Skip to main content

Posts

Showing posts from December, 2011

பாதகத்தி

அவள் பாதகத்தி நீளநகம் வளர்க்கிறாள் அதன் கூர் ..... மையைப் பார்க்கும் போதெல்லாம் தீயில் வெந்து வெந்து சாகிறேன் .. அவள் கைப்படும் எல்லாமும் இப்படியா இப்படியா

தேவதச்சனுக்கு விளக்கு விருது

தமிழில் நவீனகவிதை என்னும் வடிவம் பலராலும் பழக்கத்தின் அடிப்படையிலும் , உளநமைச்சலின் பாற்பட்டும் பயன்படுத்தப்பட்டு வருகிறது . ஆனால் நவீனகவிதையின் அழகை , பார்வையை , கோணத்தை , மொழியை தொடர்ந்து புதுப்பித்து வருபவர்கள் சொற்பமே . அவர்களில் ஒருவர் தேவதச்சன் . தேவதச்சன் என்னும் கவிஞன் உலகத்தைப் பார்க்கும் கோணம் வாசகனுக்கு பரிச்சயம் இல்லாதது . நவீன கவிதையின் நுட்பமான வாசகர்கள் என்று கருதிக்கொள்வோரில் பெரும்பாலானவர்கள் , சமூகவியல் , அறவியல் , அரசியல் , உறவுகள் சார்ந்த உணர்வுத் தளத்திலேயே தொடர்ந்து கவிதை என்னும் அந்த வார்த்தைக்கூட்டத்தை அர்த்தப்படுத்தி வருகின்றனர் . ஆனால் தேவதச்சனின் கவிதைக் கண்ணாடி , நமது கண்களுக்குப் பரிச்சயமான இடத்திலேயே இருக்கும் நாம் பார்க்க மறந்த பொருட்களைத் தொடர்ந்து காட்டுகிறது . அர்த்தத்தின் பயனாளிகளை அது சற்றே தலை கிறுகிறுக்க வைக்கிறது . நானும் பிரபஞ்சமும் உறவுகொள்கிறோம் . நானும் பிரபஞ்சமும் தொடர்ந்து மாறிக்கொண்டிருக்கிறோம் . பரஸ்பரம் எங்களுக்குள் நடக்கும் வேதிமாற்றத்தை என்னிடம் உள்ள ஒரு நான் கவனித்துக்கொண்டே இருக்கிறது . ஆனந்தம் கொள்கிறது. அங்கே காரண ,

மகா சமாதி - லக்ஷ்மி மணிவண்ணன்

                               """"யாராவது கண்களை ஒரு வினாடி கூட விலக்குவதையோ மறதியாக இருந்துவிட்டதையோ அந்த ராட்சதப் பல்லி பார்த்துவிட்டால் ஆபத்தானதாகி விடுகிறது. அதன் குடல்கள் ஜொலிக்க ஆரம்பிக்கின்றன. அதனுடைய அடக்க முடியாத சக்தியுடன் அமுக்கி வைக்கப்பட்டிருக்கிற கோபத்துடனும், தன்னுடைய பல மீட்டர் கனமுள்ள தோலை வெடிக்கச் செய்துவிடும். எப்படி நடந்ததென்று புரிந்து கொள்ள முடியாத தவறு காரணமாக ஒரு சிறு வழி திறந்திருப்பது தெரிந்துவிட்டால் போதும்""                                     அணுக்கதிர் வீச்சின் பாதிப்புகள் குறித்த ‘அபாயம்’ நாவலின் முதல் அத்தியாயத்தில் வரும் சில வரிகள் இவை. ஃபிளமிஷ் மொழி நாவலான ஜோஷ் வண்டேலூவின் அபாயம் நாவல் ஆங்கிலம் வழி தமிழில் என். சிவராமனால் மொழிபெயர்க்கப்பட்டு 1986-ல் க்ரியாவால் வெளியிடப்பட்டது. அளவில் மிகச்சிறிய அதே சமயத்தில் தீர்க்கமான நுட்பத்துடன் அணுக்கதிர்வீச்சின் பாதிப்புகள் குறித்து பேசும் நாவல் இது. அணுக்கதிர் வீச்சு, அணுக்கொள்கை ஆகியவை எப்படி அரசாங்கத்துடனும் அமைப்புடன் கலந்து பௌதீகத் தன்மையை அடைகிறது என்பதை நுண்தளத்தில் ஆரா

தமிழ் புரோட்டா

நீங்கள் என்னைத் தூள்தூளாக்குங்கள் நீர் ஊற்றிச் சேர்த்து உருட்டிப் பிசைந்து உங்கள் மூர்க்க பலத்தால் அடித்துத் துவைத்தெடுங்கள் பாலியஸ்டர் துணிபோல் என்னை நெகிழ்வாக்கி நீட்டி விசிறியடித்து காற்றுத் தங்கும் பலூன் பந்துகளாக மேஜையில் அடுக்குங்கள். அப்போது கடவுள் போல் நான் ஒளிர்வேன். பின்னர் மீண்டும் தட்டி மடித்து வட்ட சதுர முக்கோணங்களாக எண்ணைய் கொதிக்கும் வாணலியிலோ கல்லிலோ இட்டுப் பொறித்தெடுங்கள் உங்கள் அரும்பசிக்குச் சுவையான உணவாய் நான் மாறுவேன்... உங்கள் வரலாறு மூர்க்கம் ஆசைகள் காமம் மூட்டம் வலி அரசியல் துயரங்கள் நெருக்கடி உழைப்பு உங்கள் மாமிசமும் சேர்ந்த குழம்பில் நான் மிதந்தூறிக் கொண்டிருக்கிறேன். மீண்டும் மடிப்புமடிப்பாக தூள்தூளாகக் கரைந்துபோகக் காத்திருக்கும் தமிழ் புரோட்டாதான் நான்.