காலத்தில் இருந்த சில, பல நன்மைகளைத் தன்னகத்தே வைத்திருந்த நவீன ஜனநாயக அரசு மற்றும் நிர்வாக, நீதி அமைப்பில் நேரத்தொடங்கியிருந்த அபத்த நடைமுறைகளையும், குளறுபடிகளையும் ஆராய்ந்துள்ளார்.

இன்று நாம் காணும் ஜனநாயக அரசு மற்றும் நிர்வாக அமைப்பின் சர்வ வல்லமை சென்ற நூற்றாண்டில் வெளிப்படையாக தெரிந்ததுபோல கண்ணுக்குப் புலப்படும் தன்மை கொண்டதல்ல. அதன் இருத்தலுக்கு ஒரே வெளிப்படையான நியாயமாக திகழ்ந்த வெகுமக்களின் நலன்களை நிர்வகிப்பதிலிருந்தும் ரொம்ப தூரம் விலகி விட்டது. அதன் அதிகாரத்துவத்தையும், வல்லமையையும் புதிய அமைப்புகள் நிர்வகிக்கத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் ஒரு தனிமனிதன் அல்லது ஒரு குழுவின் மேல் செலுத்தும் உரிமையையும், எதேச்சதிகாரத்தையும் பல கண்ணுக்குத் தெரியாத அமைப்புகள் பெற்றுவருகின்றன. இந்தச் சூழலில் நம் காலத்தின் எதார்த்தத்தைப் புரிந்துகொள்ள, விமர்சிக்க காஃப்கா மேலும் பொருத்தபாடு உடையவர் ஆகிறார்.

எப்போதெல்லாம் ஒரு தனிமனிதனின் மேல் புலப்படாத ஒரு அமைப்பின் கரம் நீள்கிறதோ, எப்போது தன் மேல் நடக்கும் தாக்குதல்களுக்கு காரண-காரியங்களைத் துலக்கமுடியாமல் மனிதன் அவதியில் சகலத்தையும் பிறாண்டி, உழன்று தன்னையும் துன்பத்திற்கு ஆட்படுத்திக் கொள்கிறானோ அதுவெல்லாமே காஃப்காவுக்கு நெருக்கமான தருணங்கள் தான். ரகசிய மரணதண்டனைகளும், அணுஉலைகள், அணைகள் போன்ற திடீர் திட்டங்களும், நம் குடிமக்களின் அங்கீகாரம் பெறப்படாமலேயே திணிக்கப்படும் நிலம் இது. பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் இல்லை. நீதிமன்றங்களில் நீதிபதி இல்லை. தண்டனைகளைத் தீர்மானிப்பது ஊடகங்களின் விவாத மேடைகள். முடிவுகள் எங்கோ, யாராலோ, யார் நலனுக்காகவோ எடுக்கப்படும் நிலையில் நமது நாடாளுமன்றம், ஒரு மெய்நிகர் தோற்றமே. சமீபத்தில் ஒரு நிறுவனத்தின் சார்பாக பெட்ரோலியக் குழாய்கள் தஞ்சையின் வேளாண்மை நிலங்களில் ஊடுருவிய சம்பவம் ஒரு உதாரணம்.

அநீதிகளால் பாதிக்கப்பட்டவர்கள்- தொழிலாளர்கள் முதல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்கள்வரை- தாங்கள் பாதிக்கப்பட்டதோடு மட்டுமின்றி, அதற்கான சாட்சியங்களையும் திரட்டி நீதிமன்றத்தில் ஒப்படைத்து குற்றத்தை நிரூபிக்க வேண்டிய நீதிஅமைப்பின் கீழ் நாம் இருப்பதால், காஃப்கா இன்னும் பொருத்தப்பாடு உடையவர் ஆகிறார்.       

000

காஃப்கா,நவீன மனிதனை முழுக்க களைப்படையவும், சிக்கவும் வைத்திருக்கும் பழுதான, நோயுற்ற, அர்த்தமற்ற நடைமுறைகளால் தேய்ந்த அமைப்புகளைப் பிரதிபலிக்கும் கற்பனைப் பிரபஞ்சம் ஒன்றை தனது கதைகளில் சித்தரித்துள்ளார். அங்குள்ள நிலவெளியும், கட்டடங்களின், அறைகளின் தோற்றங்களும், நடக்கும் சம்பவங்களும், உரையாடல்களும் நிச்சயமாக மிகுபுனைவின் தோற்றத்தைக்  கொண்டவை. ஆனால் தீவிரமான நிலையில் புனைவுக்கு வெளியே உள்ள எதார்த்தத்தை முரண்நகை செய்பவை. அந்த மிகுபுனைவால் ஈர்க்கப்பட்டு, நமது எதார்த்தத்தை கொஞ்சம் தீவிரமாக, யோசப் க.-வின் விழிப்புநிலையில் பார்த்தால், காஃப்காவின் அச்சமூட்டும் கற்பனைப் பிரபஞ்சம் நம் எதார்த்தத்துக்குள்ளேயே மறைந்திருப்பதை உணர முடியலாம். அப்போது காஃப்காவின் நகைச்சுவை  சிரிக்கமுடியாத வலிகொண்ட நகைச்சுவையாய் தோன்றும்.விசாரணை கதையில் கைது செய்யப்பட்ட, யோசப் க., தனது கட்டிலில் இருந்து விழிக்கும்போதே, அவனது அறைக்கு எதிர்ப்புறம் வசித்து வந்த முதியவள் அவனைக் கவனித்துக் கொண்டிருப்பதை உணர்கிறான் யோசப் க. விசாரணையில் யோசப் க.வின் அறை தொடங்கி, அவன் செல்லும் தெருக்கள், அலுவலகம், நீதிமன்றம் இருக்கும் கீழ்நிலைக் குடியிருப்பு, நீதிமன்றம், வழக்கறிஞரின் அறை, நீதிமன்ற ஓவியனின் அறை என எல்லாமும் ஒரு பொந்துகளைப் போல குறுகியவை. யோசப் க. தங்கியிருக்கும் அறைக்கும், மிஸ் ப்யூர்ட்ஸ்னரின் அறைக்கும் ஒரு கதவு இடைவெளிதான் தூரம். எந்த அறைகளும் அந்தரங்கம் இல்லாதவை. விசாரணை நாவல் முழுவதும் ஜன்னல்கள், வாசல்கள் பற்றிய பல்வேறு சித்தரிப்புகள் உண்டு. ஜன்னல்கள் பெரும்பாலும் மூடியவை. வாசல்கள் திறந்தே இருக்கின்றன. ஆனால் எல்லாரும் போவதற்கு அதிகாரமோ, உரிமையோ இல்லாதவை. அறைகள் அனைத்தும் இருண்டவை. காப்கா, அந்த அறையில் இருக்கும் கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்த நினைக்கும்போதோ, அங்கு நடக்கும் செயல்கள் மீது வாசகனின் கவனத்தைக் குவிக்க வேண்டுமென்றோ நினைக்கும்போது சிறிய மெழுகுவர்த்தி ஒன்றை ஏற்றுகிறார். நீதிபதியும், பார்வையாளர்களும் குற்றம்சாட்டப்பட்டவரும் கூடியிருக்கும் விசாரணை அறை, கலவியோ, ஒரு சல்லாபமோ, ஒரு வியாபார பேரமோ எதுவும் நடப்பதற்கான சாத்தியங்கள் கொண்டதுதான். விசாரணையில் வரும் அந்த ஓவியன் சொல்வது போல,“நீதிமன்ற அலுவலகங்கள் எல்லா கூரைகளுக்கும் கீழ் இருக்கத்தான் செய்கின்றன”.

   சில ஜன்னல்கள் திறக்கவே முடியாதவாறு, கண்ணாடி பதித்து மூடப்பட்டவை. காப்கா சித்தரிக்கும் ஜன்னல்கள் மேல் தெரியும் புகைக்கூண்டும், வானவெளியும் ஒரு படமாக இருக்கவும் சாத்தியம் உண்டு. ஜன்னல் மற்றும் வாயில்களை நோக்கிய ஏக்கம் காப்காவுக்கு விடுதலைக்கான, விடுபடுதலுக்கான உணர்வாய் துரத்தியிருக்க வேண்டும். வாயில்களைப் பற்றி சிரிப்பூட்டக்கூடியதும் துயரகரமானதுமான புனைவுகள் விசாரணை நாவலில் உண்டு. நீதிமன்ற ஓவியனிடம் தன் வழக்குக்கான சிபாரிசுக்காக யோசப் க. செல்லும்போது, ஓவியனின் அறைக்குள் ஒரு மர்மமான கதவு இருப்பது தெரியவருகிறது. அந்தக் கதவை ஓவியனின் கட்டிலின் அடியில் இருந்து திறக்கவேண்டும்.   உள்நுழைவதற்கும், வெளியேறுவதற்குமாக படைக்கப்பட்ட வாயிலில் அதிகாரத்துவம் உருவாக்கியிருக்கும் காவல்காரனை எதிர்த்து, விலக்கிச் செல்லமுடியாத நிலையை, நவீன மனிதனின் தடையாக உருவகப்படுத்துவதாக வாசிக்க இயலும். ஒரு ஆவணத்தை கவனத்துடன் படித்ததால் களைப்படைந்த அதிகாரி, வழக்கறிஞர்கள் படியேறி வரும் வாசல் ஒன்றில் நின்று, நடந்து ஏறிவரும் அனைத்து வழக்கறிஞர்களையும் படியில் இருந்து உருட்டி விளையாடுகிறார். வழக்கறிஞர்கள் அவரை எதிர்க்கவோ, வன்முறையைப் பயன்படுத்தவோ செய்யாமல் தொடர்ந்து படிகளில் ஏறிப்போய் அவரைக் களைப்படைய வைத்தே உள்ளே செல்வதற்கு நினைக்கிறார்கள். நாவலின் இறுதியில் வரும் நீதிமன்றப் பாதிரி, ஒரு வாயிற்காப்போன் கதையைச் சொல்கிறார். நம்மைச் சுற்றி உருவாகியிருக்கும் அதிகாரத்துவத்தின் மீது கவிந்திருக்கும் அபத்தம் மற்றும் அதைச் சார்ந்துள்ள மனிதனின் துயரத்தை இதைவிடத் தீவிரமாக உரைப்பது சாத்தியமேயல்ல.

 சட்டத்தின் முன் ஒரு வாயிற்காவலன் நிற்கிறான். கிராமத்திலிருந்து ஒருவன் அந்த வாயிற்காவலனிடம் வந்து சட்டத்திற்குள் நுழைய அனுமதி வேண்டுகிறான். ஆனால், வாயிற்காவலன் அவன் நுழைய இப்போது அனுமதிக்க முடியாது என்கிறான். அந்த மனிதன் யோசித்துவிட்டு, அப்படியானால் பிறகு நுழைய அனுமதி உண்டா என்று கேட்கிறான். அது முடியலாம் என்கிறான் வாயிற்காவலன். ‘ஆனால் இப்போது முடியாது’. சட்டத்திற்கு செல்லும் வாயில் எப்போதும் போலத் திறந்திருப்பதால், ஒரு பக்கமாக சிறிது நகர்ந்தாலும், வாயில் வழியாக உள்ளே பார்ப்பதற்காக அந்த மனிதன் குனிகிறான். வாயிற்காவலன் அதை கவனித்துவிட்டு சிரித்தவாறு கூறுகிறான்:’அது உன்னை அந்த அளவுக்குக் கவர்ந்தால், என் அனுமதி இல்லாமல் உள்ளே செல்ல முயன்றுதான் பாரேன். ஆனால், ஒன்று மட்டும் கவனத்தில் வைத்துக்கொள். நான் மிகவும் பலசாலி. மேலும் நான் வெறும் கீழ்ப்படியிலிருக்கும் காவல்காரன்தான். ஒவ்வொரு கூடத்திலும் வாயிற்காவலர்கள் நிற்கிறார்கள். ஒவ்வொருவனும் மற்றவனை விட பலசாலி. மூன்றாவது காவல்காரனின் தோற்றத்தையே என்னால்கூடத் தாங்க முடியாது”. இதுபோன்ற கஷ்டங்களை கிராமத்தான் எதிர்பார்க்கவில்லை. சட்டம் எல்லாரும் எப்போதும் அணுகும்படிதானே இருக்கவேண்டும் என்று எண்ணுகிறான். ஆனால் இப்போது ஃபர் கோட்டு அணிந்துகொண்டிருக்கும் வாயிற்காவலனைச் சரியாகப் பார்க்கும்போது-அவனது கூர்மையான பெரும்நாசி, நீண்ட,மெல்லிய,கருத்த,டார்டார் இனத்தாடி-நுழைவதற்கு அனுமதி கிடைக்கும்வரை காத்திருப்பது மேல் என்று முடிவுசெய்கிறான். வாயிற்காவலன் அவனுக்கு ஒரு சிறிய பெஞ்சைக் கொடுத்து வாயிலிலிருந்து ஒதுங்கி உட்காரச் செய்கிறான். அங்கு அவன் நாள் கணக்காக, வருஷக்கணக்காக உட்கார்ந்திருக்கிறான். அவன் உள்ளே நுழையப் பல முயற்சிகள் செய்து, வாயிற்காவலனைத் தன் வேண்டுகோள்களினால் களைப்படையச் செய்கிறான். வாயிற்காவலன் அடிக்கடி அவனிடம் சிறு விசாரணைகள் நடத்துகிறான். அவன் சொந்த ஊரைப்பற்றியும் மற்ற விஷயங்களைப் பற்றியும் கேட்கிறான். ஆனால் அவை பெரிய நபர்கள் கேட்பதைப் போல ஒப்புக்கு கேட்கும் கேள்விகள். இறுதியில் அவனை இன்னும் உள்ளே விட முடியாது என்று திரும்பத் திரும்பக் கூறுகிறான். தன் பிரயாணத்திற்காகப் பலவற்றுடன் ஆயத்தமாக வந்திருந்த கிராமவாசி தனக்கு மிகவும் மதிப்புள்ளதாக இருந்தபோதிலும் எல்லாவற்றையும் வாயிற்காவலனுக்கு லஞ்சமாக கொடுக்க செலவு செய்துவிடுகிறான். அவன் எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளத்தான் செய்கிறான், ஆனால் அத்துடன் கூறுகிறான், ‘ஏதும் செய்யாமல் விட்டுவிட்டோம் என்று நீ எண்ணக்கூடாது என்றுதான் நான் ஏற்றுக்கொள்கிறேன்’. இந்தப் பல வருஷங்களும் அவன் வாயிற்காவலனைக் கிட்டத்தட்ட கண்கொட்டாமல் கவனிக்கிறான். அவன் மற்ற வாயிற்காவலர்களை மறந்துவிடுகிறான். இந்த முதல் காவலன்தான் சட்டத்திற்குள் நுழைவதற்கு இருக்கும் ஒரே ஒரு முட்டுக்கட்டை போல் அவனுக்குத் தோன்றுகிறான். முதல் சில வருடங்கள் தன் துரதிர்ஷ்டத்தை வாய்விட்டு வைகிறான். பிறகு அவனுக்கு வயது ஆக,ஆக வெறுமனே தனக்குத்தானே முணுமுணுக்கத்தான் செய்கிறான். அவன் அறிவு தடுமாறுகிறது. பல வருடங்களாக வாயிற்காவலனைக் கவனித்து வந்திருந்ததால், அவனுடைய கோட்டின் காலரில் இருக்கும் ஈக்களையும் தெரிந்துகொண்டதால், தனக்கு உதவிசெய்யும்படி, வாயிற்காவலனின் மனதை மாற்றும்படி ஈக்களையும் கேட்டுக்கொள்கிறான். இறுதியில் அவனுடைய கண்களில் ஒளியும் மங்கிவிடுகிறது. அவனைச்சுற்றி உண்மையிலேயே இருண்டு கொண்டு வருகிறதா அல்லது அவனது கண்கள்தான் அவனை ஏமாற்றுகின்றனவா என்று அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் இப்போது இருளில் ஒரு பிரகாசத்தைப் பார்க்கிறான். அது அணைக்க முடியாதவாறு சட்டத்தின் வாயிலிலிருந்து வெடித்துக்கொண்டு வெளிவருகிறது. இப்போது அவன் இன்னும் அதிக நாட்கள் உயிருடன் இருக்கப்போவதில்லை. இறக்குமுன், இக்காலம் முழுவதும் அவனுக்கு ஏற்பட்ட எல்லா அனுபங்களும் இதுவரை வாயிற்காவலனை அவன் கேட்டிராத கேள்வியாக அவன் மனதில் ஒன்றுதிரள்கின்றன. விறைப்பாகிக் கொண்டே வருகிற தன் உடலை நிமிர்த்த முடியாததால், அவன் வாயிற்காவலனை சைகை செய்து அழைக்கிறான். வாயிற்காவலன் மிகத் தாழக்குனிய வேண்டியிருக்கிறது. ஏனென்றால் அவர்களுக்கிடையேயிருந்த யார் கேட்பது,யார் பதில் சொல்வது என்ற நிலை அந்தக் கிராமவாசிக்கு அனுகூலமாக தலைகீழாக மாறிவிட்டிருந்தது. ‘இன்னும் என்ன தெரிந்துகொள்ள வேண்டுமென்கிறாய்?’ என்று வாயிற்காவலன் கேட்கிறான். ‘உனக்குத் திருப்தி ஏற்படுவதேயில்லை.’ ‘எல்லாரும் சட்டத்தை அணுக முயல்கிறார்கள்’என்கிறான் கிராமவாசி, ‘எப்படி இத்தனை வருடங்களாக என்னைத் தவிர வேறு ஒருவரும் உள்ளே நுழைய அனுமதி கேட்கவில்லை?’. அந்த மனிதன் இறக்கும் தறுவாய்க்கு வந்துவிட்டான் என்று வாயிற்காவலன் அறிந்துகொண்டு, செவிடாகிக்கொண்டு வரும் அவன் காதுகளுக்குக் கேட்குமாறு அவனிடம் இரைந்து கூறுகிறான், ‘இங்கு வேறு ஒருவரும் நுழைய அனுமதி பெறமுடியாது, ஏனென்றால் இந்த வாயில் உனக்காக மட்டும்தான் இருக்கிறது. இப்போது நான் போய் அதை முடிவிடுகிறேன் ‘”என்கிறான்.

இந்த உருவகக் கதையால் மிகவும் ஈர்க்கப்பட்டு  வாயிற்காவலன், அந்த மனிதனை ஏமாற்றிவிட்டான் என்று யோசப் க., பாதிரியிடம் கூறுகிறான். ஆனால் பாதிரியோ, அந்த மனிதன் அதற்கு முன்பு வாயிற்காவலனிடம் அந்தக் கேள்வியைக் கேட்கவில்லை என்று கூறிவிட்டு, அந்த வாயிற்காவலன் தன் கடமையைத்தான் செய்தான் என்று சொல்கிறார்.

இந்த உருவகக்கதையைப் பொருத்தவரை கிராமத்தான் முதலில் பரிதாபகரமானவனாகத் தெரிகிறான். படிப்படியாக வாயிற்காப்போன் மீதும் நமது வெறுப்பு இல்லாமல் ஆகிறது. சட்டத்தின் அனுகூலங்களை அடைய விரும்பும் அந்த மனிதன் எப்படி அப்பாவியோ, அவனை ஒடுக்கும் அதிகாரத்துவ அமைப்பின் கீழ்ப்படியில் உள்ள வாயிற்காவலனும் அதைப் போன்ற ஒரு அப்பாவிதான். யோசப் க.வை கைது செய்யவந்து, அவனது காலை உணவையும், உடைகளையும் திருடிவிட்டு, அதற்காக யோசப் க. பணியாற்றும் அலுவலகத்தின் ஒரு நிலவறையிலேயே தண்டிக்கப்படும் கீழ்நிலைக் காவலர்களும் அந்த அமைப்பின் பகடைக்காய்கள் தான். ஆனால் யோசப் க.வை காரணமின்றி கைது செய்ய உத்தரவிட்ட, உயர்மட்ட அமைப்பும், நீதிபதிகளும் கண்ணுக்குத் துலங்காமல் மறைந்திருக்கின்றனர். நீதிமன்றம் எப்போதும் குற்றத்தால் ஈர்க்கப்படும் தன்மை கொண்டதாக இருக்கும் என்ற நியாயத்தில் கைதுகளும், தண்டனைகள் நிறைவேற்றப்படுகின்றன. 

ஏனென்றால் யோசப் க.-வின் வழக்கறிஞர் சொல்வது போல பிரதிவாதம் உண்மையில் சட்டப்படி அனுமதிக்கப்படவில்லை. ஆனால் சகித்துக்கொள்ள மட்டும் படுகிறது. வழக்கறிஞர் ஹூல்ட், வக்கீல்களின் நிலைமை குறித்து சொல்வது இது.

“இந்த நீதிமன்றத்தின் முன்பு வக்கீல் என்ற முறையில் வாதிடுபவர்களெல்லாம் அடிப்படையில் சில்லறை வக்கீல்கள்தான். அது சந்தேகமில்லாமல் வக்கீல்களுடைய அந்தஸ்தையே தாழ்த்திவிடுகிறது. அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கும் குறுகிய,கொட்டில் போன்ற தாழ்வான அலுவலக அறையே, நீதிமன்றம் அவர்கள் மீது கொண்டிருக்கும் அசிரத்தையைக் காட்டுவது. ஒரு சிறுதுவாரத்தின் வழியாகத்தான் அந்த அறைக்குள் வெளிச்சம் வருகிறது. அதுவோ மிகவும் உயரத்தில் இருப்பதால், அதன் வழியே வெளியே பார்க்க வேண்டுமானால், ஒருவர் தன்னை முதுகில் ஏற்றிக்கொள்ள தயாராக இருக்கும் இன்னொருவரை தேடவேண்டும். மேலும் அந்த துவராத்திற்கு அருகே பொருத்தப்பட்டிருக்கும் சிம்னியிலிருந்து வரும் புகை மூக்கினுள் சென்றுவிடுகிறது. முகத்தைக் கறுப்பாகவும் ஆக்கிவிடுகிறது. அவர்கள் இருக்கும் நிலைமைக்கு ஒரு உதாரணம் கூறப்போனால், அந்த அறையின் தரையில் ஒரு வருடத்திற்கு மேலாகவே ஒரு துவாரம் இருக்கிறது. ஒரு ஆள் விழும் அளவுக்கு அவ்வளவு பெரியதல்ல. என்றாலும் ஒரு கால் முழுவதும் உள்ளே செல்லும் அளவுக்கு பெரியதாக இருக்கிறது. அதனால் ஒருவர் காலை விட்டுவிட்டால், அந்தக் கால் முதல்மாடியில், அதுவும் கட்சிக்காரர்கள் காத்துக்கொண்டிருக்கும் தாழ்வாரத்திலேயே தொங்கும். அதிகாரத்திடம் முறையிட்டாலும் சிறிதும் பயனில்லை. ஆனால் சொந்தச் செலவில் அறையில் ஏதாவதொன்றை மாற்றுவதற்கும் கடுமையாக தடைவிதிக்கப்பட்டிருக்கிறது”

ஜனநாயகம் முதல் நவீன சட்டவியல் வரை நவீன மனிதனுக்கு உரிமைகளையும், சுதந்திரத்தையும், ஆசுவாசத்தையும் வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்புகள் தான். ஆனால் அதே மனிதர்களால், அதை நிர்வகிக்கும் ஊழியர்கள் மற்றும் நிர்வாகிகளால் சர்வாதிகாரத் தன்மை கூடி மெத்தனத்தன்மையையும், கொடுங்கோன்மையை அடைகிறது.

யோசப் க.-வும் தனது மாமாவின் கிராமத்திற்குக் கூட தப்ப நினைக்கவில்லை. அவன் அலுவலகத்துக்குச் செல்வதற்கு நீதிமன்றத்தால் அனுமதிக்கப்படுவதன் மூலம் ‘சகஜமான’ வாழ்க்கைக்கு அனுமதிக்கப்படுகிறான். யோசப் க. கைது செய்யப்படும் நிகழ்ச்சியை சுற்றுப்புறத்தில் உள்ளவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இருப்பதற்காக, க-வின் அலுவலகத்தில் உள்ள கீழ்நிலைப் பணியாளர்கள் அவன் அறைக்கு வரவழைக்கப்படுகின்றனர். அதன் அடிப்படையில் மனிதனைக் காப்பாற்றும், குற்றம் செய்யாமல் பாதுகாக்கும் இடமாக அலுவலகமே இருக்கிறது. யோசப் கவுக்கு நீதிமன்றத்தின் நடைமுறைகள் தான் புதிராக இருக்கிறதே தவிர, அவன் வேலை பார்க்கும் வங்கியைப் பொருத்தவரை ஒரு மேலதிகாரியின் அத்தனை அதிகாரங்களையும், அல்ப தந்திரங்களையும், சாமர்த்தியங்களையும் பிரயோகிப்பவனே. தனது பதவியின் செல்வாக்கை சக அதிகாரிகள் சீர்குலைப்பதை ஒருபோதும் விரும்பாதவன். அலுவலகத்தில் தன் நிலையைத் தொடர்ந்து தக்கவைக்கும் வகையில் தொடர்ந்து சுற்றி நடப்பவைகளைக் கண்காணித்தபடி இருப்பவன். அலுவலகரீதியான உலகநோக்கே அவனுக்கு இருக்கிறது. அடுத்த அறையில் குடியிருப்பவளான மிஸ்.ப்யூர்ட்ஸ்னரை அவள் வெறும் தட்டச்சுப்பெண்தான் என்று விமர்சிக்கிறான். நீதிமன்ற வளாகத்திற்குள் ஒருமுறை போகும்போது, அங்குள்ள உஷ்ணக்காற்றால் மூச்சுமுட்டி பாதிக்கப்படும்போது, எனக்கு அலுவலக காற்று பழக்கமானதே என்று திரும்பத் திரும்பச் சொல்பவன்.

முதலில் கைதான தருணத்திலிருந்து, யோசப் தனது கைதை ஏதோ ஒரு வேடிக்கை நாடகமாக இருக்குமோ என்ற சந்தேகத்துடனேயே அணுகுகிறான். எப்போதும் இதெல்லாம் ஒரு விளையாட்டு என்று ஆட்டம் கலைவதற்கான தருணத்திற்காக காத்திருக்கிறான். ஒருகட்டத்தில் யோசப் க.-வுக்கு கடைசி தீர்ப்பு அளிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. இரண்டு சீருடைக் காவலர்கள் அவனை அழைத்துச் செல்கிறார்கள். “மகா மட்டமான நடிகர்களை எனக்கு அனுப்பிவைத்திருக்கிறார்கள். என் விஷயத்தை மலிவாக முடித்துவிட நினைக்கிறார்கள்” என்று நினைத்தபடி, எந்த நாடகக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்றும் கேட்கிறான்.

அவர்கள் அவனை புறநகரில் உள்ள ஒரு கைவிடப்பட்ட கல்குவாரிக்கு அழைத்துச் சென்று, ஒரு கல்லில் உடலைக் கிடத்தி, கூர்மையான கசாப்பு கத்தியை வைத்து கழுத்தில் இறக்கிக் கொல்கின்றனர். கடைசியாக இறக்கப்போகும் தருணத்தில் யோசப் க சொல்கிறான். “எப்படி ஒரு நாயைப் போல” என்றான் அவன், இந்த இழிவு அவனுக்குப் பின்னும் தொடர்ந்து இருக்கவேண்டும் என்பதைப் போல." அவன் மரணத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்னர் ஒரு மீட்புக்கான நம்பிக்கை போல அவன் ஆசை வைத்திருந்த மிஸ். ப்யூர்ட்ஸ்னரின் சாயலில் ஒருத்தி கடந்துபோகிறாள். திருமணமாகாமல் நவீனத்தனிமையால் சபிக்கப்பட்ட யோசப் க.-வுக்கு தாம்பத்யமும் இந்த உலகில் மறுக்கப்பட்டது.

அந்த மரணம் நவீன மனிதன் இழந்த சாத்தியங்களின் மரணம். நவீன மனிதன், தன்னோடு பாதுகாப்பாக இருப்பதற்கான சுதந்திரத்தை இழந்தவன். செய்திகள், விளம்பரங்கள் தொடங்கி கண்டங்கள் தாண்டிய அரசியல், தட்பவெப்பம் வரை அவன்மீது குழப்படிகளாகவும், தீமையாகவும் எப்போதும் மேலே விழுந்து தாக்குவதற்கான இலக்காக இருப்பவன். ஆல்பர் காம்யூ உரைப்பது போல ஒரு அர்த்தத்தை அல்லது ஒரு ஒழுங்கை, ஒரு விளக்கத்தை அல்லது ஒரு கடவுளை இன்றும் மனிதன் தன் வாழ்க்கையில் தேடியபடி இருக்கிறான். ஆனால் பகுத்தறிய இயலாத நவீன வாழ்வின் பல அடுக்கிலான குழப்படிகளும், அபத்தங்களும் ஒருபோதும் அவனுக்கு பதிலையோ, நீதியையோ குறைந்தபட்சம் விளக்கத்தையோ கூட அளிக்கவில்லை. அந்தவகையில் யோசப் க.-வின் இழிவு நம்மையும் தொடரவே செய்யும். 

காப்காவின் ஒரு குட்டிக்கதை இது.

“ஐயோ, ஒவ்வொரு நாளும் இவ்வுலகம் சுருங்கிக் கொண்டு வருகிறது. ஆரம்பத்தில் அது மிகப் பெரிதாக இருந்தது கண்டு அஞ்சினேன், ஓடினேன். கடைசியில் தொலைவில் வலமும் இடமுமாக சுவர்களைக் கண்டு சந்தோஷப்பட்டேன். ஆனால் இச்சுவர்கள் விரைவிலேயே நெருங்கிக் குறுகி வந்துள்ளன. நான் கடைசி அறையில் இருக்கிறேன். நான் ஓடி ஒளிந்துகொள்ள வேண்டிய பொறி, மூலையில் இருக்கிறது” என்றது எலி. “உனது திசையை மாற்ற வேண்டியதுதான் இப்போது செய்யவேண்டியது” என்ற அதை தின்றுவிட்டது.”

காப்காவின் குட்டிக்கதையில் வரும் எலியைப் போலத்தான் நவீன  மனிதனுக்கு அவனது பரிணாமத்தின் கதியில் உலகம் படிப்படியாக சுருங்கிவருகிறது. அதற்கு அவனும், அந்தக் குட்டிக்கதையில் வரும் எலியைப் போலவே பொறுப்புள்ளவன். 20 ஆம் நூற்றாண்டில் அலுவலகம் என்ற அமைப்பு, அதன் அதிகாரத்துவம், அவற்றின் அர்த்தமற்ற நியமங்கள், சடங்குகள், காகித நடைமுறைகளாக விரிந்து தடித்து, மனிதனை, எண்ணற்ற உயிர் சாத்தியங்களைத் துறந்த அலுவலகப் பிராணியாக மாற்றிவிட்டது. துல்லியமான பகுத்தறிவின் முழக்கத்துடன், கண்டிப்பாக பேணவேண்டிய விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாட்டு நெறிகளைக் கொண்ட, பாரபட்சமற்ற தன்மையையே லட்சியமாக கொண்ட எந்திரங்கள் அவை. எங்கெங்கும் நம்மைக் கண்காணிக்குமாறு, அறிவின் சர்வ வல்லமை மற்றும் அதிகாரத்தைப் புகட்டி நாம் உருவாக்கிய அரசு மற்றும் நீதிபரிபாலன அமைப்புகள் வரை அனைத்தும் குருட்டுத்தன்மையுடையவை என்றும், அவற்றின் பெரும்பாலான செயல்கள்- காரண-காரியத் தொடர்பில்லாதவை என்றும் காஃப்காவின் கதைகள் அறிவிக்கின்றன.
000


முறையாக சட்டப்படிப்பை முடித்த காஃப்கா, முதலிரண்டு வருடங்கள் ஒரு இத்தாலிய காப்பீட்டு நிறுவனத்தில் பணியாற்றினார். அதற்குப் பிறகு பொகீமியா அரசின் தொழிலாளர் விபத்துக் காப்பீட்டு நிறுவனத்தில் காப்பீட்டு வழக்கறிஞராக சேர்கிறார். இங்குதான் நவீன சமூகவியல் மற்றும் சட்டவியல் குறித்த ஆழமான புரிதல்களையும், கண்டுபிடிப்புகளையும் அடைகிறார். இங்கே பணிசெய்த காலத்தில் பல்வேறு அலுவல்ரீதியான ஆவணங்களை அவர் எழுதியுள்ளார். நீதிமன்றத்தில் அவர் பணியாற்றவில்லையெனினும், சட்டம் மற்றும் நீதித்துறை நடைமுறைகள் சார்ந்து அவரது படைப்புகளில் காணப்படும் தர்க்கங்கள் மிகத் துல்லியமாக இருப்பதற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். நீதித்துறையில் உள்ளும்-புறமும் நடக்கும் விஷயங்கள் சார்ந்த கூர்மையாக அவரிடம் விவரணங்களாக பெரும் விழிப்புநிலையுடன் முன்வைக்கப்படுகின்றன. காஃப்காவின் கண்கள் எல்லாவற்றையும் ஊடுருவிப் பார்த்துவிடுகின்றன. நிகழ்வின் எண்ணற்ற சாத்தியங்களையும், அதேவேளையில் அதன் பயனின்மையையும் காஃப்கா அதிசயிக்கத்தக்க அளவில் அடுக்கிவிடுகிறார். முதல் விசாரணைக்கு முதல் ஞாயிற்றுக்கிழமையில் நீதிமன்றம் இருக்கும் குடியிருப்புக்குப் போகும்போது, படிகளில் பல குழந்தைகள் யோசப் கவின் பாதையில் எதிர்படுகின்றன. அடுத்த வாரம் வரும்போது, அதற்கு மிட்டாய்கள் வாங்கவேண்டும் என்று க நினைக்கிறான். உடனேயே மிட்டாய்களைக் கொண்டு வராவிட்டால் ஒரு பிரம்பை எடுத்துவரவேண்டும் என்று சிந்திக்கிறான். இரண்டுமே யோசப் க.வின் அர்த்தத்தில் ஒன்றாகவே தொனிக்கிறது. அதற்குமேல் அந்த இரண்டு நோக்கங்களையும் நாம் சந்தேகப்பட முடியாது.

விசாரணையின் இறுதிப்பகுதியில் யோசப் கவுக்கு மரண தண்டனை அளிக்கப்படும் கல்குவாரி, அவர் பார்த்த அலுவலுடன் தொடர்புடையது. ஜெர்மனியில் நிலவிய கடும்சிக்கல் வாய்ந்த சட்ட நுணுக்கங்களைக் கடந்து சிறிய தொகை ஒன்றை விபத்து இழப்பீடாக வாங்குவதற்கு பல விதமான காகித நடைமுறைகள் மற்றும் பிரயத்தனங்களை தொடர்ந்து முயற்சி செய்து, காத்திருக்கும் தொழிலாளர்களின் துயரங்கள் அவரை பாதித்திருக்கலாம் என்றும் அதன் பிரதிபலிப்புகள் அவரது படைப்புகளில் உள்ளன என்றும் கூறப்படுகிறது.

தற்கால இந்திய வாழ்க்கையின் பின்னணியில் ஒரு வாசகன் காஃப்காவை எப்படி அணுகலாம்? என்ற கேள்வியை விசாரணையையும், காஃப்காவின் பிற படைப்புகளையும் முன்வைத்து கேட்கலாம். பெருநுகர்வின் அடிப்படையிலான சந்தைப் பொருளாதாரத்தை ஆதரிக்கும் அரசு நிர்வாகத்தின் கீழ் ஜனநாயகத்தின் இறுதிநம்பிக்கையான வெகுமக்கள் நலன் சார்ந்த அனைத்து பொறுப்புகளையும் கைவிட்ட அரசு நம்மை பரிபாலனம் செய்கிறது. பன்னாட்டு நிறுவனங்கள் முதல் இறையாண்மை கொண்ட நிலத்திற்குள் தனிச்சட்டங்களைப் பராமரிக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களாக மாறிவரும் புதிய அமைப்புகளைப் புரிந்துகொள்வதற்கு காஃப்கா உதவிகரமாகவே இருப்பார் என்பது எனது துணிபு. அரசு அதிகாரம் மற்றும் அதிகாரத்துவத்தின் அதே உள்ளடக்கத்துடன் மாற்று அரசியல், மாற்று பண்பாடு ஆகிய கோஷங்களுடன் தட்டையாகப் பேசி அதையே அதிகாரமாகவும், அதிகாரத்துவமாகவும் உருத்திரட்டத் தொடங்கியிருக்கும் அமைப்புகளையும் புரிந்துகொள்வதற்கும் விமர்சிப்பதற்கும் காஃப்கா பல சாத்தியங்களைத் தருகிறார்.

 ஆனால் காஃப்கா சித்தரித்துள்ள நவீன அமைப்புகள் உருவாக்கி வைத்துள்ள அபாயகரமான,கண்காணிப்புக் கோபுரத்துக்கு வெளியே தப்பிப் பிழைப்பதற்கு, மறைந்து வாழ்வதற்கான வெளிகள், சாத்தியங்கள் நமது மரபில் உள்ளனவா என்பதை யோசித்துப் பார்ப்பதும் காஃப்காவை வாசிக்கும் ஒரு இந்திய வாசகனின் கடமை என்று கருதுகிறேன். அதற்கான சாத்தியங்கள் முழுமையாக அற்றுப்போய்விடவில்லை என்றே நான் நம்புகிறேன்.

(சிலேட் இதழில் 2012-ம் ஆண்டு வெளியான கட்டுரை)

----------

விசாரணை- ப்ரன்ஸ் காஃப்கா

தமிழில்: ஏ.வி.தனுஷ்கோடி

வெளியீடு: க்ரியா

காஃப்கா- கடிதங்கள்,கதைகள்,கட்டுரைகள்- தமிழில்: சா.தேவதாஸ்

In search on franz kafka”s concept of law- professor Reza Banakar

HOPE AND THE ABSURD IN KAFKA- Albert camus


Saturday, 22 September 2018

எரியும் நகரத்திலிருந்து மண்டோஷங்கர்ராமசுப்ரமணியன்


ஒரு சில மாதங்களுக்கு முன் பம்பாயில் கடல்நீர் இனிப்புச்
சுவையடைந்ததை செய்தித்தாள் படிப்பவர்கள் நினைவில்
வைத்திருக்கக்கூடும். அன்று மும்பையின் கடல் நீர் திடீரென
இனிப்பாகிவிட்ட அற்புதத்தைப் பருக, அற்புதங்கள் அருகி, கரிப்புச்
சுவையையே நாள்தோறும் சுவைக்கும் மும்பையின் வெகுமக்கள்
இனிப்பான கடலை நோக்கித் திரண்டனர். கடல் நீரின்
வேதிச்சமநிலை குறைந்திருப்பதால் நீரின் ருசி மாறியுள்ளது
என்றும், இனிப்பான குடிநீர் பருகுவதற்கு உகந்ததல்ல என்றும்
விஞ்ஞான அறிவிப்புகள் உடனே வெளியாயின. இருப்பினும்
காலி கோக் பாட்டில்களில் கடல் நீர் எடுக்கப்பட்டு மும்பையின்
வெகு மக்களால் புனித நீரெனப் பருகப்பட்டது, விற்கப்பட்டது.
மும்பையில் கடல் இனிப்பான பிறகு இந்தியாவின் வெவ்வேறு
இடங்களில் உள்ள கடல்களும் இனிப்பானது. குஜராத்திலும் கடல்
இனிப்பானது. குஜராத்தில் கடல் இனிப்பானதில் நமக்கு ஒன்றும்
ஆச்சரியம் இருக்காது. ரத்தமே அவ்வப்போது தித்திக்கும் நிலம்
தானே இது.

மேலே சொல்லப்பட்ட சம்பவம் வெகுமக்களின் கூட்டுணர்வு
செயல்படும் முறைக்குச் சிறந்த உதாரணம். இதை ஒரு மக்கள்
குழு ஒரு நிகழ்வில் ஒரு காலகட்டத்தில் பகிரும் உணர்ச்சி
எனலாம். இக்கூட்டுணர்ச்சி அதீதமாக செயல்படும் போது பின்
நிகழ்வுகளையும், விளைவுகளையும் அறிவியல் பார்வையோடு
வெறும் நன்மையாகவும், தீமையாகவும் அசட்டுணர்ச்சியாகவும்
வெறுமனே பாவிக்க முடியாது. பகுத்தறிவு, ஜனநாயகம், மனித
மதிப்பு, நாகரீகம் என மனிதன் காலப்போக்கில் பாவிக்கும் எல்லா
முகமூடிகளும் அறுந்து தொங்கும் ஒப்பனை அறை இது.
வேறுவேறு காலகட்டங்களில் வெகுமக்கள் மத்தியில் படரும்
அதீதக் கூட்டுணர்ச்சிக்கு ஒரு பொது தர்க்கம் இருக்கிறது.
அத்தர்க்கத்திற்கு லாவகமான உபகரணமாக, பொது
அடையாளங்களை எடுத்துக் கொள்கிறது. ஒற்றைப் பொது

அடையாள முகமூடியை பிரமாண்டப்படுத்திக் காட்டும் கூட்டு
நனவிலி ஒரு வகையில் சமகாலப் பிரக்ஞையையும், விருப்பு,
வெறுப்புகளையும் அனுசரிக்கிறது. ஏனெனில் காலத்தை
அனுசரிக்காத பிரக்ஞை கூட்டுணர்ச்சியை உசுப்புவதற்கு
லாயக்கற்றது.

1921 ஆம் ஆண்டு குஜராத்தில் தேசிய போராட்டத்துடன் அதுவரை
தங்களை அடையாளம் கண்டுகொள்ளாமல் இருந்த ஆதிவாசிகள்
தாங்கள் வழிபடும் சாலாபாயின் கட்டளைகளை ஏற்றுக்
காந்தியைப் பின்பற்றி தேசியப் போராட்டத்துடன் இனங்கண்டு
கொண்டு, தங்கள் பழக்க வழக்கங்களை சீர்ப்படுத்திய தேவி
இயக்கமும் மக்களின் கூட்டுணர்ச்சி, வரலாற்று இயக்கத்தோடு
தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள தன் வழியிலேயே
வெளிப்படுத்திய மற்றொரு உதாரணம் இது. அப்போது ஆதிவாசிக்
கிராமங்களின் கிணறுகளில் காந்தி ராட்டையை நூற்றவாறு
தோற்றமளித்தார். சிலந்திகள் தங்கள் வலைகளில் காந்தியின்
ராட்டையை வரைந்தன. ஆதிவாசிகளுக்காக கடவுள் தயாரித்து
அனுப்பிய புதிய ராஜாவானார் காந்தி.

இந்திய சுதந்திரத்துக்கு முன்பும், பிரிவினையை ஒட்டிய
காலத்திலும் நடந்த இந்து, முஸ்லீம் மக்களுக்கு இடையிலிருந்த
பதற்றங்களும், கலவரங்களும் கூட்டம் கூட்டமாக நடந்த
கொள்ளை, கற்பழிப்பு, கொலைகள் கொண்ட பிரமாண்ட மனித
அழிவை நிகழ்த்தியது வெகுமக்களின் கூட்டுணர்ச்சியே.
இதுபோன்ற தொடர் நிகழ்வுகளுக்குப் பின் இயங்கும்
கூட்டுணர்ச்சியில் பங்கு பெறும் குழுபோதத்தை ஆதியந்தம்
தெரியாத செயல்பிராவகத்த மண்டோ தரிசிப்பதனாலேயே ஒரு
போதும் உலராத ரத்தத்தின் ஈர மெய்மையாய் அவர் கதைகள்
இருக்கின்றன. மண்டோவின் கதைகளில் கூட்டம் கூட்டமாய்
கொலைகள், கொள்ளைகள் நடக்கின்றன. கும்பலாக மனிதர்கள்
வருகிறார்கள். கும்பல் ஒன்று காரை மறிக்கிறது. கும்பல் ஒன்று
வீட்டுக்குள் நுழைகிறது. அவர்கள் மண்டோவின் கதைகளில்
முழுமையான தீயவர்கள் இல்லை. பாவம் அவர்கள் வரலாற்றின்
நினைவை, மிகப் பழுதான தர்க்கங்களை, வெறியூட்டப்பட்ட
கட்டுக்கதைகளை தங்கள் வெறுமையுடலில் சுமப்பவர்கள்.
கொலைகள், பதில் கொலைகள் எனத் தொடர் நிகழ்வின் அதீதம்
மண்டோவையும், அவர் கதாபாத்திரங்களையும் தீண்டும்
நிலையில் அனைவரும் தேசமும், மதமும் கொடுத்த எல்லா
அடையாளங்களும், தங்களுக்கு பகைப்புலமாய் போன
அநாதைகள்.

ஜே. கிருஷ்ணமூர்த்தி ஒரு விஞ்ஞானியுடன் நடத்திய
உரையாடல் ஒன்றில், மனிதர்களின் நினைவில் ஒரு பகுதியை
மட்டும் தற்காலிக மறதிக்குள்ளாக்கச் சாத்தியமிருந்தால்
மனிதர்கள் தாங்கள் அடையாளம் காணும் குழுவுக்கு ஏற்பட்ட
காலங்களுக்கு முன் நடந்த வரலாற்று அவமானத்துக்கு
நிகழ்காலத்தில் பழிதீர்ப்பது நடக்காமல் உலகம் அமைதியாய்
இருக்க முடியுமே? என்ற வினாவை எழுப்பியிருப்பார்.
பிரிவினைக் காலச் சம்பவங்களைப் பற்றி கதை எழுதியவராய்
மட்டும் மண்டோவைப் பார்ப்பது இக்கட்டுரையின் நோக்கமல்ல.
பிரிவினைச் சம்பவங்கள் இல்லாத கதைகளிலும் கூட ஒரு
கலவர உணர்நிலை உள்ளது. சமூகத்தால் உறுதியாக ஏற்கப்பட்ட
குடும்ப, மத, இன அடையாளங்களுக்கு வெளியே உள்ள அல்லது
அடையாளம் திரிந்த மனிதர்களும், அவர்கள் புழங்கும்
வெளிகளுமே மண்டோவின் கதைப்புலமாய் உள்ளது. அதிகார
முரணும், தகர்ப்பும், சுய அழிவிற்கான ஆசையும், வேறு, வேறு
தன்னிலைகள் ஒருவனுக்குள்ளே நிகழ்த்தும் கொலைகளும்,
உரையாடும் நவீன தீமையின் தேவவாக்கியங்கள் என நாம்
காஃப்காவின் படைப்பை வரையறுக்கலாம்.
தன் கதைகள் வழியாக மண்டோ நிகழ்த்தும் குறுக்கீடு
எவ்வகைப்பட்டது? ஒரு குருட்டு யாசகனின் தட்டில்
தீமையின் பல்வேறு யதார்த்தங்கள் நாணயங்களாக ஒரே
சமயத்தில் குலுங்குவது போல் தான் மண்டோவின் கதைகள்
உள்ளன. மண்டோவிடம் முட்டாளின் உணர்நிலையும்,
மேதமையும் இணைந்து செயல்படுகிறது. முட்டாளின்
உணர்நிலை என்று நான் சொல்ல வருவது வெவ்வேறு
யதார்த்தங்களை மனத்தடையற்று, சுதந்திரமாக அனுமதிப்பது
என்பதையே. அதில் எழுத்தாளனின் தன்னிலையே ஊடுருவாத
படைப்பு என்று புரிந்து கொள்ள வேண்டியதில்லை. அவன்
அனுமதிக்கும் யதார்த்தங்களோடு, இன்னொரு யதார்த்தமாய்
அல்லது புழங்கு வெளியாகவே அவனது தன்னிலையும்
மறைந்துள்ளது. அத்தன்நிலையை இயற்கையானதாக,
கண்ணாடித் தன்மையுடையதாக, மறைந்திருக்கக் கூடியதாக
வாழ்வைப் போலவே நிராகரிக்க இயலாததாய் மாற்றும் திறனே
எழுத்தாளனின் மேதமையாய் இருக்கிறது. அப்போது படைப்பே
விமர்சனமாய் மாறி அடிப்படைகளையே உலுக்கும் வினாக்களாய்
உயர்ந்து விடுகிறது.

சிந்தையில் எரியும் இலக்கில்லா வேட்கையுடன் நகரில்
அலையும் ஒரு வறியவனின் நிலை மண்டோ போன்ற
பெரும்படைப்பாளிகளுக்குரியதாய் இருக்கிறது. பொது
இயக்கத்தோடு ஒன்றாக ஈடுபடுவது (ஒரு தோற்றம்) பல சமயம்
கூட்டுணர்ச்சி தரும் போதையில் யதார்த்தங்கள் குலைந்து
பீதியுடன் எதிர்கொள்ளப்படுவது (ஒரு நிச்சய நிலை). அப்போது
எழுத்தாளனின் தன்னுணர்வு மீட்சியை நோக்கி, நிம்மதியை
நோக்கி, கடவுளை நோக்கி, மெய்மையை நோக்கி எழுப்பும்
அபயக் குரலே படைப்பின் சில சந்தர்ப்பங்களை மாயத்
தருணங்களாக்குகிறது. சிந்தையின் எரிநிலையிலேயே
செயல்பட்ட கதைகள் மண்டோவினுடையவை.

இடைவெளி நாவலில் தினகரன் தெருச் சூதாட்டக்காரனின்
விளையாட்டில் பங்கேற்கும் தருணத்தை உதாரணமாய்
சொல்லலாம். நகுலனின் நினைவுப் பாதையில் மனநோய்
மருத்துவமனையில் நடக்கும் அபத்த உரையாடல்கள். ஜி.
நாகராஜன் சிறுகதைகளில் சில, சுரேஷ்குமார் இந்திரஜித்தின்
கதைகள் (காலம், நினைவு குலைந்து இயக்கங்கள் ஒன்றின் மேல்
படர்ந்து மேவி மனிதனின் மேல்படியும் மூட்டம்).

இவ்வழகிய மலர்களுடன் கூடிய இப்பெட்டியைப் பெறுவதற்கு
நான் செய்திருப்பது என்ன? அவற்றுக்கு உரித்தானவனாகி எதுவும்
செய்திருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அப்பெட்டியில் பிசாசு
ஒன்று மறைந்திருந்தது. என் மூக்கை கிள்ளிவிட்டு, என்னை

விட்டுப் போக மறுத்திடும்; ஆகவே அதனை நான் எப்போதும்
தூக்கித் திரிய வேண்டும் என்பதாயிருப்பின், மிகப் பொருத்தமாய்
இருக்கும். மலர்களிடம் எனக்கு பிரியமிருந்ததில்லை.
ஃப்ராலின் பெலிசுக்கு காஃப்கா எழுதிய கடிதத்திலிருந்து...

மண்டோவின் கதைகள் செயலின் தீவிர உணர்நிலை
தருணங்களையும், செயல்முடிந்து மனமூட்டம் கூடிய
துயருணர்ச்சி பெருகும் தோற்றத்தையும் பிசிறற்று
உருவாக்குவதில் வெற்றி கண்டவை. மண்டோ மனமூட்டத்துடன்
கூடிய துயரச் சாயலை புறக்காட்சிகளாகவும், வெளிச்சமாகவுமே
மாற்றிவிடுகிறார். அந்த வெளிச்சத்தில் துளி ரொமாண்டிசிசம்
இல்லை. (குறத்தி முடுக்கில் உள்ள வெளிச்சத்தில் சிறிது
ரொமாண்டிசிசம், மனிதாபிமானத்தின் ஒளிச்சேர்க்கை உண்டு).
உலகில் சகல மனிதர்களும் உணரும் அபத்தம் கலந்த துயரச்
சாயல் ஏறிய வெளிச்சம் தான் மண்டோ ஸ்பரிசிக்கும் மெய்மை
எனலாமா?

பரிசுக்கும், தண்டனைக்கும் வித்தியாசத்தை பகுத்தறிய இயலாத
குழந்தைகளாய், எல்லாவற்றையும் போட்டுடைத்துவிட்டு
நிர்க்கதியாய் அமர்ந்திருக்கும் வலி நிறைந்த மனிதர்களை
மண்டோவின் கதைகள் விசாரிக்கின்றன. வரலாற்றில், மனிதன்
உருவாக்கிய குடும்பம், மதம், மதம் (உடல்) அடையாளங்கள்,
சிறைச்சாலைகள், தேசம், குற்றம், தண்டனை, சேவை, விசுவாசம்
என்று அவன் உருவாக்கிய சகல கருத்தாக்ங்களும் அமைப்புகளும்
அழுகிப் புழுத்திருப்பதை, அழுகிய நீர் ஊறிய செத்தைகளோடு நீர்
சொட்ட சொட்ட தன் கதைகளில் கிளறுகிறார் மண்டோ. சகல
தீவினைகளையும், பல பொருண்மையுள்ள யதார்த்தங்களையும்
தன் மீது ஏவிவிட்டு, சகல துன்பங்களையும் சுமந்து, உலகைக்
குணமூட்ட முயலுபவராய் மண்டோ தெரிகிறார். வரலாற்றின்
இயக்கப்போக்கு தன் குரலை பிரதிபலிக்க மட்டுமல்ல தன் காலத்தின் கிறிஸ்துவாக ஒருவனைத் தேர்ந்தெடுக்கிறது. மண்டோ
அப்படிப்பட்ட துயர சிருஷ்டியே. (வலி என்ற மையத்தில்
லட்சக்கணக்கான இல்லை இல்லை கோடிக்கணக்கான தெருக்கள்
சிக்கி ஒன்றோடு, ஒன்று சந்தித்துக் கொள்கின்றன) மோஸல்கதையில் திரிலோச்சனைப் பார்த்து, 
‘உன்னைப் போன்ற வளர்ந்த மனிதன், மதத்தை ஒருத்தனின் ஜட்டியோடு சம்பந்தப்படுத்துவதற்காக வெட்கப்பட வேண்டும்’ என்கிறாள்.
எப்போது ஒருவன் குற்றத்தின் படிகளில் ஏறுகிறான், எப்போது
திரிந்து போகிறான், எப்போது சோரத்தின் கரங்களுக்குள்
ஒப்படைக்கிறான், எப்போது கொலை அவனில் உதிக்கிறது.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் அவன் கையில் எதுவும்
பத்திரமாய் இருப்பதில்லை. ஒத்துழைப்பு கதையில் தன்
வீட்டைச் சூறையாடுபவனிடம் வீட்டு சொந்தக்காரர் சொல்லும்
வாக்கியம் இது: ஜாக்கிரதையாக இரு. அந்தக் கண்ணாடி
ஜாடியை நழுவ விட்டுவிடுவாய்... அது உன் விரல்களில் இருந்து
நழுவிக் கொண்டிருக்கிறது
வீட்டின் சொந்தக்காரர் சொல்லும் இந்த வாக்கியத்தை கடவுள் தன் நகல் ஒருவனைப் பார்த்து எச்சரிக்கும் வார்த்தையாகவும் இருக்கிறது.
ஜானகிகதையில் வரும் ஜானகி ஒரே நேரத்தில் மூன்று
பேரையுமே தீவிரமாய் காதலிக்கிறாள். அவளுடைய அன்பின்
பாத்திரத்தில் எல்லாருக்கும் வற்றாத காதலின் அறைகளை
குறுக்கும் நெடுக்குமாய் நேர்த்தியாக கையாள இயல்கிறது.
என்னுடைய ரொமாண்டிசத்தின் மேலும், உறவுகள் தொடர்பான
ஒற்றைத் தன்மையுள்ள நேர்மையுணர்ச்சி குறித்த என் மதிப்பின்
மேலும் ஜானகி தேய்த்த அவளின் வெள்ளை சல்வார் என்றும்
என், நினைவில் இருக்கக்கூடியது.

மார்பினை அறுத்து ரத்த விரலை பாலென குழந்தையின்
வாய்க்குள் வைத்தபடி இறக்கும் ஜுபைதாவும்
மேற்சொல்லப்பட்ட ஒரு அதீதத்தைப் பகிர்பவர்களே.
நன்மையின் பெயரால் இவ்வுலகத்தைக் கடவுள்
படைத்திருக்கக்கூடும். அமைதிக்கும், அறவியலுக்கும்,

ஒழுங்குக்கும் கட்டுப்பட்டு மனித சமூகம் திகழுமென்ற கனவில்
மதங்களையும், கடவுளையும், தண்டனைகளையும் மகான்களும்,
அரசியலாளர்களும் படைத்திருக்கலாம். ஆனால் வரலாறு எங்கும்
இவற்றின் பெயரால் ரத்தம் பெருகுவதை, சக உடலின் ரத்தமே
ஜவ்வு மிட்டாயைப் போல இனிப்பாய் பல தருணங்களில்
மாறுவதைச் சொன்ன ஒரு அவதூதனின் காரியம் தான் மண்டோ
செய்வது. நிர்வாண ராஜாவை கண்டுகொள்ளும் குழந்தை
வெளிப்படுத்தும் மெய்மையை தான் மண்டோ வெளிப்படுத்துவது.
மண்டோ போன்ற பெருநிகழ்வு ஒரு நிகழ்தகவு அல்ல. சமூக,
வரலாற்று இயங்கியலில் உருவாகும் ஒரு நிர்பந்தமாகவே நாம்
மண்டோவைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியா என்னும் தேசம் உருவாகும் தொடக்கப் புள்ளியின்
முக்கிய சாட்சியாய் மண்டோ இருக்கிறார். தேசம் என்ற பெயரில்
நடந்த மனித அழிவுகளுக்கும், அபத்தங்களுக்கும் சாட்சியாகிறார்.
ஒரு சிறு வகுப்பாரின் அரசியல், அதிகார நலன்களுக்காக
பலன்களுக்காக எவ்வளவு பெரிய பலிகள் கொடுக்கப்படுகின்றன.
தேச பக்தியின் பெயராலும், ஒரு இனத்தாரின் மறைமுக
நலனுக்காகவும் பன்மைத்துவம் உதிர்க்கப்பட்டு, சிறுபான்மை
இஸ்லாமியர்கள் குற்றவாளிகளாக ஆக்கப்பட்டு, இந்தியா
மதமயபடுத்தப்படும் இச்சூழலில் மண்டோ தமிழில்
வாசிக்கப்படுவது அவசியமான குணமூட்டலை செய்யும்.
மண்டோவின் கதைகள் ஒரு முன்னெச்சரிக்கையும்கூட.
மண்டோவைப் பற்றிப் பேசும்போது இனிப்பு என்ற படிமத்தை
நான் தொடர்ந்து பயன்படுத்துகிறேன். மண்டோவின் கதைகளிலும்
குரூரம், கொலைகளுக்குப் பக்கத்தில் இனிப்பு பல்வேறு
இடங்களில் வரவே செய்கிறது. மண்டோவைப் படித்த உணர்வை
என் நண்பர் தர்ரமாஜனிடம் சில நாட்களுக்கு முன் பகிர்ந்து
கொண்டபோது அவர் சொன்ன நிகழ்ச்சி ஒன்று.

தர்மராஜன் ஒரு வேலையாக பேருந்தில் மதுரையிலிருந்து
பயணிக்கும் போது கொலைக்குற்றம் ஒன்றிற்காக கைது
செய்யப்பட்ட கைதிகள் அவருடன் முன்சீட்டில் போலீஸ்
காவலுடன் பயணித்துள்ளார்கள். தர்மராஜன் அவர்களிடம் பேச்சுக்
கொடுத்து உரையாடலை ஆரம்பிக்க அவர்களும் சுவாரஸ்யமாய்
தங்களுக்கு நடந்தவைகளை பேசிக் கொண்டிருந்துள்ளனர்.
தர்மராஜன் தன் காலிடுக்கில் 100 ஜிலேபிகள் கொண்ட பாலிதீன்
பையை வைத்திருந்துள்ளார். கல்யாண ஆர்டர் ஒன்றுக்கு
கொண்டு செல்லப்படுபவன அவை. கொலைக் கைதிகளில் ஒருவர்,
அண்ணே, அந்த ஜிலேபி ஒண்ணே ஒண்ணு குடுங்களண்ணே என்று திரும்பத் திரும்ப கேட்டுள்ளார். ஆர்டருக்கு சரியான
எண்ணிக்கையில் கொண்டு சொல்வதால் ஜிலேபி தர இயலாத
கையறு நிலை தர்மராஜனுக்கு, அவர்களின் தொடர்ந்த பேச்சில்
இன்னொரு கொலைக்கான திட்டமும் தன்னிடம்
வெளிப்படையாக விவரிக்கப்பட்டதை தர்மராஜன் சொன்னார்.
இயல்பாக குற்றமும், எளிய ஆசை ஒன்றும் பிணைத்திருக்கும்
மனித தருணத்தைச் சொல்கிறது இச்சம்பவம். மண்டோவின்
கதைகளுக்கு நெருக்கமான விஷயம் இது. இதனுடன் இனிப்பு
என்னும் படிமம் இக்கட்டுரையில் கைவிடப்படுகிறது.

ஒரு பெருநகரத்தின் சகல வெளிச்சங்களுக்கும், இருட்டுக்கும்,
பழக்கப்பட்ட அதிலிருந்து விடுபட இயலாத மனம்
மண்டோவினுடையது. அனாதையும் வேசியும் யாசகனும்
அடையாளம் கண்டு, தன்னுணர்வற்று இன்மையின்
பிரமாண்டத்தில் தங்களைக் கரைத்துக் கொள்ளும் இடமாய் நகர்
வெளியே இருக்கிறது. ஒரு வகையான அநாதை நிலை
உருவாக்கும் அதீதங்களையும்,, அபத்தங்களையும் அவரின்
நாயகர்கள் பகிர்கின்றனர். மம்மி என்னும் மண்டோவின் கதையில்
வரும் மம்மியின் விடுதியை மண்டோவின் நகரமெனவே
நம்மால் நீட்டித்துப் பார்க்க இயலும். மம்மியின் விடுதிக்குள்
யாரும் வரலாம். விருந்து, கேளிக்கைகளை அனுபவிக்கலாம்.
காமம், குரோதங்கள், பழி, காதல் என எந்த உணர்ச்சியையும்
வெளிப்படுத்த இயலும் இடமாய் மம்மியின் விடுதி உள்ளது.
மம்மி எல்லாரையும், எல்லாவற்றையும் தாங்கி அனைவரையும்
சுத்திகரிப்பவளாய் மம்மி இருக்கிறாள். மண்டோவிற்கு பாம்பே
நகரம் ஒரு விடுபட முடியாத பாதுகாப்புணர்வைத் தந்துள்ளது.
பாம்பே நகரத்தை விட்டு வெளியேறுவதே, இந்திய
எல்லையை விட்டு நீங்குவதாகத்தான் அவருக்கு இருந்திருக்க
வேண்டும்.

மம்மி, ஜானகி மற்றும் மண்டோவின் நினைவோடகளிலும் வரும்
அநாதைத் தன்மையுள்ள தனிமையான ஆண்கள் கூட்டாக ஒரு
அபத்தத்தை, தொடர் சலிப்பு நிலையை சுழற்றி ஒரு
ஹிப்டுல்லாவாக (மண்டோவினால் கண்டுபிடிக்கப்பட்டு
புழங்கப்பட்ட ஒரு அர்த்தமற்ற வார்த்தை) கூட்டு சிரிப்பின்
சத்தங்களாக மாற்றுபவர்களாய் உள்ளார்கள். ஆண்கள், பெண்கள்
இருவருமே அபத்தத்தை வேறு, வேறு உணர்நிலைகளில்
கையாள்கிறார்கள். பெண்கள் அபத்த நிலையை முட்டி, தகர்க்க
முயன்று குற்றம் மற்றும் தீமையின் சந்தர்ப்பத்துக்குள் ஒப்புக்
கொடுக்கின்றனர். ஆணுக்குக் கூடுமானவரை தான் உணரும்
அபத்த நிலையை பரஸ்பரமாய் கைமாற்றி ஒரு குழுவின்
கூட்டுப் போதமாய் மதுவுடனோ, தேநீருடநோ பகிர்ந்து கொள்ள
முடிகிறது. 

அவ்வகையில் மண்டோவின் பெண்கள் தீவிர, அதீத நிலையை பிரதிபலிக்கும் தனித்துவமானவர்கள். ஒரு வகையில்
மண்டோவின் சார்பு வலிமையாய் அவர் படைத்த
பெண்களிடமே இருக்கிறதென்றும் சொல்ல இயலும்.
பிரிவினைக் கால சம்பவங்கள் மண்டோவின் கதைகளில்
மைய்யமான உணர்நிலையுடன் வெளிப்படுவதால் அரசியல்
ரீதியாக பிரிவினை சம்பவத்திற்கு பின்னுள்ள ஒரு சிறிய அபத்த
(மண்டோவின் பாஷையில் ஹிப்டுல்லா) சம்பவத்தை
குறிப்பிட்டுவிட்டு இக்கட்டுரையை முடிக்க விரும்புகிறேன்.

காந்தியினுடைய குரல் சிறிய பறவை கிரீச்சிடலை ஒத்திருந்தது.
ஜின்னாவையும், காந்தியையும் சேர்த்து நான் சந்திக்க
வைத்தபோது, இரண்டடி இடைவெளியில் அவர்கள்
அமர்ந்திருந்தும் கூட ஒருவரின் பேச்சை ஒருவர் கேட்க
முடியவில்லை... நான் அவர்களது நாற்காலிகளை இழுத்துச்
சேர்க்க வேண்டியிருந்தது.
- லாரி காலின்ஸ் ; டொமினிக் லேப்பியர் இந்தியா - பாக்.
பிரிவினைப் பற்றி மவுண்ட் பேட்டன் உரையாடிய
புத்தகத்திலிருந்து...

பின்குறிப்பு:
மண்டோவைப் பற்றி அ.மார்க்ஸ் மற்றும் ராமானுஜம் எழுதிய
இரு கட்டுரைகளுமே என் கட்டுரையின் பார்வையை மிகவும்
செழுமைப்படுத்தியவை. ஒரே ஒரு முரண்பாடு இரு
கட்டுரைகளிலுமே தமிழ் எழுத்தாளனை மண்டோவோடு ஒப்பிட்டு
விசனமடைந்திருந்தனர். இங்கு தமிழ் எழுத்தாளனின் வாழ்வியல்
பின்னணியையும், வரலாற்று சமூகச் சூழலையும் புரிந்து
கொண்டால் இப்படிப்பட்ட விசனங்கள் அவசியமில்லை. மண்டோ
போன்ற ஒரு படைப்பாளியோ, படைப்புகளோ தமிழ் சூழலிருந்து
வரும்போது நிலைமையும் பஞ்சாப், மகாராஷ்டிரம், குஜராத்,
வங்காளம் போன்ற மாநிலங்களில் கொதிநிலையை அடைய
வேண்டியிருக்கும். தமிழ் எழுத்தாளனின் மேன்மையான
படைப்புகளுக்காக தமிழகம் கலவரச் சூழல்களுக்கு
செல்லாமிருக்க வேண்டும் என்பதே நமது பிரார்த்தனையாக
இருக்கவேண்டும். பெரும்பாலும் தமிழ் எழுத்தாளன் இரண்டு யதார்த்தங்களை அனுசரிக்கக் கூடியவனாய் இருக்கிறான். ஒன்று கதையை
உருவாக்கும் யதார்த்தம், அடுத்தது தன் பார்வையால் அதைக்
குறுக்கீடு செய்வது அல்லது மோதுவது அல்லது தொந்தரவு
செய்வது. இது நீதிக்கதைகளுக்கும் பொருந்தக் கூடிய
அமைப்பாக்கமே. இது குறைபாடாய் இங்கு சுட்டப்படவில்லை.
புதுமைப்பித்தனின் கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் ராஜா
வந்திருக்கிறார் போன்ற சிறந்த சிறுகதைகள் இந்த அமைப்பைப்
பற்றிப் பேசும் போது ஞாபகத்திற்கு வருகின்றன.
பொதுவாய் தமிழ் எழுத்தாளன் சீர்திருத்தம் கண்களை
உடையவன். (உச்சபட்ச உதாரணம் ஜே.ஜே.) அவன் பெரும்பாலும்
சார்ந்திருக்கும் நடுத்தர வர்க்கப் பின்னணி இப்பார்வைக்கு
அடிப்படையில் இருக்கக்கூடும். குடும்பமும், வீடும் தான்
அவனுக்கு அரணாக, தீமையாக இந்நூற்றாண்டின் ஆரம்பம் வரை
நிகழ்கிறது. தன் குடும்பத்தின் நீட்சியாகவே சாதி, சமூகம், அரசு,
தேசம், வரலாற்றின் நிகழ்ச்சிப் போக்கு இவற்றை
அனுசரிக்கிறான் அல்லது விமர்சிக்கிறான். இப்புரிதலின் உச்சபட்ச
படைப்பொழுக்கு அல்லது வெளிப்பாடு என சுந்தர ராமசாமியின்
குழந்தைகள், பெண்கள், ஆண்கள் நாவலை நாம் தொடர்புறுத்த
இயலும்.
சமூக வெளியில் நிகழும் மாற்றங்கள், கலவரங்கள், அபத்தங்கள்
இவற்றை தன் - எப்போதும் ஆக்கிரமிக்கப்படாத,
சூறையாடப்படுவதற்கு வாய்ப்பில்லாத - வீட்டின்
சன்னலிலிருந்தே பார்க்கப்பழகியுள்ளது அவன் மனம். அவன்
உணரும் அச்சமும், பாதுகாப்பின்மையும், அசூயையுமே
வீடென்னும் நொறுங்காத கூட்டிலிருந்து அடையும் உணர்வே
அவனது எழுத்துக்கள். இதன் நேர்மையான உதாரணங்களாக
அசோகமித்திரன், கோபி கிருஷ்ணன் கதைகளையும்,
விக்ரமாதித்யன் கவிதைகளையும் பார்க்க இயலும்.

(2006-ல் எழுதிய கட்டுரை, புதிய காற்று இதழில் பிரசுரமானது)


உதவிய நூல்கள் மற்றும் கட்டுரைகள்:
1. விளிம்புநிலை ஆய்வுகள் - டேவிட் ஹார்டிமன் (நன்றி:
தேசிய நாட்டுப்புறவியல் உதவி மையம்)
2. விலகி நடந்த வெளிகள் - அ. மார்க்ஸ்
3. டெஹல்கா இதழ்கள் - மும்பை சிறப்பிதழ் மற்றும்
பிரிவினை சிறப்பிதழ்)

அமேசான் கிண்டிலில் மிதக்கும் இருக்கைகளின் நகரம்

மிதக்கும் இருக்கைகளின் நகரம் அமேசானில் கிண்டில் பதிப்பாக வாங்க இது எனது முதல் தொகுப்பு. 2001-ம் ஆண்டு வெளியானது. ஒரு கவிஞனின் முதல...