தமிழின் தனிப்பெரும் இலக்கிய ஆளுமையான நகுலனை, தனது கல்லூரி ஆசிரியராகச் சந்தித்துக் கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகள் இலக்கியவாதியாகவும் நண்பனாகவும் உடன் பயணித்தவர் எழுத்தாளர் நீல.பத்மநாபன். அவர் நீள்கவிதை வடிவத்தில் எழுதியிருக்கும் ‘நகுலம்’, நகுலனின் தனிப்பட்ட ஆளுமை, குணநலன்கள், சுகதுக்கங்கள், பேணிய நட்புகள், முக்கியமான திருப்பங்கள் என அறுபது ஆண்டுகால வாழ்க்கையை சிறுதுளிகளாகத் தொடரும் ஆவணம் இது. நீல.பத்மநாபன், கவிதை என்ற வடிவத்தில் இதைக் கிட்டத்தட்ட ஐம்பது பக்கங்களுக்கு எழுதியிருந்தாலும் அவர் எழுதத் தேர்ந்துகொண்ட நகுலன் என்ற இலக்கிய ஆளுமைதான் இந்தப் படைப்பை சுவாரஸ்யமாக்குகிறது. மற்றபடி நீல.பத்மநாபன் இதை ஒரு கட்டுரையாகவே நீட்டி எழுதியிருக்கலாம்; பாதகம் ஒன்றும் இல்லை. பொதுவான சமூக அர்த்தத்தில் மரணம் என்பதற்கு அர்த்தம் முடிவான ஒன்றுதான். ஆனால், இருப்பு அளவுக்கு இன்மையின் அனுபவமும் அவசியமானது, ருசியானது என்பதைத் தனது பிரத்யேக மொழி வழியாக நிகழ்த்தி, வாழ்வு அளவுக்கு சாவும் சாவின் பரிமாணங்களும் பலவிதம் என்பதைக் காட்டியவர் நகுலன். அப்படியான நகுலன் மருத்துவமனையில் மரணப்படுக்கையில் இருக்கும்போது நீல.பத