பாம்பு, பூனை, மரணம் இந்த மூன்றும் கவிதைக்குள் தென்பட்டாலே போதும், கவிதை துடியோ, வசீகரமோ கொண்டுவிடும். இந்த மூன்றையும் தொட்டும் செய்யுள்களாகிப் போகும் வசவச கவிதைகளையும் துரதிர்ஷ்டமாகப் பார்க்க நேர்கிறது. மரணத்தை அவ்வளவு எளிதாக, கலையாக இருந்தாலும் புனைவாக இருந்தாலும் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதே எனது தரப்பு. மரணம் சார்ந்த அச்சமோ, பொது சமூகத்தில் உள்ள விலக்கம், அமங்கல உணர்விலிருந்து இதைச் சொல்லவில்லை. சகலத்தையும் விட மரணத்தை மிகவும் பொறுப்பாக அணுகவேண்டியிருக்கிறது; சிவதனுஷை எடுப்பதைப் போல; சிறுவர்கள் எடுத்தால் தலையில் கூட விழுந்துவிடலாம். இளங்கோ கிருஷ்ணனின் 'வியனுலகு வதியும் பெருமலர்' கவிதைத் தொகுப்பில் உள்ள கவிதைகளில் உள்ள துடி மற்றும் சரள அம்சத்தில் விலக்க இயலாமல் மரணத்தின் போக்குவரத்து உள்ளது. மரணபோதத்தின் போதை ஏறிய இந்தக் கவிதைகளோ பிறப்பின் உக்கிர ஆற்றலைக் கொண்டிருப்பதுதான் இதன் விசேஷ அம்சம். கலாப்ரியா வழியாக, ‘இன்னும் கிளிகள்' கவிதையில் உணரமுடியும் 'சாவின் நெடி' வாயிலாக வன்முறையும் துடியும் தமிழ் புதுக்கவிதைக்குக் கிடைக்கிறது. இன்னும் கிளிகள் பாகவதர் கிராப்ப...